பூன் எனும் சாளரம்- வெங்கட்
எமர்சன் முகாம், கடிதம்
பூன் முகாம், கடிதம்
அறிவுநிலம் பூன் குன்று
அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…
அன்புள்ள ஜெ.
வணக்கம். கடந்த பத்தாண்டுகளாக உங்கள் புத்தங்கங்களையும் எழுத்தையும் பெறுமதிப்போடு வாசிப்பவன். மனமார்ந்த நன்றிகள் பல. உங்கள் தளத்தில் இருந்து கற்றவை கணக்கிலடங்கா. இது என் முதற்கடிதம்.
சென்ற முறை நீங்கள் 2022 இல் கலிபோர்னியா வந்த பொழுது உங்களை சந்திக்க தவறவிட்டேன். இந்த முறை உங்கள் அமெரிக்க அறிவிப்பு வந்தவுடன் எனது இரண்டு வாரங்களை ஒதுக்கி வைத்தேன். இதுவரை நான் எந்த எழுத்தாளரையும் நேரில் சந்தித்ததோ பேசியதோ கிடையாது. சிறிது பயம் உண்டு. முதல் அனுபவங்கள் மனதில் ஆழமாக நிற்பவை. ஆனால் முதல்படி கடினமாகவே தென்படும் – நீச்சல் குளத்தில் இறங்குவதற்கு முன்வரும் தயக்கம் போல.
இந்த முறையும் உங்களோடு இரவு உணவு விருந்திற்கு திரு விசுவின் அழைப்பு வந்த போது நான் அதே பயத்துடன் அதை தவிர்த்தேன். ஆனால் அடுத்த நாள் சிறு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திருமதி சாரதா வீட்டிற்கு வந்தேன். நீங்கள் வந்த பத்து நிமிடங்களில் மிக சாதாரணமாக வெகு நாள் பழகிய நண்பருடன் உரையாடுவது போல உணர்ந்தேன். அடுத்த மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அன்றிலிருந்து அடுத்த இரண்டு நாட்கள் உங்களுடன் நடந்தது, உரையாடியது, உணவு அருந்தியது மிகவும் மறக்க முடியாதது. இந்த பயம் உணர்வு அனைத்து வாசகர்களுக்கும் இருக்கும் என எனக்கு தோன்றியது. கடந்து வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
இரண்டு நாட்கள் கழித்து பூன் முகாமில் அனைவரும் குழுமினோம். நானும், எனது இரண்டு பள்ளித் தோழர்களும் இரண்டு முகாம்களிலும் கலந்து கொண்டோம். புது அனுபவங்கள், புது நண்பர்கள், எல்லாவற்றுக்கும் மேலாக தத்துவ பாடம். கிறிஸ்தவ மதத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு பல விஷயங்கள் முதன்முறையாக கேள்விப்பட்டதாக இருந்தது. ஆனால் வீட்டிற்கு வந்த பிறகு ‘இந்து ஞான மரபில் ஆறு தத்துவங்கள்’ புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். முகாமில் கற்றதும் இந்த புத்தகமும் இணைந்து எனக்கு மிகச் சிறந்த அடித்தளம் கொடுக்கின்றன. நான் முகாமில் முடிவில் கொடுத்த தேர்வில் மிகவும் குறைவான மதிப்பெண்ணை பெற்றவர்களில் ஒருவன்.
முகாம்களின் இடையில் இருந்த இரண்டு நாட்களில் ஒரு நாள் நீங்கள் என்னிடமும் என்னுடைய நண்பர்களிடமும் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினீர்கள். எங்கள் வாழ்வில் மறக்க முடியாத 90 நிமிடங்கள்.
இலக்கிய முகாமும் மிகச் சிறப்பான சிறப்பானதாக இருந்தது. பல விதமான இலக்கிய அறிமுகங்கள், சிறந்த வாசகர்கள், பேச்சாளர்கள் அனைவரும் எனக்கு என்னுடைய வாசிப்பிற்கு உதவ முன் வந்தார்கள்.
முதல் ஆசிரியர் சந்திப்பு, முதல் தத்துவ முகாம், முதல் இலக்கிய கூட்டம், புதிய உறவுகள், முதல் கடிதம் – மிக்க மகிழ்ச்சி.
முகாம் முடிந்து விமானத்தில் ‘வெள்ளை யானை’ வாசித்து வந்தேன். எய்தனிடம் ஒரு தாயார் ஒரு நொங்கு சாப்பிட கொடுப்பார்கள், இருவரும் அவர்கள் செய்த புண்ணியம் பற்றி நிறைவு கூறுவார்கள். நான் என்னுடைய புண்ணியத்தை நினைத்து நன்றி கூறினேன்.
உங்கள் சேவைக்கு நன்றிகள் பல.
மீண்டும் சந்திக்கும் வரை,
அன்புடனும், வணக்கத்துடனும்.
ஜெரி லூயிஸ்