இந்திவாலாக்கள் வாழ்க!

அன்புள்ள ஜெ

இந்த டிவீட் உங்கள் கவனத்துக்காக.

கே.ஆர்

Hindi speakers do not want to learn English or get international jobs. They want to study in Hindi. Give exams in Hindi. Govern in Hindi. And impose Hindi on others. And give businesses to Gujarat. How is this patriotism?

Devdutt Pattanaik

அன்புள்ள கே.ஆர்.

1991 ல் கேந்திர சாகித்ய அக்காதமி ஒரு கருத்தரங்குக்காக என்னை அழைத்திருந்தது. நான் கலந்துகொண்ட முதல் சாகித்ய அக்காதமி விழா. (கே.சச்சிதானந்தன் என்னை அழைத்திருந்தார்) தலைப்பு ‘எழுத்து ஒரு வாழ்க்கைத்தொழிலாக’. நான் கருத்துரைப்போரில் ஒருவன். மையக்கட்டுரை இந்தியில். இரண்டு தொடர் கருத்துரைகளும் இந்தியில். கடைசிக் கருத்துரை நான் ஆற்றவேண்டும்.

நான் கொதித்தேன். மேடையிலேயே மிகக்கடுமையாக என் எதிர்ப்பைச் சொன்னேன். ஒருவர் எழுந்து ‘இந்தி நம் ராஷ்ட்ரபாஷா. நீ இந்தி தெரியாமல் ஏன் டெல்லிக்கு வந்தாய்?” என்றார். ‘இந்திய தேசியமொழி அல்ல, இந்தி தேசியமொழிகளில் ஒன்று. இந்தியை பிறர்மேல் திணிக்கும் மனநிலையை இந்தி பேசுவோர் மாற்றிக்கொள்ளாவிட்டால் இழப்பு அவர்களுக்கே. இந்தி கற்றால்தான் நான் இந்தியன் என்று நீங்கள் சொன்னால் நான் இந்தியன் அல்ல என்றே சொல்வேன்’ என்று நான் சொன்னேன்

எனக்கு அப்போது 29 வயது. சிறுவன் போன்ற தோற்றம். அன்று இன்றைவிட நன்றாக ஆங்கிலம் பேசுவேன். என் பேச்சு ஓர் அலையை கிளப்பியது. நாளிதழ்களில் செய்தி வந்தது.அன்று வெங்கட் சாமிநாதன், ஞாநி, பாலசந்திரன் சுள்ளிக்காடு போன்றவர்கள் என்னை ஆதரித்தனர். . நீ மேடையில் உன் எதிர்ப்பைச் சொல் என்றார். நானும் பாலசந்திரன் சுள்ளிக்காடும் இணைந்து ஒரு கண்டனக்கடிதத்தை சாகித்ய அக்காதமிக்கு அனுப்பினோம். (அதன்பின் 30 ஆண்டுகள் கழித்தே நான் சாகித்ய அக்காதமி கூட்டத்துக்காக அழைக்கப்பட்டேன்)

அன்று பயனீர் இதழ் என்னை ஒரு சிறு பேட்டி எடுத்தது. நான் அதில் சொன்னது மேலே தேவதூத் பட்நாயக் சொன்னதையேதான். ’இந்திவாலாக்கள் இந்தியை திணித்தால் ஏற்கமுடியாது. ஆனால் அவர்கள் இந்தி அன்றி ஏதும் தெரியாமல் வாழ்வதை நான் மனமார வரவேற்கிறேன். அது தென்னிந்தியர்களுக்கு வாய்ப்பை வழங்குகிறது. இன்றைக்கு இந்தியை திணிப்பவர்கள் இவர்களிடமிருக்கும் இந்த நசுங்கிய கல்விமுறையால் வேலைதேடி எங்களிடம் வருவார்கள். எங்கள் மொழியை கற்றுக்கொள்வார்கள்’ என்றேன்.

அது வங்காளப் பத்திரிகை. பேட்டி எடுத்தவர் வங்காளி. என் கருத்து பிரசுரமானது. பொதுவாக வங்காளத்தில் எனக்கொரு ஏற்பு உருவானது. மாடன்மோட்சம் உட்பட பலகதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டன.

அன்று சொன்னபோது ஓர் அதிரடியாகவே சொன்னேன். உண்மையில் 1960கள் முதல் 1990 கள் வரை தமிழகம் பொருளியல் நெருக்கடியில் இருந்தது. தமிழர்கள் பிழைப்புதேடி வட இந்திய நகரங்களுக்குச் செல்வதே அதிகமாக இருந்தது. 1980களுக்குப் பின்னர்தான் மலையாளிகள் வளைகுடா செல்ல ஆரம்பித்தனர். அதுவரை மும்பைதான் அவர்களின் தொழிற்களம். பல கதைகளில், சினிமாக்களில் அது பதிவாகியுள்ளது. வளைகுடா பணத்தில் கேரளம் வளர்ந்தபோது 1980கள் முதல் தமிழர்கள் கேரளம் செல்ல ஆரம்பித்தனர். கிட்டத்தட்ட இருபதுலட்சம் தமிழர்கள் கேரளத்தில் இன்று உள்ளனர்.

ஏனென்றால் அன்று தனியார்த்துறை மிகப்பலவீனமானது. அதுவும் பெரும்பாலான தொழில்கள் வட இந்தியாவில் இருந்தன. பெரிய நகர்களும் வட இந்தியாவிலேயே. அங்கே பலவகை வேலைகளுக்கு நம்மவர் சென்றனர். அரசுவேலைகளிலும் நம்மவர் முட்டிமோதி எழுதி வட இந்தியா சென்றனர். அங்கே இந்தி கற்றனர். தொழில்களைக் கற்றார்கள். மெல்ல மெல்ல வேரூன்றினர். (இன்றும் சிறு உணவகத் தொழிலில் மலையாளிகளும் தமிழர்களும் கணிசமாக உள்ளனர்) அரைக்கோடி தமிழர்கள் அப்படி இன்று இந்திய நகரங்களில் இருப்பார்கள்.

1992 முதல், புதியபொருளாதாரக் கொள்கை உருவானது. நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம் பாய்ச்சல் கொண்டது. புதிய பொருளியல் கொள்கை தனியார்த் தொழிலின் வளர்ச்சியை உருவாக்கியது. கேரளத்தில் சுற்றுலா, தமிழகத்தில் பொறியியல் மற்றும் கோழிப்பண்ணை போன்ற தொழில்கள் பெருவளர்ச்சி கண்டன.அவ்வாய்ப்பைப் பயன்படுத்த நம் ஆங்கிலக்கல்வி உதவியது. அந்த இடத்தில் இந்திக்காரர்கள் தேக்கம் கொண்டார்கள். 2000 த்துக்குப்பின் நாம் பொருளாதார வளர்ச்சி அடைந்து நடுத்தரவர்க்க வாழ்க்கை இங்கே உருவானபோது நான் சொன்னதுபோலவே இந்திக்காரர்கள் இங்கே வரலானார்கள்.

இன்று கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் இந்தி உச்சரிப்புத் தமிழில்தான் உணவக ஊழியர்கள் பேசுகிறார்கள். விவசாய வேலைகளுக்கே வந்துவிட்டார்கள். குமரிமாவட்டத்தில் மீன்பிடிக்கிறார்கள், ரப்பர் பால்வெட்டுகிறார்கள். கேரளத்தில் ஓட்டலில் பானி என்றால்தான் உடனே தண்ணீர் கிடைக்கும்.

சாகித்ய அக்காதமியில் என்னிடம் இந்தி படிக்கச் சொன்ன கும்பலின் வாரிசுகள் என எண்ணிக்கொள்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகடலூர் சீனு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைSuchitra Ramachandran – “Nobility and evil don’t come in segregated packs”