அயோத்தி தாசர்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் ,

அயோத்திதாசர் உரை என்னளவில் மிக முக்கியமானது.சாதி சார்ந்த வேற்றுமை என்னை சிறு வயதிலிருந்து சங்கடப்படுத்திய ஒன்று. இது மாற வேண்டும் என விரும்பினேன் . உங்கள் எழுத்துக்களை வாசிப்பதற்கு முன்பு சாதி என்பது  இந்து மதத்தினால் நிறுவப்பட்ட கட்டமைப்பு என நினைத்திருந்தேன் . அதன் காரணமாக இந்து மதம் மீது வருத்தமும் இருந்தது .இது சார்ந்து தேடிய போதுதான் எனக்கு விஷ்ணுபுரம் கிடைத்தது . பிறகு என் எண்ணங்கள் மாறின .இப்போது தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர்கள் தொடக்கத்திலிருந்து அந்நிலையில் இருப்பவர்கள் அல்ல என்பதும் ,அந்நிலைக்குத் தள்ளப் பட்டவர்கள் என்பதும் எனக்கு உண்மையில்  இன்ப அதிர்ச்சியான தகவல்கள்.இக்கருத்துகள் அவர்களிடம் சென்றாலே அவர்களின் சமூகநிலை நாளடைவில்  உயர்ந்து விடும் .

அயோத்திதாசர் உரை என்னை மிக சலனமடைய செய்து விட்டது. இவ்வுரை ஓர் அறைகூவல்.இதிலிருந்து மேலெழ முயல்வேன்.இவ்வுரை மூலமாக புத்தமதம் சார்ந்தும்.

கடந்த காலத் தமிழ் வரலாறு சார்ந்தும் நிறைய தெளிவு பெற்றேன். புத்தரது ஆதிவேதம் பற்றி ஆய்வு செய்ததைப் போல நாளை கொற்றவை சார்ந்து யாரேனும் ஆய்வு செய்தால் தமிழ்ச் சமூக வரலாறு சார்ந்த உண்மைகள் பெருமளவில் தெரியவரும் அனந்தபத்மனாமனின் பொற்குவியல் போல. நன்றி

அன்புடன்

ராதாகிருஷ்ணன்

அன்புள்ள ஜெ

அயோத்திதாசர் பற்றிய உரையை நான் மிகவும் பிந்தித்தான் வாசித்தேன். ஒரு நண்பர்தான் எனக்கு சுட்டி கொடுத்தார். அவர் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர். எனக்கு அரசியல் எல்லாம் கிடையாது. நான் ஓரளவுக்கு என்னால்முடிந்தவரை வரலாற்று ஆராய்ச்சி செய்து வருகிறேன். கொங்கு மண்ணைச் சேர்ந்தவன்.

இப்படி ஆராய்ச்சி செய்யும்போதுதான் கொங்குமண்ணைப்பற்றிய வரலாறு எழுதப்படாமலேயே இருக்கிறது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. போகிறபோக்கிலே ஆங்காங்கே சில விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. கொங்கு மண் மேலே துவரசமுத்திரத்து நாயக்கர்களின் படை எடுப்பு பற்றியெல்லாம் ஒரு நல்ல குறிப்புகூட இல்லை.

உங்கள் கட்டுரை வாசித்தபோது மிகப்பெரிய திறப்புகளை அடைந்தேன். கொங்குமண்ணில் சமணமும் பௌத்தமும் சிறப்புற்றிருந்தது. இங்கே உள்ள நிறைய கிராமத்து தெய்வங்கள் பழைய பௌத்த சமண சாமிகளாக இருக்கலாம். பௌத்தம் எப்படி இங்கே இருந்து அழிந்தது என்றெல்லாம் பாராமல் நம்மால் கொங்கு மண்ணின் வரலாற்றை சரியாக எழுதிவிடமுடியுமா என்ற எண்ணம் வந்துவிட்டது

அயோத்திதாசரை நான் கூர்ந்து வாசிக்கிறேன்

நன்றி

சண்முகசுந்தரம்

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்-7

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர்- 6

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 5

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 4

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 3

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 2

அயோத்திதாசர் முதற்சிந்தனையாளர் 1

முந்தைய கட்டுரைஆங்கில நாடகங்கள்
அடுத்த கட்டுரைகுகா-இந்திரா