கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இந்திய அறிவியல் பற்றிய உங்கள் பதில் சற்று விரக்தியையே உண்டுபண்ணுகிறது. மூன்று நூற்றாண்டு கால இடைவெளி , கடக்க சற்று சிரமமானது.நமது கல்வித்துறைகளில் காணப்படும் வறட்சி, உள்ளீடற்ற வாய்ப்பேச்சாள தலைவர்கள் இதை இன்னும் அதிகப்படுத்தக்கூடும்.

நேரு குறித்த தங்களின் கருத்தை ஏற்கிறேன். மரபை உதாசீனம் செய்தது ஒரு பிழையே. ஆனால் அந்த சமயத்தில் அவருக்கு வேறு வழி இருந்திருக்கும் என தோன்றவில்லை. மேற்கத்திய பாணி கொள்கைகள் அல்லாது வேறு எதேனும் முயற்சித்திருந்தால் ஒரு வேளை மாவோ வின் பரிசோதனைகள் போல ஆகியிருக்கலாம். இந்த அரை நூற்றாண்டில் ஏவுகணை, செயற்கைக்கோள் தொழில் நுட்பங்களில் நாம்  எய்தியிருக்கும் தன்னிறைவு ஒரு மைல்கல் என்றே கருதுகிறேன், நாம் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம் என்றபோதிலும்.

ஆனாலும் நான் நம்பிக்கை இழக்க வில்லை. தற்போதைய தேக்க நிலை நெடு நாள் நீடிக்காது என நினைக்கிறேன். உலகளவில் மேற்கின் ஆதிக்கம் அஸ்தமனமாகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இரவல் சிந்தனையாள்ர்கள் நீண்ட காலம் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு மறுமலர்ச்சி உதயமாகும் என்று நம்புகிறேன். அப்பொழுது நமது அறிவு முறைகளும் முக்கியத்துவம் பெறும். மேற்கின் குறைபாடுகள் களையப்பட்டு அதன் இடைவெளிகள் நிரப்பபபட்டு ஒரு ஒருங்கிணைந்த அறிவியல் முறை வரக்கூடும்.

ஐயா, கல்லூரியில் படிக்கும் போது விவேகானந்தரின் அறைகூவல்கள் பல இரவுகள் கொந்தளிக்க வைத்துள்ளன.அப்துல் கலாமின் எழுச்சி தீபங்களும் உலுக்கி எடுத்தது. பல நூற்றாண்டு பாரம்பரியப் பின்னணியிலுள்ள இந்நாடு நீண்ட காலம் உறக்கத்தில் இருக்காது என திடமாக எண்ணுகிறேன்.  இந்த தேசத்தின் மறு-மறுமலர்ச்சியில் ஏதேனும் பங்கேடுக்க வேண்டும் என விரும்பியிருந்தாலும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தேன். தங்களின் பதில் ஒரு தெளிவை அளித்துள்ளது.

விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.

சங்கரன்.

 

ஜெமோ

பாலமுருகனுக்குத் தாங்கள் போட்ட பதில் பற்றி.

அற்புதம். உண்மையிலேயே இப்போது தான் நான தமிழ் படிக்கத் துவங்குகிறேன் என்று நினைக்க வைத்து விட்டீர்கள். சமீபத்தில் உங்கள் ஊட்டி நாராயண குருகுலம் பேச்சு ( முதல் ஒலிப் பதிவு என்று நினைக்கிறேன் ). அதில், காவியத்தைப் படிக்க ஒரு ஆசான் இல்லாமல் அதில் நுழையவே முடியாது என்று பேசியிருந்தீர்கள்.  அந்தப் பேச்சு சங்க இலக்கியங்களுக்கும் பொருந்தும்.

நான சமீபத்தில், செம்மொழி மாநாடு சமயத்தில் அங்கே புத்தகங்கள் விற்கும் அரங்குக்கு (மட்டும் )  சென்று , அங்கே முதன் முறையாக தொல்காப்பியம், புறநானூறு, பதினெண்கீழ்க் கணக்கு , பரிபாடல் போன்றவற்றை வாங்கினேன். சொன்னால் நம்ப மாட்டீர்கள். புறநானூற்றின் உரை எழுதிய ஒரு மகானுபாவன், ஏதோ ஒரு பாட்டில் புலவர் நால் வருணங்களையும் பேசி விட்டார் என்பதற்காக அவரைச் சாடி , வள்ளுவரோடு அவரை ஒப்பிட்டு ஏதேதோ எழுதியும் விட்டார். அவர் எழுதிய நாலு வரி உரைகளுக்கு என் சொந்த புரிதலே மேல். இதே மாதிரி மற்ற உரைகளும். மொத்தம் இரண்டாயிரம் ரூபாய் வெட்டி. இன்னொரு விஷயம் , அந்த அரங்குகளிலே, மேதமை வாய்ந்த உரைகள் விற்பனைக்குக் கூட இல்லை. உ வே சா உரைகள் , கி வா ஜ, நாராயண அய்யங்கார், வேங்கடசாமி நாட்டார் போன்றோர் உரைகள் இல்லவே இல்லை. கடைசியாகக் குறிப்பிட்ட ந மு வேங்கடசாமி நாட்டார் உரை சிலப்பதிகாரத்துக்குக் கிடைத்தது. அதுவும் மிக விரைப்பான (terse) உரை.

திருக்குறளுக்கு என் மகனுக்கு நுட்பங்களை விளக்க ராகவய்யங்கார் எழுதிய பரிமேலழகரின்  உரைக்கு விளக்கம் (ஆயிரம் பக்கம்) கடைசியில் விஜயாவில் தான் தேடி  வாங்கினேன்.

சமீபத்தில் வால்மீகி ஒரு தமிழ்ப் புலவரா ? என்ற ஆராய்ச்சியை மதுரை நாராயண அய்யங்கார் செய்து எழுதியிருந்தார். அவர் புறநானூற்றில் வான்மீகனார் என்ற புலவர் எழுதிய ஒற்றைப் பாடலை ஆய்வு செய்த விதத்தில், (இணையத்தில் உள்ளது )புல்லரித்துப் போய்ப் புறநானூற்றை வாங்கி இந்த உரையால் நொந்து போனேன். என்னைப் போல், பலரும் இந்தப் பதிப்பகங்களின் அரை வேக்காட்டு வேலையில் இலக்கியப் படிப்பையே நிறுத்தி இருப்பார்கள். பல வார இதழ்களின் விளம்பரங்களை நம்பி ஒரு முறை நாலாயிர திவ்வியப் பிரபந்தம் வாங்கினேன். நல்ல வேளை பாட்டு  மட்டுமாவது கிடைத்தது. என் ராசி. உரை வாரி விட்டது.

நீங்கள் ஒவ்வொரு இலக்கியத்துக்கும் சிறந்த உரை இது தான் என்று சிபாரிசு செய்யுங்கள் என்று விண்ணப்பிக்கிறேன். இல்லையேல் , தட்டுத் தடுமாறி இது மாதிரிதான் மாட்டுவோம்.

வெங்கட்

 

முந்தைய கட்டுரைஆயுதமேந்திய ஜனநாயகம்!
அடுத்த கட்டுரைபதினைந்துநாள் இடைவெளி