வணக்கம் .
தங்களின் ‘ஒன்றெனவும் பலவெனவும்‘ என்ற தலைப்பிலான கட்டண உரையைக் கேட்டேன். தளத்தில் அறிவிப்பு வந்த சில நிமிடங்களில் you tube ல் ஸ்ருதி டிவி உறுப்பினராக உடனே சேர்ந்து அன்றிரவே முழுக்க கேட்டுவிட்டேன்.
ஒட்டுமொத்தப் பார்வை என்றால் என்ன, இந்திய சிந்தனைக்கு ஆங்கில அறிஞர்களின் பங்களிப்பில் என்ன என்ன நிகழ்ந்துள்ளது , நாம் ஏன் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என விரித்தெடுத்து சென்றது தங்களின் உரை. வேதங்களுக்கும் ஆகமங்களுக்குமான வித்தியாசம் அவை இரண்டும் இணையும் புள்ளி அல்லது அவைகளின் நோக்கம் என்ன. முன்னது ஒன்றிலிருந்து பலவற்றை நோக்கி செல்ல(பிரபஞ்சத்தை ஒரு உடலாக உருவகித்தல்), பின்னது பலவற்றிலிருந்து ஒன்றை நோக்கி செல்கிறது(உடலை பிரபஞ்சமாக உருவகித்தல்) என்று உரிய விளக்கங்களுடன் சொன்னது எனக்கு புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது.
வைகானஸ மரபு, பாஞ்சராத்ர மரபு, புருஷ சூக்தம், ஆத்ம சூக்தம், சிருஷ்டி கீதம் இவையெல்லாம் அன்றிரவும் மறுநாளும் மண்டைக்குள் ஓடிக்கொன்டே இருந்தன. புருஷ சூக்தம், ஆத்ம சூக்தம், சிருஷ்டி கீதம் இவை மூன்றையும் எனது குறிப்பேட்டில் எழுதி வைத்துவிட்டேன். ஏனோ தெரியவில்லை அது நீங்கள் பாடிக் காட்டியதாலோ என்னவோ மறுபடி மறுபடி வாசிக்கத் தோன்றுகிறது. இவை எதையும் தெரியாமல் தான் இவ்வளவு நாள் இருந்துள்ளேன் ரெங்கநாதனின் மகனான விக்னேஸ்வரன். ‘விக்னேஸ்‘ என்ற பெயருக்கும் ‘வைகானஸ‘ என்ற மரபுக்கும் கூட எதுவும் தொடர்பிருக்குமோ என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டேன்.
பின்பு கீழ்கண்ட பக்கங்களை தமிழ் விக்கியில் வாசித்தேன்.
இவைகளில் சொல்லப்பட்டுள்ள அனைத்தையும் முழுக்க உள்வாங்கிவிட்டேன் என்று சொல்ல முடியாது. ஆனால் தொடங்கியுள்ளேன் என நிச்சயம் சொல்லமுடியும். ஆசிரியருக்கு மனதின் அடியாழத்திலிருந்து நன்றியும் வணக்கமும்.
ஆசான் அருகமர்ந்து உரையைக் கேட்க நேரில் வரமுடியாத(அதை நியாயப்படுத்தவில்லை) என் போன்றோர் அடையும் குறையை சற்றேனும் நிவர்த்தி செய்துவரும் ஸ்ருதி டிவிக்கும் சகோதரர் கபிலன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
அன்புடன் ,
கே.எம்.ஆர்.விக்னேஸ்
“ஒன்றெனவும் பலவெனவும்”
(இந்திய மெய்யியல் ஒரு பார்வை)
என்ற தலைப்பில் ஜெயமோகன் உரை
பகுதி 1 – https://youtu.be/XTLe8g-uu5Q
பகுதி 2 – https://youtu.be/a7wJgaRNJto