வாழ்வின் பொருள்

அன்புள்ள ஜெ,

மனித சமூகத்தைப் பற்றிய சர்ச்சைகளிலும், குறிப்பாகப் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவல் பற்றிய விவாதங்களிலும் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியாக ‘மானுட வாழ்க்கையின் அர்த்தம் என்ன?’ இருக்கிறது. ஜெ, உண்மையிலேயே மனித வாழ்க்கைக்கென்று “பொருள்” உள்ளதா? பேய்க்காற்று அள்ளிச்செல்லும் சருகுக் குவியலில் முன்னால் பறக்கும் சருகு பின்னால் வரும் குப்பைகளையெல்லாம் தானே வழி நடத்திச் செல்வதாக எண்ணி, தன் பொறுப்பை நினைத்துக் கவலை கொள்வது போல் தோன்றுகிறது. தான் நம்பிய சித்தாந்தத்திற்காக உயிரை விடும் தனிமனிதனாகட்டும், ஏதேதோ காரணங்களுக்காக நடக்கும் போர்களில் கூட்டம்கூட்டமாக செத்து விழும் மக்களாகட்டும், சுனாமி, விபத்து, என்று நினைத்தே பார்க்காத நேரங்களில் மரணத்தைத் தழுவி மறையும் மக்களாகட்டும், தனிப்பட்ட இழப்புக்களுக்காக சுயமாகச் சாவைத் தேடியடைபவர்களாக இருக்கட்டும், மனிதனைப் போலவே பிறந்து, இறந்து இல்லாமலாகும் மற்ற எண்ணற்ற உயிரினங்களை விட எவ்வகையில் வாழ்வில் ‘பொருள்’ இருக்க வேண்டிய அருகதை உடையவனாகிறான்? இப்படி ஒரு கேள்வி கேட்க விதிக்கப்பட்டவன் என்பதாலேயேவா?

‘வாழ்வின் அர்த்தம்’ என்பதே நம் வாழ்க்கை முறையை நாமே தீர்மானிக்கிறோம் என்கிற மிதப்பில் இருந்தே வருவதாகத் தோன்றுகிறது. இயற்கையில் ‘எல்லாமே சமம்’ இல்லை, 1% க்கும் குறைவானவர்களே அப்படித் தீர்மானிக்கிறார்கள். அப்படியானால் தீர்மானிப்பவர்கள் தவிர, வெறுமே செத்தழியும் பிற கோடிக்கணக்கானவர்கள் வாழ்க்கைக்கு என்ன பொருள் என்ற கேள்வி எழுகிறது. பி.தொ.நி.குரலிலும் யாரோ சில தீர்மானிப்பவர்களின் பொருட்டு மாண்ட கோடிகணக்கானவர்களிலும், சித்தாந்தத்தை நம்பி வாழ்வைத் தொலைத்த  ஒரு அறிவுஜீவியின் ‘வாழ்வின் பொருள்’ பற்றிய சஞ்சலமே பிரதானமாக எடுத்துப் பேசப்படுகிறது. அதன் நோக்கமே, அத்தகைய ஒருவனின் வழியாக ஒட்டுமொத்த மானுடரின் வாழ்வின் பொருள் தேடுவதே என்பதைப் புரிந்து கொள்கிறேன். ‘அப்படிப் பிறந்து, வாழ்ந்து, இவ்வாறு இறப்பது’ என்பதே அவர்களின் வாழ்க்கைக்கு கடைசியில் அர்த்தமா? (நான் விதியைக் குறிக்கவில்லை) பொதுவான ‘அர்த்தம்’ என்பது வாழ்க்கைக்கு இல்லாததாலேயே, முன்னால் பறக்கும் சருகு மற்றசருகுக்கெல்லாம் ‘அர்த்தம்’ வகுக்கிறதா? அடர்ந்த காட்டில் வாழும் ஒரு பழங்குடிக்கு அவர்களின் கோணத்தில் ஒரு ‘அர்த்தம்’ வாழ்க்கைக்கு இருந்தாலும், நாம் ஏன் முண்டிக்கொண்டு சென்று அவர்களைத் ‘திருத்தி’ வாழ்க்கையின் பொருளைக் கற்றுக் கொடுக்க நினைக்கிறோம்? தனித்தனியே இயங்குவதாகத் தோன்றினாலும், ஒற்றை மாபெரும் உடலும், மனமும் கொண்டு முன்வகுத்த ஒரு திசையை நோக்கிப் பறக்கும் வலசை போகும் பறவைக்கூட்டம் போலவே மனிதத்தொகையின் வாழ்க்கையும் நகர்வதாகவே நினைக்கிறேன். நாம் ஏன் அதற்குப் பொருள் தேடி அலைய வேண்டும்?

எப்படிச் சொன்னாலும், சாமானிய தளத்தில் இன்றைக்கு நாம் ஒப்புக்கொண்ட சமூகவாழ்க்கை முறைக்கு இந்தக் கேள்விகள் பயனில்லாததாக இருப்பதாகவும் தோண்றுகிறது. வேறு யாரிடம் கேட்டாலும் தப்பாகவே புரிந்து கொள்ளப்படும். ஆனால் ஜெ, மிக ஆதாரமான, ‘உயிர்வாழ்தல்’ என்ற நோக்கில் ஒரு உயிரினமான மனிதன் ‘வாழ்வின் அர்த்தம்’ என்ன என்று எண்ணி அலைவதன் காரணம் பற்றி நீங்கள் தான் விளக்க வேண்டும்.

நன்றி,
பிரகாஷ்.

அன்புள்ள பிரகாஷ்

நீங்கள் கேட்கும் கேள்விக்கு எளிதான ஒரு பதில்தான். பூச்சிகள் புழுக்கள் எதுவுமே என் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் என கேட்கும் விதமாக படைக்கப்படவில்லை, மனிதன் கேட்கிறான், ஆகவே அந்தக் கேள்வியும் இயற்கையின் ஒரு பகுதி. இயற்கையின் ஒரு நியதி.

மனிதனின் பிரக்ஞை என்பது இயற்கையில் நிகழ்ந்திருக்கும் மிக உன்னதமான ஒரு இயற்கைநிகழ்ச்சி. அதை செயற்கையானது என்றும் இயற்கையை மீறியது என்றும் நான் நினைக்கவில்லை. இயற்கையில் கண் என்ற ஒரு நிகழ்வு எப்படி உருவாகி வந்தது? வைசேஷிக தத்துவத்தின்படி ஒளியே கண்ணை உருவாக்கியது. அதையே டேவிட் அட்டன்பரோ அவரது நூலில் சொல்வதை வாசித்தேன்.

பல புழுக்களுக்கு உடலே பார்க்கும். தோல் முழுக்கவே ஒளியை உள்ளே விடும். பின் அந்த தோலின் ஒரு பகுதி மேலும் மேலும் ஒளி ஊடுருவுவதாக ஆகியது. பின் அதனுள் ஒளியைக் கூர்மையாக்கிக்கொள்ளும் ஆடிகள் உருவாயின. அந்த ஆடிகள் தானாகவே குவியம் கொள்ளும் தன்மை பெற்றன. இன்றைய மானுடக் கண் மெல்லமெல்ல பல லட்சம் வருடங்களாக உருவாகி வந்தது. அதைப்போலத்தான் மானுடப்பிரக்ஞையும்.

இயற்கையில் அந்த கண் உருவாகி வந்ததற்கு ஒரு காரணம் இருக்கும் என்றால், ஒட்டுமொத்த விளைவில் அதற்கான பங்களிப்பு ஒன்று இருக்கும் என்றால் மனிதனின் பிரக்ஞைக்கும் தேடலுக்கும் அதற்கான இடமும் இருக்கும்.

ஆகவே எல்லாக் கேள்விகளும் பயனுள்ளவை. எல்லா பதில்களும் பயனுள்ளவை. இந்தக் கேள்விகளின் ஒட்டு மொத்தப் பிரவாகம் வழியாக மானுடம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது. அந்த இலக்கு நாம் அறிவதாக இல்லாமலிருக்கலாம். அறிந்தாலும் புரிந்துகொள்ளமுடியாமலிருக்கலாம். அறிந்தாலும் ஒன்றும் செய்வதற்கில்லை.

விஷ்ணுபுரத்தில் இந்த எல்லா வினாக்களும் உள்ளன, கண்டடைதல்களும். கோபுர உச்சியில் சிற்பி கண்டடையும் பூச்சிகள் லட்சணக்கணக்காகச் சேர்ந்து அவற்றால் கற்பனைகூட செய்யமுடியாத ஒரு மாபெரும் சிற்பசக்கரத்தை வரைந்துகொண்டிருக்கும்

ஜெ

அன்புள்ள ஜெ,

தங்கள் பதிலுக்கு மிக்க நன்றி.
இந்த பதில் இன்னொரு வகையில் எனக்கு மிக உதவியாக இருக்கிறது. என்னுள் தொக்கி நின்று என்னை எப்போதும் அலைக்கழிக்கும் கேள்வி எது என்பதை உங்கள் பதில் – குறிப்பாக “ஒளிவேட்கை கண்ணாகியது” என்கிற வைசேஷிக தரிசன வார்த்தை தெளிய வைக்கிறது. நான் எதைப் பேச முயன்றாலும், சிந்தித்தாலும், கேள்வி கேட்டாலும் என்னை அறியாமல் அந்தப் புள்ளியிலேயே வந்து நிற்கிறேன் என்று எனக்கே என்னைக் காட்டுகிறது. இதற்குப் பொருள் நான் அடுத்த நிலைக்கு நகரவில்லை என்றா அல்லது என் இயல்பான தேடல் என்பது நீண்ட காலமாக ஒரே புள்ளியில் குவியம் கொண்டிருக்கிறது என்றா?? தெரியவில்லை!
ஆச்சர்யமான ஒரு விஷயம், நீங்கள் மறந்திருக்கலாம், 2008ம் ஆண்டில் நான் கேட்ட ஒரு சந்தேகத்திற்கு அப்படியே இதே கருத்தையே பதிலாகக் கூறினீர்கள் .  அப்போதிருந்தே “ஒளிவேட்கை கண்ணாகியது” என்பது எனக்கு தியான மந்திரம் போல ஆகிவிட்டது.   ஒளிவேட்கை கண்ணாகியது என்பதையே “சங்கல்பத்தின் வலிமை”,  “இச்சாசக்தியின் வலிமை”  என்று நான் என்னளவில் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சில விஷயங்களை விளங்கிக் கொள்ள போட்டுப்பார்த்துக் கொள்வேன்.
அந்தப் பதம் சுற்றிச்சுற்றி இப்போது மீண்டும் என்னிடம் வந்ததாக எண்ணிக்கொள்கிறேன். இம்முறை இன்னொரு புதிய அர்த்தத்துடன் – “இயற்கையின் மாபெரும் திட்டத்தின் வலிமை”.
மீண்டும் நன்றி.
அன்புடன்,
பிரகாஷ்.

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஞானபீட விருதுகள்