என்றும் விரியும் மலர்.

அன்புள்ள ஜெ,

வெண்முரசின் இதழ்களில் என்னுள் மீண்டும் மீண்டும் மலர்வது மாமலர் தான்.தாரை கொண்ட உலகாண்மை கொள்கையில் இருந்து, ஊர்வசி விழுந்த விண்காதல் தொடங்கி அத்தனை பெண்களும் எனக்கு மிக நெருக்கமானவர்கள். தேவயானி கொண்ட நிமிர்வும், சர்மிஷ்டை கொண்ட பணிவும் என்னுள் ஒருங்கே இருப்பதாகவே எண்ணிக் கொள்கிறேன்.

எங்கோ ஒரு புள்ளியில் பீமனுடன் மெய் காதலில் விழுந்தேன். மெய்யான காதல் கொண்ட ஆணை எந்நிலையிலும் அதனை உணர்ந்த பெண்ணால் விட்டு விட இயலாது. பெண்ணால் மட்டுமே உணரத்தக்க ஒன்றை உணரும் ஆண் பின் வெறும் ஆண் மட்டும் அல்ல.

திரும்பத் திரும்ப நான் வரும் இடம் மாமலர். அதன் அத்தனை சொற்களும் ஒவ்வொரு முறையும் என்னுள் புதிதாக பொருள் கொண்ட படியே இருக்கின்றன.பல முறை சொற்களில் சிக்கி அங்கேயே நின்றிருக்கிறேன்.இம்முறை

‘இளவரசி, உணர்வுகளை நேரடியாக இசைப்பதே நாட்டுப்புற இசை. அதுவே இசையின் அடித்தளம். இசையின் ஒரு பகுதி குருதிபோல மூச்சுபோல நம்முள் இருந்து ஊறுவது. ஆனால் பிறிதொரு பகுதி இக்காற்றுபோல அப்பாறைகள்போல புறத்தே இலங்குவது. உள்ளிருப்பது புறமென்றாகி நின்றிருக்கும் விந்தையே இசை. புறம்திகழ்வது உள்ளமென ஆகும் மறுவிந்தையும்கூட” என்றார் பூர்ணர். அவள் விழிவிரித்து நோக்கி அமர்ந்திருந்தாள். “உங்கள் துயரங்களை எண்களாக்க முடியுமென்றால், கனவுகளை கோலப்புள்ளிகளாக இட முடியுமென்றால், பொங்கி எழும் உவகைகளை கற்களாக தொட்டு எடுத்து அடுக்கிவைக்க முடியுமென்றால் நீங்கள் இசையை நிகழ்த்துகிறீர்கள்” என்றார் பூர்ணர்

இவற்றை, இவற்றின் பொருளை விரித்து விரித்து எடுத்துக் கொண்டே இருக்கிறேன்.சர்மிஷ்டை என ஒரு கணமும், அவள் ஆடி என மறு கணமும் ஆன காலம் இது.நான் அறிந்து அள்ளிக் கொள்ள, நானே அறியாமல் பெற்றுக் கொள்ள ஆயிரம், கோடி என அத்தனை கணம் உள்ளது வெண்முரசில்.

தீராத காதல் எப்போதும் என்னிடம் இருக்கும் ஒன்று என நான் உள்ளுணர்ந்தது வெண்முரசில் தான். செய்யும் செயலில் ஆழமும் ஆர்வமும் குறைவதே இல்லை என்னிடம் என நான் கண்டதும் வெண்முரசில் தான்…

என்னிடம் இருப்பவை என்னென்ன என எனக்கு காட்டிய ஆடி வெண்முரசு.

என் இறை கணம்.

பிரியமுடன்,

சரண்யா

திண்டுக்கல்

முந்தைய கட்டுரைLust Hunters and Conspiracy Mongers
அடுத்த கட்டுரைஎச்.எஸ்.சிவப்பிரகாஷின் குரு- வேலாயுதம் பெரியசாமி