அன்பின் ஜெ.எம்.,
யோகக் கலை பற்றிய தவறான கிறித்துவப் பார்வை ஒன்றை இன்று தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது.
முப்பத்து முக்கோடி தெய்வங்களைக் கொண்ட இந்து மதக் கருத்தின் படி காண்பதெல்லாம் கடவுள் தான். இறைவன் ஒரு ஆள்தத்துவத்தோடு இல்லாமல் ஒரு ஆன்மீகப் பொருளாக அண்ட சராசரத்திலுள்ள எல்லாவற்றிலும் வியாபித்துள்ளார் என அது கூறுகிறது. ஆனால் கிறிஸ்தவமோ, இறைவன் என்பவர் மனிதன் உட்பட அண்ட சராசரங்கள் அனைத்தையும் தனது வார்த்தையினால் படைத்த ஆள்தத்துவமுள்ள ஒருவரே எனத் தெளிவாய்க் கூறுகிறது.
என அந்த ஆசிரியர் மிக சிறப்பாகவே அந்த வேறுபாட்டைச் சொல்கிறார்.
நாம் இன்று கடைப்பிடிக்கும் சேஸ்வர யோகம் கூறும் ஞானம் என்னவென்றால் இந்தப் பிரபஞ்சமும் பரம்பொருளும் வேறு வேறல்ல என்பதே. பரம்பொருள் என்பது நம் ஞானத்துக்கு அப்பாற்பட்ட ஓர் அறியமுடியாமை மட்டுமே. அதை அதன் வடிவமாக நம்மைச்சூழ்ந்துள்ள முடிவிலா பெருவெளியும் முடிவிலா விண்ணகங்களும் நிறைந்த பிரபஞ்சமாகவே காணமுடியும், அறியமுடியும். பிரபஞ்சம் பரம்பொருளின் படைப்பு அல்ல. ஏனென்றால் பரம்பொருள் அன்றி எதுவுமே இல்லை. ஆகவே பிரபஞ்சமும் அதன் சிறுதுளியாகிய நாமும் பரம்பொருளே. நம்மை நாம் முழுதுணர்வது பரம்பொருளை அறிவதே. அதுவே மனிதனுக்குச் சாத்தியமான மெய்ஞ்ஞானம்.
ஆனால் நாம் நம்மை நாமென உணரும்போது பிரபஞ்சத்தைப் பிறிதென உணர்கிறோம். ஆகவே பரம்பொருளில் இருந்து வேறுபடுகிறோம். அந்த பேதபுத்தியே அறியாமை என்பது யோகஞானம். அந்த அறியாமையே துயரம். துயரத்தை வெல்வதே முக்தி. அதற்கு அறியாமையை வெல்லவேண்டும். அறியாமையின் மூலகாரணமாகிய பேதபுத்தியில் இருந்து மீண்டு ஒன்றாதலே யோகம். யோகம் என்றாலே இணைவு என்றே பொருள். அதற்கான வழிமுறைகளைப் பதஞ்சலி முதல் பலரும் சொல்லியிருக்கிறார்கள்.
கிறித்தவ மரபின்படி இறைவன் படைப்பாளி, இந்த உலகம் படைப்பு [கிறித்தவக் கொள்கைப்படி பிரபஞ்சம் என்ற கருத்தாக்கம் கிடையாது] படைப்பை நிர்வகிப்பவன் இறைவன். கடவுளுக்கு ஆளுமையும், வடிவமும், தனித்த இருப்பும் உண்டு. மனிதன் கடவுளின் அதே வடிவில் படைக்கப்பட்டவன். ஆகவே படைப்புகளில் முதன்மையானவன் அவன். பிற படைப்புகள் அனைத்துமே மனிதனுக்காக உருவாக்கப்பட்டவை. மனிதனுக்குக் கடவுள் தந்தை போன்றவர். அவர் மனிதர்கள் இறந்தபின் சென்று சேரும் பரலோகம் என்னும் சொர்க்கத்தில் இருந்துகொண்டு பூமியை நிர்வாகம்செய்கிறார்.
கிறித்தவக் கொள்கையின்படி மனிதன் கடவுளின் ஆதி இச்சையை விட்டு மீறி சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் ஆரம்பித்தான். ஆகவே பாவத்தில் வீழ்ந்தான். அந்தப் பாவத்தை எல்லா மனிதர்களும் கருவிலேயே கொண்டிருக்கிறார்கள். அந்தப் பாவத்தை ஒவ்வொருவரும் கழுவிக்கொள்ளவேண்டும். அதற்கான ஒரே வழி கடவுளாகிய பரமபிதாவிடம் முழுமையாகச் சரண் அடைவதும், பாவங்களை அறிக்கையிட்டு மேலும் பாவம்செய்யாமல் வாழ்வதும் மட்டுமே.
கிறித்தவ மரபின்படி பாவத்தின் விளைவாக வரும் துன்பங்களைத் தீர்ப்பதற்காகவும், உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்குத் தேவையான வசதிகளுக்காகவும் பரமபிதாவிடம் வேண்டிக்கொள்ளுவது மட்டுமே ஒரு கிறித்தவன் செய்யக்கூடிய ஒரே வழிபாட்டுமுறையாகும். தியானம், ஜெபம் போன்ற சொற்களைக் கிறித்தவர்கள் பயன்படுத்துவதெல்லாம் ‘வேண்டிக்கொள்ளுதல்’ என்ற அர்த்தத்தில் மட்டுமே
ஆகவே அந்தக் கிறித்தவ அறிஞர் அவரது கோணத்தில் சரியாகவே சொல்கிறார். அவர் கொண்டுள்ள மத நம்பிக்கை அது.அவருக்கு சரியான பாதை அதுவே, அவர் அதை நம்பும் வரை.
ஓர் இந்து பிறமதங்களை விமர்சனம்செய்யக்கூடாது, மறுக்கவும்கூடாது. நதிகள் பல கடல் ஒன்றே என்பதே உபநிடத ஞானம்.
ஜெ