அன்புள்ள ஜெ
உங்கள் மீது எனக்கு ஆழமான ஈடுபாடுண்டு. உங்கள் படைப்புகளை விரும்பிப் படிப்பவன் நான். உங்கள் தனிப்பட்ட ஆளுமை மீதும் பெரும் மதிப்புண்டு. ஒரே ஒரு உறுத்தல் உங்கள் மேல். அதைக் கேட்காமல் இருக்கமுடியாது.
ஓர் எழுத்தாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தபோது நீங்கள் அவருக்கு ஆதரவாக இருந்தீர்கள். எழுத்தாளர்களுக்கு ஆதரவாக எவருமில்லை என்பதனால் எப்போதுமே அவர்களுக்கே ஆதரவு என எழுதியிருந்தீர்கள்.எழுத்தாளர்கள் தப்பு பண்ணினால் அதை பெரிதுபடுத்தக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். அது எனக்கு ஒவ்வாமையை உருவாக்குகிறது. அதைச் சொல்லவே இதை எழுதுகிறேன்
கே
அன்புள்ள கே,
நீங்கள் சொல்லியிருக்கும் எதுவும் என் கருத்து அல்ல, நான் சொன்னதுமல்ல. எதையும் கவனிக்காத, எதையும் புரிந்துகொள்ளாத, எல்லாவற்றையும் சொந்த விருப்பப்படி திரிக்கிற, சமூகவலைத்தளக் குப்பைகளால் உருவாக்கப்பட்டவை அக்கருத்துக்கள், அவற்றுக்கு நான் பொறுப்பல்ல.
நான் ஒழுக்கத்தை ஒரு இரும்புச்சங்கிலியாக மானுட உள்ளத்தின்மேல் போடுவதை ஏற்காதவன். ஒருவரின் ஒழுக்கம் என்பது ஒரு தன்னேற்பு. நான் மது அருந்துவதில்லை, சிகரெட் பிடிப்பதில்லை – அதைப்போல. அவ்வளவேதான். ஒழுக்கத்தை சமூகம் ஒருவன் மேல் திணிக்கலாகாது. ஒழுக்கத்தை நிபந்தனையாக்குவதும், ஒழுக்கம் சார்ந்து கண்காணிப்பதும், ஒழுக்கம் சார்ந்து தண்டிப்பதும் எல்லாம் ஆன்மிகமான வன்முறை என்றே எண்ணுகிறேன்.
ஒழுக்கம் சார்ந்த அகஎல்லைகளை எவராயினும் கடந்தே ஆகவேண்டும். ஒழுக்கம் ஒருவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அவர் ஆன்மிகமாக எதையுமே அறியவில்லை, எங்குமே செல்லவில்லை என்றே பொருள். தன் ஒழுக்கமோ பிறர் ஒழுக்கமோ ஒரு பிரச்சினையாக ஆவதென்பது ஆன்மிகநிலையின், அறிவுநிலையின் மிகமிகக்கீழ்த்தளம்.
நாமனைவருக்குமே தெரிந்ததுதான். தியானம் செய்யும் எவருக்குமே தெரிந்ததுதான். மானுட உள்ளத்துக்கு எந்த ஒழுக்கமும் இல்லை. அதன் ஆழம் ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்டது. அதை இருட்டு என்று புரிந்துகொள்பவன் ஆன்மிகமாக எதையும் அடைய முடியாது. ஒழுக்கம் உலகியல் சார்ந்தது மட்டுமே. ஆன்மிகமான விடுதலை என்பது அதைக் கடந்துசெல்வதிலேயே உள்ளது.
கடந்துசெல்வதென்றால் அதை இயல்பானதாக, சிறியதாக, பொருட்படுத்தத் தேவையற்றதாக அகத்தே ஆக்கிக்கொள்ளுவதுதான். எந்த மெய்யான ஆன்மிககுருவும் அதையே சொல்வார். ஆன்மிகம் என நான் சொல்வது பிரபஞ்சத்துடன் இணைந்த நிலை. அகவிடுதலை நிலை. அது அக்கடந்துசெல்லல் வழியாகவே சாத்தியம்.
ஆகவே நான் ஒழுக்கப்பிரச்சினை பற்றி ஒரு கதைகூட எழுதியதில்லை. ஒழுக்கநெறி அல்லது ஒழுக்கமீறல் பற்றி எழுதுபவர்கள் என் நோக்கில் எளிய படைப்பாளிகள். இதை 30 ஆண்டுகளாக பலவாறாக எழுதியுள்ளேன். இலக்கியம் அதன் உச்சநிலையில் தொட்டு அறிந்து உணர்த்தவேண்டிய விஷயங்கள் உலகியலில் தொடங்கி, உலகியலைக் கடந்து, முழுமைநோக்கை அடைந்தவை மட்டுமே.
ஆகவே இன்னொருவர் மீது ஒழுக்கக் குற்றச்சாட்டை சுமத்தி வசைபாடுபவர்கள், தண்டிக்கத் துடிப்பவர்களை ஒருவகை ஆன்மிகவறுமை கொண்ட எளிய மக்கள் என்றே நான் மதிப்பிடுகிறேன். எழுத்தாளர் மட்டுமல்ல எவர் பற்றியும் அதையே சொல்வேன்.
எழுத்தாளனின் உள்ளம் உணர்ச்சிகரமானது. படைப்பூக்கம் என்பது எல்லைகளுக்குள் நின்று அடையப்படுவதல்ல. எல்லைகளை மீறி அடையப்படுவது. ஆகவேதான் உலகம் முழுக்க எழுத்தாளர்களின் மீறல்கள் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன. வீழ்ச்சிகளும்கூட பொறுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.
ஒரு சிறு குற்றச்சாட்டு வந்ததுமே எழுத்தாளன் மேல் பாய்ந்து குதறும் மனநிலை தமிழ்ச்சூழலில் உள்ள அறிவெதிர்ப்புத்தன்மைக்கான சான்று மட்டுமே. பழங்குடித்தன்மை ஓங்கிய நம் சமூகத்தின் கூட்டுமனம் அப்படித்தான் செயல்படும். இங்கே நாம் பாவனை செய்யும் நவீனக்கல்வி மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடியில் இருப்பது அந்த தேங்கிய அகம்தான். அன்றைய அந்த கூட்டுவசைகளில் அகப்பட்ட ஒருவரை அவமதித்து, வதைத்து மகிழும் கீழ்மை மட்டுமே வெளிப்பட்டது. அத்துடன் இவ்வகையான ஒன்றை ஓர் அருவருப்பாக எண்ணி இளிக்கும் கீழ்மையும்.
சரி, அப்படியென்றால் நான் பிறர் மேல் செலுத்தப்படும் வன்முறைகளை ஏற்கிறேனா? பாலியல் வன்முறைகள், பொருளியல் ஏமாற்றுதல்கள் இரண்டுமே இரண்டுவகை ஒழுக்கம் சார்ந்த வன்முறைகள். அவற்றில் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நிற்பதல்லவா நியாயம்?
ஆம், நான் எப்போதுமே அப்படித்தான்.எல்லா மீ-டூ வழக்குகளிலும் நான் பாதிக்கப்பட்ட பெண்களின் பக்கம்தான் நின்றேன். வெளிப்படையாக, தேவையானபோது அவர்களுக்குரிய உதவிகள் செய்யவும் முன்வந்தேன். அண்மையில் ஹேமா கமிட்டி அறிக்கையை ஒட்டி கேரளத்தில் திரையுலகின் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும் பெண்களின் கூட்டமைப்பையே ஆதரித்தேன். (கேரளச் சூழலின் மாஃபியா பற்றி முதலில் சொன்னவன் என்றவகையில் என்னிடம் தான் கேட்டுக்கொண்டிருந்தனர்)
ஆனால் இதில் சில நடைமுறைத் தெளிவுகள் என்னிடம் உள்ளன. பெண்களுக்கு எதிரான பாலியல்மீறல் எல்லா நிலைகளிலும் குற்றமே. ஏனென்றால் எல்லா வயதிலும், எல்லா சூழலிலும் இங்கே பெண்கள் பலவீனமான நிலையில் உள்ளனர். அவர்கள் பொதுவெளிக்கு வரத்தொடங்கி இரண்டு தலைமுறைகளே ஆகின்றன. பாலியல் தொல்லைகள் அந்த வெளியை அழிப்பவை. ஆகவே நேரடியான சமூகக்குற்றங்கள்.
ஆனால் பாலியல் குற்றச்சாட்டை ஓர் ஆண் சொல்லும்போது அதன் அளவுகோல் வேறு. சொல்பவர் 18 வயதுக்குக் குறைவானவர் என்றால் மட்டுமே அது குற்றம். ஏனென்றால் அந்த பருவத்தில் அவர் பலவீனமான நிலையில் இருக்கிறார். உலகமறியாதவராக, உடல்வலிமை அற்றவராக இருக்கிறார். 18 வயது கடந்தவர் என்றால் அது ஒரு பரஸ்பர உறவுதான். இதில் என்னிடம் எவரும் விவாதிக்கவேண்டியதில்லை. நான் எதை நன்றாகவே அறிவேனோ அதையே பேசுகிறேன். அரட்டையடிக்கவில்லை.
நம் சூழலில் எப்போதுமே ஓரினச்சேர்க்கையாளர்கள் உள்ளனர். ஏனென்றால் அது ஒரு ஹார்மோனின் விளைவு. அவர்கள் இயற்கையாகவே அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்களின் பாலியல்பு அவ்வாறு உள்ளது. நமக்கு எதிர்பால் சார்ந்த ஈர்ப்பு எப்படியோ அப்படி. நம்மைச்சுற்றி அவர்கள் எப்படியும் இரண்டு சதவீதம்பேராவது இருப்பார்கள். நம் சமூகம் கொண்டுள்ள ஒவ்வாமையால் தங்களை நம் சூழலுக்குள் மறைந்த்துக் கொண்டிருக்கிறார்கள். (ஒப்புநோக்க வடகேரளத்தில் மிக அதிகம். காரணம் கடல்சார்ந்த மாலுமிவாழ்க்கையின் நீட்சி. ஆகவே அங்கே சமூக ஏற்பும் அதிகம்)
இங்கே ஓர் ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்திடம் இருந்து மறைந்து தன் இணையைக் கண்டடைந்தால்தான் அவருக்கு பாலியல் இன்பமே அமையும். ஆகவே ஓரினச்சேர்க்கையாளர் தன் இணையைக் கவர எல்லா முயற்சியையும் எடுப்பார். இனியவராகப் பேசுவார். பரிசுகள் அளிப்பார். வாக்குறுதிகள் கொடுப்பார். அதைத்தான் எல்லா ஆண்களும் பெண்களிடம் செய்கிறார்கள். அதுதான் மானுட இயல்பு, உயிர்களின் இயல்பு. அது இன்னொரு வயதுவந்த ஆணிடமென்றால் பாலியல்சீண்டல் அல்ல. பாலியல் வேண்டல். அவர்கள் அப்படித்தான் இணை தேட முடியும். வேறெப்படி முடியும்? வேறு என்ன செய்யவேண்டும் அவர்கள்?
என் 12 வயதில் என்னிடம் மூத்தவர்கள் இதைப் பற்றிச் சொன்னார்கள். எப்படி மறுக்கவேண்டும், எந்த தொடுகையை விலக்கவேண்டும் என்று கற்பித்தனர். இத்தனை ஆண்டுகளில் என்னிடம் எப்படியும் இருநூறு பேராவது ஓரினச்சேர்க்கைக்காகக் கோரியிருக்கின்றனர் – என் ஊரிலும் , அதிகமாக வடகேரளத்திலும். நான் அதைப்பற்றிய அறிதல் கொண்டவனாதலால் சீண்டப்பட்டதில்லை. ஒவ்வாமை அடைந்ததும் இல்லை. அதில் சீற்றம்கொள்ள ஏதுமில்லை என்பதனால் உறுதியாக, அன்பாக, நாகரீகமாக மறுத்திருக்கிறேன். அதன்பின் அவர்கள் தொடர்ந்ததில்லை. உடனடியாக “சரி இதை மனதில் வைத்துக்கொள்ளாதே’ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இதில் கேரளத்தின் சில அறிவியக்கவாதிகளும் உண்டு.
பொதுவாக ஓரினச்சேர்க்கையாளர்கள் வன்முறை அற்றவர்கள். அவர்கள் மேற்கொண்டு வற்புறுத்த மாட்டார்கள். ஏனென்றால் இன்றைய சூழலில் அவர்கள் தங்கள் பாலியல்பை வெளிப்படுத்திக்கொள்ள முடியாது. மறைந்தே வாழ்வார்கள். ஆகவே வெளியே தெரிந்துவிடும் என்னும் நிரந்தரமான அச்சம் அவருக்கிருக்கும். நாம் வெளியே சொல்லிவிடக்கூடாதென்பதே அவர்களின் உடனடிக் கோரிக்கையாக இருக்கும். அவர்கள் நம்மை மிரட்டினால்கூட வெளியே சொல்லிவிடுவேன் என்பதே அவர்களை நாம் மிரட்ட போதுமானதாக இருக்கும். அவர்கள் மிகப்பலவீனமான இடத்தில் இருக்கிறார்கள்.
ஒருபாலுறவுக் கோரிக்கையை மறுக்க எந்த வயதுவந்த ஆணுக்கும் இயலும். மிக எளிய, மிக இயல்பான ஒரு மறுப்பாகவே அது அமையும். எந்த ஆணையும் கட்டாயப்படுத்தி அதில் ஈடுபடச்செய்ய முடியாது. அப்படி கட்டாயப்படுத்திச் செய்யப்பட்டது என்று சொல்வதுபோல சுய ஏமாற்று, மோசடிக்கூற்று வேறில்லை. இதை பலநூறு முறை கண்டவன் என்ற முறையில் உறுதியாகவே சொல்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் அந்நிகழ்வில் என்ன நிகழ்ந்தது என்பது மிக வெளிப்படையானது. எவரும் அதை ஊகிக்கலாம். ஓரினப்பாலுறவுக்கு ஒருவர் அழைக்கும்போது அழைக்கப்படுபவர் அதைப்பற்றி அறிந்தவர் என்றால், அதில் முதிர்ச்சியான அணுகுமுறை கொண்டவர் என்றால், உறுதியாக மறுப்பார். அங்கே அது முடிந்துவிடும்.அப்படி முடியவில்லை என்றால் அது மறுக்காததனால்தான். ஒன்றை மறுக்காதவர் அதை ஏற்றுக்கொள்கிறார் என்றே அர்த்தம்.
அப்படி மறுக்கத் தெரியாத ஓர் ஆண் உண்டு என நான் நினைக்கவில்லை. ஓர் ஆண் 15 வயதுக்குள் அப்படி பல விஷயங்களை மறுக்க கற்றுக்கொண்டே ஆகவேண்டும். மது, சிகரெட், கஞ்சா என எவ்வளவோ விஷயங்களை மறுத்துத்தான் வாழமுடியும். மறுத்த அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் ஏராளமாக இருக்கும்.
ஆனால் இளம் ஆண்களில் சிலர் ஒருவர் ஓரினச்சேர்க்கைக்கு தன்னை அழைத்தால் அதற்கு முழுமறுப்பைச் சொல்ல மாட்டார்கள். ஓரினச்சேர்க்கைக் கோரிக்கை விடுப்பவரின் சொற்களுக்கு மயங்குபவர்கள் உண்டு. பரிசுகளுக்கும் வாக்குறுதிகளுக்கும் மயங்குபவர்கள் உண்டு. ஆனால் அதைவிட ஆற்றல்கொண்டது பாலியல் ஈர்ப்பு. இங்கே பாலுறவு வறுமை மிக அதிகம். அதிலும் இளமைக்காலத்தில் மிகமிக அதிகம். பாலுறவென்பதே வெறும் பேச்சாகவும் கற்பனையாகவுமே இருக்கும் காலகட்டம் அது. அப்போது அத்தகைய ஓர் அழைப்பு ஒரு குறுகுறுப்பை அளிக்கும். உள்ளம் தயங்கினாலும் உடல் அங்கே சென்றுவிடும். குறிப்பாக தொடுவதற்கோ, சீண்டுவதற்கோ அனுமதித்துவிட்டால் அவ்வுறவைத் தடுத்துவிட முடியாது. அது நிகழ்ந்ததை என்னிடம் வேடிக்கையாக என் நண்பர்கள் பலர் சொல்லியிருக்கிறார்கள்.
உறவு நிகழ்ந்தபின் அதை எளிதாக எடுத்துக்கொள்ள தமிழ்ச்சூழலின் பழங்குடி மனநிலை உருவாக்கியிருக்கும் ஒழுக்கம் சார்ந்த முன்முடிவுகள் தடையாக உள்ளன. குற்றவுணர்ச்சி உருவாகிறது. தாழ்வுணர்ச்சி உருவாகிறது. அவ்வுணர்ச்சிகளை வெல்லும் பொருட்டு மெல்ல மெல்ல தன்னை ‘பாதிக்கப்பட்டவர்’ என உருவகித்துக் கொள்கிறார்கள். ‘வன்முறையால் ஆதிக்கம் செய்யப்பட்டேன்’ என நம்ப ஆரம்பிக்கிறார்கள்.
இது ஒருவகை பாவனை என தெரிந்தாலும், அதைத் சொல்லிச் சொல்லி அவர்களே அதை நம்ப ஆரம்பிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சீற்றமும் கொந்தளிப்பும் உருவாகிறது. அதை வெளிப்படுத்தி நியாயம் கேட்கிறார்கள். அவர்களின் பாதிக்கப்பட்டவர் என்னும் பிம்பத்தை அதிகமானவர்கள் நம்புந்தோறும் அவர்களின் தன்னிரக்கநிலை மறைகிறது. மெல்ல மெல்ல ஒரு வன்முறை மனநிலை ஓங்குகிறது. வதைக்கும் இன்பம் கைகூடுகிறது.
நீங்கள் சொன்ன பிரச்சினையில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட நீண்டகால மன உளைச்சலை, உளவியல் சிக்கல்களை குறிப்பிட்டிருக்கின்றனர். அச்சிக்கல் எங்கிருந்து வருகிறது? அவர்கள் இந்தவகை பாலுறவு பற்றி கொண்டிருக்கும் மரபான ஒவ்வாமையில் இருந்துதானே? அதை ஒரு கீழ்மையாகவும், ஒரு பாவமாகவும் பார்க்கும் மனநிலையில் இருந்துதானே? அதை எளிதாக எடுத்துக்கொண்டு மேலே செல்ல ஏன் முடியவில்லை? அதுதானே இயல்பான முதிர்ச்சியான மனநிலை?
தங்களிடமிருந்து வெளிப்பட்ட ஒரு பாலியல் நாட்டத்தை அவர்கள் ஒரு சாதாரண விஷயமாக கருதலாம். எந்த மனிதரானாலும் தன் சொந்தப் பாலியல் நாட்டத்தை அறிந்திருக்கவேண்டும். தன் அகமீறல்களை தானே மன்னித்துக்கொண்டே ஆகவேண்டும். அதைத்தான் நாம் அவ்விளைஞர்களிடம் சொல்லவேண்டும். அது ஒரு விஷயமே அல்ல. அப்படி அவர்கள் எத்தனை எத்தனை உள்ளமீறல்கள் வழியாகக் கடந்து வந்திருப்பார்கள்? ஒருவருக்கு தன் அகம் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும். அதை நேருக்குநேர் எதிர்கொள்வதே முதிர்ச்சி என்பது.
மனிதர்கள் எல்லாருமே இப்படி பலவகையான பாலியல்நடத்தைகள் கொண்டவர்கள்தான். மானுட அகம் என்பதே பாலியல், வன்முறை, அகங்காரம் ஆகிய மூன்றாலும் ஆனதுதான். அதை புரிந்துகொண்டால் அக்கொந்தளிப்பு அகலும். அதுதான் வாழ்க்கையில் ஒருவன் அடையவேண்டிய தெளிவு. இவர்கள் கொண்ட அந்த குற்றவுணர்ச்சியும், கொந்தளிப்பும்தான் பிரச்சினை. அதன் பொறுப்பை தங்களிடமிருந்து இன்னொருவர் மேல் சுமத்தவே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.
அந்த அறிக்கைகளைப் பார்த்து நான் பரிதாப்பட்டேன். அந்நிகழ்வுக்குப்பின் எவர் தன் அருகே வந்தாலும் ஒருபாலுறவுக்காக வருகிறாரோ என நடுக்கமாக இருக்கிறது என்று ஓர் இளைஞர் சொன்னால் அவர் எத்தனை உளச்சிக்கல் கொண்டவர் என்றுதானே தெரிகிறது. ஓர் அற்பமான, இயல்பான விஷயத்தை ஒருவர் மனப்பீடிப்பாக ஆக்கிக்கொள்கிறார் என்றால் அவருக்குத்தானே உளநிபுணரின் உதவி தேவை.
அவர்களுக்கு நம் உளவியலாளர்கள் அடிப்படை முதிர்ச்சியை அறிவுறுத்தியிருக்கவேண்டும். மூத்தவர்கள் வாழ்க்கையுண்மையைச் சொல்லியிருக்கவேண்டும். அவர்கள் தங்களைப் பற்றி தாங்களே இழிவாக எண்ணுவதை, குற்றவுணர்ச்சி கொள்வதை அகற்றியிருக்கவேண்டும். மாறாக இங்கே சமூகவலைத்தள மனநோயாளிகள், (இவர்களில் பாதிப்பேர் சோட்டா எழுத்தாளர்களும்கூட) சேர்ந்து கும்மியடித்தனர். அறச்சீற்றமோ ஒழுக்கப்பற்றோ ஒன்றுமில்லை. கும்மியடித்த பல எழுத்தாளர்களைப் பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர்களுக்கு ஒழுக்கமெல்லாம் ஒன்றும் இல்லை என்றே தெரியும். அது அகப்பட்டவனை தாக்கும் கூட்டுவன்முறை, கூட்டுக்கேளிக்கை, அவ்வளவுதான்.
நான் என்னை ஓரினச்சேர்க்கைக்கான கோரிக்கையுடன் அணுகியவர்களை அவமதித்ததில்லை. ஏனென்றால் அதில் எனக்கு அச்சமோ அருவருப்போ கண்டனமோ விலக்கமோ எதுவுமில்லை. அது ஓர் இயல்பான பாலுறவுமுறை என்றே நினைக்கிறேன். அது அந்த வகை ஹார்மோன்களால் உருவாவது. என் ஹர்மோன் அமைப்பு அதை விலக்குகிறது அவ்வளவுதான். நான் அந்த ஹார்மோன் அற்றவன் என்பதனால் நான் யோக்கியன், சுத்தமானவன், அவர்கள் அயோக்கியர்கள், அசிங்கமானவர்கள் என்றில்லை.
நேர்மாறாக நான் இதுவரை சந்தித்த ஓரினச்சேர்க்கையாளர்கள் பெரும்பாலானவர்கள் மிகமிக மென்மையானவர்கள். மிகப் பண்பானவர்கள். பெருந்தன்மையும் கொடைத்திறனும் கொண்டவர்கள். பொதுவாக கலைகளில் ஈடுபாடு கொண்டவர்கள். உணர்ச்சிகரமானவர்கள். நானறிந்த கலைஞர்களில் சிலர் அவ்வியல்பு கொண்ட மேதைகள். அவ்வாறு அவர்களிடம் மறுத்த பின்னரும் அவர்களுடன் முப்பதாண்டுகளுக்கும் மேலாக அன்புடன் , பெருமதிப்புடன் இருந்திருக்கிறேன். அண்ணன் என்ற நிலையிலேயே வைத்திருந்தவர்கள்கூட உண்டு. என் வாழ்க்கையில் எனக்கு பேருதவி புரிந்த இருவர் அந்தப்பாலியல் நாட்டம் கொண்டவர்கள்.
நான் என்னிடம் ஓரினச்சேர்க்கைக்காக அணுகியவர்கள் பற்றி வெளியே சொன்னதில்லை. வெளியே சொல்ல மாட்டேன் என்று அவர்களிடமே சொல்லியிருக்கிறேன். எவரிடமும் எப்போதும் கேலி செய்ததில்லை. அவ்வாறு சொல்லி அவர்களை இச்சமூகத்தின் மூடத்தனத்தின் முன், மூர்க்கத்தின்முன் நிறுத்துவதுதான் உண்மையில் ஒரு பெரிய குற்றம். ஒருவரை தீராப்பெருந்துன்பத்தில் ஆழ்த்துவது. ஓர் ஆன்மப்படுகொலை அது.
இரண்டு புரிதல்களை அடிப்படை அறிவியல் தெரிந்த எவரும் புரிந்திருக்கவேண்டும்
அ. ஓரினச்சேர்க்கை என்பது ஓர் ஒழுக்கக்கேடு அல்ல. இயல்புக்குமாறான பிறழ்வு அல்ல. அது நம்மில் காமமாக வெளிப்படும் மானுட ஹார்மோனின் இன்னொரு வெளிப்பாடு. ஆகவே அது முற்றிலும் இயல்பான ஒன்று. உயிரியல்பு சார்ந்தது. அந்தப்புரிதல் ஒரு நவீன மனிதனுக்கு அவசியமானது.
ஆ. ஓரினச்சேர்க்கை நாட்டம் கொண்ட ஒருவர் தன் விழைவை தெரிவிப்பதும் சரி, அதன்பொருட்டு முயல்வதும் சரி மிகமிக இயல்பானவை. நாமும் நம் காமத்தில் அதையே செய்கிறோம். எந்த உயிரும் அதையே செய்கிறது.
ஆகவே இரண்டு நெறிகள நவீனச் சமூகத்தில் வாழும் எந்த ஒரு பண்பட்ட மனிதரும் கருத்தில்கொள்ளவேண்டும்.
அ. ஓரினச்சேர்க்கைக்காக ஒருவர் நம்மிடம் விடுக்கும் அழைப்பு, முயற்சி ஆகியவை பிழையானவை அல்ல. அத்துமீறல்கள் அல்ல. ஒழுக்கக்கேடுகள் அல்ல. அதில் அதிர்ச்சி, அருவருப்பு, ஒவ்வாமை கொண்டோம் என்றால் அது நம்முடைய பின்தங்கிய, முதிர்ச்சியற்ற நிலையையே காட்டுகிறது. அதில் மனஉளைச்சல் கொண்டோம் என்றால் நாம் மனச்சிக்கல்கொண்டிருக்கிறோம், நமக்கு மருத்துவ உதவி தேவை என்றே பொருள். ஏனென்றால் ஒருவர் தன் பாலியலுக்காக முயல்வது இயல்பானது. சாமானியமான ஒரு பாலியல் முயற்சியை எப்படி ஏற்போம் அல்லது மறுப்போமோ அதைப்போலவே எதிர்கொள்ளப்படவேண்டியது.
ஆ. இன்னொருவர் ஓரினச்சேர்க்கை பழக்கம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துவது அவருக்கு எதிரான பெரும் வன்முறை. ஏனென்றால் இந்தியச் சூழலில் அப்பழக்கம் பொதுப்புத்தியால் ஒவ்வாமையுடன் பார்க்கப்படுகிறது. அத்தகையோர் புறக்கணிக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். ஒருவரின் ஓரினச்சேர்க்கைப் பழக்கம் பற்றி பொதுவெளியில் கெக்கலிப்பது, தீர்ப்பளிப்பது எல்லாம் இழிவான சமூகவன்முறைச் செயல்கள்.
*
நீங்கள் சொன்ன பிரச்சினையில் உண்மையில் பாதிக்கப்பட்டவர் அந்த எழுத்தாளர்தான். நுண்மையானவர், கற்பனை நிறைந்தவர், என்றும் எவருக்கும் இனியவர், எத்தனையோ பேருக்கு துன்பங்களில் உடன்நின்றவர், அனைத்துக்கும் மேலாக சமரசமே அற்ற சமூகப்பொறுப்பு கொண்டவர். அடித்தள மக்கள்மேல் அவருக்கிருக்கும் பற்றும் அறச்சார்பும் நம் சமூகத்திலேயே மிக அரியவை. தான் நம்பிய கலைக்காக தன் வாழ்க்கையையே அளித்தவர். ஐயத்திற்கிடமே இல்லாமல் சொல்வேன், அவர் ஒரு மேதை.
அவர் ஒருபாலுறவு இயல்பு கொண்டவரா இல்லையா என்று தெரியவில்லை. நான் நீண்டகாலம் பழகியவரை அவ்வண்ணம் எதையும் அறிந்ததில்லை. ஆகவே இக்குற்றச்சாட்டு அவதூறாகக்கூட இருக்கலாம். உண்மையாக இருந்தால்கூட அது அநீதியான குற்றச்சாட்டுதான். அதன் வழியாக ஆனால் அவருக்கு மிகப்பெரிய அவமதிப்பு உருவாக்கி அளிக்கப்பட்டது- அது உண்மை என்றால்கூட அவருடைய ஹார்மோன் ஒன்றே அவர் செய்த குற்றம்.
உண்மையான பெருங்குற்றவாளிகள் அந்த குற்றம்சாட்டிய இளைஞர்கள்தான். அன்று கேலியும் கிண்டலும் செய்த, போலி அறச்சீற்றம் காட்டிய அத்தனைபேரும் கூட்டுக்குற்றவாளிகள். அவர்கள் செய்தது ஒரு பேரழிவு. ஒரு பெரும் வன்முறை. ஓர் ஆளுமையை அழிப்பதென்பது, கீழ்மக்களின் கேலிக்கு முன் நிறுத்துவதென்பது மிகப்பெரிய வன்கொடுமை.
அந்த இளைஞர்கள் அந்த வன்முறையை அந்த மூத்த மனிதர் மேல் செலுத்தி,அவரை அழித்து, அந்த வன்முறையில் திளைத்து க் கொண்டாடி மகிழ்ந்ததைக் கண்டு மிக வருந்தினேன். அந்த வன்முறைக் களியாட்டத்தை தாங்கள் நிகழ்த்துவதை தங்களிடமிருந்தே மறைப்பதற்கே தன்னிரக்க நடிப்பு, அறச்சீற்ற நடிப்பை பாவனை செய்கிறார்கள். இன்றல்ல, என்றோ அவர்கள் அதை தங்கள் அகத்தே உணர்வார்கள் என நினைக்கிறேன். மானுடத்தின் எவ்வியல்பும் தன்னளவில் இழிவல்ல, மானுடத்தின் அகவண்ணங்களும் புறவண்ணங்களும் அளவிறந்தவை என்னும் புரிதல் அவர்களுக்கு வரும். நம்முடைய காமம், குரோதம், மோகம் மூன்றுக்கும் நாமே பொறுப்பு என்னும் தெளிவு அமையும். அன்று அவர்கள் அவரிடம் மானசீகமாக ஒரு மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்.
ஜெ