அன்புள்ள ஆசிரியருக்கு,
ஓசூரில் அக்டோபர் 5 ஆம் தேதி கடலூர் சீனுவுடன் ஒரு கூடுகையை நண்பர்கள் செல்வேந்திரன் மற்றும் அசோக் ஒருங்கிணைத்தனர். “இலக்கிய வாசிப்பில் நுழைவதற்கான அடிப்படைகள்” என்பது தலைப்பு.
பொதுவாக இலக்கிய வாசிப்பு சார்ந்த வகுப்புகளில் எனக்கு சில அச்சங்கள் உண்டு
1. “-ism”களை பட்டியலிட்டு கதைகளை வகைப்படுத்தினால் எனக்கு புரியாது.
2.சொற்கள் எடை மிக்கவை. கலைச்சொற்கள் சர மாதிரியாக வந்து விழுந்தால் தலை சுற்றும்
3.கதைகளை எடுத்துக்காட்டாக சொல்லும்போது அதை படிக்கும் போது இருக்கும் அனுபவம் குறைந்துவிடும் என்ற பயம்
4.கவிதைகளையோ சிறுகதைகளையோ அறுவை சிகிச்சை செய்து விடக்கூடாது
வகுப்பிற்கு முன்னரே இவற்றை குறித்து கடலூர் சீனுவிடம் “நீங்கள் இதை செய்ய மாட்டீர்கள் தானே? ” என்று புலம்பிக் கொண்டிருந்தேன். “நீ மேல சொல்லு தங்கம்” என்று சிரித்துக் கொண்டிருந்தார்.
வகுப்பு தொடங்கும் போது ஒவ்வொருவரும் எப்படி இலக்கிய வாசிப்பிற்கு வந்தோம் என்பதை கேட்டு அறிமுகம் செய்து கொண்டார். தான் எப்படி தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வந்தார் என்பதையும் ஜெயகாந்தனின் சுயதரிசனம் என்னும் கதை அவரை எப்படி புரட்டிப்போட்டது என்பதையும் சொன்னார்.
தான் ஒவ்வொரு முறையும் ஒரே மாதிரி இந்த வகுப்பை எடுப்பதில்லை என்று தனக்குத்தானே சவால் செய்து கொண்டுள்ளதாக சொல்லி வகுப்பை துவங்கினார்
அவர் அற்புதமான கதைசொல்லி. மொத்த வகுப்பும் கதை சொல்வது போலவே இருந்தது. சங்க காலம் தொடங்கி, மரபில் இருந்து நவீன இலக்கியம் சென்று இன்று அஜிதன் சொல்லும் Trans Modernism வரை தமிழ் சூழலில் என்ன நடந்தது நடக்கிறது என்று உலக மற்றும் இந்திய வரலாற்றுடன் சேர்த்து ஒரு மன வரபடத்தை வழங்கினார்.
வாழ்க்கைக்கான பிழைப்பு கல்வி மற்றும் பண்பாட்டு கல்வியின் தேவையைச் சொன்னார். இலக்கியத்தை ரசனை சார்ந்து அணுகுவது, அறிவு சார்ந்து கோட்பாட்டு ஆய்வாக அணுகுவது என்று விளக்கினார். இரண்டும் ஒரு வாசகனுக்கு ஏன் இன்றியமையாதது என்றும் விளக்கி ரசனை சார்ந்த அணுகுமுறையை அன்றைய வகுப்பிற்கான மையமாக எடுத்து கொண்டார்.
மனிதனின் சமூக கட்டமைப்பின் தேவைகள், தத்துவ விசாரணைகள், அறிவியல் கண்டு பிடிப்புகள், உலகப்போர் சூழல்கள் காலத்தின் தேவையை மாற்றியதையும் அது இலக்கியத்தில் எவ்வாறு பிரதிபலித்தது என்பதையும் எடுத்துக்காட்டுகளோடு சொன்னார்.
முதலில் சமூகம் நோக்கி பேசிய எழுத்துமுறை, ஆசிரியர் தனி வாசகனோடு பேசும் வண்ணம் எவ்வாறு மாறியது, அதற்கு மௌன வாசிப்பு எப்படி உதவியது என்பதை சுவாரசியமாக சொன்னார்.
பாரதியார், வா.வே.சு.ஐயர், கா.நா.சு அவர்களின் பங்களிப்பைச் சொல்லி
‘மணிக்கொடி‘, ‘எழுத்து‘ போன்ற தீவிர இலக்கிய சிற்றிதழ்களின் பங்களிப்பை கூறினார். நவீன இலக்கியத்தின் எழுத்தாளர்களை ஒவ்வொருவராக வகை மாதிரிகளோடு அறிமுகம் செய்தார். மனிதன் இப்படித்தான் இங்கே பற்றிக்கொள்ள எதுவும் இல்லை என்பது போன்ற இருத்தலியல்சார் எழுத்துக்கள் வந்த காலத்தில் ஜெயகாந்தனின் படைப்புகளில் இருக்கும் மானுடன் மீதான நம்பிக்கையின் குரலை சுட்டிக்காட்டினார்.
அப்படியே, உங்களின் எழுத்து, மரபின் தொடர்ச்சியாக, கம்பன் இளங்கோவின் நீச்சியாக காவியத்தன்மையுடன் நவீன வாசிப்பு தன்மையுடன் அமைந்திருப்பதை சொன்னார். அதற்கு இணையம் எவ்வாறு உதவியது என்பதை சொன்னார் .
மதிய உணவிற்குப் பின் சிறுகதை நாவல் மற்றும் கவிதை குறித்து பேசினார். இவற்றின் வடிவம், தோற்றம், பரிணாமம், புனைவு மொழி, அழகியல் ஆகியவற்றை விளக்கினார்.
வகுப்பிற்கு வரும் முன்பு மூன்று கவிதைகளை எங்களுக்கு வாசிக்க அனுப்பி இருந்தார். வகுப்பு முடியும்போது நாங்கள் எங்கள் வாசிப்பை பகிர்ந்தோம். கடலூர் சீனு அவர் வாசிப்பை பகிர்ந்தார். கவிதையில் இருக்கும் உணர்ச்சி மற்றும் படிமங்கள், அர்த்த சாத்தியங்கள் குறித்து பேசினார். முதலில் கவிதை சரியாக புரியவில்லை என்று சொல்லி கொண்டிருக்கையில் நேரம் போக போக எல்லோரும் அவரவர் வாசிப்பை சொல்ல முடிந்தது.
அதன் பின் கேள்வி பதில்கள், சிறிய மழை சாரல் நடை என்று விடை பெற்று கொண்டோம்.
காலையில் நான் செய்த புலம்பல்களுக்கு “இவ்வளவு யோசிக்கத் தேவை இல்லை. எத்தனை முறை பிறர் சொன்னாலும் நீயே திரும்ப திரும்ப வாசித்தாலும் ஒரு நல்ல கலை படைப்பில் எப்போதும் நாம் அது வரை காணாத புதிய ஒன்று எழுந்து வரும்” என்றார்.
மற்றுமொரு இனிய நாள். ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு நன்றி.
அன்புடன்,
சரண்யா