அடிமைவாழ்வு- கடிதம்

நவீன அடிமைசாசனம்

ஜெ,

நவீன அடிமை சாசனம் பற்றிய கடிதம் படித்தவுடன் தனிப்பட்ட முறையில் பெரிய கடிதம் ஒன்றை எழுதினேன். ஆனால் ஏனோ அனுப்பவில்லை. இன்று மீண்டும் உங்களிடம் இதை சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

 2011 ல் நான் கல்லூரி முடித்த கையோடு திருமணம். Viva கூட திருமணம் முடிந்து தான் சென்றேன். கல்லூரி எந்த வேலையையும் பெற்று தராத ஒரு நடுத்தர கல்லூரி. புகுந்த வீட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாக மறுமாதமே சென்னை சென்றோம் தனிக்குடித்தனம்.

சென்னையின் கிட்டத்தட்ட எல்லா சந்துகளிலும் வேலை தேடி நாங்கள் இருவரும் அலைந்தோம்.3 மாத கடும் முயற்சிக்கு பின் சிறிய ஐடி கம்பெனி வேலை.10000 சம்பளம். வீட்டிலிருந்து தூரம் 1.5 மணி நேரம். 8 மணி நேர வேலை என்பது ஒப்புதல். 10 மணி நேரம் தினசரி. 12 மணி நேரம் அடிக்கடி. வீட்டிலும் வேலை தான். கட்டாயம் செய்தாக வேண்டிய சூழல். தினமும் சரமாரியாக திட்டு. படித்த பாடத்தை செயல் முறையில் செய்து அது வேலையும் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை அமெரிக்க முதலாளி மீட்டிங் என்ற பெயரில் திட்டு. ஒரு வருடம் மன அழுத்தம், AC யினால் மூச்சு விட பிரச்சனை என ஓடியது. 2ம் வருடம் முடியும் முன்னே நானே ஓடி வந்து விட்டேன் திண்டுக்கலுக்கு.

6 மாத மருந்துகளுக்கு பின் மீண்டும் 2013ல் மாவட்ட யூனியன் அலுவலகத்தில் கணிப்பொறி உதவியாளர் வேலைக்கு சேர்ந்தேன். 8000 சம்பளம். அருகில் அலுவலகம். 9 முதல் 6 வரை வேலை. ஆனால் உட்சபட்ச உழைப்பு. அலுவலகத்தில் யார் வந்து என்ன கேட்டாலும் செய்து தர வேண்டும். வந்து படுத்தால் எங்கே இருக்கிறேன் என்றே தெரியாது. நிமிரவே முடியாது. இப்போதும் வேலையை விட முடியாது. சம்பளம் இருந்தால் தான் வீட்டு வாடகை தர முடியும்.

மீண்டும் 6 மாதத்தில் 2014ல் அஞ்சல் அலுவலகத்தில் வேலைக்கு சென்றேன். GDS BPM என்பது பதவி. 5 சிறிய கிராமங்களின் ஒரே அஞ்சல் அலுவலகம். 3 மணி நேர வேலை. 5500 சம்பளம். 4 மணி நேர பேருந்து பயணம். ஆனால் கொஞ்ச நஞ்ச வேலை இல்லை ஆசானே. திட்டும் கூடுதல். மாதம் ஒரு முறை சிறிய அதிகாரி தேடி வந்து வரவு செலவை அதிகரிக்க வேண்டும் என திட்டுவார். பெரிய அதிகாரி வரச் சொல்லி அறிக்கை சரி இல்லை, பாலிசி பிடிக்கவில்லை, Rd கணக்கு இல்லை, பொன்மகள் கணக்கு இல்லை என திட்டுவார். இப்போதும் வேலையை விட முடியவில்லை

இதனிடையே குழந்தை பிறக்க பரிசோதனைகள், ஆபரேசன்கள், அளவற்ற ஹார்மோன் மாத்திரைகள். 4 வருடத்தை கடந்த பின் ஒரு நாள் பஸ் ஸ்டாண்டில் பேப்பர் பேனா வாங்கி ஒரு பெட்டி கடையில் அமர்ந்து வேலை வேண்டாம் என கடிதம் எழுதி பெரிய அதிகாரியிடம் தந்துவிட்டு வந்து விட்டேன்.

அடுத்து கணவரின் சரக்கு மற்றும் சேவை வரி கட்டும் அலுவலகத்தில் முழு நேர வேலை. மருத்துவமனை வாசம் போக.2020ல் செய்த இரண்டாம் முறை ICSI பரிசோதனை தான் வென்றது. ஒரு தடவை முயற்சி செய்ய 4 லட்சம் பணமும், பல நூறு மாத்திரைகள் மற்றும் சில ஆபரேசன்கள்.

என்னால் என் தகுதிக்கு என்ன வேலை செய்ய முடியும் என்று தெரியும். ஆனால் அதை முடிவெடுக்கும் சூழல் எங்குமே இல்லை. அடிமட்ட தொழிலாளர்கள் சொல்வதை செய்யும் கருவிகள் மட்டுமே. எதிர்த்து எந்த பேச்சும் தொடுக்கவே முடியாது. நிமிர்ந்து பார்ப்பதே தவறு என புரிந்து கொள்ளும் அதிகாரிகளை மட்டுமே நான் பார்த்துள்ளேன். பெண்கள் எங்கும் எந்த சலுகையும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சமமான மரியாதை கூட இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு அவமானம் மிக்கது.

கட்டாயம் சம்பளம் வேண்டும் என்ற நிலையில் எதிர்காலத்தை, உடல்நலனை கணித்து யாரும் வேலையை விட்டுவிடவோ, உழைப்பை குறைத்து கொள்ளவோ மாட்டார்கள். OT மூலம் கொஞ்சம் வருமானம் வந்தால் அது நல்லது என்றே எண்ண தோன்றும் பல மில் தொழிலாளிகளை நான் அறிவேன். ஓடிக் கொண்டே இருக்கும் நிலையில் 10 வருட இளமை கரைந்த பின் வேலையை விட்டால் என்ன, போனால் என்ன என்றே ஆகும். 40 வயதில் யார் நமக்கு என்ன வேலை தருவார்கள், நமக்கு என்ன வேலை தெரியும், ஆக இங்கேயே இதையே செய்வோம் எனவே முடிவாகும்

சுழலை விட்டு வெளியே வருபவர்கள் சராசரிக்கும் மேலே உள்ள உங்களின் வாசகர்கள் போன்றவர்களே. அவர்களுக்கே நீங்கள் சொல்வது புரியும். மற்றவர்கள் புரிந்தாலும் வெளியே வருவது கடினம். நம்மை நாமே உந்தி தள்ளி தான் அதை செய்ய முடியும்.

செயல் தரும் இன்பத்தை அடைய ஏழு மலை, ஏழு கடல் தாண்டித்தான் ஆக வேண்டும். மந்திரம் போல எதுவும் நடக்காது. நம் மண்டையிலும் உடனே உதிக்காது. முறையான, நிலையான செயல் தினமும் செய்வது தான்

 என்ன சொல்ல வந்தேனோ அதை சொல்லி விட்டேனா என தெரியவில்லை

பிரியமுடன்,

எஸ்

அன்புள்ள எஸ்

உலகியல்வாழ்க்கை அளிக்கும் புறவயமான சவால்களுக்கு உலகியல் பதில் மட்டுமே உண்டு. அதற்கு வேறு தீர்வுகளை சொல்வது அபத்தம். வேலையை விடுங்கள் என்றோ சுழலை விட்டு வெளியேறுங்கள் என்றோ நான் ஒருபோதும் சொல்வதில்லை. அந்தவகையான மாயைகளை அளிப்பதில்லை.  

பொருளியல் தேவைகளுக்குப் பணம் தான் அவசியம். எவரானாலும் அதை ஈட்டியே ஆகவேண்டும்.  ஆகவே  உலகியல்தேவைக்கான தகுதிகளை ஈட்டும் பொழுதுகளில் அவற்றை வீணடிப்பவர்களிடம் திரும்பத் திரும்ப இதைச் சொல்கிறேன். உலகியலில் இன்று நாம் ஈட்டிக்கொள்ளவேண்டியது உலகியலைக் கடந்து நமக்கான வாழ்க்கையை உருவாக்கிக் கொள்வதற்கான நேரத்தைத்தான். அதை ஈட்டமுடியாத நிலையில் நம் வாழ்க்கையை நாம் வேலைக்கு அடிமையென ஆக்கிக்கொள்ள வேண்டிய சூழலே இந்தியாவிலுள்ளது. அது ஒரு மாபெரும் வீணடிப்பு. தனித்தேடல்களின் பொருட்டு உலகியலை இழப்பவர்கள் பின்னர் உலகியலுக்காக தனித்தேடல்களை இழப்பார்கள்இதை நான் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.

இந்தியாவில் அரை சதவீதம்பேருக்குக் கூட தங்கள் சொந்த பொருளியல் வாழ்க்கையை தங்கள் தேர்வாக அமைத்துக்கொள்ளும் சுதந்திரம் இல்லை. தங்களுக்கே உரிய தனிஆர்வங்களுக்குரிய நேரத்தை ஈட்டிக்கொள்ளும் நிலையும் இல்லை. அத்துடன் தங்கள் உள்ளத்தை சுதந்திரமாக வைத்துக்கொள்ளும் உடல்நிலையும் இல்லை. அவை எல்லாம் இருந்தும் வெறும் அசட்டுத்தனத்தால் வீணடிப்பவர்களிடமே  கடிந்து பேசிக்கொண்டிருக்கிறேன். பொருளற்ற குழப்பங்கள், எதிலும் கவனம் நிலைக்காத தன்மை, இருப்பதை உணராமல் எதையெதையோ மிகையாக எண்ணிக்கொண்டிருத்தல் என இவர்களின் சிக்கல்கள் ஏராளமானவை.

அப்படி ஒரு வாழ்க்கைவாய்ப்பு அமைந்தபின் ஒருவர் பிரியாணி தேடி அலைகிறார் என்றால், பிரியாணி கிடைக்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் என்றால், சமூகவலைத்தளத்தில் வம்பை வளர்த்து வீணாகிறார் என்றால், தன்னை பெரிய ஓர் ஆளுமை என நினைத்துக்கொண்டு தனக்குரியது அமையவில்லை என பிலாக்காணம் வைக்கிறார் என்றால் அவரை எப்படி எடுத்துக்கொள்வது? நாட்களை முழுமையாகவே வீணடிப்பவர்கள் உண்டு. ஆண்டுகளை வீணடிப்பவர்கள் உண்டு. ஒருநாளில் அரைமணி நேரம் தனக்காகக் கிடைக்காதா என ஏங்கும் பலகோடி மானுடர் நடுவே வாழ்கிறோம் என இந்த அற்பர்கள் உணர்வதே இல்லை. அவர்கள் தங்களுக்கு அனைத்தையும் அளித்த ஆற்றல்களை நேரடியாக அவமதிக்கிறார்கள்.

உடல்நலமின்மை, நிதிச்சிக்கல் என உலகியலில் சுழல்வதென்பது ஒரு பெரிய துயர்தான். உண்மையில் அதற்கு நடைமுறைத்தீர்வுகள் மட்டுமே உள்ளன.  அவை நீங்கட்டும் என வாழ்த்துகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைதத்துவம்- நகரங்களில் உள்ளறை வகுப்புகள்
அடுத்த கட்டுரைபொன்னிலைக் காடுகளின் ஊர்