டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். மூன்றாம் நாள் உரை
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-11
கர்மம் ,ஞானம், முரணியக்கம்
பீஷ்மரின் வழி, காந்தியின் வழி கர்ம யோகம். கர்ம யோகத்தில் அசையாமல் நிற்பது என்பது ஒரு பெரிய தவம். அதற்கு ஒவ்வொரு கட்டத்திலும் சோதனைகள் வரும், பல சோதனைகள் வரும். அம்பையை பீஷ்மர் தூக்கிக்கொண்டு வந்தது அத்தகைய ஒரு சோதனை. அது அறப்பிழை என அவருக்குத் தெரியும், ஆனால் குல அறம் அதைவிட பெரியது என எண்ணுகிறார். அதை நாட்டுக்காகச் செய்கிறார். அம்பையின் சாபம் அவர்மேல் விழுகிறது. அதற்கு அவர் உயிரையே கொடுக்க வேண்டியிருக்கிறது. அதுவும் அவருக்குத் தெரியும். அதைவிட முக்கியமான ஒரு இக்கட்டு அவருக்கு வருகிறது. தர்மனுக்கா, துரியோதனனுக்கா மணிமுடி என்று தீர்மானிக்க வேண்டிய ஒரு கேள்வி அவர்முன் எழுகிறது. நாம் கேட்ட மகாபாரதத்தின்படி மிக எளிமையாக, தர்மன் தான் முடிசூட்ட உரிமைப்பட்டவன் என்று நாம் சொல்வோம். ஆனால் மூலமகாபாரதத்தில் அப்படி இல்லை. அது அவ்வளவு எளிதாக முடிவெடுக்கத்தக்க ஒன்று அல்ல. திருதராஷ்டிரனுடைய மணிமுடி அவருக்கு பார்வையில்லை என்ற காரணத்தினால், அவர் மகனுக்கு பதினெட்டு வயது ஆகும்வரை பாண்டுவுக்கு அளிக்கப்பட்டது. பாண்டுவின் மகன் தர்மன். எப்போது துரியோதனனுக்கு பதினெட்டு வயது ஆகிறதோ அப்போதே தன்னிச்சையாக அஸ்தினபுரியுடைய மணிமுடிக்கு உரிமையாளனாக துரியோதனன் ஆகிவிட்டான். ஆனால் இளவரசர்களின் பிறப்பில் ஒரு சிறிய சிக்கல் நடக்கிறது. துரியோதனன் பதினெட்டு மாதம் கருவில் இருக்கிறான். மதங்க கர்ப்பம் என்று பெயர், யானைக் கர்ப்பம். ஆகவே முன்னரே கருவுற்றாலும் தர்மன் பிறந்த பின் ஆறுமாதங்கள் இளையவனாக துரியோதனன் பிறக்கிறான். கருவுற்ற நாள்படி அவன்தான் மூத்தவன். ஆனால் தர்மன் மூத்தவனாக பிறந்து விட்டான். அக்கால நிமித்தநூல்களில் சில கருவுற்ற நாளை ஆயுளின் தொடக்கமாகக் கருதுபவை. சில நூல்கள் பிறந்த நாளை தொடக்கமாக கருதுபவை. இப்போது மூத்தவனுக்கு மணிமுடியா இல்லை வாரிசுரிமையாக மணிமுடியா என்ற கேள்வி எழுகிறது. அத்துடன் அகவை என்பது கருவுற்ற நாளா பிறந்தநாளா எதைக்கொண்டு கணிக்கப்படவேண்டும் என்ற கேள்வியும் எழுகிறது. வெவ்வேறு சோதிடநூல்கள் வெவ்வேறாக அதற்கு பதில் சொல்கின்றன. பீஷ்மர் வாரிசுரிமையாகத்தான் மணிமுடி இருக்க வேண்டும் என்கிற முடிவுக்கு போகிறார். பிறப்பே கணக்கிடப்படவேண்டும் என்கிறார். அவர் வகையில் அது சரியானதுதான். தன்னை ஒரு குல பிதாமகராகத்தான் அவர் பார்க்கிறாரே ஒழிய அதற்கப்பால் பார்க்கவில்லை. குலத்தில் ஆட்சிக்கான பூசல் எதிர்காலத்திலும் வரலாகாது, நெறிகள் புறவயமானவையாக, தெளிவானவையாக, ஐயமற்றவையாக இருக்கவேண்டும் என நினைக்கிறார். போர் எழும்போது பீஷ்மருக்குத் தெரியும், எந்தப்பக்கம் வெற்றி போகுமென்று. கிருஷ்ணன் ஒரு பெரிய நீதிமான் என்றும் தெரியும். கிருஷ்ணனைப் பற்றி, அவன் தெய்வச்சாயல் கொண்டவன் என்று அவர் மகாபாரதத்தில் பல இடங்களில் சொல்கிறார். ஆனால் அவர் தெளிவாக இருக்கிறார், தன் கர்மம் என்பது குலதர்மமே என.ஒரு குலப்பிதாமகனாக தனக்கு என்ன வழங்கப்பட்டிருக்கிறதோ, தன் சுதர்மம் எதுவோ அதைச் செய்வதுதான் வாழ்கையின் நோக்கம் என்று. கடைசியில் முள்படுக்கையில் படுத்து பீஷ்மர் அதைச் சொல்கிறார். கர்ம யோகி என்றென்றைக்கும் அந்த முள்படுக்கையில் படுக்கத்தான் வேண்டும் என்று மகாபாரதம் சொல்கிறது. நமக்குத் தெரியும், 1947 -க்கு பிறகு காந்தி அந்த முள்படுக்கையில் படுத்துத்தான் நம்மிடம் பேசிக் கொண்டிருந்தார்.
அதிலிருந்து அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது கீதை. மறுபடியும் ஒரு மறுப்பும் நீட்சியும். அடுத்த படி, ஆனால் மறுப்பாக, தாண்டிச்செல்வதாக, முரணியக்கமாக அடுத்ததற்கு போகிறது. அதுதான் கர்மஞான யோகம். அதிலும் கர்மத்தின் விளக்கம் மாறிவருவதை நீங்கள் பார்க்கலாம். கீதை முந்தையதில் இருந்து அறுத்துக்கொண்டு அடுத்ததற்குப் போவதில்லை. முந்தையதை நிராகரிப்பதில்லை. அப்படியே நீட்டுவதுமில்லை. ஏற்கெனவே சொன்னதை இன்னொரு வெளிச்சத்தில் மறுவிளக்கம் செய்கிறது. கிளை என்பது அடிமரத்தின் நீட்சியும் விலக்கமும் தானே? வளர்ச்சியின் வழியே அதுதானே?அப்பகுதிகளை படிக்கும்போது, அதில் நிறைய கேள்விகள் தொடர்வதை பார்க்கலாம். ஞானகர்மயோகம். அதன் உதாரண ஆளுமை யார்? மறுபடியும் மகாபாரதத்திற்கு போனால் யாரைச் சொல்ல முடியும்? விதுரரை சொல்ல முடியும். ஓர் அறிஞனின் பாதை அவருடையது. அறிதலின் பாதை அது. ஒவ்வொன்றாக ஈவிரக்கமில்லாமல் தொட்டு தொட்டு அறிந்து செல்லும் பாதை. நாராயணகுருவின் வரி ஒன்று உண்டு. ‘ஒன்றொன்றாய் தொட்டு எண்ணி, எண்ணும் பொருள் ஒடுங்குகையில் நின்றிடும் பரம்’ .அது அறிதலின் பாதை. இதம், இதம், இதம்… இது, இது, இது… என்று தொட்டுத் தொட்டுத் தொட்டு அனைத்தையும் தொட்டு அறிந்தபிறகு எஞ்சும் தொடமுடியாத ஒன்றை பிரம்மம் என்று அறியும் பாதை அது. எண்ணி எண்ணி எண்ணம் ஒடுங்கும் இடம். அதுவே அவருடைய பாதையாக இருக்கிறது. விதுரர் திருதராஷ்டிரரின் கூடவே இருக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அவர் அறிந்துகொண்டே செல்கிறார். அறிதலினூடாக விடுதலை நாடுகிறார். அறிவின் எல்லையையும் அறிந்திருக்கிறார்.
இன்றைக்கு என் மகனிடம் இந்த உரையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவன் கேட்டான், ‘ஒரு கர்ம யோகி எந்த இடத்தில் ஞான யோகியாக மாறுகிறான்? எந்த இடத்தில் கர்ம யோகம் அவனுக்குப் போதாமல் ஆகிறது? அல்லது அவனால் இயலாமல் ஆகிறது?’ சுவாரஸ்யமான கேள்வி இது. கர்மயோகம் எங்கே முடிகிறது என்றால், கர்மயோகி எவ்வளவு தூரம் பார்க்க வேண்டுமோ அதைவிட அதிகமாக பார்த்துவிடும்போது. அவன் தன் செயற்களத்தைக் கடந்து பார்க்க ஆரம்பித்துவிட்டான் என்றால் அவனுக்கு கர்ம யோகம் கிடையாது. குதிரை எவ்வளவு தூரம் பார்க்க வேண்டுமோ அவ்வளவு தூரம் பார்த்தால்தான் அது ஓடும். கர்ம யோகிகள் ரொம்ப தூரத்திற்கு வரலாற்றையோ, ஒட்டுமொத்த சமுதாயத்தையோ, தன்னுடைய ஊழையோ பார்க்கக்கூடியவர்கள் அல்ல, பார்க்கவும் கூடாது. தன்னியல்பிலேயே அவர்கள் பார்க்காதவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்கள்தான் கர்மத்தை ஒரு யோகமாகச் செய்ய முடியும். அதற்கு மேல் பார்த்துவிட்டால், ‘இது என்ன? இது ஏன்? இது எப்படி?’ என்ற முடிவில்லாத, பதிலே இல்லாத கேள்விகளுக்குள் செல்வார்கள். விளைவாக கர்மத்தை கடந்து ஞான யோகத்திற்குள் சென்று விடுகிறார்கள்.
மகாபாரதம் முடியும்போது, குந்தி விதுரன் வீட்டில் வந்து தங்குகிறாள். அப்போது, ‘இதெல்லாம் இப்படியாகும் என்று உங்களுக்கு முன்னரே தெரியுமா?’ என்று குந்தி கேட்கிறாள். ‘ஆம், எனக்கு ஆரம்பத்திலேயே தெரியும்’ என்கிறார். ‘எப்போது ?’ என்று அவள் கேட்கிறாள். ’இளமைப்பருவத்திலேயே தெரியும்’ என்கிறார். ‘அப்படியென்றால், சரி இது நடக்கட்டும், இது இப்படித்தான் நடக்கும் என இருந்தேன். மயிற்பீலியும், குழலும், புன்னகையுமாக அவன் வந்தபோதே, என்ன நடக்கப் போகிறது என்று தெரியும். அது அவ்வாறே ஆகுக. இங்கிருந்து அதை அறியக்கூடிய இடத்தில் தான் இருக்கிறேனே ஒழிய, அதை ஆற்றுபவன் அல்ல, மாற்றுபவன் அல்ல’ என்கிறார். இது ஞானத்தின் பாதை. மகாஞானிகளுடைய வழிமுறை இது. அறிந்து அமைதல். விலக்கமே அறிதலின் இயல்பு. விலக்கமே அறிவின் விளைவும்கூட. அறிஞன் சாட்சியாக மட்டுமே எஞ்சுகிறான். அறிவு அளிக்கும் விடுதலை அது.
சமகாலத்தில் அதற்கு யாரை உதாரணமாகச் சொல்வேன் என்றால், அரவிந்தரை சொல்வேன். வங்காளத்தில் ஒரு மாபெரும் தீவிரவாதியாக அறியப்பட்டவர் அவர்.கர்ம யோகியாக இருந்தவர். தன் இளம் மனைவியை துறந்து, இந்த தேச விடுதலைக்காக ஆயுதம் ஏந்தியவர். ஆனால் அவர் கர்ம யோகியாக நிற்கவில்லை. எங்கோ ஒரு புள்ளியில் காலத்தைக் கடந்து மிக அதிகமான தொலைவை அந்த கர்மயோகி பார்த்தார். பாண்டிச்சேரியில் வந்து உட்கார்ந்து ஞானயோகத்தை ஆற்றினார். அவருடைய நூல்கள் அனைத்திலும் இருப்பது கர்மயோகத்தின் குரல் அல்ல, ஞான யோகத்தின் குரல். ஒவ்வொரு காலகட்டத்திலும், வெவ்வேறு மனிதர்கள், வெவ்வேறு தரப்புகள் இந்த மாதிரி வந்துகொண்டே இருக்கின்றன. நான் ஒரு மனிதரை இப்போது சொல்கிறேன். இப்படி பல்லாயிரம்பேர். என்னால் உலகம் முழுக்க இருந்து யாரை வேண்டுமென்றாலும் சொல்ல முடியும். கர்ம யோகத்தில் இருந்து ஞான யோகத்திற்கான வழி என்பது, முரண்பாடுகளின் வழியாக அடுத்த கட்டத்திற்கு நகர்வது.
இப்படி பதினெட்டு அத்தியாயங்கள். இந்த அத்தியாயங்கள் ஒவ்வொன்றையும் நாம் பார்க்கும்போது, இதனுடைய முரண்பாடுகளை இவ்வாறு முரணியக்கமாகப் புரிந்துகொள்ள வேண்டும். இவை வெவ்வேறு மனிதர்களுக்காக சொல்லப்பட்டவை என்று கொள்க. வெவ்வேறு உளநிலைகளுக்காக, வெவ்வேறு தரிசனநிலைகளுக்காக, வெவ்வேறு தத்துவக்கேள்விகளுக்கான பதில்களாக நிலைகொள்பவை. பதினெட்டாவது அத்தியாயம் மோட்ச ஸந்நியாச யோகம். அது யாருக்காக சொல்லப்பட்டிருக்க வேண்டும்? இளவயது ரமணருக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். மகாபாரதத்தில் சுகப் பிரம்ம ரிஷிக்கு சொல்லப்பட்டிருக்க வேண்டும். இல்லையா? பாருங்கள், வேதாந்த ஞானம் எப்படி சொல்லப்படுகிறது! ‘இதைச் செய் உனக்கு நன்றாக சோறும் சொர்க்கமும் கிடைக்கும்’ என்ற இடத்தில் தொடங்கி, செயலின்மையின் உச்சத்தில் இருக்கும் யோகி வரைக்கும் அது விரிந்து போகக்கூடியதாக உள்ளது. அத்தகைய ஒரு பயணத்தை நாம் கீதையில் பார்க்கிறோம். இந்தப்பயணம் தான் கீதையை நம்முடைய மரபு நூல்களில் மிக முக்கியமானதாக ஆக்குகிறது.
விவேகானந்தர் பகவத்கீதையை ’விறுவிறுப்பான வேதாந்தம்’ என்று சொல்கிறார். மற்ற வேதாந்த நூல்கள், இது இப்படி என்று மட்டுமே சொல்கின்றன. ஆனால் இதை எல்லா தருணங்களிலும் எப்படிப் பயன்படுத்துவது என்று சொல்லும் செயல்முறை வேதாந்தம். உயிர்த்துடிப்பு கொண்ட வேதாந்தம். உலகியல் முதல் முழுத்துறவு வரை எல்லா களங்களிலும் தன் பணியை ஆற்றும் பொருட்டு பதினெட்டு பெருங்கரங்களுடன் எழுந்த வேதாந்தம். இந்த வேதாந்தத்திற்கும் இதற்கு முந்தைய வேதாந்தத்திற்கும் இவ்வளவு வித்தியாசம் இருக்கிறது என்பதால்தான், பிரம்ம சூத்திரம் எவ்வளவு பேருக்கு தெரியுமோ அதைவிட நூறு மடங்கு பேருக்கு கீதையை தெரிகிறது. இது இங்கு இப்படிக் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. இப்படி பார்க்கும்போதுதான் கீதை என்னும் ஒட்டுமொத்த விரிவை நம்மால் பார்க்க முடியும். கீதையை அணுகுவதற்கான ஒரு சரியான வழியை சொல்வதற்காகத்தான் இந்த பெரிய வரைபடத்தை நாம் உருவாக்கினோம்.
அடுத்த வினா ஒன்று எழுகிறது. இதில் யார் நீங்கள்? நீங்கள் யார் ஆக வேண்டும்? இப்போது நான் யார்? இதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேடல்கள். நண்பர்களே, வினா நீங்கள் யார் ஆக வேண்டும் என்பதல்ல, நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதுதான். உங்கள் இயல்புப்படி நீங்கள் யார் என்பதுதான் கீதையை அணுகுவதற்கான முதல்படி. மீன் தண்ணீரில் இருக்கிறது. தவளை தண்ணீரிலும் தரையிலும் இருக்கிறது. பாம்பு தரையில் இருக்கிறது. மான் காற்றில் எம்பித் தாவுகிறது. பறவை வானில் பறக்கிறது. அதனதன் இயல்புகள், அதனதன் இடங்கள், அதனுடைய பிறப்பியல்பினால் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அதன் இயல்புக்கேற்ற ஒரு வடிவத்தை தேர்ந்தெடுக்கிறது. பரிணாமத்தில் நீரிலிருந்து தவளை உருவாகியிருக்கலாம். தவளையில் இருந்து அடுத்த உயிர்கள் உருவாகியிருக்கலாம். அதுவும் சாத்தியம் தான். கர்ம யோகியாக மாறவேண்டியிருந்த அரவிந்தர் ஞான யோகியாக மாறிய மாற்றம் போல. நாமறிந்த எத்தனையோ உலகியலாளர்கள் செயல்கூர்மை அடைந்து கர்ம யோகியாக மாறியிருக்கிறார்கள். சாங்கிய யோகத்தில், உலகியளாராகத் திகழ்ந்த ஒருவர் மோட்ச சன்யாசத்தில் முழுதமைவதும் சாத்தியமே. நமக்குத் தெரியும், இங்கு பேசும்போது மகரிஷி வேதாத்திரி அவர்களைச் சொல்வார்கள். ஒரு தொழிலதிபராக இருந்தார். சாங்கிய தரிசனத்தில் இருந்து எழுந்து கர்ம யோகத்திற்கும் ஞான யோகத்திற்குமாக அவர் பரிணாமம் கொண்டார் என்று அவருடைய வாழ்க்கையை வைத்துச் சொல்வார்கள். அப்படி ஒவ்வொரு ஊரிலும் ஒரு யோகியை சொல்ல முடியும் என்பார்கள் இந்தியாவைப் பற்றி அறிந்தவர்கள்.
இதுதான் கீதையின் பாடத்திட்டம். கீதையின் Curriculum. இந்த யோகாத்ம அணுகுமுறையை, யோக மீமாம்சையை புரிந்துகொள்ளும் போது கீதையின் கட்டமைப்பு நமக்குத் தெளிவாகும். கீதை சொல்லும் வெவ்வேறு தர்க்கமுறைகளையும் தரிசனங்களையும் எளிதாக வகுத்து எடுத்துக்கொள்ள முடியும். இவை அனைத்தும் ஒருங்கு சேர்ந்து இருக்கக்கூடிய ஒன்றாக, இவற்றின் நடுவில் அந்த விஸ்வரூப தரிசனம் வருகிறது. விஸ்வரூப தரிசனத்தைத்தான் பெரும்பாலும் கீதையை உபதேசிப்பவர்கள் கடைசியில் சொல்வார்கள். யோசித்துப்பாருங்கள், விஸ்வரூப தரிசனம் வருவது பதினொன்றாவது அத்தியாயத்தில். அது முடிந்து, மறுபடியும் ஏழு அத்தியாயங்கள் வருகின்றன. ஏனென்றால் விஸ்வரூபம் என்பது முடிவல்ல. விஸ்வரூபத்தையும் பார்த்த பிறகு இருக்கும் நிலைகள்தான் அதற்குப் பிறகு வருபவை. ரமணரோ அல்லது அவர் போன்ற யோகிகளோ, விஸ்வரூபத்தை பார்த்த பிறகுதான் மேலும் முன்செல்ல ஆரம்பிக்கிறார்கள்.ஆம், அது முடிவல்ல.
ஆக்கல், அழித்தல், புரத்தல் அனைத்தையும் செய்யும் முடிவற்ற கரங்களும், முகங்களும், கண்களும் கொண்ட விராடரூபமாக தன்னை கிருஷ்ணன் காட்டியபிறகுதான் அர்ஜுனனுக்கு அடுத்த கேள்விகள் வருகின்றன. இந்த அமைப்பை கீதை மிக கவித்துவமாகவும், மிக நுட்பமான உள்குறிப்புகள் வழியாகவும் சொல்லிச் செல்கிறது. இந்த நுட்பமான கவித்துவங்கள், உள்குறிப்புகள் எப்படி இந்தப் படைப்புக்குள் செயல்படுகின்றன என்பதை விரிவாக நாளைக்குப் பார்க்கலாம். நன்றி !
(மேலும்)