தீ – கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

தங்கள் தளத்தில் காணப்படு இணைப்புகளின் வழியாக ஏதேனும் ஒரு வெண்முரசு அத்தியாயத்தை எடுத்து வாசிப்பது எனக்கு உவப்பான ஒன்று. சமீபத்தில் அவ்வாறு எடுத்த அத்தியாயம் தீயின் எடை நாவலில் ஆறாவது. முன்புமே வேறு பல அத்தியாயங்களை அவ்விதம் வாசிக்க ஆரம்பித்தபோது விட மனமில்லாமல் அடுத்தடுத்த அத்தியாயங்களை தொடர்ந்து வாசித்திருக்கிறேன் என்றாலும் இம்முறை தீயின் எடை நாவல் மொத்தத்தையுமே வாசித்து முடிக்க முடிந்தது

முகநூலில் சலிப்புற்று மீண்டும் அதிலிருந்து விலகியிருந்த நேரத்தில், எப்போதெல்லாம் முகநூலை பார்க்கவேண்டும் என்கிற நினைப்பெழுகிறதோ அப்போதெல்லாம் இந்த நாவலில் அடுத்தடுத்த அத்தியாயங்களை வாசித்துச் செல்லலாம் என முடிவெடுத்தேன். இரு மாங்காய்களை வீழ்த்திய ஒரே கல் என்றாகியது இந்தப் பழக்கம். நாவலின் இறுதிக்கட்டத்தை எட்டியபோது ஒரு தொய்வு விழுந்து சில நாட்கள் வாசிக்காமல் இருந்தேன். முகநூல் பக்கமும் செல்லவில்லை என்பதால் குற்றவுணர்ச்சியும் கொள்ளவில்லை

புக் பிரம்மா நிகழ்வை ஒட்டி கடலூர் சீனுவை கிண்டலடித்து மகிழ்ந்த முகநூலர்கள் வந்து புண்ணியத்தைக் கட்டிக்கொண்டார்கள். மீண்டும் முகநூலில் நேற்றும் இன்றுமாக உலாவத் தொடங்கியிருந்தேன். சட்டென இந்நாவல் வாசிப்பு மீண்டும் மனதில் எழுந்தது. வலிந்து வாசிப்பில் மனதைக் கொண்டு சென்று கட்டிவைத்தேன். உண்மையில் இரு அத்தியாயங்களே மீதியிருந்தது என்பதே இப்போதுதான் தெரிகிறது. சட்டென நாவல் முடிந்ததில் வழக்கமாக எழும் சோர்வோடு கூடுதல் சோர்வும் மனதில் சேர்ந்துவிட்டது

போரின் கடைசிப்பகுதியை சொல்லும் நாவல் என்றாலும் இதிலும் அறம் பற்றிய விசாரங்கள் அடிக்கடி எழுகின்றன. முதல்வாசிப்பில் தவறவிட்ட சில பாத்திரங்களை இவ்வாசிப்பில் அறிமுகம் செய்துகொண்டேன்

அறத்தின்பின் நிற்பதில் ஒரு தன்னகங்காரம் இருப்பதாக உணர்வேன். அதனாலேயே அதில் ஏதோ அதிகப்படியாக சென்று தவறிழைத்து விடுவோமோ என்ற தயக்கமும் எழும். ஆனால் இந்நாவலில் வரும் சாந்தர் என்னும் பாத்திரம் அந்த தயக்கத்தை தன் ஓங்கிய குரலால் அழித்துவிடுகிறது

திரௌபதி அவைச்சிறுமைப்படுத்தப்பட்டு பாண்டவர்களுடன் வனவாசம் செல்லும்போது அவர்களுடன் நகர மக்களில் பலரும் உடன்வருகின்றனர். அஸ்தினபுரியைத் துறந்து அதன் எல்லைக்காட்டில் தங்குகின்றனர். ஆனால் ஒரு மாதகாலத்துக்குள்ளேயே அவ்விசை அழிந்து அனைவரும் நகர் திரும்பிவிட சாந்தர் மட்டும் வனத்திலேயே தங்கிவிடுகிறார். அவருடன் மற்றவர்கள் உரையாடும்போதுநீங்கள் பிறரைவிட மேலானவர் என எண்ணுகிறீர்கள். உங்களை பிறர் புகழவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள். இது வெறும் ஆணவம் மட்டுமேஎன்கிறார் ஒருவர். அதற்குஆம், அறத்தில் நிற்றலுக்கும் ஓர் ஆணவம் தேவைதான்என்று சாந்தர் சொல்கிறார். “நீங்கள் தனிமைப்படுவீர்கள்என்று பிறிதொருவர் சொல்லஆம், தனிமைப்படாமல் எவரும் தன்னறத்தை நிகழ்த்த இயலாதுஎன்று சாந்தர் பதிலளிக்கும் இடம் மனதை விம்மச் செய்தது. டிராஃபிக் ராமசாமி முதலானோர் மனதில் வந்து சென்றனர்

அவருடன் அடுத்ததாக துரியோதனன் வந்து உரையாடும் தருணத்தின்போதும் சாந்தர் அறமூர்த்தியென நின்றிருப்பதைக் காணும் ஒரு இடம்

சகுனியின் காதல்/மண வாழ்க்கை, அவரது உள்ளத் தனிமை, உள்ளாழத்து அச்சத்தை பார்பாரிகனிடம் பகிரும் இடம், அதை தன் தமக்கையான வசுமதிக்கு தெரிவிக்கச் சொல்லும் இடம் ஆகியவையும் மனம் கனக்கச் செய்தது. தனக்கென நீர்க்கடன் செய்யச் சொல்லி மகன்களிடம் சகுனி வேண்டுவதும், அக்கடனை மறுத்து அதற்காகவேனும் அவருக்கு முன்னேயே தாங்கள் உயிர்மாய வேண்டும் என அவரது மகன் உலூகன் சொல்வதும், அரக்கக் குடி வழிவந்த இன்னொரு மகன் தன் தந்தையின் அத்தனை சிறுமைகளையும் தாண்டி அக்கடனை ஏற்றுக்கொள்ள முன்வருவதும், அத்தருணத்தில் சகுனி தன் வேண்டுகோளைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அக்கடனிலிருந்து மைந்தர்களை விடுவிப்பதும் ஒரே அத்தியாயத்தில் நிகழ அதை வாசித்து முடிக்கையில், ஒரு பெரும் பயணத்தை செய்த களைப்பை உணரச் செய்கிறது

இறுதியில்தாங்கள் ஒளித்துவைத்த கள்ளப்பகடை இதுஎன்ற இளைய யாதவரின் வார்த்தைகளைத் தாங்கி சகதேவனின் வேல் வந்து சகுனியின் உயிரை எடுக்கும் இடத்தில் அதுவரையிலான சகுனியின் ஆளுமையில் சட்டென நமக்கு ஒரு மாற்றம் வந்துவிடுகிறது

இன்னொருபுறம் சல்யனை அழிக்கும் வில்லான தயை ஒரு முழுமையான தனி கதாபாத்திரம் என்றே சொல்லவேண்டும். அதற்கான பின்புல சம்பவங்களை முதல்வாசிப்பில் ஆர்வமாக வாசித்தாலும், அப்போது மனம் போரில் ஈடுபட்டிருந்ததால் அப்பகுதியை பொறுமையாக வாசிக்கவிடவில்லை. அவ்வில்லை துரியோதனனும், அவனது மனதின் பிறிதொரு உருவே என திருதராஷ்டிரரும் எதிர்கொள்ளும் இடம் மனதில் பதிந்திருந்தாலும், அதன் பெருமையை பிறர் உணரவைக்க சல்யன் யுதிஷ்டிரனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பாடு செய்யும் போட்டி, அவ்வில்லை துரோணரும் கிருபரும் ஏளனத்துடன் எதிர்கொள்ள பீஷ்மர் மட்டும் முகத்தை சுளிக்கும் இடம் ஆகிய தருணங்களை முழுக்கவே புதிதாக இம்முறை வாசித்தேன். பீஷ்மர் என்ன நினைத்து முகத்தை சுளித்திருப்பார்? அம்பையை எதிர்கொண்டபோது தான் செய்த அதே தவறை இவர்கள் இப்போது செய்கிறார்களே என்றா

இறுதியில் அவ்வில் சிறுவேலென மாறி சல்யனின் மரணத்தை கொண்டுவருகையில் யுதிஷ்டிரனை தன் மூதாதையென சல்யன் உணரும் இடம் இன்னொரு உச்சத் தருணம். தயை என்னும் பெயர் கல்பொருசிறுநுரை நாவலில் இளைய யாதவருடன் விளையாடும் சிறுமியையும் மனதில் மீட்டி புன்னகைக்க வைத்தது

இருப்பதிலேயே ஆகக்கீழ்மையான செயலொன்றை நிகழ்த்தப் போகிறோம் என்ற தன்னுணர்வு ஒருபுறம், அதைத் தவிர்க்க தன் முழுஆற்றலாலும் முயன்று பின் அச்செயலிடம் பலிவிலங்கென சென்று சேரும் அஸ்வத்தாமனின் கதாபாத்திரம் நாவலுக்குள் இன்னொரு நாவல் என உருவெடுக்கிறது. அவனிடம் கிருபி போருக்குமுன் உரைக்கும் வார்த்தைகளானஎக்களத்திலும் எச்சூழலிலும் ஒன்றை இயற்றுவதற்கு முன் உன் அகம் என்ன கூறுகிறதென்று நோக்கு. அதுவே அறம். மானுடம் எங்கு செல்லினும் அது மாறப்போவதில்லை….

அந்த ஆழ்குரலே தெய்வம். சீற்றத்தால், வஞ்சத்தால், ஆணவத்தால், அச்சத்தால், பெருங்கனிவால் நீ அந்த உளஆழத்துக் குரலை கடந்து செல்வாயெனில் மட்டுமே அறப்பிழை இயற்றுகிறாய்என்பது காந்தியின் அந்தராத்மா குறித்த சொற்களாகவே ஒலிக்கிறது

வாட்ஸாப்பில் நிலைத்தகவலாக இதை பகிர்ந்தபோது அதில் உள்ள பெருங்கனிவால் கடந்து செல்வதை நம் கீதா செந்தில்குமார் சுட்டிக்காட்டியபோது மீண்டும் ஒரு திடுக்கிடலை உணர்ந்தேன். தான் விரும்புவதை நிறைவேற்றிக்கொள்ள நம் மனம் என்னென்னவெல்லாம் மாயவேடங்களை புனைகிறது என நினைக்கத் தோன்றியது

நிர்மித்திரன் சதானீகன் உள்ளிட்ட பிற பாண்டவ மைந்தர்களை திரும்பிக்கூட பார்க்காது வெட்டிக்கொன்று கடந்து செல்லும் அஸ்வத்தாமன் சுதசோமனையும் சர்வதனையும் கொல்கையில் கணநேரம் தயங்கும் இடம் நுட்பமான ஒன்று. அவர்களின் உருவில் துரியோதனனை மட்டுமின்றி கௌரவமைந்தர்களையுமே கண்டிருப்பானோ?

அஸ்வத்தாமன் இப்படி என்றால் மறுபுறம் அவன்வழியாக தமது இறுதி நிகழப்போவதை கனவுகளின்வழியாக அறிந்தவாறு அதற்காக காத்திருக்கும் பாண்டவ மைந்தர்களின் நிலை துயரளிப்பது. துரியோதனனை முறைமீறி பீமன் கொன்றதை அறியும்போது தருமனின் மைந்தர் தவிர பிறர் துரியோதனனுக்கென மனமுருகி கோபம்கொண்டாடுவதையும் பிரதிவிந்தியனும் யௌதேயனும் மட்டும் தருமனின் குரலென்றே அங்கு நின்று பாண்டவர் பக்க நியாயத்தை எடுத்துரைப்பதும் வாசிக்க சுவாரஸ்யமாக இருந்தது. நமது செயல்களை நம் மைந்தர்கள் எவ்விதமாகவெல்லாம்  நின்று  நோக்க வாய்ப்பிருக்கிறது என்று எண்ணிப்பார்க்கும் ஒரு உளப்பயிற்சி போலிருந்தது

வெண்முரசின் ஒருமை பற்றி நண்பர்கள் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர் என்றாலும் நானாக அவற்றை அடையாளம் கண்டுகொள்ளும்போது ஒவ்வொருமுறையும் புதிகாக ஒரு பரவசத்தை ஊட்டுகிறது. சகுனி வீழ்ந்ததும் போர்க்களத்திலிருந்து நீங்கும் துரியோதனன் காலகம் என்னும் காட்டில் உள்ள ஸ்தூனகர்ணனின் சிலை உள்ள சுனைக்கு செல்கிறான். அந்த அத்தியாயத்தை இம்முறை வாசித்தபோது அதற்கு சில நாட்கள் முன்புதான் வண்ணக்கடலில் துரியோதனன் முதல்முறை ஸ்தூனகர்ணனை சந்தித்து மீளும் அத்தியாயத்தை வெண்முரசு போஸ்டர்களுக்காக சுருக்கி எழுதியிருந்தது நினைவுக்கு வந்தது. அந்நாவலில் அச்சுனையை சென்றடையும் இளவயது துரியோதனன் எட்டு பொய்விழிகளுடன் உள்ள மீன்களை பார்த்து அதை குடிநீர் என உணர்கிறான், அள்ளிக் குடிக்கையில் நீர் எடை கொண்டதாக இருப்பதையும் இரும்பை நக்கியதை போலவும் உணர்கிறான். அதையே இந்நாவலிலும் அஸ்வத்தாமனின் கதையில் வரும் ஸ்தூனகர்ணன் உணர்கிறான். அதே பொய்க் கண்கள் கொண்ட மீன்கள்! பின்னர் அச்சுனையை அடையும் அஸ்வத்தாமனும் அந்நீரை அருந்தும்போது உலோகச் சுவையை உணர்கிறான்

என் வாசிப்பில் முதலில் அஸ்வத்தாமன் சொல்வதாக வரும் ஸ்தூனகர்ணனின் கதையில் அவன் இரும்பை நக்கியதாக உணர்வதை வாசித்தபோது மனதின் அடியாழத்தில் பதிந்திருந்த வண்ணக்கடல் அத்தியாயத்தின் நினைவால் ஏதோ நானே அதை ஏற்கனவே அறிந்திருந்ததைப் போன்றதொரு உளமயக்கம் ஏற்பட்டது. “ஆம் அத்தண்ணீர் கனமாக இருக்குமே! இரும்பாலான மீன்கள்கூட அதில் இருக்கணுமேஎன்று உடன் சிந்தித்து பின்னர் நினைவு வந்து வண்ணக்கடலின் அத்தியாயத்தை வாசித்து என் எண்ணத்தின் காரணத்தை புரிந்துகொண்டேன்

வண்ணக்கடலில் ஸ்தூனகர்ணன் வழங்க முன்வந்த  ரௌப்யை என்னும் கதையை வேண்டாமென மறுத்துச் செல்லும் துரியோதனன் இங்கே அதை விரும்பிக் கேட்பது அவனது சரிவை உணர்த்துவதாக இருந்தது. அக்கதையைப் பெற்றும் அவனால் அஞ்சனைமைந்தனின் கதையின் தண்டுக்கு எதிர்நின்று பொருதமுடியாது தோற்றுப்போவதும் வியப்பளித்தன. அந்த அஞ்சனைமைந்தனின் கதை மழைப்பாடலில் புராணகங்கையிலிருந்து வெளிவந்து, முதற்கனலில் அஸ்தினபுரியை விட்டு நீங்கிய பால்ஹிகரின் கைகளில் தவழ்ந்து போரில் ஈடுபட்டு இறுதியாக தண்டுப்பகுதியாக மட்டும் எஞ்சி துரியோதனனின் தொடையைத் தாக்கி தன் வேலையை முடித்து தன் வட்டத்தை முழுமை செய்கிறது. ஆனால் ரௌப்யை தனது கடனை முடிக்காமலேயே இளைய யாதவரின் கரங்களால் சுனைக்குள்ளேயே மீண்டும் திரும்புகிறது.

சுனைப்பரப்பில் தோன்றும் ஹஸ்தியின் சாபத்தால் இளைய யாதவரின் குடி முற்றழிவதும் அங்கேயே தொடக்கம் கொண்டுவிடுகிறது. வியாச பாரதத்தில் காந்தாரியின் சாபத்தால் கிருஷ்ணரின் குலம் அழிவதாக வரும். ஆனால் இங்கு ஹஸ்தியால் அதுவும் துரியோதனனின் இறப்பு நிகழ்ந்ததுமே அச்சாபம் வெளிப்படுவது இன்னமும் பொருத்தமாக உள்ளது

வியாசபாரதத்தில் பீமனால் தொடை பிளக்கப்பட்டு துரியன் விழுந்து தன்னைச் சூழும் நரிகளை விரட்டியவாறு ஆனால் எழமுடியாமல் கிடக்கும் பகுதி மனதை கனக்கச் செய்வது. இங்கோ தொடையில் அடிபட்டதும் சட்டென சுருண்டு விழுந்து மரிப்பதுமே அதேயளவு மனதை கனக்கச் செய்கிறது. இறந்து கிடக்கும் துரியோதனனை தலைதொட்டு அப்பாவத்தை ஏற்று இளைய யாதவர் நீங்குவதும், பின்னர் அவனருகில் தனிமையில் நிற்கும் தருமனின் மனவோட்டங்களும் மனதில் வெறுமையை நிரப்புபவை. அவ்வாறு தனிமையில் சந்திக்கும் தருணம் முன்னமே அமைந்ததில்லை என தருமன் எண்ணுவது, மழைப்பாடலில் அம்பிகை அம்பாலிகை இருவரிடமிருந்தே அந்த தருணம் அமையாது இருந்து வந்துள்ளதே என எண்ணவைத்தது.  

போர்முழுக்க பாண்டவர்கள் ஒவ்வொருவரும் தமது ஆணவத்தின்மீது அடிவிழுவதை எதிர்கொண்டு வந்திருக்க அது நிகழாமல் இருந்த சகதேவனுக்கும் துரியோதனனுக்கு போருக்கான நேரத்தை குறித்துக் கொடுத்தவகையில் நிகழ்ந்துவிடுகிறது. அதையொட்டி அவன் இறப்புவரை சென்று திரும்புவதும் உணர்வெழுச்சி கொள்ளவைப்பது. அச்சமயத்தில் ஒவ்வொருவருமே இளைய யாதவர்மீது சீற்றம் கொண்டு சொல்லெடுக்க, அதை மறுக்கும் வழி வாசிப்பவனாக எனக்கு தெரியவில்லை எனினும் அவர்களின் சொற்களில் உள்ள அர்த்தமின்மையையும் கண்டுகொள்ள முடிகிறது என்பது நல்லதொரு அனுபவம்

அடுத்த நாவல்களில் பேருரு கொள்ளவிருக்கும் சம்வகை இந்நாவலில் அறிமுகமாகும் இடம் அழகு. மெல்ல கோட்டைக்காவலை தன் பொறுப்பில் எடுத்துக் கொள்வதும், கைவிடுபடைகளை இயக்கி கொள்ளைப்படையை முற்றழிப்பதும்ஆம் அஸ்தினபுரிக்கு அரசி அவ்விதம்தானே எழுந்துவரமுடியும்என எண்ணவைத்தது. அதை நகுலனும் அடுத்து உரைக்கையில்இது வழக்கம்போல வெண்முரசின் வார்த்தைகள் மனதினுள் நம்மையறியாமல் சென்று மீண்டும் நமது வார்த்தைகளாகவே உருக்கொண்டு வரும் இன்னொரு அனுபவம்என நினைத்துக் கொண்டேன்

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட ஆனால் வெடிக்காத குண்டுகளை சமீபகாலம் வரைக்குமே அவ்வப்போது ஜெர்மனியில் கண்டெடுக்கிறார்கள். நான் 2012ல் ம்யூனிக் நகரில் இருந்தபோது அடிக்கடி நடந்து கடந்துசெல்லும் பாதையில் இருந்த கட்டடம் ஒன்றை இடித்து புதிய கட்டுமானத்துக்காக நிலத்தைத் தோண்டியபோது அவ்வாறு ஒரு குண்டை கண்டெடுத்து அதை செயலிழக்க வைக்க இயலாததால் பாதுகாப்பான முறையில் அதை வெடிக்க வைத்தார்கள். அப்படியும் அது அருகிலிருந்த கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்களை விரிசல் விழ வைத்து ஓய்ந்தது. சத்யவதி காலத்துக்கு முன்பிருந்தே அம்பேற்றப்பட்ட நிலையில் இருந்துவந்த கைவிடுபடைகளின் அம்புகள் வருடங்கள் பல கடந்து பயன்படுத்தப்பட்டதை வாசித்தபோது அந்நினைவு எழுந்தது

அரண்மனையில் கருக்கள் கலைவதும் இன்னொரு குருதிமழையும் புழுதிமழையும் பெய்வதும் மனதை கனக்கச் செய்தது. அனைத்து கருக்களும் கலைந்த நிலையிலும் கலங்காத காந்தாரி இறுதியில் பாண்டவ மைந்தர்கள் மாண்டதை அறிந்ததும் உடைந்து அழும்போது பிற கதாபாத்திரங்கள் அனைத்துமே மங்கலாகி பின்சென்று மனம் முழுக்க காந்தாரியே நிறைந்து நிற்கிறாள்

துரியோதனன் ஸ்தூனகர்ணன் உறையும் சுனைக்குள் கொள்ளும் யோகமும், அதைக் கலைக்க முடியாமல் பீமன் திண்டாடுவதும், “அப்பழியும் தனக்கே சேரட்டும்என இளைய யாதவர் அச்சுனையை விரலால் தொட்டு கலக்கி அவனது யோகத்தை அறுப்பதும், முதன்மையாக அவன் தன் யோகப்பயணத்தில் கண்டவற்றை இளைய யாதவரிடம் சொல்ல முற்பட்டு அவரால் தடுக்கப்படுவதும் என் புரிதலின் எல்லைக்கு அந்தப் பக்கமே இம்முறையும் நின்றிருக்கின்றன. இன்னொரு மீள்வாசிப்புக்கான நிமித்தம் இப்போதே உருவாகிவிட்டிருக்கிறது என்பதை உணர்ந்துகொள்கிறேன்

அன்புடன்,

கணேஷ் பெரியசாமி

முந்தைய கட்டுரைஅறம் அமெரிக்கா- ஒரு கட்டுரை
அடுத்த கட்டுரைமணக்கால் ரங்கராஜன்