தமிழ் இந்துவில் வந்துள்ள செய்தி இது. பணிச்சுமையால் பெண் ஊழியர் உயிரிழப்பு: மத்திய அரசு விசாரணை
இது மிகைப்படுத்தப்பட்ட செய்தி அல்ல. கார்ப்பரேட் துறைகளில் வேலைபார்ப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்த செய்திதான் இது. ஆனால் நம் அரசாங்கம் கண்ணைமூடிக்கொண்டிருக்கிறது. இப்போது இது செய்தியாகிவிட்டிருப்பதனால் ஒரு அறிக்கை வந்திருக்கிறது. ஆனால் ஒன்றும் செய்யாது, செய்யவும் முடியாது.
இன்று கார்ப்பரேட் துறையில் இரண்டு வகைகளில் அடிமைமுறை உள்ளது . அடித்தளத்தில் உள்ள ஊழியர்கள். பெரும்பாலும் காண்டிராக்ட் ஊழியர்கள். மிகக்குறைவான சம்பளத்தில் பகலும் இரவும் வேலைபார்க்கிறார்கள். உயர் சம்பளம் வாங்கும் நிர்வாகிகள் அதைவிட அதிகமாக வேலைவாங்கப்படுகிறார்கள்.
கீழிருப்பவர்களை அதிகமாக வேலைவாங்குவதே நிர்வாகத்திறன் என அதிகாரிகள் நம்புகிறார்கள். சவுக்காலடித்து வேலைவாங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. task, Incentive Target, Apprisal என்ற நான்கு வார்த்தைகள்தான் அந்தச் சவுக்கு. TITA டீட்டா என்று எங்கள் அலுவலகத்தில் சொல்வார்கள். இடைவிடாத சவுக்கடி. ஒருநாள் கூட நிம்மதி இல்லை. வேலை,வேலை, வேலை இல்லாத நிமிடமே இல்லை. வேலைதவிர நினைப்பே இல்லை.
யோசித்துப்பாருங்கள் இதைத்தான் இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தி சொல்கிறார். அது அவருடைய சி.இ.ஓக்களுக்கான ஆணை. இன்னும் சாட்டையாலடியுங்கள். இன்னும் கசக்கிப்பிழியுங்கள் என்று சொல்கிறார். அடிமைகளை வேலைவாங்கும்படி கங்காணியிடம் எஜமான் சொல்வதுதானே இது? அவரைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஊழியர்களை கொடுமைப்படுத்துவதில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் அது. அதில் பல சைக்கோ கொலைக்காரர்கள் உண்டு. எல்லாருமே இந்தியாவில் உயர்குடியில் உயர்சாதியில் பிறந்தவர்கள். அவரே ஒரு தலைமை சைக்கோ என்பார்கள். லாபவெறி கொண்டவர், மனிதாபிமானம் என்பதையே அறியாதவர்.
(ஹிந்துஜா குடும்பம் வீட்டு வேலைக்காரர்களுக்கு முறையாகச் சம்பளம் போடாமல் கொத்தடிமைகளாக வைத்திருந்ததையும் சுவிஸ் நீதிமன்றம் அவர்களை தண்டித்ததையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்கள் ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர்கள். செய்திகளில் அதற்காக அடிபட்டவர்கள். ஆனால் மீண்டும் அதையே செய்தார்கள். இன்னமும் செய்வார்கள். அதுதான் சரி என்பதுதான் அவர்களின் மனநிலை. வழக்குக்காக கோடிகளை அளிப்பார்கள். ஊழியர்களை அடிமைகளாகவே நினைப்பார்கள்)
என் வயது 37. நான் இந்தியாவின் முதன்மையான கல்வி நிறுவனத்தில் நிர்வாகவியல் படித்தவள். எடுத்த எடுப்பிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் உயர்ந்த வேலை. ஆனால் ஒருநாளுக்கு 18 மணிநேரம் வரை வேலை. வேலை சொல்லிக்கொண்டே இருப்பார்க்ள். மேலே சொன்ன பிரச்சினையில் செத்துப்போன பெண்ணின் அம்மா சொல்கிறார்கள். ஒரு வழியாக வேலையை முடித்து கிளம்பும்போது அடுத்த வேலையை சொல்லி முடித்துவிட்டுப் போகும்படிச் சொல்வார்கள். அதில் ஒரு கிராதகத்தனமான மகிழ்ச்சி. பல சி.இ.ஓக்கள் கடுமையான பெர்வெட்டுகள், சாடிஸ்டுகள்.
வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்று ஆறுஆண்டுகள் அதை தாங்கிக்கொண்டேன். ஒரு கட்டத்தில் முடியாமல் இன்னொரு சின்ன கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். மொத்தம் 3 இடங்களில் வேலைபார்த்தேன். எல்லா இடங்களிலும் இதேதான். கடுமையான உழைப்பு. ஆண்களை விட பெண்களுக்கு இது இரட்டை உழைப்பு. நான் வீட்டையும் பார்த்துக்கொள்ள வேண்டும். சமைக்கமாட்டேன். ஆனால் வீட்டை கொஞ்சமாவது பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. ஓய்வுநேரம் என்பதே இல்லை.
என் உடல்நிலை சீரழிந்தது. தைராய்டு பிரச்சினை வந்து 90 கிலோ எடை ஆகியது. அதற்கு டாக்டரிடம்போகக்கூட நேரமில்லை. டாக்டர் சொன்னார் என் வேலைதான் காரணமாம். ஹைப்பர் டென்ஷன், தூக்கம் இல்லாத நிலை. அதோடு ஜங்க் ஃபுட். கண்டநேரத்தில் கிடைப்பதைச் சாப்பிட்டாகவேண்டும். விமானநிலையங்களில் சாப்பிட்டு விமானங்களில் தூங்குவேன். எல்லாமே தாறுமாறு.
கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வேலையை விட்டுவிட்டேன். ஆனால் இப்போதும் உடல்நிலை சரியாகவில்லை. ஹைப்பர் டென்ஷன் இல்லை. ஆனால் உடல்எடை குறையவில்லை. ஏராளமான மாத்திரைகள் சாப்பிடுகிறேன். குழந்தை பிறக்குமா என்று தெரியவில்லை. என் இளமையை தொலைத்துவிட்டேன். என் வாழ்க்கையும் முடிவுக்கு வந்துவிட்டது.
இன்று நாம் பேசியே ஆகவேண்டிய விஷயம் இது. இந்தியாவில் கார்ப்பரேட் துறைக்கு இன்று கடிவாளமே இல்லை. எந்த அநீதியையும் எங்கேயும் புகார் செய்ய முடியாது. அதற்கு அமைப்பே இல்லை. சாமானிய உழைப்பாளர்களுக்குக் கூட தொழிற்சங்கம் உள்ளது. லேபர் கோர்ட் உள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு எந்த நெறியும் இல்லை. கார்ப்பரேட் ஊழியர்களுக்காக ஒரு நீதியமைப்பாவது உருவாகவேண்டும். அதிகமாக வேலைபார்க்கச் செய்து சித்திரவதை செய்வது ஒரு குற்றம். குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும். அதற்கு சட்டங்கள் வேண்டும். இதில் அதிகமாகப் பாதிக்கப்படுவது பெண்கள்தான். பல சிஇஓக்கள் தங்கள் சைக்கோ தாக்குதல்களை பெண்கள் மீதுதான் வேலை என்ற வடிவத்தில் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு க்டைவாளம் இல்லாவிட்டால் இன்னும் எவ்வளவூ வாழ்க்கைகள் அழியும்.
கே
அன்புள்ள கே,
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இந்த உலகமே எனக்குப் புதியது. பெண்கள் உயர்பதவிகளில் அதிகாரத்துடன் இருப்பது சிறப்பு என்று நம்பும் பழைய ஆள் நான். இப்படி ஒரு சூழல் எனக்கு திகைப்பைத்தான் அளிக்கிறது. சட்டப்படி கார்ப்பரேட்டுகளின் இந்த கொடுமைகளை எந்த அரசும் கட்டுப்படுத்த முடியாது என்பதே எனக்கு தெரியாது.
ஜெ