விவிலியத்தின் முகங்கள் – ஓர் அறிமுகம்

கிறித்தவர்களால் தங்கள் மூலநூலாக ‘புனித பைபிள்’ என்று கொண்டாடப்பட்டு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படும் விவிலியம் உண்மையில் மிக நீண்ட வரலாறும், சீரற்ற வளர்ச்சிப்போக்கும் கொண்ட ஒரு சிந்தனை ஓட்டத்தை பதிவுசெய்துள்ள நூல்களின் தொகுப்பு ஆகும். இந்த நூல்கள் உருவாகி மொழியாக்கம் செய்யப்பட்டு பல்வேறு வரலாற்றுச் சூழல்களில் பலவாறாக தொகுக்கப்பட்டு. சுருக்கப்பட்டு, சேர்க்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு கிடைக்கும் விவிலியமேகூட பல வடிவங்கள் கொண்டது. கிறித்தவ மதம் மிக வலிமையான நிறுவன அமைப்பு கொண்டது. கிறித்தவ தேவாலயங்கள் [church] அரசியலில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டவை. நீண்ட நெடுங்காலம் புனித ரோமப்பேரரசு உலகின் பெரும்பகுதியை ஆண்டது. ஆகவே பைபிளுக்கு ஒரு மத நூல் என்பதற்கும் மேலாக ஒரு அரசியல் மூலநூல் என்ற மதிப்பும் உண்டு. அது நேரடியாகவே சட்டநூலாகவும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆகவே அந்நூல் அரசியல், சமூகவியல் தேவைகளுக்கு ஏற்ப பலவிதமான மாற்றங்களை அடைந்தது இயல்பே.

விவிலியம்.

விவிலியம் என்னும் சொல் பைபிள் என்ற சொல்லின் தமிழாக்கம். யூத மரபு மற்றும் கிறித்தவ மதத்தின் அடிப்படைக் கூறுகளைக் கொண்ட எழுத்துக்களின் பெருந்தொகையே பைபிள் எனப்படுகிறது. பைபிள் என்ற பெயர் பிப்லியா [biblia] என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. நூல்கள் என்று அதற்குப் பொருள். தாள் என்று பொருள் வரும் பாப்பிரஸ் என்ற சொல்லின் திரிபு அது. பாப்பிரஸ் புல்லில்தான் ஆரம்பகாலத்தில் நூல்கள் எழுதப்பட்டன.

யூத பைபிள், கிறித்தவ பைபிள் இரண்டும் சற்றே வேறுபட்டவை. யூத பைபிள் ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட 39 நூல்களின் தொகை ஆகும். சிறிதளவு அராமிக் மொழியிலும் இது உள்ளது. கிறித்தவ பைபிள் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. புதிய ஏற்பாடு 27 நூல்கள் கொண்டது. கிறித்தவ மதத்தில் உள்ள இரு பெரும் பிரிவினரால் பழைய ஏற்பாடு இரண்டு வேறுபட்ட வடிவங்களில் முதனூலாகக் கொள்ளப் பட்டுள்ளது. ரோமாபுரிக் கத்தோலிக்க மதம் யூதர்களின் பைபிளுடன் ஏழு வேறு நூல்களையும் சேர்த்துக் கொண்டுள்ளது. அவற்றில் சில நூல்கள் கிரேக்க மொழியில் எழுதப்பட்ட குறிப்புகள் மற்றும் கடிதங்கள். புரட்டஸ்டாண்டுகளின் பழைய ஏற்பாட்டில் யூத பைபிளில் உள்ள 39 நூல்கள் மட்டுமே உள்ளன. கத்தோலிக்க சபையால் சேர்க்கப்பட்ட நூல்கள் அபோகிரிஃபா [பிற்சேர்க்கை] என்று புரட்டஸ்டாண்டுகளால் சொல்லப்படுகின்றன. ரோமாபுரிக் கத்தோலிக்கர்கள் அவற்றை மூலநூல்சேர்க்கை [ ட்யூட்டரோ கானனிகல் ] என்கிறார்கள்.

யூத பைபிள் மூன்று தனிப்பெரும் பிரிவுகள் கொண்டது. முதல்பகுதி தோரா[Torah] அல்லது சட்டம். இது மோஸஸின் புத்தகம் என்று சொல்லப்படுகிறது. நீபியம் [Nebiim] அல்லது வருநலமுரைப்போர் [தீர்க்கதரிசிகள்] என்ற பகுதி இரு பகுதிகளாக மேலும் பிரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால வருநலமுரைப்போர் முதல் பகுதியிலும் பிற்கால வருநலமுரைப்போர் இரண்டாம்பகுதியிலும் சொல்லப்பட்டுள்ளனர். கீடுபியம் [Ketubim ]அல்லது மறைமொழிகள் பகுதியில் பாடல்கள், வருநலமுரைகள், மற்றும் சிறு நூல்கள் உள்ளன.

கிறித்தவ பழைய ஏற்பாடு உள்ளடக்க அடிப்படையில் நூல்களை தொகுத்துள்ளது. முதலில் வரலாற்று உள்ளடக்கம் கொண்ட நூல்கள். பெரும்பாலும் தோராவை சேர்ந்தவை. இரண்டாம் பகுதியில் அறிவுறுத்தும் நூல்கள் மற்றும் வழிபாட்டு நூல்கள். மூன்றாம் பகுதியில் வருநலமுரை நூல்கள். முறையே சென்றகாலம் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்துக்கான நூல்களாக இவை அமைக்கப்பட்டிருக்கலாம். புரட்டஸ்டாண்ட் பழைய ஏற்பாடு இதே அடுக்குமுறை கொண்டதே. ஆனால் யூத பைபிளில் உள்ள உட்கூறுகள் மட்டுமே இதில் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய ஏற்பாடு பைபிள் முக்கியமாக நான்கு இறைச்செய்திகள் [சுவிசேஷங்கள்] அடங்கியது. கிறித்தவத்தின் வரலாறும் அறக்கூற்றுகளும் புனித பவுல் முதலியோரின் கடிதங்களும் வருநலமுரைகளும் சேர்க்கப்பட்டது. பைபிளுக்கு உலகமெங்கும் மொழியாக்கங்கள் உண்டு, தொடர்ந்து புதிய மொழியாக்கங்கள் வந்தபடியும் உள்ளன.

மூலநூலும் சேர்க்கைகளும்

பைபிளின் மூலநூல் கேனன் [Canon] எனப்படுகிறது. எது மூலநூல், எந்த அடிப்படையில் என்பது எப்போதும் மாறுபாடுகள் கொண்டதாகவே உள்ளது. தேவாலய அமைப்பினால் உறுதிசெய்யப்பட்ட பகுதிகளே மூலநூல்கள் என்று அந்தந்த சபையினர் நம்புகிறார்கள். நீண்டகாலமாக கிரேக்க, லத்தீன் வடிவங்களை மூலநூல்களாக கருதும் போக்கு இருந்தது. அவையெல்லாம் மொழிபெயர்ப்புகளும் மறு ஆக்கங்களும் ஆகும். அராமிக் வடிவம்கூட மொழிபெயர்ப்பேயாகும். உண்மையில் இந்நூல்கள் எழுதப்பட்ட வடிவில் இன்று இல்லை. இவை எல்லா மொழிகளிலும் எளிய மக்களுக்கான ‘முச்சந்தி’ மொழியிலேயே மொழியாக்கம் செய்யப்பட்டன. பைபிளின் பலமொழிகளில் எழுதப்பட்ட பல்லாயிரம் தொல் கைப்பிரதிகள் இன்று கிடைக்கின்றன. இவற்றில் முக்கியமானவை ஏறத்தாழ 5000 இருக்குமென ஆய்வாளர் சொல்கிறார்கள்.இவற்றில் மூல ஆசிரியரின் கைப்பிரதியாகக் கிடைப்பவை ஏதுமில்லை. கிபி 120-140 காலகட்டத்தைச் சேர்ந்த புனித யோவானால் எழுதப்பட்ட சுவிசேஷத்தின் கைப்பிரதியே ஆகப்பழைமையானது. எப்போது முதன்முதலாக கிறித்தவ மூலநூல் அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரியவில்லை. புனித பவுல் தன் கடிதங்களையும் சில விவிலியப்பகுதிகளையும் மக்கள் கூடும் தேவாலய /வழிபாட்டிடங்களில் உரக்க வாசிக்கவேண்டும் என்று சொல்லியிருந்தார் என்று தெரிகிறது. ஆக பைபிளின் ஒருவடிவம் பவுல் அவர்களின் காலத்திலேயே முறைப்படுத்தப்பட்டுவிட்டது .

மூலநூல் சாராது எழுதப்பட்டு பைபிளுடன் இணைத்து வாசிக்கப்படும் பகுதிகளை அபாகிரிஃபா[Apocrypha] என்பது மரபு. பிற்சேர்க்கைகள் மீண்டும் மீண்டும் உருவாகியுள்ளன. இதற்குக் காரணம் கிறித்தவத்தின் இறுக்கமான தேவாலய அமைப்புக்கு எதிராக உருவான பிற கிறித்தவ வழிபாட்டு முறைகளும் கோட்பாடுகளுமே. கிறித்தவத்தின் வரலாற்றில் இத்தகைய மீறல் மற்றும் முரண் போக்குகள் இல்லாத காலமே இருந்தது இல்லை. நிகழ்காலத்திலும் ஏராளமான கிறித்தவ தனிமதங்கள் உள்ளன.

இறைச்செய்திகள் [சுவிசேஷங்கள்]

சுவிசேஷம் என்ற சொல் சு+விசேஷம் என்ற வடமொழி சொல்லாகும். நல்ல செய்தி என்று பொருள். காஸ்பல் [Gospel]என்ற சொல்லின் தமிழாக்கம் இது. இது என்பது இயேசுவின் கூற்றுக்கள் மற்றும் வரலாறு குறித்து எழுதப்பட்ட குறிப்புகளின் தொகை. பொதுவானதாக அங்கீகரிக்கப்பட்ட சுவிசேஷங்கள் நான்கு. மத்தேயு, மார்க்கு, லூக்கா, யோவான் ஆகியோரால் எழுதப்பட்டவை அவை. அவையே புதிய ஏற்பாடு என்று சொல்லப்படுகின்றன. ஆங்கிலச் சொல்லான காஸ்பல் என்பது கிரேக்க சொல்லான நற்செய்தி என்பதை ஒட்டி உருவாக்கப்பட்ட பழைய ஆங்கிலச்சொல்லான காட் ஸ்பெல்[godspel] என்பதன் மரூஉ.

அடிப்படை இறைச்செய்திகள் [ Synoptic Gospels]

மத்தேயு, மார்க்கு, லூக்கா ஆகியோரால் இயற்றப்பட்ட முதல் மூன்று இறைச்செய்திகள் சினாப்டிக் சுவிசேஷங்கள் என்று சொல்லப்படுகின்றன. காரணம் அவை மூன்றும் கிட்டத்தட்ட ஒரே நோக்கில் இயேசுவின் செய்தியையும் வாழ்க்கையையும் கூறுகின்றன. ஏறத்தாழ சொற்களும் ஒரேபோல உள்ளன. இவையே அடிப்படை இறைச்செய்திகளாகச் சொல்லப்படுகின்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை பெரும்பாலான இறையியலாளார்கள் மத்தேயுதான் முதல் இறைச்செய்தியாளர் என்று நம்பினார்கள். மார்க்கின் இறைச்செய்தி மத்தேயு லூக்கா ஆகியோரின் இரு இறைச்செய்திகளின் சுருக்கப்பட்ட வடிவம் என்று எண்ணப்பட்டது. இன்றைய முடிவுகளின்படி மார்க்குதான் தொடக்க கால இறைச்செய்தியாளர். அவரே முதல்முதலாக இயேசு குறித்து எழுதியவர். மார்க்கின் இறைச்செய்தியே உண்மையில் பிற இறைச்செய்திகளுக்கான அடிப்படைக் கட்டுமானத்தையும் அளித்துள்ளது. அத்துடன் அராமிக் மொழியில் எழுதப்பட்ட பிற அவணங்களையும் மத்தேயு லூக்கா ஆகியோர் பயன்படுத்தியிருக்கலாம். இந்த மறைந்து போன மூலநூல் அல்லது மூலநூல்கள் Q என்று சொல்லப்படுகின்றன. ஜெர்மானிய மொழியில் மூலம் என்று பொருள் படும் Quelle என்ற சொல்லின் சுருக்கம் இது. அல்லது கிரேக்க மொழியில் கூற்று என்று பொருள்படும் லோஜியா Logia என்ற சொல்லும் பயன்படுத்தப்படுகிறது

புனித யோவானால் எழுதப்பட்ட இறைச்செய்தி முதல் மூன்றிலிருந்தும் பலபடியாக வேறுபடுகிறது. சினாப்டிக் இறைச்செய்திகளில் சொல்லப்பட்ட பல நிகழ்வுகள் முந்தைய இறைச்செய்திகளில் இல்லை. அவற்றில் உள்ள பல கூற்றுகள் இதிலும் இல்லை. முக்கியமான வேறுபாடு இயேசுவின் இறைக்கூற்றுளை முன்வைக்கும் முறையில்தான் உள்ளது. சினாப்டிக் இறைச்செய்திகள் நீதிக்கதைகள் மற்றும் நன்மொழிகளின் வடிவில் இயேசுவின் கூற்றுகளை முன்வைக்கின்றன. ஆனால் யோவானின் இறைச்செய்தி நீளமான குறியீட்டுத்தன்மையும் ஆழமும் கொண்ட உரையாடல் மற்றும் விவாதங்களாக இயேசுவின் கூற்றுக்களை சொல்கிறது. யோவான் இயேசுவை ஒரு புனிதராகவும் இறையுறவு கொண்ட மானுடராகவும் காட்டுகிறார். ஆனால் சினாப்டிக் இறைச்செய்திகள் அவரை இறைவனின் நேரடி தூதராக காட்டுகின்றன. ஏசு அதிகமும் உலகியல் அறங்களில் நெறிகளை கச்சிதமான சொற்களில் முன்வைப்பவராக சினாப்டிக் இறைச்செய்திகளில் காணப்படுகையில் யோவானின் இறைச்செய்தி மேலும் ஆன்மீகமானதாக உள்ளது. சினாப்டிக் இறைச்செய்திகளின்படி இயேசுக்கு அவரது வருகையின் நோக்கம் பின்னர்தான் அறிவிக்கப்பட்டது, விண்ணரசை நிறுவுதல். யோவான் கிறிஸ்து அதை முன்னரே சொல்வதாகக் காட்டுகிறார். யோவானின் இறைச்செய்தியை எழுதியவர் முந்தைய மூன்று இறைச்செய்திகளை அறிந்திருந்தாரா இல்லையா என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

இந்நான்கு இறைச்செய்தியாளர்களைத்தவிர வேறு இறைச்செய்தியாளர்கள் இருந்திருக்க வாய்ப்புண்டா? கண்டிப்பாக இருந்திருக்கலாம். இயேசுவின் மாணாக்கர்களில் பிறர் எழுதியிருக்கலாம், விளக்கியிருக்கலாம். அவை தொகுக்கப்படாமல் மறைந்து போயின என்று கொள்வதே முறை. தேவாலயம் நான்கு இறைச்செய்திகளை அடிப்படைச் செய்தியாகக் கொண்ட பிறகு பிற செய்திகள் புறனடைகளாகக் கருதப்பட்டிருக்கலாம். அவை தனி கோட்பாடுகளாக அல்லது வழிபாட்டு முறைகளாக புழங்கியிருந்திருக்கலாம். கிறித்தவத்துக்குள் இவ்வாறு புழங்கிய தனி போக்குகள் அல்லது மைய எதிர்ப்புப் போக்குகள் நாஸ்டிக் போக்குகள் என்று சொல்லப்பட்டன.

நாஸ்டிசிஸம்[Gnosticism]

கிறித்தவ மதத்துக்குள் உருவான மைய எதிர்ப்பு போக்குகள் ஒட்டுமொத்தமாக இவ்வாறு சொல்லப்படுகின்றன. பொதுவான சில அடிப்படைகள் கொண்ட பலவிதமான மறைச்சமய இயக்கங்கள் இப்பெயரில் சுட்டப்படுகின்றன. கிபி 2 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளில் இப்போக்கு வலிமையாக இருந்தது. கிறித்தவ மைய மரபுக்கு முக்கியமான சவாலாக விளங்கியது. இச்சொல் கிரேக்க சொல்லான gnosis இல் இருந்து உருவானது. அதற்குப்பொருள் வெளிப்படுத்தப்பட்ட மறை. மண்ணுலகம் முற்றிலும் தீமைகளினால் ஆனது என்று சொன்ன இம்மதக்கோட்பாடு விண்ணிலிருந்து தூய அறிதல் மண்ணுக்கு ஒரு பொறியாக விழுந்தது என்றும் அதை உரியவர்கள் மறைவாக பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும் சொன்னது. மறையறிவு என்பது அனைவருக்கும் உரியதல்ல, அதன்பொருட்டு பிற அனைத்தையும் உதறிவிட்டு மீள்பவர்களுக்கு மட்டுமே உரியது என்றனர் இவர்கள்.

இவர்களின் பிரபஞ்ச உருவாக்க கற்பனையானது சிக்கலானது. அரேபியா வழியாகக் கிடைத்த கீழை தேயத்து மெய்யியல்கூறுகளையும் கிரேக்க மரபின் அறிதல்களையும் ஒரு குறிப்பிட்ட வகையில் மறு ஆக்கம் செய்து உருவாக்கப்பட்டது. அறியமுடியாத மைய வல்லமையான கடவுளில் இருந்து பற்பல சிறு தெய்வங்கள் பிறந்தன. அதில் இருந்துதான் அறிதலுக்கான அன்னை தெய்வமான சோஃபியா பிறந்தாள். இவள்மூலம் முழுமுற்றான இறைவனை அறியவேண்டுமென்ற ஆவல் மண்ணில் உருவானது. இந்த தீய விருப்பின் காரணமாக தீமையின் தெய்வங்கள் உருவாயின. அத்தீய தெய்வங்களே பிரபஞ்சத்தை உருவாக்கின. அவையே மனிதர்களையும் படைத்தன. அவை மண்ணில் காமத்தையும் பகைமையையும் உருவாக்கி மனிதர்களை ஆண்டன. மண்ணில் இருள் சூழ்ந்திருந்தது.

இதை அறிந்த இறைச்சக்தியால் புனித அறிதலின் ஒளி மானுட மனங்களுக்கு இறக்கியருளப்பட்டது. பழைய ஏற்பாட்டில் உள்ள யகோவா என்ற கோபம் கொண்ட இறைவனை நாஸ்டிக் மதத்தவர் அந்த தீய தெய்வமாக எண்ணினார்கள். பாவத்தில் ஆழ்ந்து கிடந்த மானுடர்களை தண்டிக்கும்பொருட்டே அவர் இறைவனால் உருவாக்கப்பட்டார். இதன் அடிப்படையிலேயே இவர்கள் ஆதாம் ஏவாள் ஆகியோர் சுவர்க்க நீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை விளக்கினர். இறைச்சக்தியின் மறைச்செய்தியை பெற்ற மானுடர் உலக வாழ்வில் இருந்து முற்றாக விலகி தனிமை நோன்பு மூலம் தங்கள் அகத்தை தூய்மைசெய்துகொண்டு இறைவனின் அருளைப்பெற வேண்டும்.

நாஸ்டிக் நம்பிக்கையாளர்களை கிறித்தவ தேவாலயம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவர்கள் தங்களை கிறித்தவர்கள் என்றே எண்ணினார்கள். பைபிளுக்கு அவர்கள் தங்கள் நோக்கில் விளக்கங்களையும் தனி பைபிள்களையும் எழுதிக் கொண்டனர். தோமையரின் இறைச்செய்தி இவர்களால் எழுதபப்ட்டது என்ற நம்பிக்கை உள்ளது. மக்தலேனா மரியை எழுதிய இறைச்செய்தி என்ற நூலும் இவர்களால் எழுதப்பட்டுள்ளது என்கிறார்கள். ஆனால் அது உண்மை அல்ல.

பொதுவாக நாஸ்டிக் நம்பிக்கையாளர்கள் சடங்குகள் சார்ந்த மரபான கிறித்தவ மதத்தை வெறுத்தார்கள். உண்ணா நோன்புகள் தனிமை நெறி தியானம் போன்றவற்றை முன்வைத்தார்கள். சிலர் உள்ளறிவை எழுப்பும் சடங்கு என்ற முறையில் புனித நீராட்டு சடங்கை மட்டும் செய்ததாகவும் தெரிகிறது. அன்றாட வாழ்க்கையை உதறி சமூகத்திலிருந்து பிரிந்து வாழ்வதென்பது இவர்களின் மத நம்பிக்கையில் மிகமிக முக்கியமானதாக இருந்தது. பிற்காலத்தில் பாடல்களை பாடி வழிபடுவது மற்றும் மந்திரச் சடங்குகள் ஆகியவை இவர்களிடம் குடியேறின. இவர்களில் இருந்து கிளைத்து வளர்ந்த பலநூறு வழிபாட்டுக்குழுக்களும் நம்பிக்கைமுறைகளும் உண்டு. கிறித்தவத்துக்குள் இத்தகைய மறைசமயக் குழுக்கள் என்றும் இருந்துள்ளன. இப்போதும் உள்ளன.

பிற்பாடு ரோமாபுரி கத்தோலிக்க கிறித்தவம் வலிமைபெற்றபோது நாஸ்டிக் மரபுகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு அழிக்கப்பட்டன. இம்மரபின் நூல்கள் நமக்கு இன்று கிடைப்பதில்லை. கத்தோலிக்க இறையியல் நூல்களில் நாஸ்டிக் நம்பிக்கைகளை எதிர்க்கும் பொருட்டு எடுத்து தரப்பட்டுள்ள ஏராளமான மேற்கொள்கள் மூலமே நாம் இவர்களைப்பற்றி அறிகிறோம். காலப்போக்கில் இவை சிறு ரகசியக் குழுக்களாக மாறி மறைந்தன. இன்று கிடைக்கும் முக்கியமான நாஸ்டிக் நூல்கள் காப்டிக் தேவாலயத்தைச் சேர்ந்தவை. காப்டிக் மொழியில் எழுதப்பட்டு எகிப்தின் நாக் ஹம்மாதி ஊரில் கிடைத்தவை.

கிடைத்துள்ள நாஸ்டிக் நூல்களில் இருந்து நாம் இம்மரபின் தோற்றம் குறித்தோ அல்லது இம்மரபின் மூல ஆசிரியர்களைப் பற்றியோ ஏதும் தெரிந்து கொள்ள இயல்வதில்லை. புறச்சமயத்தின் கோட்பாடுகள் கிறித்தவத்தில் ஊடுருவி இது உருவாயிற்று என்று பொதுவாக சொல்லலாம். பாரசீக துவைத மதங்களான மித்ரைஸம், ஜராதுஷ்டிரனிஸம் ஆகியவற்றினால் பாதிப்பு கொண்டு உருவான ஆரம்பகட்ட யூத நம்பிக்கைகள் சிரியா வழியாக ஐரோப்பாவில் ஊடுருவி நாஸ்டிக் நம்பிக்கைகளை உருவாக்கின என்றும் சொல்லபப்டுகிறது. இவர்களின் மதப்படிமங்களில் இச்செல்வாக்கு வெளிப்படையாகவே உள்ளது. கிபி இரண்டாம் நூற்றண்டில் நாஸ்டிக் அறிஞர்கள் பிளேட்டோவின் இலட்சியக் கருத்துமுதல்வாத நோக்குகளை ஆரம்பகட்ட கிறித்தவ மதக் கொட்பாடுகளுடன் இணைத்து தங்கள் கொள்கைகளை விரிவாக்கம் செய்ததாக தெரிகிறது. இதில் இரண்டாம் நூற்றண்டு நாஸ்டிக் அறிஞர்களான வாலண்டினியஸ் மற்றும் அவரது மாணவரான டாலமீனியஸ் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களின் கோட்பாடுகள் தனி மத அமைப்புகளாக மாறின. இரண்டாம் நூற்றாண்டில் ரோமாபுரி கத்தோலிக்க மதத்தில்கூட இவர்களின் செல்வாக்கு இருந்திருக்கிறது.

இரண்டாம் நூற்றாண்டில் சிரியாவில் நாஸ்டிக் நம்பிக்கையின் புதிய வளர்ச்சி நிலை உருவாயிற்று. இவர்கள் கிறித்தவ மதத்திற்குள் தியான முறையை உருவாக்க முயன்றனர். இருநிலைகளில் கத்தோலிக்க மதம் இச்சவாலை எதிர்கொண்டது. அது தன் கோட்பாடுகளை மேலும், மேலும் தர்க்க பூர்வமாக ஆக்கிக்கொண்டது. மண்ணுலகமே தீமை மிக்கது என்ற நாஸ்டிக் நம்பிக்கையை அது வலிமையாக தாக்கி மானுடர் இறைவனின் வடிவில் உருவாக்கப்பட்டவர்கள் என்ற கோட்பாட்டை வலிமையாக முன்வைத்தது. அது மக்களைக் கவர்ந்தது. மேலும் பிஷப்கள் என்ற மத அதிகாரிகளை உருவாக்கி கிறித்தவ உலகை சீரான நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து தேவாலயத்தை வலிமைப்படுத்தினர். அவ்வாறாக உதிரி பிரச்சாரகர்களாக இருந்த நாஸ்டிக் மதத்தவர் அடக்கி ஒடுக்கி அழிக்கப்பட்டனர்.மூன்றாம் நூற்றாண்டில் நாஸ்டிக் மதம் இல்லாமலாயிற்று

இப்போதும் நாஸ்டிக் மரபைச்சேர்ந்த சிறிய ஒரு மத அமைப்பு ஈரானிலும் ஈராக்கிலும் உள்ளது. மண்டாயென்கள் [Mandaean]எனப்படும் இவர்கள் கடுமையாக ஒடுக்கப்படுகிறார்கள்.

இந்நூல்

தாமையர் எழுதிய சுவிஸேஷம் என்ற இந்நூல் கண்டெடுக்கப்பட்ட வரலாறு சுவையானது. 1845 டிசம்பர் மாதத்தில் எகிப்தில் நாக் ஹம்மாதி என்ற கிராமத்தைச் சேர்ந்த அல்-ஸமான் என்ற இனக்குழுவினரான முகம்மது அலி மற்றும் கலீஃபா அலி என்ற சகோதரர்கள் ஜபால் அல் டரிப் அன்ற மலைமுகடருகே இயற்கை எருவை மண்ணிலிருந்து வெட்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். இது நாக் ஹம்மாதியில் இருந்து 11 கிலோமீட்டர் வடகிழக்காக அமைந்துள்ளது. அவர்கள் தோண்டும்போது சிவந்த மண்ணாலான ஒரு ஜாடியைக் கண்டடைந்தார்கள். கிட்டத்தட்ட 60 செ.மீ உயரமுள்ள பெரிய ஜாடி அது. அதற்குள் புராதனமான பாப்பிரஸ் சுவடிகள் இருந்தன

அதிலிருந்த நூல்கள் அப்போது அங்கு இருந்த ஏழுபேரால் பங்கிடப்பட்டு எடுத்துக் கொள்ளப்பட்டன. சிலர் அவற்றை தொலைத்தாலும் முகமது அலி அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். அவர் அதை உள்ளூரில் இருந்த காப்டிக் பாஸிலியஸ் அப்த் அல்-மஸியா என்பவருக்கு கொடுத்தார். காப்டிக் தேவாலய மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்க அங்கே தங்கியிருந்த ரகிப் அன்டிரவஸ் [Raghib Andrawus] என்பவர் அச்சுவடிகளின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். அவர் அதை கெய்ரோவுக்குக் கொண்டு வந்தார். ரகிப் வந்தப் பின்னர் அவை ஆய்வாளர் கைக்கு வந்து சேர்ந்தன. 1946ல் அவை கெய்ரோ அருங்காட்சியகத்துக்குக் கொண்டு வரப்பட்டன

ஜாடியில் இருந்த நூல்களில் பெரும் பகுதியை முகமது அலியின் தாய் கணப்புக்காக எரித்துவவிட்டதாக தெரிகிறது. நெடுங்காலம் நாக் ஹம்மாதியில் கிடைத்த பல சுவடிகள் கெய்ரோவில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டிருக்கின்றன. கெய்ரோவிலிருந்து அவை ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு யுங் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸயூரிச்சில் வைக்கப்பட்டிருந்தன. பிற்பாடு அவை அச்சிட்டு வெளியிடப்பட்டபின் கெய்ரோ அருங்காட்சியகத்துக்கே கொடுக்கப்பட்டன. எகிப்தில் அதிபர் நாஸர் அதிகாரத்துக்கு வந்தபோது அவை தேசிய உடைமையாக்கப் பட்டன. இப்போது அவை கெய்ரோ காப்டிக் அருங்காட்சியகத்தில் உள்ளன.

இணையத்தில் இச்சுவடிகளைப்பற்றி ஏராளமான ஆராய்ச்சிகளும் விவாதங்களும் கிடைக்கின்றன. இன்று ஆய்வாளர்களின் ஆர்வத்தை மேன்மேலும் தூண்டும் ஒரு தளமாக இவை விளங்குகின்றன. செங்கடல் பகுதியில் கிடைத்த இதேபோன்ற சுவடிகளும் இந்நூல்களுடன்
இணைத்து ஆராய வேண்டியவை. இவை செஙக்கடல் சுவடிகள் [Red Sea Scrolls] எனபப்டுகின்றன

இவை கிபி நாலாம் நூற்றாண்டைச் சேர்ந்த பாப்பிரஸ் சுவடிகள் என நிரூபிக்கப்பபட்டுள்ளன. மொத்தம் 52 நூல்கள். பல நூல்கள் முதலில் கிரேக்க மொழியில் இருந்து காப்டிக் மொழிக்கு மொழியாக்கம் செய்யபப்ட்டவை. இவற்றைப் பற்றிய தகவல்களை அறிய http://www.tertullian.org/rpearse/manuscripts/nag_hammadi.htm என்ற இணையப்பக்கத்தை வாசித்துப்பார்க்கலாம்.

எகிப்தில் அலக்ஸாண்டிரியாவை மையமாக்கி இருந்த கத்தோலிக்க தேவாலயம் காப்டிக் தேவாலயம் எனப்படுகிறது. இது பின்னர் ரோமாபுரி கத்தோலிக்க தேவாலயத்துடன் இணைந்து செயல்பட ஆரம்பித்தது. ஆனால் ஆரம்பத்தில் இது புனித தோமையரால் நிறுவப்பட்டு சுதந்திரமாக இயங்கியதாகச் சொல்லப்படுகிறது. காப்டிக் என்றால் கிரேக்க மொழியில் ‘எகிப்திய’ என்றுதான் பொருள்.

எகிப்து இஸ்லாமிய மயமானபோது காப்டிக் தேவாலயத்தின் வலிமை குன்றி அதன் தனித்தன்மை மறைந்தது. இந்திய சிரியன் கிறித்தவர்களும், மார்த்தோமா கிறித்தவர்களும் அலக்ஸாண்டிரியாவில் இருந்த காப்டிக் தேவாலயத்தையே நெடுநாள் தங்கள் தலைமையிடமாக கொண்டிருந்தார்கள். இப்போதுகூட ரோமாபுரிக் கத்தோலிக்க மதத்துடன் தொடர்பில்லாத தனித்த கத்தோலிக்க அமைப்புகளாகவே அவை இயங்குகின்றன. ரோமாபுரி கத்தோலிக்க தேவாலயத்தின் அங்கீகாரம் இல்லாவிட்டாலும் கூட தோமையரின் சுவிசேஷம் நெடுங்காலம் காப்டிக் தேவாலயத்தால் முதன்மைப்படுத்தப் பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.

வரலாற்று ரீதியாக மிக விரிவான ஆய்வுகளும் விவாதங்களும் நிகழ்ந்துள்ளன. அவற்றை இணையம் மூலமே ஆழமாக பின் தொடர முடிகிறது. நாஸ்டிக் பைபிள்களில் தோமையரின் சுவிசேஷத்தை மட்டும் தத்துவ ஆய்வாளர்கள் கூர்ந்து ஆராய்கிறார்கள். வைது காட்டும் கிறிஸ்து கத்தோலிக்க மதமும் புரட்டஸ்டாண்டு மதமும் காட்டும் கிறிஸ்துவிலிருந்து தெளிவாகவே மாறுபட்டிருக்கிறார். இவர் இறந்தபின் அடையப்பெறும் விண்ணுலகைப் பற்றி பேசவில்லை. மண்ணிலேயே அது எப்போதும் உள்ளது என்கிறார். அதைக் கண்டடைபவனே வீடுபேறு அடைபவன் என்கிறார். ” நீங்கள் வரக்காத்திருப்பது எதுவோ அது ஏற்கனவே வந்துவிட்டது .ஆனால் நீங்கள்தான் அதை அடையாளம் காணவில்லை ”

[கலைக்களஞ்சியங்களில் இருந்து]

முந்தைய கட்டுரைஸ்ரீலால் சுக்லாவின் தர்பாரி ராகம்
அடுத்த கட்டுரைபுனித தோமையர் ஓர் அறிமுகம்