பூன் முகாம், கடிதம்

அறிவுநிலம் பூன் குன்று

அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…

அன்புள்ள ஆசிரியருக்கு,

Boone  தத்துவ மற்றும் இலக்கிய முகாம்களில் கலந்து கொண்டது  ஓர் வாழ்நாள் அனுபவம். இதற்கு மூல காரணமாக  இருக்கும் உங்களுக்கும், இதை நடைமுறையில் சாத்தியப்படுத்திய விஷ்ணுபுரம் அமைப்பாளர்கள் மற்றும் நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

இது நான் கலந்து கொள்ளும் முதல் பொது நிகழ்வு. எனது இயல்பான தயக்கத்தினாலும், வாசித்தால் மட்டும் போதும்பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வது தேவை இல்லை என்ற என்னுடைய (தவறான) எண்ணத்தினாலும் இதற்கு முந்தைய முகாம்களில் கலந்து கொள்ள முயற்சி  எடுக்கவில்லை.    ஆனால் சமீபத்தில், முழுமை அறிவு தொடர்பான விவாதங்களில், புதிதாக எதையாவது கற்று கொள்ள வீட்டை விட்டு வெளியே கிளம்பி செல்வதன் அவசியத்தை  தாங்கள்  வலியுறுத்தியதை கண்ட பின்இந்த முகாமில் கலந்து கொள்ள முடிவு செய்துஅறிவிப்பு வந்த ஓரிரு தினங்களிலேயே விண்ணப்பித்தேன்.  

சுமார் ஒரு வாரத்திற்கு பின் இது தொடர்பாக சௌந்தர் அப்பாவிடம் தொலைபேசியில் பேசியது, முகாமில் பெறப்போகும் இனிய அனுபவங்களுக்கான முன்னோட்டமாக அமைந்தது. அவரது நட்பான குரலும், மென்மையான பேச்சும் கேட்பவரை இலகுவாக்கி அணுக்கமாக உணரச் செய்வன. பேசும்போது அவர் சொன்னதெல்லாம் திட்ட வட்டமான விதிமுறைகள் -தத்துவ வகுப்புக்களில் வாய் திறக்க கூடாது, செலுத்திய பணம் திரும்ப தர மாட்டாது என்பது போல. ஆனால் அவர் சொன்ன விதமோ, மறு பேச்சின்றி உடனே ஒப்புக்கொள்ள செய்வது. உண்மையில் அப்போது அவர் எந்த நிபந்தனை விதித்திருந்தாலும் ஒப்புக்கொண்டிருப்பேன் என்று எண்ணுகிறேன். (உதாரணமாக, முகாம் நடக்கும் ஒரு வாரமும் எதுவும் சாப்பிடக்கூடாது என்று சொல்லி இருந்தாலும் சரி என்று சொல்லி இருப்பேன்). நான் boston-ல் இருந்து வருகிறேன் என்றதும் boston பாலாவை தெரியுமா என்று கேட்டார். அடுத்த நான்கு நாட்களில் நாற்பது பேராவது இதே கேள்வியை கேட்பார்கள் என்று தெரிந்திருந்தால் boston பாலாவின் வீட்டிற்கு நேரில் சென்று அறிமுகம் செய்து கொண்டு வந்திருப்பேன்.

ஓரிரு தினங்களில் முகாமில் கலந்து கொள்பவர்களுக்காக உருவாக்கப்பட்டிருந்த whatsapp குழுமத்தில் இணைந்தேன்பிற குழுமங்கள் போல வெட்டி அரட்டைகள் எதுவும் இந்த குழுமத்தில் இல்லாமல் இருந்தது ஆச்சர்யபடுத்தவில்லை. அதே போல விமான நிலையத்தில் இருந்து முகாமுக்கு செல்ல வாகனங்களை ஒருங்கிணைக்கும் செயலில் இருந்த துல்லியமும் எதிர் பார்த்ததே. Cijo-வுக்கு நன்றி.

பயணம் நெருங்க நெருங்க ஆர்வமும் அதை விட அதிகமாக பதட்டமும் உருவானது. ஆனால் முகாமில் நண்பர்களை சந்திக்க தொடங்கியதும் அந்த பதட்டம் பெருமளவு குறைந்தது. முகாமில் பங்கு கொண்ட நண்பர்கள்  அனைவரும்  – ஆம் அனைவருமே மிகுந்த நட்புணர்வோடும் இன் முகத்தோடும் தான் அறிமுகம் செய்து கொண்டார்கள். அனைவரும் விரிவான வாசிப்பும் தெளிவான சிந்தனையும் கொண்டவர்களாக இருந்தது மட்டுமல்லஉலகியலிலும் சாதனை புரிந்தவர்களாகவே இருந்தார்கள் – Google, Microsoft, Visa, Bank of America, J P Morgan  போன்ற பெரு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் பெரும்பாலோர்அதோடு பலர் இசை,ஓவியம்,நாடகம் போன்ற வெவ்வேறு துறைகளில் ஆர்வமும் தேர்ச்சியும் கொண்டிருந்தார்கள் .

இதெல்லாம் கூட நான் எதிர் பார்த்தது தான். எதிர் பாராத ஒன்று பலர் மலை ஏற்றம் மற்றும் ஒடுதலில் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தது. நான் வாரம் ஒரு முறை 5 K Race  என்று சொல்ல படும் ஐந்து கிலோமீட்டர் ஓட்ட பந்தயதில் கலந்து கொள்வேன். இதை பற்றி எனக்கு ஒரு சிறு பெருமிதம் உண்டு. ஏனென்றால் எனது நண்பர்கள் குழுவில் யாரும் அதையெல்லாம் செய்வதில்லை. ஆனால் விஷ்ணுபுரம் நண்பர்களோ இதிலும் என்னை விட பல படிகள் முன்னே இருந்தனர். ஒரு நண்பர் தினமும் ஐந்து கிலோ மீட்டர் ஒடுவதாக சொன்னார். மேலும் சில  நண்பர்கள் 21 கிலோ மீட்டர் ஓடும் half marathon-ல்  பல முறை கலந்து கொண்டதாக சொன்னார்கள். இன்னும் ஒரு நண்பர் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள அனைத்து மலைகளிலும் எறியிருப்பதாக தெரிவித்தார். சரி தான், அடுத்த முறை கலந்து கொள்வதற்குள் நாமும் ஏதாவது பெரிதாக செய்ய வேண்டும் என்று  நினைத்து கொண்டேன்.

ஞாயிறு அன்று  நாங்கள் வந்து சேரந்த சில மணி நேரங்கள் கழித்து நீங்கள் வந்தீர்கள். அப்போது தொடங்கி அடுத்த சனி இரவு வரை, முடிந்த போதெல்லாம் உங்கள் சொற்கள் காதில் விழும் தொலைவில் நின்று நீங்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தது பேரனுபவம். எந்த விஷயமாய் இருந்தாலும் அதை பற்றி அடுக்கடுக்கான தகவல்கள்; கூர்மையான அவதானிப்புக்கள்; அது தொடர்பான அனுபவங்கள்; அந்த அனுபவங்களை கேட்பவர்கள் வெடித்து சிரிக்கும் வகையில் விவரிக்கும் நகைச்சுவை உணர்வு என்று ஒவ்வொரு நிமிடமும்  ஒரு பெரும் அறிவு ஜீவியின் முன் நிற்கிறோம் என்று உணர செய்த கணங்கள் அவை.

திங்கள் அன்று தத்துவ முகாம் தொடங்கியதுமே முதல் நாள் இருந்த விளையாட்டு மன நிலை மறைந்து ஒரு தீவிர மன நிலை உருவானது . இரண்டு நாட்கள் தொடர்ந்து அதே மன நிலை நீடித்தது ஒரு புது அனுபவம். (திங்கள் இரவு உணவு அருந்திய பின் யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.  அறைக்கு சென்ற பின் கூட நானும் என் அறை வாசியான மணியும் கூட எதுவும் பேசிக்கொள்ளாமலேயே தான் உறங்க சென்றோம்). அந்த இரண்டு நாட்களில் கற்றவற்றை தொகுத்துக்கொள்ள இன்னும் சில காலம் ஆகும். ஆனால் இரண்டு விஷயங்களை குறிப்பிடலாம் என்று தோன்றுகிறது.

வகுப்பு தொடங்கும் போது எனக்கு வேதங்களை பற்றி எதுவுமே தெரியாது என்பது மட்டுமல்ல; வேதங்கள் வேறு யாருடையதோ என்ற எண்ணமும், ஒரு மெல்லிய விலக்கமும் தான் இருந்தது. ஆனால் சிருஷ்டி கீதத்தில் தொடங்கி நீங்கள் ஆற்றிய அந்த உரையை கேட்ட பின் வேதம் செய்தவர் மட்டுமல்ல அதற்கு முன்பு குகையில் கோட்டு ஓவியங்களை வரைந்த ஆதி மனிதனும் நானே என்பதாய் உணர்ந்தேன். உணர்வு பூர்வமான அந்த உரைஉதாரணமாக தீயை அந்த காலத்து மனிதர்கள் எப்படி புரிந்து கொண்டிருப்பார்கள்  என்று பல கவித்துவ உருவகங்களுடன் விளக்கியதுநான் இது வரை கேட்ட உரைகளிலேயே சிறந்தது என்று எண்ணுகிறேன்.

வகுப்பு முடியும் தருணத்தில் நீங்கள் கூறிய இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருகிறது. “அறிவு சுற்றம் என்பது நாமே தேடி கொள்வது; இந்த வகுப்பில் கலந்து கொண்டதன் மூலம் நாராயண குருவில் தொடங்கும் ஒரு குரு மரபின் மாணவன் என நீங்கள் உணரலாம்; இன்னும் பின் சென்று பார்த்தால் சங்கரரும் பாத ராயனரும் கூட எனது ஆசிரியர்களே என்று எண்ணலாம்என்று  நீங்கள் கூறியதை கேட்ட போது ஏற்பட்ட மன எழுச்சி சாதாரணமானது அல்ல.

தத்துவ வகுப்புகள் முடிந்ததும் குழு புகைபடங்கள் எடுத்த பின் பலரும் தனி தனியே உங்களுடன் புகை படங்கள் எடுத்து கொண்டார்கள். மிகுந்த தயக்கத்திற்கு பிறகு நானும் உங்கள் அருகே அமர்ந்து ஒரு படம் எடுத்து கொண்டேன். மலர்ந்த முகத்துடன் என் தோள் மேல் நீங்கள் கை போட்ட போது என் உடலில் ஏற்பட்ட நடுக்கம் மறைய பல நிமிடங்கள் ஆயின. அதன் பிறகும் கூட உங்களிடம் நேரடியாக பேச ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருந்தது. அடுத்த முறைகளில் அந்த தயக்கம் மறைந்து பேச முடியும் என்று நம்புகிறேன்.

அடுத்த இரு நாட்களில் தங்களுடனும்,நண்பர்களுடனும் ஊர் சுற்றி பார்த்தது இனிய அனுபவம், அதிலும் மூடப்பட்டிருந்த பாதை வழியாக சாய்ந்து கிடந்த மரங்களை தாண்டி கோன் இல்லத்தை பார்க்க சென்றது. அன்று மாலை ராஜன் திரை இசையை பற்றி விரிவாக பேசியதை கேட்க நேர்ந்தது மற்றுமொரு மறக்க முடியாத அனுபவம்.

வியாழன் அன்று இலக்கிய முகாமுக்காக வந்த புதிய நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது. குறிப்பாக Boston பாலாவை கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் அறிமுகம் செய்து கொண்டதும், எனக்கு Boston பாலாவை தெரியும் என்று எல்லோர் முன்னாலும் பிரகடனம் செய்ததும் இனிய நினைவுகள்.

வெள்ளி அன்று இலக்கிய முகாம் தங்கள் உரையுடன் தொடங்கியது. நண்பர்களின் அரங்குகள் தொடங்கியதும் முதலில் ஒரு சிறு ஏமாற்றம் ஏற்பட்டது உண்மை. அது வரை உங்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்து விட்டு அதே தரத்தை பிறரது  பேச்சிலும் எதிர் பார்த்ததனால் ஏற்பட்ட விளைவு என்று எண்ணுகிறேன். ஆனால் சில நிமிடங்களிலேயே, மனம் அதற்கு பழகி விட்டது.  பின் எல்லா அரங்குகளையும் ரசிக்க முடிந்தது. என்னை மிகவும் கவர்ந்தவை பழனியின் ராமாயண அரங்கு, சகா வின் The Witch பற்றிய அரங்கு மற்றும் பிரபுவின் Walt Whitman குறித்த அரங்கு. அஞ்சலை பற்றிய அரங்கில் எனக்கு சொல்வதற்கு சில கருத்துக்கள் இருந்தாலும் அவையில் எழுந்து பேச துணிவு இல்லாததால் பேசாமலே இருந்து விட்டேன்.

வெள்ளி இரவு புது எழுத்தாளர்களுக்கு புத்தகம் அளித்து நீங்கள் வாழ்த்தியதை காண்பது பெரும் மன எழுச்சியை அளித்தது. உங்கள் புத்தகம் ஒன்றை மொழி பெயர்க்க வேண்டும் என்ற  கனவு எனக்கும் உண்டு. தமிழ் விக்கிக்காக சில பதிவுகளை மொழி பெயர்த்தது தவிர வேறு அனுபவம் ஏதும் இல்லை. தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த முகாமில் மறக்க முடியாத மற்றொன்று பழனியும் ராஜனும் அவ்வப்போது அளித்த இசை விருந்து. குறிப்பாக ராஜனின் இசையில் அமைந்த ஊழிக்கூத்து. இதுவரை ஐம்பது முறைகளுக்கு மேல் Youtube-ல் கேட்டும் இன்னும் பித்து குறைய வில்லை.

மொத்தத்தில் ஒரு வாரம் மறக்க முடியாத அனுபவம். அதற்குள்ளாகவே நிஜத்தில் இருந்ததை விட மேலும் ஒளி மிக்கதாக தோன்றும் நினைவுகள். இப்போதே தொடங்கி விட்ட அடுத்த முகாமுக்கான எதிர்பார்ப்புகள். ஆனால் அதற்குள் செய்ய வேண்டிய செயல்கள் பலதத்துவ வகுப்பில் எடுத்த குறிப்புகளை விரிவாக்கி எழுத வேண்டும்; விவேகானந்தர் மற்றும் சங்கரர் குறித்து மேலும் படிக்க வேண்டும்; நண்பர்கள் பரிந்துரைத்த புது எழுத்தாளர்களை வாசிக்க வேண்டும்; வெண்முரசில் மீதமுள்ள நாவல்களை முடிக்க வேண்டும். மொழி பெயர்ப்புக்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும்முடிந்தால் half-marathon  ஓட வேண்டும். பார்க்கலாம். செய்ய முடிகிறதோ இல்லையோ, “கனவு என்று ஒன்று இருப்பதே வாழ்க்கையை மேலும் அழகாக்கும்என்பதல்லவா ஆசிரியர் கூற்று?

அன்புடன்,

செந்தில் குமார், Boston 

பூன் கடிதம்

முந்தைய கட்டுரைநம்மை நாம் ஆளமுடியாமலாவது…
அடுத்த கட்டுரைஆற்றூர் நினைவுரை