மழையின் காவியம்

மழைப்பாடல் – மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு)

அன்புள்ள ஆசிரியருக்கு,

மழைப்பாடலை பூன் முகாமிற்காக மீள் வாசிப்பு செய்யும் போது அதன் கதாபாத்திரங்கள் தாய்மை உணர்வில் ஒரு ஆண் செல்லக்கூடிய தொலைவென்ன என்று காட்டின. சிற்றகலின் சிறுதுளி வீழ்ந்த சிறு குளத்து நீரே போல

உங்களின் தாயுமாதல் என்ற கட்டுரையில்பெண்ணுக்குள் இருப்பதற்கு சமானமான அன்னை ஒருத்தி ஆணுக்குள்ளும் இருக்கிறாள். ஆண்களை இல்வாழ்க்கையில் கட்டிப்போட்டிருப்பது எது? அந்த தாய்மைதான்என்று சொல்லியிருப்பீர்கள். அது இங்கே இருக்கும் அன்னைகளும் தந்தைகளும் உணரும் உண்மைதான். நான் என்னுடைய முதல் பெண் குழந்தை பிறந்து இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருக்கும் போது அந்த அறையின் வாசலிலேயே இரவும் பகலும் நின்று கொண்டிருப்பேன். செவிலியர்கள் என்ன சீண்டினாலும் நகர மாட்டேன். ஒரு மகளின் செவ்வரியோடும் மென் பிஞ்சுப் பாதத்தை கண்ட எல்லா தந்தைகளின் மனநிலையும் அதுதான். தாய்மையை உணரும் தருணம். அதற்கு ஆண் பெண் என்ற வேறு பாடில்லை. ஆனால் தாய்மை பல பரிமாணங்கள் கொண்டது. அதன் அறங்களும் அப்படித்தான்.

கன்னிமையில் வரும் நாச்சியாரம்மா திருமணத்திற்கு முன்பு ஒரு கொலைகாரன் மகனிடம் காட்டுவது ஒரு விதமான தாய்மை. அவள் மணமாகி மூன்று குழந்தைகள் பெற்ற பிறகு அவளிடம் தெரிவது அதன் இன்னொரு பரிமாணம். அவள் கன்னியாக இருக்கும் போது அனைவரையும் காக்கும் அன்னையாகவே இருக்கிறாள். அவளுக்கு குழந்தைகள் பிறந்தபின் அவள் குழந்தைகளே அவள் உலகம். மற்ற அனைவரையும்தன் அன்பை வேண்டி நிற்கும் கணவனைக் கூட பிறனாகவே உணர்கிறாள். இந்த தன்னலமிக்க அன்னையே கனிந்து குலத்தை புரக்கும் மாமாங்கலையாகவும் அதையும் தாண்டி உலகம் புரக்கும் பேரன்னையாகவும் மாறுகிறாள்.

மழைப்பாடலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் தாய்மையின் இந்த எல்லா பரிமாணங்களையும் காட்டுகின்றன. நாவலின் முன்னுரையேஅன்னை மழைஎன்றுதான் பெயரிடப்பட்டிருக்கிறது. நாவலின் முதல் அத்தியாயத்திலேயே இறைவனின் நடனத்தில் அவன் இடக்கையும் வலக்கையும் கொள்ளும் முரணில் அவன் இடம் நெகிழ்ந்து முலை கனிந்து உமையாகிறது. அந்த பரிணாமம் நாவல் முழுதும் தொடர்கிறது

பீஷ்மர்  கூர்ஜரத்திலிருந்து திரும்பி வந்து அஸ்தினபுரியை பார்க்கும் போது அது எனக்குள் ஒரு மதலையை  நோக்கும் அன்னையின் கனிவை நிறைக்கிறது என்று உணர்கிறார். நகரின் அத்தனை கீழ்மைகளையும் உணர்ந்து அது அந்த கீழ்மைகள் அன்றி இருக்க இயலாது என்று அறிந்த தாய்மையின் உணர்வு. ஒரு அன்னையாக குழந்தையின் அனைத்து பிழைகளையும் பொறுத்தருளும் அன்னையின் வடிவம்

அதைத்தொடர்ந்து விதுரனுடன் போரை பற்றி உரையாடும் போதுஇவர்களெல்லாம் என் மைந்தர்கள் என் குலத் தோன்றல்கள் இவர்கள் என் கண்ணெதிரே அழிய நான் ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை. அதன் பொருட்டு நான் நெறிகளை மீறுவேன். அதன் பலிபீடத்தில் கள்ளமற்ற சிலரை பலிகொடுக்க வேண்டும் என்றால் அதையும் செய்வேன்என்று மைந்தரைப்  பெற்ற அன்னையாகவே சொல்கிறார்

அம்பிகையும் அம்பாலிகையும் தமது மகன்கள்  அரியணையில் அமர வேண்டும் என்று எப்போதும் நினைக்கிறார்கள் அம்பிகைக்கு அவளுடைய மகனுக்கு கண்ணில்லை என்று தெரிந்திருந்தாலும் கண்ணில்லாதவன் அரியணையில்  அமர முடியாது என்று தெரிந்திருந்தாலும் அவள் அதை தெரிந்தே அவன் அரியணையில் அமர வேண்டும் என்று விழைகிறாள்அதற்கான நெறி நூல்களில்  விலக்குகளை தேடிக் கொண்டே இருக்கிறாள்அதைப்போலவே அம்பாலிகையும்  தன் மகன் உடற்குறை கொண்டவன் என்று அறிந்தும் அவன் அரசாளுவதற்கான வழிகளை தேடிக்கொண்டே இருக்கிறாள் இருவருமே எப்போதுமே தத்தம் மகன்களின் நலத்திலேயே குறி கொண்ட ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அன்னையாகவே இருக்கிறார்கள். மைந்தர் மேல் பித்து கொண்ட அன்னை ஒரு இருள் தெய்வம் என்ற கூற்றையே அவர்கள் மெய்ப்படுத்துகிறார்கள்

அம்பாலிகை விதுரனிடம்என் அகத்தின் கடைசி துளி எஞ்சும் வரை என் மைந்தனுக்குரிய இடத்தை அவனுக்கு பெற்று கொடுக்கவே போரிடுவேன் அதற்காக எப்பழி  ஏற்றாலும் சரி என் அறம் அதுவேஎன்று சொல்கிறாள். அவர்கள் மனம் மாறுவதற்கு  பாண்டுவின் மரணம் போன்ற ஒரு பெரிய நிகழ்வு தேவைப்படுகிறது அது அவர்களை உலுக்கி அவர்களின் அடுத்த பரிணாமத்தை எட்ட செய்கிறது அவர்கள் ஒரு குறுகிய மனப்பான்மை கொண்ட அன்னையிலிருந்து பேரன்னையாக உலகப் புரக்கும் அன்னையாக மாறி அதிலிருந்து எல்லா தளைகளையும் அறுத்துக் கொண்டு உலகத்தை விட்டு நீங்குவதற்கான முடிவெடுத்து வனம் செல்கிறார்கள்

திருதா மழைப்பாடலில் அறிமுகமாகும் போது ஒரு சூதனின் இசையை கேட்டு மனம் நெகிழ்கிறார் அவன் கண்ணில்லாதவன் என்று அறிந்தவுடன் உடனே ஒரு அன்னையைப் போல சிந்திக்கிறார். ஒரு அரசன் இசையைக் கேட்டு மகிழ்ந்தால் வழக்கமாக பொன்னை கொடுப்பான். ஆனால் இங்கே திருதா அவனுக்கு ஒரு பெண்ணையும் கொடுத்து அவளுக்கு ஒரு கிராமத்தையும் கொடுத்து அவளுக்கு சீதனமாக நகைகளையும் கொடுக்கிறார். திருதாவை விதுரன் எப்போதும் ஒரு பெரும் கருணை கொண்ட கொலை வேழமாகவே உணர்கிறான். துரியோதனின் பிறந்த பிறகு, விதுரன் தீய சகுனங்களை காரணம் காட்டி குழந்தையை துறக்க சொல்கிறான், முதலில் அதற்கு இசையும் திருதா பிறகு மனம் மாறிஇந்த உலகம் வெறுக்கும்படி என்ன செய்தான் என் மகன்? அவனை நான் ஏன் துறக்க வேண்டும்?” என்று தாய்மைக்கே உரிய மனநிலையுடன் மறுத்து விடுகிறார்

காந்தாரி திருமணத்திற்கு பிறகு அஸ்தினபுரி  நோக்கி வரும்போது அவள் தாசரணையையும் செம்படையும் தன்னுடைய குழந்தைகளாகவே உணர்கிறாள் குழந்தை என்றே அழைக்கிறாள். அவளுக்கு அப்போது சூத பெண்கள் அனுசூயையின்  கதையை சொல்லுகிறார்கள் அந்த கதையை கேட்டு சத்தியவதியும்  காந்தாரியம் பேசிக்கொள்ளும் போது சத்தியவதி கண்ணை கட்டிக்கொள்வது ஒரு பேதைத்தனம்   என்று சொல்லுகிறாள். அதைக் கேட்ட காந்தாரி நான் மனைவியா அல்லது அன்னையா என்று என்னாலே அறிய முடியவில்லை என்று சொல்கிறாள்காந்தாரிதாய்மை என்பதே  ஒரு பேதைத்தனம் தானே. அந்த பேதைத்தனத்தை அடையும் போது தானே பெண்ணுக்கு இன்பமும் ஆற்றலும் முழுமையும் எல்லாமே கிடைக்கின்றனஎன்கிறாள்

காந்தாரி துரியோதனன் பிறந்தவுடனேயேஅவன் மீறக் கூடாத இல்லையென்று ஒன்றும் இல்லையென்றே உணர்கிறாள். அவனே விதி அவனே நெறியும் முறையும் அறமும் என்று தாய்மையின் பேதைத் தனத்தின் உச்சத்தை  எட்டுகிறாள்

ஆனால் குந்தியிடம் தாய்மையின் இந்த பேதைத்தனம் வெளிப்படுவது மிகவும் குறைவு. அவள் வெளிப்படுத்துவது தாய்மையின் நிமிர்வை. முதன் முதலில் அவள் பாண்டுவை மணியறையில் பார்க்கும்போது அவன் வாயில் நுரை தள்ளி கட்டில் கிடக்கும் போது அவன் வாயில் இருக்கும் வரை முலைப்பாலின் நுரையாக எண்ணி பாண்டுவை  தன் மைந்தனாக உணரும்போது மட்டுமே அவள் தாய்மையை உணர்கிறாள். அவள் எப்போதுமே தேவயானியின் மணிமுடியை பற்றிய கனவிலேயே இருக்கிறாள். பெரும்பாலான தருணங்களில் குந்தி தன் மைந்தரின் நலனை எண்ணும் சுயநலன்மிக்க அன்னை வடிவம்பாண்டு இறந்தபின் அவன்  உடல் எரியீட்டுப்பட காத்திருக்கையில் சந்திர வம்சத்தின் கதை படிக்கப்படுகிறது அதைக் கேட்கும் குந்தி அந்த கதையில்  அவள் மைந்தர்களின் நாளைய  இடம் என்னவாக இருக்கும் என்றுதான்  சிந்திக்கிறாள். அவள் தன் கணவனின் உடல் அருகே அமர்ந்து அதுவரை வந்த அத்தனை குல மூதாதைகளின் பெயர்களும் அவள் மைந்தர்களின் கதைக்கான முன்னுரையில் குறிப்புகளாக மாறிவிடுமா என்றுதான் மன கிளர்ச்சி அடைகிறாள். ஒரு தாயாக, தன் மகன்களின் எதிர்காலத்தை பற்றி கனவு காண்பது ஒரு பெண்ணுக்கு சாதாரண விஷயம் தான். ஆனால் அவள் தன இறந்த கணவனின் உடலருகே அமர்ந்து தன மைந்தர்களை பற்றி காணும் பெரும் கனவுகள் அவள் ஆழத்தை காட்டுகின்றன

ஆனால் பாண்டு அப்படியில்லை. பாண்டு குந்தி கருவுற்ற செய்தியை கேட்டவுடன் அவன் பாண்டவன் என்று அழைக்கப்படுவான் என்று அறிந்தவுடன் மலையுச்சியில் வானத்தை தன் மேல் வளைத்து சூடியவனாக உட்கார்ந்திருக்கிறான். அவனுக்கு எல்லா ஒலிகளும் பாண்டவன் என்றே ஒலிக்கின்றன. பாண்டு தேனடைகளை எடுத்துக் கொண்டு உடல் முழுவதும் தேன் வழிய காட்டிலிருந்து திரும்பி வருகிறான். இந்த பூமியே ஒரு தேன் தட்டு என்று உணர்கிறான். முனிவர்கள் அவனைக் கண்டவுடன் அவன் அகம் முகம் முழுமை கொண்டிருக்கிறது என்று உணர்கிறார்கள். தன்னில்  முழுமையாக நிறையும கணமே மகிழ்ச்சி. யோகி என்பவன் அந்நிலையிலேயே  திரும்ப முடியாதபடி அடைந்தவன். பாண்டு எப்போதும் அவன் அனைத்து குழந்தைகளையும் சுமந்து திரிகிறான். அவனுக்கு தன் குழந்தைகளை பார்த்து தீரவில்லை, கொஞ்சித் தீரவில்லை முத்தமிட்டு தீரவில்லை. பாண்டு கல்லைக் கண்டாலும் குழந்தையாக கொஞ்சும் மனநிலையை தாய்மை மூலம் அடைகிறான்

தந்தைகள் பொதுவாக எப்போதும் எதிர்காலத்தில் வாழ்கிறார்கள் தங்கள்  மைந்தர்சென்ற சேர வேண்டிய தொலைவைப் பற்றியே சிந்திக்கிறார்கள் சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்பதை தொடர்ந்து சிந்திக்கிறார்கள்குந்தியை போல. ஆனால் அன்னையர் நிகழ் கணத்தில் வாழ்கிறார்கள்.அவர்களுக்கு மைந்தர்களாக அளிக்கப்பட்ட வரங்களிலேயே மகிழ்வடைகிறார்கள். ஒப்புநோக்க பாண்டு ஒரு பேரன்னையாகவே திகழ்கிறான் .  

மழை பாடலை படிக்கும் போது வாசகன்  அன்னையாகும் ஒரு தருணம் ஒன்று உண்டு. அது சம்படை சகுனி இடை நாளில் சந்தித்து என்னை அழைத்துச் செல்லுங்கள் மூத்தவரே நான் காந்தாரத்தில் செய்தியாவது இருக்கிறேன் என்று சொல்லும் காட்சி. சம்படை எத்தனை  துயர்  இருந்தால் அவள் பயத்தை வென்று அவனிடம் அதைக் கேட்டிருப்பாள். வாசகனையும் அன்னையாக உணரச் செய்த ஆசிரியரின் எழுத்துக்கு நன்றி.

Regards,

Srinivasan – Seattle

முந்தைய கட்டுரைபக்தி இயக்கமே வீண் தானா?
அடுத்த கட்டுரைசிவானந்தஜோதி