கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ஒரு கீதைப்பேருரையை நான் நிகழ்த்தவேண்டும் என்று நண்பர் ’டைனமிக்’ நடராஜன் என்னிடம் கோரினார். 2015 டிசம்பரில் அந்த உரை நிகழ்ந்தது. என் வரையில் கீதை பற்றிய என் சிந்தனைகளை தொகுத்துக்கொள்வதற்காகவே அதை நிகழ்த்தினேன். ஒரு மேடையில், கூர்ந்து கவனிக்கும் கண்களுக்கு முன், அதை நிகழ்த்துவதென்பது ஒருவகையான ஆழ்ந்த தன்வெளிப்பாடு. என்ன வருகிறது என்று பார்க்கலாம் என்று எண்ணினேன். அவ்வாறே நிகழ்ந்தது. எனக்கு அந்த உரை பெரும் தெளிவை அளித்தது.
நான் கீதைக்கு ஓர் உரை எழுதத் தொடங்கியது 2010ல். அப்போது அதை நிறுத்திவிட்டேன். என்னிடம் தெளிவுகள் இல்லை என அறிந்தேன். என் மூன்று ஞானாசிரியர்களும் கீதை விளக்கம் அளித்துள்ளனர். நடராஜகுரு, நித்ய சைதன்ய யதி, முனி நாராயணப் பிரசாத். ஆனால் நூல்கள் வழியாக நான் அறியக்கூடுவதை நான் தேடவில்லை என அறிந்தேன். நானே அறிந்தவற்றை, நான் மட்டுமே சொல்லக்கூடுவனவற்றை நான் அடைந்தாகவேண்டும்.
அதன்பொருட்டே 2014ல் வெண்முரசு நாவலை எழுதலானேன். கீதை உரை நிகழும்போது வெண்முரசின் கதைக்களம் திரண்டுகொண்டிருந்தது. அதன் தத்துவக்களம் எனக்கே தெளிவின்றி இருந்தது. ஆனால் முதல்நாவலிலேயே இறுதிநாவல் வரை நீளும் உள்ளுணர்வுசார்ந்த களம் உருவாகிவிட்டிருந்தது. அதை இறுதி நாவலை எழுதும்போதுதான் நானே அறிந்தேன். இன்று வெண்முரசை வாசிப்பவர்கள் அது மிகச்சிறப்பாகத் திட்டமிடப்பட்டு முதல் வரி முதலே எழுதப்பட்ட ஒன்று என்று நினைக்கலாம். அந்த திட்டம் என்னை அறியாமல் என்னுள் அகக்கனவாக இருந்தது என்பதே உண்மை. முதற்கனலில் முழு நாவல் தொடருக்குமான மொத்த விதைகளும் உள்ளன.
அந்த உள்ளுணர்வுக்களமே இந்த உரையென ஆகியது. இந்த உரையில் சொல்லப்பட்டவற்றை பன்னிரு படைக்களம், சொல்வளர்காடு, கிராதம் மற்றும் இமைக்கணம் நாவல்களில் விரிவாக எழுதியிருக்கிறேன். இந்த உரை தன்னியல்பாக விரிந்தபோது நானே தேடிக்கொண்டிருந்த பலவற்றுக்கு விடை அமைந்தது. கீதை சார்ந்து எனக்கேயான ஒரு பயணத்தை செய்ய வழியமைத்தது.
இந்த உரையை நூலாக்கவேண்டும் என பலர் கோரியிருந்தனர். ஆனால் உரைகள் சற்று நீர்த்த வடிவில் இருக்கும் என நான் நினைத்திருந்தமையால் தவிர்த்து வந்தேன். நண்பர் சக்தி பிரகாஷ் பொறியியலாளர், யூடியூப் நடத்துபவர். அவர் இதை மொழியாக்கம் செய்து எனக்கு அனுப்பியிருந்தார். படித்துப் பார்த்தபோதுதான் இது நீர்த்தவடிவில் இல்லை, மிகச்செறிவாகவே உள்ளது என்று எனக்குத் தெரிந்தது. கட்டுரையில் அமையும் இறுக்கம் இல்லாமல் தன்னியல்பான ஓர் ஓட்டம் இதில் உள்ளது. ஆகவேதான் உரைகளை மக்கள் கூடுதலாக விரும்புகிறார்கள் என நினைக்கிறேன்.
சிறு மொழித்திருத்தங்கள் மட்டும் செய்துள்ளேன். இந்நூல் கீதையை அறிய அடிப்படைகளை அளிக்கும். கீதை பற்றிய ஐயங்களைக் களைய, கீதையை அறியும் சரியான வழிமுறைகளைப் பயில, கீதையை உள்வாங்கிக்கொள்வதற்கான தடைகளைக் களைய, கீதையின் மெய்யியலை சரியாகச் சென்றடைய இந்நூல் உதவும் என நினைக்கிறேன்
இந்நூலை தட்டச்சு செய்து அனுப்பிய நண்பர் சக்தி பிரகாஷ் அவர்களுக்கும், வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்துக்கும் நன்றி
இந்நூலை என் மதிப்பிற்குரிய நண்பர் குருஜி சௌந்தர் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்
ஜெ
(விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள கீதையை அறிதல் நூலின் முன்னுரை)