குருகு செப்டெம்பர் இதழ்

அன்புள்ள நண்பர்களுக்கு,

குருகு பதினாறாவது இதழ் வெளிவந்துள்ளது. இந்திய கவிதையியல் குறித்த மொழிபெயர்ப்பு தொடர் இந்த இதழிலிருந்து துவங்குகிறது. கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான தீர்த்தபுரா நஞ்சுண்டையா ஸ்ரீகண்டய்யாவின் முக்கியமான நூலான ‘பாரதீய காவ்ய மீமாம்சே’வை பேராசிரியர் கு பத்மநாபன் கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கிறார். மேலைக்கவிதையியல் கோட்பாடுகளை மையமாக்கி நாம் காணும் பார்வைக்கு மறுபக்கத்திலிருப்பது நஞ்சுண்டையாவின் இப்படைப்பு. இந்தியக்கவிதைகளின் ரச – த்வனி கோட்பாடு குறித்த விளக்கங்களை அளிக்கும் இப்படைப்பு பத்மநாபன் அவர்களின் பெரும் முயற்சியால் தமிழுக்கு வருகிறது.

எழுத்தாளர் தியடோர் பாஸ்கரனின் அச்சிலிருந்து திரைக்கு என்னும் கட்டுரை தமிழ் இலக்கியத்திலிருந்து படமாக்கப்பட்ட முக்கியமான கலைப்படைப்புகள் குறித்தது. ஆய்வாளர் வசந்தி எழுதியுள்ள திருக்குறளை தொல்லியல் நோக்கில் அணுகும் ஆங்கிலக்கட்டுரை இந்த இதழில் வெளியாகின்றது. சிறிய இடைவெளிக்குப்பிறகு தொடரும் செவ்வேள் ஆடல் தொடர், தென்னார்க்காடு மாவட்டத்தின் கந்தசஷ்டி விழாச்சடங்குகளை குறித்து பேசுகின்றது. இந்த இதழில் வந்துள்ள ‘பௌத்த வினாவல்’ தொடர் புத்த பிக்குகளின் கடமைகள், அவர்கள் தவிர்க்க வேண்டியவை குறித்து விளக்குகிறது.

சமீர் ஒகாசாவின் அறிவியல் தொடர் அறிவியல் மீதான மதிப்பீடுகளை எவ்வாறு புரிந்துகொள்வது என்று விளக்குகிறது. இத்துடன் அறிவியல் குறித்த இந்த தொடர் நிறைவடைகின்றது. தமிழில் அறிவியல் குறித்த எழுத்துக்கள் மிகக்குறைவு. அறிவியல் தத்துவங்கள் குறித்தும், அதன் கோட்பாடுகளை அணுகும் முறைகள் குறித்தும் இந்த தொடர் ஆழ்ந்த விவாதத்தை முன்வைக்கின்றது. மிகுந்த சவாலான மொழிபெயர்ப்பை செய்தமைக்கு நண்பர் அவிநாசி தாமரைக்கண்ணனுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து கிடைக்கும் வாசக எதிர்வினைகள் இதழை மேலும் செறிவுள்ளதாக ஆக்கிக்கொள்ள உதவுகிறது.

நன்றி

 http://www.kurugu.in 

பிகு– குருகு இதழின் டிவிட்டர் பக்க இணைப்பை அளித்துள்ளோம். நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.

https://x.com/KuruguTeam

முந்தைய கட்டுரைஎழுதவிருப்பவரின் கடிதம்- ஒரு பதில்
அடுத்த கட்டுரைஇரா.முருகனின் விஸ்வரூபம்- சுப்ரபாரதி மணியன்