காலன் அகாலன்
Mandala of 21st Century Perspectives
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
7 வருடங்களுக்கு முன்பு நான் பூடான் சென்ற பொழுது, தங்கி இருந்த ஹோட்டல் வரவேற்பறையில் ஒரு புத்தகத்தை கண்டேன். “
Vajrayana Buddhism: A Mandala of 21st Century Perspectives. பூட்டான் அரசு நடத்திய கருத்தரங்கின் முக்கியமான பேப்பர்களை தொகுத்து புத்தமாக வைத்திருந்தார்கள். பூட்டானின் பிரதம மந்திரியான Tshering Tobgay பெயர் கண்ணில் பட்டதால், காருக்காக காத்திருக்கையில் அந்த புத்தகத்தை எடுத்து திருப்பி பார்த்தேன். ஒன்றுமே புரியவில்லை. கார் வந்து விட்டதால் புத்தகத்தை வைத்து விட்டு கிளம்பி விட்டேன்.
விடுதி ஓனரின் நாய் என்னுடன் இரண்டு நாட்களாக விளையாடிக் கொண்டிருந்தது. மறுநாள் விடுதி அறையை காலி செய்யும் பொழுது , வாடகை பணம் டிப்ஸ் எல்லாம் கொடுத்த பிறகு வரவேற்பறையில் இருந்த பிஸ்கட் பாக்கெட் ஒன்றை விலைக்கு வாங்கி அந்த நாய்க்கு கொடுத்தேன். அவர்களிடம் கொடுக்க மீதி சில்லறை பணம் இல்லை. பரவாயில்லை வேண்டாம் என்ற பொழுதும், பூட்டான் மக்களுக்கு உரிய வெட்கம் கலந்து சிரிப்புடன் இல்லை இல்லை நீங்கள் எதையாவது எடுத்துக் கொள்ள வேண்டும் நீங்கள் இரண்டு நாட்களாக அந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தீர்களே அதை வேண்டுமானால் எடுத்துச் செல்லுங்கள் என்றார். அவரின் கைக்குழந்தையுடன் எங்கேயும் வெளியில் சில்லரை வாங்க சென்று விடுவாரோ என்ற பயத்தில் நானும் புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். மறுபடியும் எடுத்து புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கார் வந்ததும் கைப்பையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு கிளம்பினேன். அருகில் நின்றிருந்த அந்த நாய், என் எஜமானர் வீட்டிலிருந்து சோப்பு ஷாம்பு எடுத்துக்கிட்டு போனத பத்தி நான் கவலைப்படல, ஆனா வரவேற்பரையில் இருக்கிற புத்தகத்தை எடுத்துட்டு போறியே, இது நியாயமா என்று புலம்பிய படியே நிதானமாக வந்து கைப்பையில் இருந்து புத்தகத்தை எடுத்து கவ்வி அலமாரியில் கொண்டு வைத்தது. ஓனரின் முகம் சிவந்து விட்டது அந்த நாயிடம் ஏதோ சொல்லியபடியே புத்தகத்தை மறுபடியும் என்னிடம் கொடுத்து என் நாயின் தவறுக்கு வருந்துகிறேன் என்று மன்னிப்பு கேட்டார். நாயும் வாலாட்டிக் கொண்டே கார் வரை வந்து வழி அனுப்பி வைத்தது.
ஆனால் நாய் உலகின் Interpol wanted பகுதியில் இந்த புத்தகம் திருடு போய்விட்டதாக அறிவித்து விட்டிருந்தது என்று எனக்கு பின்னாளில் தான் தெரிய வந்தது.
எனது கணவரின் பெற்றோர்கள் வீட்டில் ஒரு லேபரடார் நாய் உள்ளது ( Snoopy) அவன் ஒரு பாமரன், எழுத்தறிவு கிடையாது. எந்த ஒரு நியூஸ் பேப்பரையும் இதுவரை கிழித்ததில்லை. ரூபாய் தாள்கள் கீழே விழுந்தாலும் கூட ஒன்றும் செய்யாது. ரப்பர் செருப்புகளை சுவை காண்பதே பிறவிப் பயன் என்று இருப்பான். அப்படிப்பட்ட அந்த Snoopy ஒரு நாள் மதியம் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அந்த வஜ்ராயன புத்தகத்தை எடுத்து தரதரவென்று கிழித்து தின்று கொண்டிருந்தது. வாயிலிருந்து பிடுங்குவதற்குள் பெரும்பாடு ஆகிவிட்டது மூன்று நான்கு பக்கங்கள் காணாமல் போய்விட்டன. ஒரு பாமர நாய் எப்படி வஜ்ராயான புத்த மதத்தை கரைத்துக் குடித்தது என்று ஆச்சரியமாக இருந்தது
எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு யோகா ஆசிரியர் இருக்கிறார். அவரிடம் இந்தக் கதையை எல்லாம் விவரித்தேன். அந்த யோகா டீச்சரும் இல்லை இல்லை இதெல்லாம் ஒரு தற்செயல் சம்பவம் தான் எங்கள் வீட்டிலும் ஒரு நாய் இருக்குது , நீ கொண்டு வா பார்க்கலாம் அது என்ன பண்ணுகிறது என்றார். அவர்கள் வீட்டிலும் லேபராடார் இனம்தான். மிகவும் சமத்து. பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் விட்டு வரும். யோகா டீச்சர் இல்லாத நேரங்களில் யாரேனும் வந்தால் பிராணாயம், மற்றும் பல ஆசனங்களை கற்றுக் கொடுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதனால் தைரியமாக அவர்களின் வீட்டிற்கு அந்த புத்தகத்துடன் சென்றேன். குறி பார்த்து பாய்ந்து இரண்டு பக்கங்களை குதறிக்கொண்டு பாத்ரூமில் சென்று கதவை அடைத்துக் கொண்டது.
மாண்டூக்ய உபநிடதம் மாதிரி இதுவும் ஏதோ காலபைரவனின் உபநிடதமோ என்று யோசிக்கும்படி செய்து விட்டது .
காலன அகாலன் பற்றி உங்களுக்கு எழுதிக் கொண்டிருந்த பொழுது இதுவும் நினைவில் வந்தது. வர இருக்கும் சத்திய யுகத்திற்கான கரு/ விதை சேகரிப்பில் இந்த நாய்களும் தங்கள் பங்குகளை ஆற்றுகின்றன
அடுத்த முறை உங்களைப் பார்க்கும் பொழுது இந்த புத்தகத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
அன்புடன்,
மீனாட்சி