அன்புள்ள ஜெ.,
‘தேடுகின்ற கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி…’ சமீபத்தில் கேட்ட பழைய பாடல். படம்: சுவாமி ஐயப்பன் (1975), இசை: தேவராஜன், பாடியவர்: அம்பிலி. எட்டு வயதுச் சிறுவனாக படம் பார்த்தது நினைவில் உள்ளது. ஜெமினிகணேசன் “சைடு கொண்டை‘யோடு பந்தள ராஜாவாக வருவார். இத்தனை நாள் கழித்துப் பார்க்கும்போதும் (ஒருவேளை அதனால்தானா) கண்ணில் நீர்கோர்க்கச் செய்கிறது இப்பாடல். “அன்னை உண்டு தந்தை உண்டு எந்தன் மனையிலே ஒரு தம்பி மட்டும் பிறக்கவேண்டும் உந்தன் வடிவிலே” என்று உருக்கமாக வேண்டிக்கொள்கிறது பாப்பா. அப்பா சொல்லிகொடுத்திருப்பார் போல.
இந்தப்படம் ஒரு ‘மியூசிக்கல் ஹிட்‘. ஐயப்ப வழிபாட்டை சரியாக ‘டாக்குமெண்ட்‘ செய்திருக்கும் மற்றொரு பாடல் ‘சுவாமி சரணம் சரணம் பொன்னையப்பா..’ அமுந்த குரலில் டி எம் எஸ் பாடியது.தமிழ், மலையாள முகங்களின் பிரளயம். இரண்டு காலும் சூம்பிப்போன ஒருவர் கைகளால் தவழ்ந்து செல்கிறார். ‘ஏழாம் உலகம்‘ நினைவுக்கு வருகிறது.
படம் தமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் வந்தது. தமிழில் வசனம், பாடல்கள்: கண்ணதாசன்…ஹரிவராசனம் நீங்கலாக. யேசுதாஸின் பெருவெற்றிப்பாடலான ‘ஹரிவராசனம்…’ இந்தப்படத்தில்தான். ஹரிவராசனம்… கம்பங்குடி சுந்தரம் குளத்து ஐயரின் சாஸ்தா ஸ்துதியில் இடம்பெற்ற கீர்த்தனையாகும். இதனை கொன்னகத்து ஜானகி அம்மா 1923 இல் எழுதினார் என்றொரு செய்தியும். உண்டு. இவரது தந்தை அனந்தகிருஷ்ண ஐயர் ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக இருந்தவர். ஆனால், இதற்கு சரியான ஆதாரம் இல்லாததால் ஹரிவராசனத்தின் கிரெடிட் கம்பங்குடி சுந்தரம் ஐயரிடமே உள்ளது.
ஐயப்பபக்தி ஒரு இயக்கமாக வளரும் அளவுக்கு இட்டுச்சென்றது நவாப் ராஜமாணிக்கம் பிள்ளையின்
‘ஸ்ரீ ஐயப்பன்‘ நாடகம். ஆலப்புழையில் 1944 – ல் அரங்கேறி தமிழ்நாட்டிலும் பெருவெற்றி பெற்றது. இந்த நாடகத்தை எழுதியவர் ராஜமாணிக்கம்பிள்ளையை பலமுறை சந்தித்தும் அவர் நடத்த ஒத்துக்கொள்ளவில்லை. அவர் (பெயர் தெரியவில்லை) ஐயப்ப சரிதத்தை கதாகாலட்சேபமாக செய்தபோது சென்று பார்த்த நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை பின்னர் மனம் மாறியதாக தன்னுடைய தன்வரலாற்று நூலில் பதிவு செய்கிறார் வி.கே.ராமசாமி. நவாப் ராஜமாணிக்கம்பிள்ளையின் ‘ட்ரூப்‘ பிலிருந்த எம்.என்.நம்பியார் பின்னாளில் பல திரை நட்சத்திரங்களையும் அழைத்துச்சென்று மேலும் பிரபலமாக்கினார். மேலும் மேலும் கூட்டம் அம்மியது. சிலவருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் கூட்டநெரிசலில் சிக்கி நூறுபேருக்குமேல் பலியானார்கள். நான் ஐயப்பன் கோவிலுக்குச் சென்றதில்லை. ஆனால் ஒரு முறை ‘கவி‘ சுற்றுலா சென்றபோது தூரத்திலிருந்து தெரியும் கோயிலை தரிசித்திருக்கிறேன். கேரள சுற்றுலாத்துறை வைத்திருந்த விளம்பரப்பலகையில் இருந்த நான்கு யானைகளைத் தவிர காட்டில் யானைகளே இல்லை. கேட்டபோது காட்டுக்குள் கூட்டிச்சென்ற வனக்காவலர் கூறினார் “சபரிமலை சீசனுக்குத்தான் இங்க நிறைய யானைங்க வரும். மத்தநேரத்துல எல்லாம் அங்கபோயிரும். அதிகம் இருக்காது” என்று. பக்தர்கள் வருகை விலங்குகளை எப்படியெல்லாம் சிரமப்படுத்துகிறது என்று சொல்லிக்கொண்டுவந்தார். முன்னெல்லாம் யாராவது ‘சும்மா ஒருதடவ போய்ட்டுவாங்க‘ என்று கூறினால் ‘விடுங்க..யானைங்கள்லாம் பொழச்சுப் போகட்டும்‘ என்பேன். உண்மைதான் போல.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்