கொட்டுக்காளி: அஜிதன்
கொட்டுக்காளி, கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
அஜிதனின் விமரிசனத்தைப் படித்த பின்பு ‘கொட்டுக்காளி’ படத்தைப் பார்த்தேன். நிஜமாகவே மறக்கமுடியாத திரைஅனுபவம். வன்முறை, சூரி என்றவுடன் நான் எதிர்பார்த்தது ஒரு ரத்தக்களரி. ஆச்சரியமாக ரத்தத்தைக் காட்டாமலே வன்முறையின் உச்சத்தைக் காட்டியிருக்கிறார்கள். ‘கொட்டுக்காளி’ என்ற வட்டாரவழக்கு அநேகமாக அமுக்குணி, எதையும் விண்டு உரையாதவள் என்று பொருள் படும் போலும். The Adamant Girl என்றுதான் ஆங்கிலத்தில் பெயர் காட்டுகிறார்கள். ‘சிறுகதையின் ஆரம்பம் என்பது அதனுடைய முடிவுதான். அதிலிருந்து வளர்ந்து சென்று இன்னொரு முடிவை எட்டவேண்டும். சிறுகதையின் செவ்வியல் வடிவமான எதிர்பாராத திருப்பம் அல்லது கவித்துவ உச்சம் நோக்கிச் செல்லவேண்டும்’ என்ற உங்கள் வரிகளுக்கு நியாயம் செய்திருக்கிறார் இயக்குனர்.
தற்செயலாகத்தான் மறுநாள் லா.ச.ரா வின் ‘அபிதா’ வில் இன்னொரு கொட்டுக்காளியைப் பற்றி படிக்க நேர்ந்தது. கதை சொல்லியின் இளம்வயதுத் தோழி. அந்த ஊர் குருக்களின் மகள். கதைசொல்லியையும் இவளையும் இணைத்து அவர் மாமா தவறாகப் பேச அவரை அடித்துவிட்டு ஊரைவிட்டு ஓடிவிடுகிறார். பின் பட்டணம்சென்று நல்ல நிலைமைக்கு வந்தபின், வயதான பிறகு தன் பழைய ஊரை, மனிதர்களைப் பார்க்க வருகிறார். இவர் ஊரைவிட்டுப் போகும்போது எப்படியிருந்தாளோ அப்படியே இருக்கிறாள் சக்கு என்கிற சகுந்தலா. இறந்துபோன அவருடைய காதலியின் மகள்தான் இவள் என்பது பின்னால் தெரிகிறது. அவள் தன்னுடைய அம்மாவைப் பற்றிச் சொல்கிறாள் “அம்மா சதா சர்வகாலமும் அழுதுண்டே இருப்பாளாம். வாய்விட்டு அல்ல, மௌனக்கண்ணீர். காரணம் சொல்லமாட்டாள். கண்ணில் கோளாரோன்னு வைத்தியம், பில்லி சூன்னியமோன்னு மந்திரம்,தந்திரம், வேப்பிலை,பூஜை எல்லாம் பண்ணிப்பாத்தாச்சு. உள்ளே ஏதோ ஒடைஞ்சுபோச்சு. மருந்துக்கும் பிடிபடல்லே, மந்திரத்துக்கும் பிடிபடல்லே” நூறு வருடத்துக்கு முந்தைய கொட்டுக்காளி. இவர்கள் என்றைக்கும் இருப்பார்களாக இருக்கும்.
அநேகமாக படத்தை எல்லா தியேட்டரிலிருந்தும் எடுத்துவிட்டிருந்தார்கள், அப்படியே ஓடினாலும் ஒரே ஒரு காட்சிதான். தேடிப் பிடித்து நாவலூரில் ஒரு திரையரங்குக்குச் சென்றால், ஐநூறு பேர் அமரும் திரையரங்கில் வெறும் இருபது பேர் இருந்தோம். காசைக்கொடுத்து அனுப்பிவிடுவார்களோ என்று நினைத்தேன். நல்லவேளையாக படத்தை ஓட்டினார்கள். படம் முடிந்ததும் ‘வாட் எ பக்’ என்று எதிர்வினையாற்றினார் கேர்ள் பிரண்டோடு வந்திருந்த இளைஞர். என்னிடமும் அதே எதிர்வினையை எதிர்பார்த்ததைப்போல அரைச்சிரிப்போடு என்னைப்பார்த்தாள் அந்தப்பெண். நான் ‘கொட்டுக்காளி லுக்’ கோடு அமர்ந்திருந்தேன். ‘இதெல்லாம் சும்மா கததான…’ என்றாள் இன்னொருபெண் தன் நண்பனிடம். படத்தில்காட்டுவதெல்லாம் சமகாலத்தில் பக்கத்து கிராமத்தில் நடக்கச் சாத்தியமுள்ள விஷயம் என்பதையே நம்மால் நம்பமுடியவில்லை.
“மணவறை மஞ்சத்தில் பிய்த்தும் உதறியும் தானாவும் உதிர்ந்த மலர்களென சிதறிக்கிடக்கிறது வான்மேகங்கள். இவ்வளவு மகத்தான கலவிகொண்ட விராடபுருஷன், அவனுடைய ஸ்த்ரீ யார்?” என்கிறார் லா.ச.ரா. கொட்டுக்காளியிடமும் நமக்கு அதே கேள்விதான் இருக்கிறது. யாரோ உன்னுடைய விராடபுருஷன்? நாம் படம் என்றபெயரில் எந்தமாதிரிக் குப்பைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்று நமக்கு நினைவுபடுத்தவாவது இதுபோலப் படங்கள் அவ்வப்போது வரவேண்டும். இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் க்கு வாழ்த்துக்கள்.
அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்