சென்ற ஆண்டு புதிய வாசகர் சந்திப்பில்தான் கடலூர் சீனு எனக்கு அறிமுகமானார். முதல் சந்திப்பிலேயே தொடர்ந்து இலக்கியம் பேசுபவராகவும், புதிய வாசகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் எந்தவித சலிப்புமின்றி பொறுமையாக பதில் கூறுபவராகவும், குறிப்பாக இளைஞர்களை ஊக்குவிப்பரகவும் என்னை மிகவும் கவர்ந்தார். அதற்கு பின் வெள்ளி மலையில் நான் அவரை சந்தித்த அனைத்து வகுப்புகளிலும், வகுப்புகள் தவிர்த்து மீதமுள்ள ஓய்வு நேரங்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து பேசிக்கொண்டே இருப்போம். பின் தங்கள் தளத்தில் உள்ள அவரின் கடிதங்களை படிக்க ஆரம்பித்தேன். குறிப்பாக திருவண்ணாமலையில் அவர் எஸ். ராவின் படைப்புகள் குறித்து 15 நிமிடத்திலேயே ஒட்டுமொத்த பார்வையை அளித்தது என்னை மிகவும் திகைக்க வைத்தது.
ஐ. ஏ. ரிச்சர்ட்ஸ் இன்“எந்த விமர்சனமும் மேலும் சிறந்த வாசிப்பிற்கான பயிற்சியே“என்பதுபோல் உறுபசி நாவல் குறித்த விமர்சனத்தில் சம்பத்தின் கதாபாத்திரத்தை அவர் சுட்டி காட்டிய விதமும், அந் நாவலின் தனித்துவத்தை அவர் எடுத்து காட்டிய விதமும் என்னை மேலும் எஸ். ராவின் படைப்புலகித்திற்குள் ஆழமாக இழுத்து சென்றது. பின் அடுத்தடுத்த சந்திப்பில் நான் அவரிடம் கண்டது, இலக்கியம் எனும் தெய்வம் முன் இயல்பாக பணிபவராகவும், வாசிப்பையே ஒரு தொடர் தேடல் கொண்டவராகவும் எனக்கு தென்பட்டார். இவ்வாறு இருக்க மரபின் மைந்தன் முத்தையாவின் தமிழ் மரபிலக்கிய வாசிப்பு பயிற்சி முகாமில் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது.
பேசிக்கொண்டிருக்கும் போது ஒசூரில் ஒரு இலக்கிய கூடுகை நிகழ்த்துமாறு விண்ணப்பித்ததில் அவர் ஒப்புக்கொண்டார். அதே சூட்டுடன் வகுப்பு முடிந்ததுமே நண்பர் செல்வேந்திரிடம் செய்தியை தெரிவித்தேன். எந்தவித மறுப்புமின்றி “ம் தாரளமாக என் வீட்டிலேயே செய்யலாம் என்றார்“. அப்போது தான் தெரிந்தது அவர் வீட்டிலேயே 25பேர் கூடுமளவு ஒரு meeting hall இருப்பதாக. உடனே சீனுவிற்கு அழைத்து விடயத்தை தெரிவித்தேன். அக்டோபர் 5ஆம் தேதி ஒருங்கிணைக்காலம் என்றார்.பெங்களூர் வாசகர் குழுவில் செய்தியை அறிவித்தேன். அடுத்தடுத்தாக 25 பேர் பதிவுசெய்தனர். உணவு, தேநீருக்கான முழுப் பொறுப்பையும் நண்பர் செல்வேந்திரன் எடுத்துக் கொண்டார்.டக் டக் என அனைத்தும் ஒன்று கூடியது.
காலை 6.30 மணிக்கே சீனு வந்துவிட்டார். சிறய நடைப்பயணம் செய்யும்போது அவர் சமீபத்தில் வாசித்த படைப்புகள் குறித்து கூறினார். மனோஜ் குரூரின் முறிநாவு பற்றி தன் வாசிப்பனுவத்தை பகிர்ந்தார். டிபன் முடித்து 8.30 மணிக்கே அரங்கிற்கு வந்துவிட்டோம். இலக்கியத்திற்காக மட்டுமே வந்தமரும் நிகழ்வுகள் எப்போதும் பேரனந்தத்தை அளிக்கின்றன. மற்ற அனைத்து விடயங்களும் எளிதில் தவுடுபொடியாகிவிடுகிறது. சீனுவின் சரளமான மொழிநடையும், முகத்தில் எப்போதுமே மாறாத புன்னகையும் அவ்வப்போது கை விரல்களினூடே அவர் செய்யும் சாகசமும் அதன் மூலம் எழும் வெடிச்சிரிப்புகளுடன் 10 மணிவரை இலக்கியம் சார்ந்து பேசிக்கொண்டோம். பின் ஒவ்வொருவராக வருகை தந்தனர். ஒவ்வொருவரின் சுருக்கமாக அறிமுகத்துடன் சரியாக 10.30 மணிக்கு நிகழ்வு தொடங்கியது.
ரசனைக்கூறு என்ற தலைப்பின் மூலம் ஆரம்பித்தார்..இயல்பிலேயே ஒவ்வொருவரின் ஆழத்தில் இருக்கும் வெற்றிடத்தை தனக்கான உரிய ரசனையின் வாயிலாகவே நிரப்பிக் கொள்ள இயலும். அந்த ரசனை கூர்மையாகும் போது நான் சராசரியல்ல. இங்குள்ள குறுகிய வட்டத்திற்குள் என் வாழ்க்கை முடிந்துவிடாது, மேலும் என்னால் எள்ளைகளற்ற வாழ்க்கையை வாழ முடியும் என்ற நிலையையடைவோம். அது ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப மாறுபடும். ஒருவருக்கு இசையில், ஒருவருக்கு ஓவியத்தில், ஒருவருக்கு வாசிப்பில், இப்படி பல. அசோக் ஆகிய நான் இன்று நவீன யுகத்தில் இருந்தாலும் நான் என்னுடைய மரபின் தொடர்ச்சியே. எனில் புறவயமாக இந்த காலத்தில் இருந்தாலும் என்னால் ஆழம் சென்று அகம் வாயிலாக மரபுடன் தொடர்புகொள்ள முடியும். அதற்கு நிகரான ஒரு வாழ்க்கையை என்னால் வாழ இயலும். இதுவே ழொழியின் வாயிலாக இலக்கியம் தரும் ஆகச்சிறந்த தரிசனம்.
பின் தன்னுடைய வாசிப்பின் படிநிலை களையும் தான் சந்தித்த சிக்கல்களையும் கூறினார். கல்கி, பாலகுமாரன், சாண்டில்யனில் தொடங்கி ஜெயகாந்தனின் சுய தரிசனம் கதை எவ்வாறு தனக்கொரு மிகப்பெரிய திறப்பாக அமைந்ததையும், பின் நம் இலக்கிய முன்னோடிகளுடன் முட்டி மோதி இறுதியாக முழுமனதுடன் உங்களை ஏற்றதையும் பின்னர் அலைபேசியில் உங்களை தொடர்புக்கொண்டதையும் கூறினார். அதன்மூலம் அவரில் இருந்த ஆழ்ந்த தேடலும், தவிப்பும் நன்றாக தென் பட்டது. வருகைதந்த நண்பர்கள் அனைவரிலும் பெரும்பாலானோர் அறம் வாயிலாகவும், வெண்முரசு வாயிலாகவும் இலக்கியத்திற்குள் நுழைந்தவர்களாக இருந்தனர்.
நிகழ்வு இரண்டு அமர்வுகளாக இருந்தது. முதல் அமர்வில் இன்று நாம் வாசிக்கும் இலக்கியத்தின் தொடர்ச்சி என்ன என்பதை வரலாற்றை பின்புலமாக கொண்டு சுருக்கமாக விளக்கினார். இரண்டாவது அமர்வில் சிறுகதை, நாவல் குறித்த வடிவமைப்புகளையும் அதன் அழகியல் சாத்தியக்கூறுகளையும் இறுதியாக ஒரு ரசனை பயிற்சிக்காக மின்னரே குழுவில் அவர் கொடுத்த மூன்று கவிதைகளின் வாசிப்பனுவத்தை ஒவ்வொருவராக கூறிய பின் அதை தொகுத்து கடைசியாக கேள்வி பதில் நிகழ்வில் அமர்வு நிறைவடைந்தது.
நவீன தமிழிலக்கிய தொடக்கப்புள்ளியாக இருந்த பாரதியில் தொடங்கி, நவீன கருத்துக்களை கூறுவதற்குரிய நவீன உரைநடையை உருவாக்கி தந்ததிலும், சிறுகதை, கட்டுரை, வசன கவிதை ஆகியவற்றில் பாரதியின் பங்களிப்பையும் மிகவும் நேர்த்தியாக விளக்கினார். சிறுகதையின் பிதாமகரான புதுமைப்பித்தனின் சாத்தியக்கூறுகளை சான்றுடன் விளக்கினார். அப்போது தான் ஏன் கம்பரை பேரிலக்கியவாதியென்றும் சேக்கிழாரை செவ்விலக்கியவாதியென்றும் கூறுகிறோம் என்ற தெளிவு கிடைத்தது.
புதுமைப்பித்தன், ந. பிச்சமூர்த்தி, கு. ப. ரா, மெளனி ஆகியோர் எழுதிய மணிக்கொடி இதழின் முக்கியத்துவத்தை விளக்கினார். ஏன் மணிக்கொடி இதழ் நவீன தமிழிலக்கியத்தின் மலர்ச்சி காலகட்டம் என்றும், தமிழ்ச் சிறுகதை அதன் ஆகச்சிறந்த படைப்புகளை உருவாக்கிய காலத்தின் முக்கியத்துவத்தையும் தெளிவாக சுட்டிக்காட்டினார்.
க. நா. சு பற்றி சற்று விரிவாக பேசினார். முக்கியமாக அவரின் மொழிபெயர்ப்புகள் குறித்தும், அவரின் பொய்த்தேவு எவ்வாறு நாவல் என்ற வடிவம் நோக்கிய மிக முக்கியமான முன்னகர்வு என்ற தெளிவான சித்திரத்தை அளித்தார். Kant, Aristotle, galileo ஆகியோரின் பங்களிப்பையும் அடுத்தடுத்த தத்துவஞானிகளின் தொடர்ச்சியையும் தொட்டு தொட்டு சுருக்கமாக விளக்கினார்.நவீன காலகட்டம் தொடங்கிய பின் மரபிலிருந்து நாம் துண்டித்ததையும் அதின் பின் இருத்தலியல் சார்ந்து அவர் கொடுத்த விளக்கம் உண்மையில் என்னை மெய்சிலிர்க்க வைத்தது.அசோகமித்திரன், சு. ரா, ஜெயகாந்தன் ஆகியோரை முக்கோணங்களில் வைத்து அவர் கொடுத்த விளக்கம் சிறப்பாக இருந்தது. அசோகமித்திரனின் ஒற்றன், பிரயாணம், கிணறு சு. ராவின் ஜே. ஜே சில குறிப்புகள் இதற்கு நேர் எதிராக ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ஆகியவற்றை வேறுபடுத்தி அவர் அளித்த முக்கோண விளக்கம் அந்த தருணத்தில் சட்டென ஒரு தெளிவை கொடுத்தது. உறுபசியில் வரும் சம்பத்துக்கும், ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகத்தில் வரும் ஹென்றிக்கும் வெள்ளையானையில் வரும் ஏய்டனுக்குமான வித்தியாசம் நன்கு விளங்கியது. இயல்புவாத அழகியலில் படைப்புகளி தன்னுடைய quest யை வெளியே தள்ளி வைத்துவிட்டு பார்ப்பார். அதற்கு நேர் எதிராக இருப்பதுதான் யதார்த்தவாத அழகியல். இதில் படைப்பாளி தன்னுடைய quest யை உள்ளார்ந்து விரித்து கொண்டே போவார்.இதில் சீனு கற்பித்த மிக அடிப்படையான,இலக்கியத்தில் என்றைக்குமே மாறாத விடயங்கள் பசுமரத்தாணிப்போல என்னுள் பதிந்தது.
பின் நவீனத்துவம் குறித்து ஒரு தெளிவை அளித்தார். யுவன் சந்திரசேகர், இரா முருகன், சாருவில் தொடங்கி கடைசியாக ஜெயமோகன் எங்கே இருக்கிறார் என்று கூறி முடிக்கும்போது ஒரு பெரும் மெளனம் அங்கு நிரம்பியது. திரும்பி பார்க்கையில் அனைவரின் முகத்தில் புன்முறுவலுடன் “ஓ நா இப்ப இங்கேதான் இருக்கேனா” என்ற தெளிவு கிடைத்தது.இதனின் அஅடுத்த நகர்வான அஜிதனின் trans modernism குறித்தும் விளக்கினார். வாழ்வும், மரணமும் எவ்வாறு மாறி மாறி வந்துக்கொண்டே இருக்கின்றன என்பதை மருபூமியில் உள்ள சிறுகதைகளை சுட்டி காட்டி விளக்கினார். Trans modernism தின் வளர்ச்சியை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
சிறுகதையின் வடிவம், இறுதியில் உள்ள திருப்பம் குறித்து மிகவும் நேர்த்தியாக விளக்கம் தந்தார். ராமகிருஷ்ண பரமஹம்சரின் கூறும் கதைகளுக்கும், சிறுகதைகளுக்கும் உள்ள வேறுபாட்டினை விளக்கினார். புதுமைப்பித்தலிருந்து இன்றுவரை சிறுகதை எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை ஒவ்வொரு சிறுகதை எடுத்து விளக்கம் தந்தார். அசோகமித்திரனின் பிரயாணம், சுஜாதாவின் நகரம், வண்ணதாசனின் நிலை ஆகியவற்றில் உள்ள சிறப்பம்சங்களை சுட்டி காட்டினார்.
அடுத்ததாக நாவல்களிலுள்ள அடிப்படையான அம்சங்களையும் எவ்வாறு ஒரு நாவல் செவ்விலக்கியம் ஆகிறது என்பதையும், ஒரு நாவல் எடுத்துக்கொண்ட அழகியல் நேர்த்தியாகும்போது அது எவ்வாறு சுவையளிக்கிறது என்பதை தி. ஜாவின் அம்மா வந்தாளை எடுத்துக்காட்டாக விளக்கினார். அதில் உள்ள freudismயை விளக்கினார்.ஒரு படிப்பை வாசிக்கும்போது அது அதன் எந்த அழகியலை எடுத்துக்கொண்டது என்பதையும் மறுவாசிப்பு செய்யும் போது அது எப்படி செல்விலக்கியம் ஆகிறது என்பதை ஜெயகாந்தனின் அக்னி பிரதேசத்தில் தொடங்கி அது எப்படி சிலநேரங்களில் சில மனிதர்களாகவும், கங்கை எங்கே செல்கிறாள் மற்றும் சுந்தர காண்டம் ஆக விரிகிறது என்பதை தெளிவாக விளக்கினார்.
கடைசியாக படிமங்களை மூன்று கவிதைகள் வாயிலாக ஒவ்வொருவரின் வாசிப்பனுபவத்தை ஒன்றிணைத்து விரிவாக விளக்கினார்.
ஒரு இனிய திருநாளாக முழுமனதுடன் அனைவரும் பிரிந்தோம்.
இறுதியாக இரண்டு விடயங்களை கூற விரும்புகிறேன்.சீனு நடத்திய இந்த வகுப்பை ஒரு zoom meeting வாயிலாகவோ அல்லது ஒரு கரும்பலகையில் சில குறிப்புகள் எழுதி முடித்திருக்கலாம் தானே. அல்லது உங்கள் நவீன தமிழிலக்கிய அறிமுகம் நூலையோ அல்லது எம். வேதசகாயகுமாரின் இலக்கியத் திறனாய்வு களஞ்சியத்தையோ பரிந்துரை செய்திருக்களாமே. ஏன் அவர் இதற்கான பொருட்டு கிட்டத்தட்ட 10 மணி நேர பயணம் செய்து கடலூரிலிருந்து வரவேண்டும்?…. என் கல்லூரி முதற்கொண்டு என்னை சிந்திக்க வைத்தும், வியப்பிற்குள்ளாக்கி மேலும் என்னை ஆழத்திற்கு இழுத்து சென்ற ஒரு தரிசனம்… அது யாதெனில், என் தமிழாசிரியர் எனக்கு பாடம் கற்பித்த இரண்டு வருடங்களிலும் ஒரு சங்க இலக்கிய பாடலையோ, பக்தி இலக்கியத்தையோ மற்ற ஆசிரியர்கள் போல் 5 நிமிட கதையாக இல்லாமல் ஒவ்வொரு வரியாக அதை வாசித்து மெனக்கெட்டு எந்தவித சலிப்புமின்றி உழைத்து கற்பித்ததால் தான் நான் இன்று இதுவரை வளர்ந்திருக்கிறேன். அதன் தொடர்ச்சியாகத்தான் சத் தர்சனில் தங்களின் எழு நிமிட வாசிப்பு பயிற்சியில் தங்கள் கற்பித்தலின் சிறப்பு என்னை வியத்தது அதன் தொடர்ச்சியாக வெள்ளிமலை வகுப்புகள். எனில் உண்மையில் ஒரு ஆசிரியர் என்பவர் யார்?…. கல்வி என்பது மனிதனிடம் ஏற்கனவே உள்ள பரிபூரணத்தின் வெளிபாடு (சுவாமி விவேகானந்தர் கூறியது)… ஒரு ஆசிரியரால் ஒரு மாணவனை தூண்ட மட்டுமே முடியும், ஒரு வழிகாட்டியாக மட்டுமே முடியும். அந்த தூண்டுதலை எல்லா ஆரியர்களாளும் செய்ய முடியாது. அந்த வகையில் அந்த ஆசிரியரின் ஆளுமை தென்படுகிறது. இன்றைய நம் கல்வி என்பது வெறும் பிழைப்பு கல்வி மட்டுமே.நம் கையில் ஒரு A4sheet(degree certificate) கொடுத்து இதுதான் உன் அளவுகோல் என்கிறார்கள். ஆனால் ஒரு இறகை வைத்து மட்டுமே நம்மால் பறக்க இயலாது. முழுமையான கல்வி ஒன்றிணைந்து சமநிலை அடையும்போது மட்டுமே நம்மால் சுதந்திரமாக பறக்க இயலும். இன்று zoom meeting, online class, AI, போன்று தொழில்நுட்பம் தன் உச்சக்கட்ட வளர்ச்சியை அடைந்தாலும் முழுமையாக கல்வி என்பது ஒரு ஆசிரியருடன் உடன் அமர்ந்து அதற்கான ஒரு சூழல் அமைந்தால் இன்றி ஒருபோதும் முழுமையான கல்வி சாத்தியமாகாது என்பதை நான் மிக உறுதியாக கூறுவேன். கடலூர் சீனுவின் இந்த அமர்வு என்னை தூண்ட செய்து, மேலும் பறந்து ஆழ்ந்து செல்ல வழிகாட்டாக இருந்தது என்பதை ஐயமின்றி கூறுவேன்.
இரண்டாவது இதுவரை இதுபோல் நிகழ்வு ஒசூரில் நிகழ்நததாக எனக்கு தெரியவில்லை. ஆனால் இன்று சீனு ஆரம்பித்தன் பொருட்டு தீவிர இலக்கிய வாசகர்கள் எத்தனை பேர் இருக்கிறார் என்ற தெளிவு கிடைத்தது. இனி மாதம்தோறும் ஒரு இலக்கிய கூடுகை நண்பர்கள் நாங்கள் ஒருங்கிணைக்க சீனு இவ்வகுப்பின் மூலம் வழிகாட்டினார். இது போதும்.
இதற்காகவே மட்டுமே கடலூரிலிருந்து வருகை தந்து நிகழ்வை சிறப்புற செய்த கடலூர் சீனுவிற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
அன்புடன்
அசோக்
ஊட்டி