அறிவுநிலம் பூன் குன்று
அமெரிக்கா: கனவுகள், திட்டங்கள்…
அன்புள்ள ஜெ,
“ஏன் நீங்கள் பூன் முகாமிற்கு வருகிறீர்கள்? இந்த முகாம் உங்களுக்கு அளிப்பது என்ன? அடுத்த முறையும் வருவீர்களா?” – வழக்கமாக முகாம் முடிந்து கடைசி நாளன்று விமான நிலையத்திற்குத் திரும்பிச் செல்கையில் இந்தக் கேள்விகளைக் கேட்கும் நண்பர் இம்முறை முகாமிற்கு வரும் வழியிலேயே இவற்றைக் கேட்டு விட்டார். நான் முதன்மையாக அவருக்குச் சொன்ன பதில் மனதிற்குகந்த தோழமை வட்டத்தைச் சந்திக்கும் மகிழ்ச்சிக்காக வருகிறேன் என்பது. அந்த நட்புச் சுற்றமே நேர்நிலை எண்ணம் கொண்டதாக, ஒத்த அலைவரிசையும் அறிவுத்தேடலும் கலையிலக்கிய ஈடுபாடுமுள்ளதாக ஆகும்போது, இந்தச் சந்திப்புகள் இன்னும் பலமடங்கு மகிழ்ச்சியானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்து விடுகின்றன.
இலக்கிய முகாமின் இரு முழு நாட்களும், அதன் முன்னும் பின்னுமான பயண நாட்களும், எப்போதுமிருக்கும் உலகியல் கவலைகளையும் பேச்சுக்களையும் முற்றாகத் தவிர்த்துவிட்டு, இலக்கியம் பற்றி மட்டுமே பேசி விவாதித்து, புதிய கோணங்களையும் கற்பனைகளையும், வாசிப்பிற்கான சாத்தியங்களையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு பூன் முகாம் நமக்களிக்கும் பெருங்கொடை. செவ்வியல் காவியங்கள், தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள், ஆங்கில இலக்கிய அறிமுகம், உலக இலக்கிய வாசிப்பிற்கான வழிமுறைகள் என இந்தச் சந்திப்புகள் எனக்களிக்கும் திறப்புகள் வேறு எங்கும் நான் அடைந்து விட முடியாதவை.
வேறு வேறு காலகட்டத்தையும், தலைமுறைகளையும் சேர்ந்த எழுத்தாளர்களை அவர்களின் படைப்புகளை முன்வைத்து விவாதித்து, இன்றைய சூழலில் அவற்றின் இடமென்ன என விவாதித்து அறிவதும், முன்னோடி எழுத்தாளர்களை இன்றும் நினைவு கூர்வதும், அந்தப் பெருமரபின் நீட்சியாக நம்மை என்ணிப் பெருமை கொள்ளச் செய்வதும், நம் கடமை என்ன என்றுணரச் செய்வதும் பூன் முகாமின் பணியெனவே ஆகிவிட்டதை உணர்கின்றேன். சமூக வலைத்தளங்களின் சார்புநிலை வசைகளும், கேலிகளும், வெறுப்புணர்வும் ஓங்கி ஒலிக்கும் நம் குழலில், நண்பர்களிடையே ஆக்கப் பூர்வமான விவாதங்களுக்கு ஒரு வாய்ப்பாக, எதிர்க்கருத்துக்களையும் எவ்வாறு நேர் மனநிலையோடு முன்வைப்பதென்பதைக் கற்றுக் கொடுக்கும் இடமாக இந்தச் சந்திப்புகள் அமைகின்றன.
அனைத்திற்கும் மேலாக ஆசிரியரின் அருகாமையிலேயே சில நாட்கள் என்பது எந்த ஒரு மாணவனுக்கும் பெரும் பேறல்லவா? இளமை முதல் நேர்நிலை இலட்சியவாத பிம்பங்கள் மீது பெரும் ஈர்ப்பு கொண்ட எனக்கு, அந்த இலட்சியவாதத்தின் முகமாக, செய்யும் செயலே யோகமெனக் கொண்ட ஒருவர் ஆசிரியரென அருகமர்ந்து நமக்குக் கற்றுக்கொடுப்பது எங்கள் நல்லூழ் அன்றி வேறென்ன?
பூன் முகாம் பற்றி எதிர் கொண்ட இன்னொரு கேள்வி, “இந்தச் சந்திப்புகளிலும், முகாம்களிலும் ஜெயமோகனின் நூல்களைப் பற்றி மட்டுமே பேசுகிறோமா? அவரது நூல்களை மட்டுமே வாசிக்கும் ஒரு சார்பு நிலை எடுக்கிறோமா?” என்பது. நிச்சயம் இல்லை. உண்மையில் இந்த வகுப்புகளும், சந்திப்புகளும் என் வாசிப்பின் எல்லைகளை விரித்துக் கொண்டேதான் செல்கின்றன. தால்ஸ்தோய், கசந்தசாகீல் என உலக இலக்கியத்தின் வரிசையையும், கு.அழகிரிசாமி, அசோகமித்திரன், தேவதச்சன், தேவதேவன் என நம் மரமின் பெரும் ஆளுமைகளையும், தற்கால எழுத்தாளர்களையும் விரிவாக வாசிக்கும் வாய்ப்பை இவை எனக்கு வழங்குகின்றன. இந்த முகாமிற்கு வரத்தொடங்கியது முதல், ஒவ்வொரு வருடமும் உலக அளவிலும், இந்திய, தமிழ்ச் சூழலிலிருந்தும் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெருநாவலையாவது வாசித்து முடித்திருக்கிறேன். இவை அனைத்தும் இந்த இலக்கிய முகாமும், இங்கு அமையப்பெற்ற நட்புச் சுற்றமும், அதன்மூலம் கிடைக்கும் நேர்நிலை மனநிலையும் உருவாக்கிய சாத்தியங்களே என நம்புகின்றேன்.
இம்முறை முகாமிற்கு வந்த போது, அந்த அழகிய பூன் மலைத் தொடரின் உச்சியிலிருந்து கதிரெழுவதைக் காண்பதற்காக ஒருநாள் அதிகாலை சென்றிருந்தோம். எழுகதிர் வருவதன் முன்னர், அந்த மங்கலான வெளிச்சத்தில் கண்ணுக்கெட்டிய தொலைவு வரை தெரிந்த அடுக்கடுக்கான மலைத்தொடர்களைப் பார்த்துக் கொண்டிருந்தோம். காலவெளியில் உறைந்து நின்றுவிட்ட கடல் அலைகளைப் போல, கருமையும் நீலமுமாக எழுந்து நின்றன அம்மலைத் தொடர்கள். கதிரவனின் பொற்கிரணங்கள் வந்து தொட்ட அந்த நற்பொழுதில், குன்றென நின்றிருந்த ஒவ்வொரு மலையும், இலையுதிர் காலத்தின் வண்ணச் சிதறல்களை அள்ளித் தெளித்தபடி ஒவ்வொரு மரமும், ஒவ்வொரு இலையும் தனித்துத் தெரியும்படி துலங்கி வந்தன. எதிர்நிலை எண்ணங்களும் வெறுப்புணர்வும் இருளென எழுந்து வாழ்வின் மீதான நம்பிக்கையையும் இலட்சியவாதத்தையும் உறைந்து போகச் செய்கையில், கதிரென எழுந்து, ஒளியைத் தந்து எங்கள் சிந்தனையில் வண்ணங்களைப் படரச் செய்யும் இந்தக் கல்விக்காகவும், பெற்றுக்கொள்ளும் அனைத்திற்குமாகவும் ஆசிரியருக்கு நன்றி!
சாரதி