சமீபத்தில் படித்த ‘கவிமணி கட்டுரைகள்‘ நூலில் (காவ்யா பதிப்பகம், பேரா.அ.கா.பெருமாள் தொகுத்தது) நாஞ்சில் நாட்டு வரலாறு, அன்றைய மொழிவாரி மாநிலங்கள் பிரிந்தபோதிருந்த மக்கள் மனநிலை, கவிமணியின் சாசனங்கள்,ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள் குறித்த அவதானிப்புகள், பண்பாட்டுத் தெறிப்புகள் கொண்ட நுண்வரலாறுகள் போன்ற பல்வேறு செய்திகள் கொண்ட காத்திரமான கட்டுரைகளைப் படிக்க வாய்த்தது.
திருவிதாங்கோடு ஆங்கிலேயரின் பேச்சு மொழியில் ‘ட்ருவாங்கூர்‘ ஆகி திருவிதாங்கூர் ஆகிவிட்டிருக்கிறது. கல்வெட்டுக்களில் முதாங்கோடு என்றபெயர் காணப்படுகிறது. வேள்விக்குடிச் செப்பேட்டில் ‘செங்கொடியும் புதாங்கோடும் செருவென்றவர் சினம்தவிர்த்து‘ என்று வருவதில், வட்டெழுத்தில் அதிக வேறுபாடுகள் இல்லாத பு மற்றும் மு இவற்றை மாற்றிவாசிக்கும் தவறுகள் உள்ளதால், புதாங்கோடு என்பது முதாங்கோடுதான் என்கிறார் கவிமணி. எனவே திருமுதாங்கோடு என்ற பெயரே திருவிதாங்கோடு என்று திரிந்திருக்கலாம் என்கிறார்.
ஆலமரத்தில் பொதிந்திருக்கும் கடவுள் என்னும் பொருள்படும் ‘வடக்ரோட தேவ‘ என்னும் சொல் அவ்வூர்க் கோயில் கல்வெட்டுக்களில் காணப்படுவதைச் சுட்டிக்காட்டி மூதாலங்கோடு என்ற பெயர் நாளடைவில் முதாங்கோடு ஆகி அடைமொழியேற்று திருமுதாலாங்கோடு ஆகி பின் திருவிதாங்கோடாகத் திரிந்திருக்கவேண்டும் என்கிறார் கவிமணி. ஒத்தக்கல் மந்து (தோடர்களின் குடியிருப்பு) ‘ஒட்டக்கமன்ட்‘ ஆகி ஊட்டியும் ஆனதுபோல என்று நினைத்துக்கொண்டேன்.
மனைவியுடன் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
கவிமணி பல்வேறு இடங்களில் நிகழ்த்திய உரைகள் அங்கு வந்தவர்களுக்கு அச்சுவடிவிலும் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இதிலுள்ள பல கட்டுரைகளும் அவர் நிகழ்த்திய உரைகளே. சோழர்களும் பாண்டியர்களும் எழுதிவைத்த கல்வெட்டுக்களாலும், சாசனங்களாலும், அவர்கள் ஏற்படுத்திய நிவந்தங்களினாலும் நாஞ்சில் நாடு தமிழ்நாட்டுக்குரியதுதான் என்று பல்வேறு தரவுகள் கொண்டு வாதிடுகிறார் கவிமணி. கேரளத்தார் கூறும் பரசுராமர் மழுவெறிந்து உண்டாக்கினார் என்பது உண்மையானால் பிராமணர்களுக்காக அவர் உண்டாக்கிய தேசத்தை அவர்களிடம் கொடுத்துவிட்டு கைகட்டி நிற்பீர்களா? என்கிறார்.
இவர் கூறும் நாஞ்சில் நாட்டு வரலாறு சுவாரசியமானது. பஹ்ருளி ஆறு உட்பட பல ஆறுகள் பாய்ந்து வளப்படுத்தும் மூன்றுபுறமும் மலைகள் சூழ்ந்த வளமான பகுதி. பாண்டியர் நலிந்தபோது சோழர்களிடமும் சோழர்கள் நலிந்தபோது பாண்டியர்களிடமும், பின்னாளில் விஜயநகரத்தின் ஆட்சியின் கீழும் இருந்த பகுதி.
பாண்டியர்வசம் இப்பகுதி இருந்தபோது வள்ளியூரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டுவந்த ஒரு சிற்றரசன் தன் மகளின் காது நோயைத் தீர்த்துவைத்த நாஞ்சில் குறவனுக்கு இந்தப் பெருநிலப்பரப்பை பரிசாக அளித்ததாகவும், அன்றுமுதல் இது நாஞ்சில் நாடு என்று அழைக்கப்பட்டதாகவும் கருதப்படுகிறது.
நாஞ்சில் நாட்டை ஆண்டதாலேயே அவன் நாஞ்சில்குறவன் என்று அழைக்கப் பட்டான் என்றும் கூறப்படுகிறது. குறவன் நாட்டை முதலியார்கள்வசம் ஒப்படைத்து அவர்கள்மூலம் ஆண்டு வந்திருக்கிறான். இதற்கிடையில் குறவன் கீழ் நாட்டை ஆளப் பொறுக்காமல் குறவன் குடும்பத்தை ஒரு தந்திர மண்டபத்தின் கீழ்க் கொணர்ந்து அந்த மண்டபத்தை இடிந்துவிழச்செய்து அனைவரையும் கொன்றுவிடுகிறார்கள் முதலியார்கள்.
அழகியபாண்டியபுரம் என்னும் ஊரின் அருகிலுள்ள குறத்தியரை என்னும் ஊரில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. ‘பொறியைத் தட்டடா புத்திகெட்ட ஆசாரி‘ என்ற இதுசம்பந்தமான பழமொழி இன்றும் புழக்கத்தில் உள்ளது என்கிறார் கவிமணி. இந்தஇடம் குறவன் தட்டுவிளை எனப்படுகிறது. உங்களுக்கு மேலதிகவிவரங்கள் தெரியலாம்.
அதேபோல ‘காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி…’ என்று ராஜராஜன் மெய்க்கீர்த்தியிலுள்ள செய்தி குறித்து ஒரு சுவாரசியமான கட்டுரை உண்டு. அந்தக் காந்தளூர் எங்குள்ளது, அந்தச் சாலை என்பது என்ன, கலம் என்பது என்ன, அறுத்தருளி என்று ஏன் கூறவேண்டும் என்பது குறித்து வெவ்வேறு அறிஞர்களும் எப்படியெல்லாம் பொருள் கொள்கிறார்கள் என்று விரிவான விளக்கம் உண்டு.
பலரும் பொருள்கொள்வதுபோல ‘காந்தளூர்க் கடற்கரையில் இருக்கும் கப்பல்களை நாசம் செய்து‘ என்பது எதனால் பொருந்தாது என்று நிறுவுகிறார் கவிமணி. இறுதியாக அந்தக் காந்தளூர் திருவனந்தபுரத்தின் வெளியேயுள்ள வலியசாலை என்றும், கோபிநாதராவ் கூறும் பிராமணர்களுக்கு உணவளிக்கும் கலம் குறித்த வில்லங்கத்தை இறுதிசெய்தது குறித்ததே இச்செயல் என்றும் கூறுகிறார்.
வெளியேவர அஞ்சும் சிறுபெண்களைப் பார்த்து வயதானவர்கள் ‘என்ன இப்பிடிப் பயப்படுத…புலப்பேடிக் காலமா இது?’ என்று கூறுவதில் உள்ள புலப்பேடி மற்றும் மண்ணார்பேடி குறித்து கவிமணி கூறும் செய்திகள் ஆச்சரியமூட்டுபவை. நீங்கள் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். அன்று புலையர்கள் நாயினும் கீழாக மதிக்கப்பட்ட ஒரு சாதியினர். ஒரு புலையனுக்கு நம்பூதிரி, நாயர் போன்ற உயர்சாதியினர் முன்னால் வர உரிமையில்லை. ஒருவேளை அவர்கள் எதிர்பட வாய்ப்பிருப்பது போலிருந்தால் இவன் வருகையைத் தெரிவிக்க சத்தம் கொடுக்கவேண்டும். ஒரே ஒரு மாதம் மட்டும் நினைத்துப் பார்க்கமுடியாத ஒரு சலுகை இவர்களுக்குண்டு. காற்கடக (ஆடி) மாதத்தில் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வீட்டைவிட்டு வெளியேவரும் உயர்சாதிப் பெண்ணின்மேல் ஒரு சிறிய கல்லை ஒரு புலையன் எறிந்தால் அவள் அவனுடைய உரிமை. இது நடைபெறப்போகும் காலத்தை முரசறைந்து அறிவிப்பார்கள். மனமில்லாதவர்கள் வெளியிறங்கமாட்டார்கள். வெளியிறங்குபவர் எதற்கும் துணிந்தவர். அது சமயம் வெளியே செல்லும் பெண் கையில் ஒரு ஆண்குழந்தையைப் பிடித்துச் சென்றால் அவளுக்கு இதிலிருந்து விலக்கு உண்டு. கருவுற்ற பெண்ணாக இருந்தால் குழந்தை பிறக்கும்வரை காத்திருக்கவேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் விலக்கு உண்டு. பெண் குழந்தையாக இருந்தால் விலக்கு இல்லை.
இறுதியாக ராஜா கேரளவர்மா ‘புலப்பேடி மற்றும் மண்ணார்பேடி என்ற இருவழக்கங்களும் இது முதல் இருக்கலாகாது என்றும், மீறிக் கைக்கொண்டால் அவர்தம் பெண்டுபிள்ளை, வயிற்றுப்பிள்ளை முதற்கொண்டு வெட்டி வீழ்த்தப்படுவார்கள்‘ என்றும் கல்லில் பொறித்து இந்தப் பழக்கத்திற்கு முடிவுகட்டினார். நாஞ்சில் நாட்டில் இந்தப்பழக்கம் இல்லையென்று கூறுகிறார் கவிமணி.ஆனால் நாஞ்சில் நாட்டில் ராப்பாடிகள் எனப்படும் புறத்துவண்ணார்கள் இரவில் உடுக்கை கொட்டிப் பாடிவருவார்கள் என்றும் பொதுவாக ஏர்க்களப் பாட்டுக்களாக இருக்கும் என்றும், பெண்கள் சுளகில் படி நெல், வேப்பிலை, மஞ்சள், கரி முதலியவற்றை வைத்து வாசலில் வைத்துவிட்டு கதவைத் தாழிட்டுக்கொள்வார்கள் என்றும் கூறுகிறார்.
சுந்தரராமசாமி கவிமணியை 1955 ல் எடுத்த நீண்ட பேட்டியும் உள்ளது. நோயுற்றிருக்கும் இறுதிக்காலத்தில் தனித் தமிழ்நாடு அமைவது குறித்த கவிமணியின் தீவிரமான பதில் ஆச்சரியமூட்டுவது. தமிழ், பண்பாட்டு ஆர்வலர்கள் தவறவிடக் கூடாத நூல்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்