அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம்.
இங்கிலாந்து வந்துள்ள அண்ணன் பவா அவர்களுடன் நேற்று ஒரு கலந்துரையாடலுக்கு ரக்பி நகரில் தாய்த் தமிழ் சங்கம் மூலமாக ஏற்பாடு செய்திருந்தோம்.
இது இலக்கிய கூட்டம் போன்ற ஒரு நிகழ்வு. ஆனால் நாங்களும் அரங்கும் நிறைவு கொள்ளும் வகையில் நண்பர்கள் குறித்த நேரத்திற்கு வந்து குழுமத் தொடங்கினர். பவா, அரங்கிற்கு வரும் வழியில் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக நண்பர்கள் காத்திருக்க வேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. அது ஒரு வகையில் எங்களுக்கு தர்ம சங்கடத்தை கொடுத்தாலும் யார் முகத்திலும் சலிப்பிற்கான சுவடே இல்லாமல் இருந்தது. ஆனால் எனக்கு இலக்கிய வாசகனாக உள்ளூர ஒரு கோணத்தில் மகிழ்வே.. ஒரு இலக்கியவாதியை அதற்கான முக்கியத்துவத்தைக் கொடுத்து காத்திருந்து அவரின் பேச்சைக் கேட்க அமர்ந்திருக்கும் எங்கள் நிலையை எண்ணி .
வந்தவர்களில் ஒரு பத்து சதவீதம் மட்டுமே வாசிப்பு பழக்கமுள்ளவர்கள் .
ஆனால் அவருக்கே உரிய தோரணையில் உரையைத் தொடங்கினார் பவா. சோற்றுக் கணக்கு கெத்தேல் சாகிப் , யானை டாக்டர் , சந்தோஷ் எச்சிகானத்தின் பிரியாணி கோபால் யாதவ் , பிரபஞ்சனின் தியாகி உள்பட அவரின் நண்பர்களும் எங்களுடன் உரையாடிக் கொண்டிருந்தனர். மக்களும் கனத்த அமைதியுடன் அமர்ந்திருந்து கேட்டுக்கொண்டிருந்தனர். நான் இந்த ஊருக்கு வந்து கண்ட தமிழ் விழாக்கள் சார்ந்த கூடுகைகள் எல்லாம் உணவு , கேளிக்கை என்ற வட்டத்தை தாண்டி வந்ததில்லை . ஆனால் நேற்றைய நிகழ்வு ஒரு இனிய தொடக்கம் போல இருந்தது.
அமைதி மனநிலையிலிருந்து ஒரு விதமான அகக் கொந்தளிப்புக்கு மக்களை இட்டு சென்ற தருணமென்றால் அது .. அண்ணன் பவா அவர்கள், அண்ணன் சாம்ராஜின் ‘அவள் நைட்டி அணிந்ததில்லை’ கவிதையை சொன்னபோதுதான். கேள்வி பதில் நிகழ்வு வேண்டாம் என்று தான் முதலில் சொன்னார் . ஆனால் அரங்கின் ஒருங்கமைதியைப் பார்த்து அவரே அதை தொடங்கி வைத்தார்.
நண்பர்கள் கேட்ட கேள்விகளும் மிகத் தரமானதாக , ஆரம்ப நிலை வாசிப்பின் தத்தளிப்புகளையும் கொண்டதாக இருந்தன. பவா அவர்களை நேரடியாக தொட்ட ஒரு கேள்வி நமது விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை சேர்ந்த நண்பர் திரு.ராஜேஷ் கேட்டது. அது, ‘பிற எழுத்தாளர்களின் கதைகளை தொடர்ந்து சொல்லி வருகிறீர்கள் , அதில் நீங்கள் இழந்தது என்ன அடைந்தது என்ன ?’ என்பதுதான் . இதற்கு மிக நேர்மறையாக வெளிப்படையாக தன்னை பின் வைத்து இலக்கிய வாசிப்பை முன் வைக்கும் விதமாக பதிலளித்தார். தொடர்ந்து வாசிப்பின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக பல உதாரணங்களையும் கதைகளையும் எங்களுக்கு சொன்னார். புதுமைப்பித்தன் நூறு புனைப்பெயர்களில் கதை எழுதிய சோக கதையையும் சொன்னார்.
ஒருவர் எதற்காக புத்தகம் வாங்க, வாசிக்க வேண்டும் என்பதற்கு . அது தனி மனிதனுடன் முடிந்து போகும் செயல் அல்ல. நீங்கள் வாசிக்காவிட்டாலும் வாங்கி வையுங்கள் அது யாரோ ஒருவரை என்றோ கடைத்தேற்றும் என்று சொன்னார். சரியாக இந்த வரிகளுக்குப் பிறகு சீண்டுவாரற்று இருந்த புத்தக மேசை பரபரப்புக்குள்ளானது .. விற்றன புதுமைப்பித்தன் , ஜெயமோகன், ஜெயகாந்தன், பவா உள்ளிட்ட பல எழுத்தரசர்களின் சில புத்தகங்கள் அரங்கில் .
இன்னொரு சுவாரசியமான சம்பவம் , பவாவிற்காக நாங்கள் காத்துக்கொண்டிருந்தபோது விற்பனை மேசையிலிருந்த புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்த போது எனதருகில் எனது நண்பர் ஓவியத்தில் ஈடுபாடு கொண்டவர் நின்றிருந்தார். அப்போது அவரிடம் ‘கண்மணி கமலாவுக்கு’ என்ற புதுமைப்பித்தனின் புத்தகத்தை எடுத்துக் காண்பித்து இவரில் இருந்துதான் தமிழ் சிறுகதையின் போக்கே மாறுகிறது என என் ஆசிரியர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன் . அப்படிப்பட்டவர் தமிழ் சமூகத்தால் கண்டுகொள்ளப்படாமல் வறுமையில் வாடிக் கொண்டிருந்தபோது தனது மனைவிக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு இந்த நூல் என்று சொன்னேன். கவனமாக கேட்டுக்கொண்டிருந்தார்.
பின்பு பவா பேசும்போது வண்ணநிலவனின் பலாப்பழம் கதையை சொன்னார். இடைவேளையில் அந்த நண்பர் வேகமாக சென்று புதுமைப்பித்தனின் அந்த புத்தகத்தை வாங்கி வந்துவிட்டார். என்னிடம் ‘இவரிடம் இதில் கையெழுத்து வாங்கலாமா’ என்றார். நான் முதலில் அது சரியா என சற்று யோசித்தேன் . ஆனால் பிறகு சந்தேகமற்ற உறுதியுடன் ‘இவரைப் போன்றவர்களின் (புதுமைப்பித்தன் ) பிரதிநிதி தான் இவர்(பவா) ஆகவே தாராளமாக வாங்கலாம்’ என்றேன். என் சொல் பிழையாகா வண்ணம் அதை ஒரு கண்ணாடிப் பேழையை போன்று கையில் வாங்கி கையெழுத்திட்டார் அண்ணன் பவா சிரித்த முகத்துடன்.
நிகழ்வை நண்பர் திரு.ராஜி சண்முகம் மிகச் சிறப்பான வகையில் தொகுத்தளித்தார் உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்புடன்.
நான் எனது நன்றி உரையில் பவாவின் கதைகளை நான் எப்படிக் கண்டடைந்தேன், பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கும் உங்களுக்குமான ஒரு உரையாடலை அவர் சொன்னதை நினைவூட்டி அதன் தொடர்ச்சியாக என் ஆசிரியரான உங்களைக் கண்டடைந்த தருணம் எது என சில சொற்களை சொன்னேன்.
பின்பு ‘ நான் ஒரு கேட் கீப்பர் தான் , உள்ளே ஆலிஸின் அற்புத உலகம் உள்ளது . அது புத்தகம் வாசித்தால் தான் உங்களுக்கு தெரியும்’ என்று முன்பொருமுறை அவர் சொன்னதை அரங்கில் இருந்த நண்பர்களுக்காக சொன்னேன். ‘இலக்கியக் காப்பான்’ என்று எனக்குத் தெரிந்த வகையில் அதை தமிழ்ப்படுத்தி.
தமிழ் சங்கத்தின் சார்பாக அண்ணன் பவா அவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.
எந்த நேர்மறையான இலக்கிய நிகழ்வானாலும் அங்கிருப்பார்கள் என் வாசகர்கள் என்ற உங்களின் கூற்றின் படி . நேற்றும் அதை உறுதி செய்தோம் நண்பர் திரு.ராஜேஷும் நானும். அண்ணன் பவாவுக்கு விஷ்ணுபுரம் நண்பர்களின் சார்பில் தனிப்பட்ட மரியாதை செய்து.
நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் அடைந்தது பல என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
அன்புடன் ,
கே.எம்.ஆர்.விக்னேஸ்