குன்றக்குடி யானை, கடிதம்

அன்புள்ள ஜெ,

யானை டாக்டர் கதையில் உடைந்த குப்பி ஏறிய யானையின் மரண நொடிகளின் குரூரத்தை படித்த பின் காடுகளுக்குள் குப்பிகளை காணும் பொழுதெல்லாம் ஒரு பதற்றம் தொற்றிக் கொள்ளும். யானை என்னும் காட்டின் பேரரசன் மீது மனிதர்களின் இரக்கமற்ற தாக்குதலை ஏதாவது ஒரு வகையில் நடத்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இதோ சமீபத்தில் குன்றக்குடி கோயில் யானை சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கொட்டகை தீப்பிடித்து எரிந்து யானை அதில் சிக்கி உயிருக்கு போராடி சரிந்து விழுந்து துதிக்கையை தூக்கிக்கொண்டே ஏதோ சொல்ல வருவது போல உயிர்விட்ட அந்தக் காட்சி கண்டு நெஞ்சமெல்லாம் பதறுகிறது.

அந்த யானைக்கு தெரியுமா அது நெருப்பில் வெந்து செத்ததற்கு இந்த மனிதர்கள் தான் காரணம் என்று

கோயில்களில் யானைகள் முறையாக பராமரிக்கவோ பாதுகாக்கவோ படவில்லை. எதற்காக கோயில்களுக்கு யானைகள். யானைகள் கோயில்களுக்கு இந்தக் காலத்தில் தேவை தானா

இப்படிக்கு

மு கோட்டைராஜ் .

அன்புள்ள கோட்டைராஜ்,

காட்டிலும் யானை தீயில் மாட்டிக்கொள்வதுண்டு. விபத்துக்களில் சிக்குவதுமுண்டு.

பிரச்சினை அது அல்ல. 

யானை என்பது உடலாலும் உள்ளத்தாலும் மிகமிக செயலூக்கம் கொண்ட உயிர். அதன் உடல் ஒருநாளைக்கு 40 கிமீ நடக்கவேண்டிய தேவை உள்ளது. அதன் உள்ளம் ஒருநாளில் பலநூறு வாசனைகளை, புதிய செய்திகளை பதிவுசெய்துகொள்ளக்கூடியதுயானைக்கு மறதியும் இல்லை.

அத்தகைய ஆளுமையை கைவிலங்கு கால்விலங்கு போட்டு வாழ்நாள் முழுக்க கல்மண்டபங்களில் கட்டிப்போடுவதைப் பற்றித்தான் நாம் யோசிக்கவேண்டும். உடற்பயிற்சி இல்லாமையால் யானை எடைகூடுகிறது. கட்டிப்போடப்பட்டிருக்கும் யானை தீராத உளச்சோர்வுநிலையில் உள்ளது. ஆகவே அது தின்றுகொண்டே இருக்கிறது. அதுவும் எடையை கூட்டுகிறது

எடைகூடி, கால்கள் வளைந்து, மூட்டுகள் வீங்கி கடும் வலியுடன் சாவைக் காத்து நின்றிருக்கும் யானைகளையே நான் தமிழக ஆலயங்களில் காண்கிறேன். (கேரளத்திலும் யானைகள் வதைக்கப்படுகின்றன. ஆனால் பெரிய கோயில்களில் உணவும் உடற்பயிற்சியும் ஓரளவு உண்டு)

அண்மைக்கால ஆய்வுகளின்படி ஆப்ரிக்க யானைகள் சிறைப்படுத்தப்பட்டால் சராசரியாக 30 ஆண்டுகள்கூட வாழ்வதில்லைஇயற்கையாக சராசரியாக ஆயுள் 70. இந்திய யானைகளும் அப்படித்தான்

ஒரு மகத்தான உயிரை நாம் இப்படி சிறையிட்டு கொல்லவேண்டுமா என யோசிக்கவேண்டிய நிலையில் உள்ளோம்.

ஜெ

முந்தைய கட்டுரைபிரிட்டனில் பவா
அடுத்த கட்டுரைவடமோடிக் கூத்து