ஆங்கில நாடகங்கள்

அன்புள்ள ஜெ.,

நீங்கள் அஜிதனைக் கல்லூரியில் சேர்க்க பெங்களூரு வந்திருந்த போது தங்களைச் சந்தித்திருந்தேன். அப்போது எனது நாடகத் துறை ஆர்வம் பற்றியும் அதில் சந்திக்கும் சில பிரச்சினைகள் பற்றியும் கூறியது நினைவிருக்கலாம். (மேலும், blogswara பற்றியும், பிற சந்தர்ப்பங்களில் படைப்பூக்கம் தொடர்பான மற்றும் வேறு சந்தேகங்களைக் கேட்கவும் தங்களுக்கு எழுதியிருக்கிறேன்.) அந்த சந்திப்புக்குப் பின், மேலும் இரு நாடகங்களுக்குப் பிறகும் திரும்பவும் அதே போன்ற பிரச்சினைகளைச் சந்திக்கின்றேன்!
விஷயம் இது தான்:
இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட, எல்லா விதங்களிலும் சிறந்த, நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை). அதனால், திரும்பத் திரும்ப ஏதாவதொரு அமெரிக்க அல்லது ஐரோப்பிய நாடகாசிரியரின் நகைச்சுவை நாடகத்தையே மேடையேற்றிக் கொண்டிருக்கிறோம். (மக்கள் நாடகத்துக்கு வந்து சந்தோஷமாக சிரித்து விட்டுப் போகிறார்கள். எனக்குத்தான், ஏதோ ஒரு விதத்தில் artistic counterfeiting செய்கிறேனோ என்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது.)
  • அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மற்ற ஐரோப்பிய நாடுகளிலும் எழுதப்படும் நாடகங்கள் பல நேரங்களில் ஒரு வித அந்நியத் தன்மையுடனேயே  இருக்கின்றன. இதில் வியப்பேதும் இல்லை. (மேலை நாட்டுக் கலாசார சூழல் புரியாவிட்டால் நாடகத்தில் வரும் ஜோக்குகள் மற்றும் references புரியாது; ஜோக்குகள் புரியாவிட்டால் பார்வையாளர்கள் “சிரி-சிந்தி” என்பதில் முதல் நிலையிலேயே தடுக்கி விடுவார்கள்; references புரியவில்லை என்றால் பார்வையாளர்களுக்குத் தாங்கள் எதைத் தவற விடுகிறோம் என்பது கூடத் தெரியாமலே போகும்.)
  • பழைய இந்திய நாடக ஆசிரியர்களின் எழுத்துக்களை எடுத்துக் கொண்டால் அவை 1991-க்கு முன்பு எழுதப்பட்டவை. அதனால், liberalisation மற்றும் globalisation போன்ற நிகழ்வுகளுக்கு முந்தைய இந்தியாவைப் பற்றியும் அப்போதிருந்த பிரச்சினைகள் பற்றியும் பேசுகின்றன. (உதாரணத்துக்கு, விஜய் டெண்டுல்கர் அல்லது கிரீஷ் கர்னாட் போன்றவர்களின் பல நாடகங்களில் வரும் சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் தற்காலத்தின் பார்வையில் அர்த்தமற்றவையாகத் தோன்றுகின்றன. அந்த சம்பவங்கள் மற்றும் பாத்திரங்களின் ஊடாக இந்த ஆசிரியர்கள் சுட்டும் அடிப்படை தரிசனங்கள் எல்லாக் காலத்திற்குமானவையாக இருக்கலாம்; ஆனால், சம்பவங்கள் மற்றும் பாத்திரங்கள் எழுபதுகள் மற்றும் எண்பதுகளிலிருந்து வந்தால் பார்வையாளர்களை இவற்றினூடாக அந்த தரிசனத்திற்குக் கூட்டிச் செல்வது முடியாமல் போகிறது!)
  • புதிதாக நாடக உலகத்திலிருந்தே எழுதுகிறேன் பேர்வழி என்று கிளம்புகிற சிலரும் (எல்லோரையும் சொல்லவில்லை) அடிப்படை இலக்கிய ஆர்வமோ சமூக அக்கறையோ இல்லாமல், நாடகத்தைக் கலையாக இல்லாமல் வெறும் கேளிக்கையாக மட்டுமே பார்ப்பவர்களாக இருப்பதால், பொருட்படுத்தத்தக்க நாடகங்கள் வெளிவருவதில்லை. (இதில் இன்னொரு பிரச்சினை, இதில் பலர் சினிமா மோகத்தால் பெரிதாக பாதிக்கப்பட்டவர்கள்; அதனால், ஒரு ஹிந்தி அல்லது இங்கிலீஷ் படம் நன்றாக ஓடிவிட்டால், அல்லது ஒரு புத்தகத்துக்கு “mass appeal” இருக்கிறதென்று தெரிந்து விட்டால், அதை இங்கங்கு கொஞ்சம் டிங்கரிங் செய்து, இரட்டையர்த்த வசனங்கள் மற்றும் கிளுகிளுப்புக்குத் தேவையான சங்கதிகள் சேர்த்து, மேடையேற்றி கொஞ்சம் புகழ், வெற்றி, காசு பார்க்கலாமா என்று துடிக்கிறார்கள். அண்மைக்கால உதாரணம், சேத்தன் பகத்தின் Five Point Someone.
  • உயர்ந்த தரத்திலான, தத்துவப் பின்புலம் கொண்ட, முக்கியமான விஷயங்களைப் பேசுபொருளாகக் கொண்ட, வடிவ நேர்த்தி கொண்ட, அழுத்தமான-ஆயினும்-நம்பும்படியான பாத்திரப் படைப்பு அமையப்பெற்ற நாடகங்கள் எழுதப்பட வேண்டும், அவை சிறப்பாக மேடையேற்றப்பட வேண்டும் என்று மிகவும் ஆசைப்படுகிற என்னைப் போன்ற சிலருக்கோ, “நாமே எழுதிடலாமோ” என்று நினைக்க முற்படும்போதே அது எவ்வளவு ஒரு அசட்டு எண்ணம் என்பதும், அப்படி ஒரு நாடகத்துக்கான கருவைக் கற்பனை செய்து விடுவதே எளிதல்ல என்பதும் உடனடியாகப் புரியவும் புரிகிறது. அதற்கான தயார் நிலைக்கு வருவதற்கே பெரியதொரு புரிதலும் படைப்பூக்கமும் இசைந்து வர வேண்டும்—அதற்கு மேலாகப் பெரியதொரு உழைப்பு!
இப்போது திரும்பவும் முதல் வரிக்கு வருகிறேன்:
“இந்திய ஆங்கில நாடக இலக்கியத்தில், தற்கால இந்தியாவின் நிலையை ஒட்டி எழுதப்பட்ட நாடகங்கள் அதிகம் இல்லை (அல்லது, எனக்குத் தெரியவில்லை)”
  • இருக்கின்றன, ஆனால் எனக்குத் தான் தெரியவில்லை என்றால் என் தேடுதலில் நான் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருவது பயனளிக்கலாம்?
அல்லது,
  • நான் ஐயப்படுவது போல, “The post-liberalisation generation of India has not begun to evolve its intellectual, insightful playwrights yet” என்பது உண்மையாக இருந்தால், இதற்குத் தீர்வு எந்த வகையில் அமைய வாய்ப்புண்டு? இந்திய ஆங்கிலத்தில் தான் இல்லையா, அல்லது நமது இந்திய மொழி இலக்கியங்களிலும் தற்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த, ஆழமான புரிதல் கொண்ட நாடக ஆசிரியர்கள் இன்று பற்றாக்குறை தானா? தற்கால இந்திய ஆங்கில நாடகங்களில் இவை மிக முக்கியமானவை, மேடையேற்றப்பட வேண்டியவை, என்று நீங்கள் ஒரு பட்டியல் தர முடியுமா?
அன்புடன்,
விஜய்
அன்புள்ள விஜய்
பெங்களூரில் தற்செயலாக உங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி. அதன்பின்புதான் பதில் கடிதம் மிச்சமிருக்கிறது என்ற எண்ணம் ஏற்பட்டது.
பொதுவாக இந்தியாவைப்பற்றி ஆங்கிலத்தில் எழுதுவதில் நடிப்பதில் எனக்கு ஒரு கண்டனம் உண்டு. அதிலிருந்து நம் காலனியடிமைநாட்களின் மனநிலையை நீக்கவே முடியாதென்றே நினைக்கிறேன். முற்றிலும் இந்தியத்தன்மை கொண்டது என ஒரு இந்திய ஆங்கில நூலைக்கூட நான் வாசித்ததில்லை.
ஆனால் நம் இளையதலைமுறை அதிகமும் ஆங்கிலத்திலேயே கல்வி கற்கிறதென்பதனால் வேறு வழியே இல்லை, நாம் ஆங்கிலத்தில் எழுதி நடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்
நானே கவனித்திருக்கிறேன், இந்திய ஆங்கில நாடகங்கள் பெரும்பாலும் மேலைநாட்டு நாடகங்களைத் தழுவி நடிப்பவை அல்லது அப்படியே நடிப்பவை. இதன் இழப்பு என்னவென்றால் அவற்றின் குறியீடுகள் எல்லாமே அன்னியமானவை என்பதுதான். அவை ஒரு விசித்திரமான அனுபவமாகவே ஆகின்றன. உதாரணமாக நான் திருவனந்தபுரத்தில் பார்த்த நாடகத்தில் பிச்சைக்காரன் தொப்பியை நீட்டுகிறான்!
இந்திய ஆங்கில நாடகங்களில் சமகால இந்தியாவை எதிர்கொள்ளும் இலக்கியத்தரமான நாடகங்கள் என எதையுமே நான் வாசித்ததில்லை . நான் கேட்டவரைக்கும் அப்படி ஏதும் இல்லை.
இதைத்தவிர்க்க சிறந்த வழி தமிழில் அல்லது கன்னடத்தில் உள்ள நல்ல நாடகங்களை மொழியாக்கம் செய்து நடிப்பதுதான்.  ஆனால் அப்போதுகூட குப்பம்மா பாட்டி ஆங்கிலத்தில் பேசுவதை எப்படி என்னால் எதிர்கொள்ளமுடியும் என்று சந்தேகமாகவே இருக்கிறது
மராட்டிய நாடகத்தில் மும்பை பெருநகர் வாழ்க்கையைச் சொல்லும் நாடகங்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெற்ற்கரமாக நடித்திருக்கிறார்கள் –  மோகன் ராகேஷ், தெண்டுல்கர் நாடகங்களை.
தமிழில் இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள் அப்படிப்பட்ட சாத்தியங்கள் கொண்டவை. ’மழை’, ’போர்வைபோர்த்திய உடல்கள்’ போன்றவை.
ஜெ
முந்தைய கட்டுரைஜாமீன் சாஹேப்-2
அடுத்த கட்டுரைஅயோத்தி தாசர்-கடிதங்கள்