அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். மீண்டும் ஒரு ஐரோப்பிய பயணம் முடித்து திரும்பினேன். இப்பயண்த்தில் அதிகம் இந்தியர்களுக்கு பரிச்சயமில்லாத எஸ்டொனியா, லாட்வியா, லித்துவேனியா, ஸ்லோவேனியா போன்ற இன்னும் சில நாடுகளில் பயணம். இவ்வாறு பயணிக்கையில் ஹாஸ்டலில் தங்குவதால் அங்கு வரும் பிற ஐரோப்பிய பயணிகளிடம் பேச சந்தர்ப்பம் கிடைக்கும். அப்படி பேசும்போது தெரிந்தது இந்தியாவின் பெயர், இந்தியர்களின் பெயர் அவர்களிடம் ரொம்பவே டேமேஜ் ஆகியிருக்கிறது என்பது. தாய்லாந்து, வியட்னாம், பிலிப்பைன்ஸ் ஏன் இலங்கை கூட வரத் துணிபவர்கள் இந்தியா வர யோசிக்கிறார்கள்.
அவர்களை தடுப்பது எது என்று பார்த்தால் இந்தியாவின் சுகாதாரமற்ற சூழல், டூர் மாபியா. அதோடு இப்போது அதையெல்லாம் தாண்டி முன்னிற்பது பெண்களின் பாதுகாப்பு. தொடர்ந்து வரும் ரேப் செய்திகள் உலகமெங்கும் பேசப்பட்டு பெரும் அவப்பெயரை பெற்றுத் தந்திருக்கின்றன. அந்த நாட்டுப் பெண்கள் எல்லாரும் நேரடியாகவோ மறைமுகமாகவோ தயக்கத்துடன் என்னிடம் கேட்பது ‘பெண்கள் தனியாக பயணம் செய்ய இந்தியா பாதுகாப்பான நாடா?’ என்பதுதான். பெரும்பாலும் ‘இல்லை’ அல்லது ‘மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’ என்பதே என் பதிலாக இருக்கும். ஒருமுறை ஒருவன் ‘எதற்கு இந்தியாவில் இவ்வளவு ரேப். அங்கு பெண்கள் குறைவாக இருக்கிறார்களா?’ என்று என்னிடம் பாவமாகக் கேட்டான். உண்மையில் இது போன்ற கேள்விகளை எதிர்கொள்வதே இந்திய ஆணாக சங்கடமும் வேதனையும் அளிக்கக் கூடியது.
ஆனால் நான் கவனித்த ஒன்று உண்டு. நான் பார்த்த எந்த நாட்டுப் பெண்களை விடவும் குறிப்பாக ஐரோப்பிய பெண்களை விட இந்தியாவில் பெண்கள் மகிழ்ச்சியாக இருப்பது போல் எனக்குத் தெரிகிறது. (உலக மகிழ்ச்சி குறியீடு அறிக்கை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்). ஏதோ ஒப்பிட்டுப் பார்க்கும் போது அவ்வாறு தோன்றுகிறது. அதை எப்போதேனும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? அதற்கு பெண்களுக்கு இங்கு கிடைக்கும் ‘ஓவர் அட்டென்ஷன்’ காரணமாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அதனால்தான் என்னவோ இங்கு வரும் ரேப் செய்திகளையெல்லாம் நம் ஆண்களை விட பெண்கள் மிக எளிதாக கடந்து சென்று விடுகிறார்கள் போலும்.
நன்றி,
ஞானசேகர்.
அன்புள்ள ஞானசேகர்,
இது ஒரு சிக்கலான விவாதம். நேர் அனுபவம் வழியாக, நுண்ணிய கவனிப்புகளினூடாக உருவாகும் இத்தகைய கேள்விகள் எப்போதும் சிக்கலானவை. இவற்றை எளிமையான அரசியல்சரிகள், கொள்கைநிலைபாடுகள், மெல்லுணர்ச்சிகள் வழியாக எதிர்கொள்ள முடியாது.
நீங்கள் சொல்வதை நான் கவனித்திருக்கிறேன். இவை நம் மனப்பதிவுகள். ஆனால் வெறும் கற்பனைகள் அல்ல. ஒரு விஷயத்தில் நமக்கு தனிப்பட்ட லாபநட்டக் கணக்கோ, உணர்ச்சிகர தொடர்போ, முன்முடிவுகளோ இல்லாத நிலையில் தன்னிச்சையாக தோன்றும் உளப்பதிவுகள் பெரும்பாலும் உண்மைக்கு அணுக்கமானவை. இவற்றை ‘வேடிக்கைபார்க்கும் பயணியின் பார்வை’ என்று நான் சொல்வதுண்டு. அதை அடைவதற்கே நான் பயணம் செய்கிறேன்.
உலக மகிழ்ச்சிக் குறியீடு போன்றவற்றை நானும் கவனிப்பதில்லை. அவை சிலவகையான உலகியல்வசதிகள் சார்ந்த அளவுகோல்களைக் கொண்டவை. அந்த உலகியல் வசதிகள் மகிழ்ச்சியை அளிக்கும் என்னும் நம்பிக்கையில் இருந்து எழுபவை.
இந்தியா சுற்றுலாப்பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நாடுகளில் ஒன்று என்பதில் எந்த ஐயமும் இல்லை. நீங்கள் சொன்ன வரிசையில்தான். முதல்விஷயம் தூய்மையின்மை. இந்தியாவின் நகரங்கள், கிராமங்கள், சாலைகள் எல்லாமே குப்பைமலைகள். இந்தியாவே ஒரு மாபெரும் குப்பைக்கூடை. நம் முதன்மைச் சுற்றுலாத்தலங்களில்கூட மக்கள் திறந்தவெளியில் மலம் கழித்து வைத்திருப்பதைப் பார்க்கலாம். விதிவிலக்கு வடகிழக்கு மாநிலங்கள் மட்டுமே.
சென்ற ஐம்பதாண்டுகளில் நாம் கேவலமாக கைவிட்டுவிட்ட ஒன்று சூழல்தூய்மை. இந்தியாவில் குப்பைகளை அள்ள, மறுசுழற்சி செய்ய, அழிக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகர்ப்புறக் குப்பைகளை மறுசுழற்சி செய்ய பெரிய அளவில் முதலீடு செய்து அமைப்புகளை உருவாக்கவேண்டும். குப்பைகளை அள்ள இன்றிருக்கும் ஊழியர்கள், வண்டிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்காக ஆக்கப்படவேண்டும்.
ஆனால் அதற்கு இங்கே பணம் ஒதுக்கப்படுவதே இல்லை. குப்பை அள்ளும் உள்கட்டமைப்பு அப்படியே தான் இருக்கிறது. பதிலுக்கு நாட்டை ஆளும் மகாநடிகர் துடைப்பட்டையுடன் படம் எடுத்து நாடு முழுக்க கட் அவுட் வைத்துக்கொள்கிறார். அதுவே தூய்மைநடவடிக்கை என நம்புகிறார்.
இந்தியாவில் பயணம் செய்பவர்கள் கடுமையாக நோயுற வாய்ப்பு மிகுதி. அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறிய இந்தியர் திரும்பி வந்தாலும் அந்த அபாயம் உண்டு. கண்ணுக்கு தூய்மையாகத் தென்படும் கேரளம்தான் மிக அசுத்தமான பகுதி– அங்கே குப்பைகளை அள்ளி நீருக்குள் போடுகிறார்கள். நீர் கெட்டு நாற்றமடிக்கிறது. மொத்தக் கேரளமும் சாக்கடைக்குள் அமைந்துள்ளது.
இந்தியாவின் ‘டூர் மாஃபியா’ பற்றி பலரும் எழுதியிருக்கிறார்கள். நான் கேரளத்திலும் மகாபலிபுரத்திலும் பல நிகழ்வுகளைச் சந்தித்துள்ளேன். பணம் ஏமாற்றுவது, பயணிகளை நடுத்தெருவில் விட்டுவிடுவது, வரவழைத்தபின் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பது என ஏகப்பட்ட மோசடிகள். அவற்றைப் பற்றி எங்கும் புகார் செய்ய முடியாது. சென்னையில் டாக்ஸி டிரைவர்கள் அயல்நாட்டுப் பயணிகளை நடுச்சாலையில் இறக்கிவிட்டு பணம் கேட்டு மிரட்டுவதை இரண்டுமுறை நானே பார்த்துள்ளேன்.
ஆம், கடைசியாக ஆனால் முக்கியமாக உள்ளது பெண்களின் பாதுகாப்பே. இந்தியா பெண்கள் பயணம் செய்ய எந்த வகையிலும் பாதுகாப்பான நாடு அல்ல. அயல்பயணிகள் மட்டும் அல்ல உள்ளூர்ப்பெண்கள்கூட. தனியாகப் பயணம் செய்வது மட்டுமல்ல தோழர்களுடன் பயணம் செய்வதும் அபாயகரமானதே. உரிய தொடர்புகள் இருக்கவேண்டும். எங்கும் இரவில் பயணம் செய்யக்கூடாது.
ஏனென்றால் இங்கே எங்குமே முறையான சட்டம் ஒழுங்கு பேணப்படுவதில்லை. நமக்கே தெரியும் தமிழகத்தில் எந்த நகரமும் இரவு பத்து மணிக்குமேல் குடிகாரர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் கையளிக்கப்பட்டுவிடுகிறது. கிராமப்புறங்களில் மாலை ஏழு மணிக்குமேல் வெளியே பெண்களையே பார்க்கமுடியாது. சாலைகளில் சந்திக்கும் அனைவருமே குடிகாரர்களாகவே இருப்பார்கள்.
(அண்மையில் நானும் என் நண்பர் சக்தியும் காரில் உடுமலையில் இருந்து திண்டுக்கல்லுக்கு காரில் சென்றோம். கூகிள் வழிகாட்ட சிறுசாலைகளில் கிராமங்கள் வழியாக சுற்றினோம். சாலைகளில் தென்பட்ட அனைவருமே போதையில் இருந்தனர். வழி சொல்லும் அளவுக்கு தெளிவான ஒருவரை கண்டுபிடிக்கவே நீண்டநேரம் ஆகியது)
இங்கே குற்றவாளிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கு சற்றும் தயங்குவதில்லை. இங்குள்ள சட்டம் தங்களை பெரும்பாலும் தண்டிப்பதில்லை என அவர்களுக்குத் தெரியும். சாமானிய ஆண்கள்கூட தருணம் அமைந்தால் பெண்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொள்பவர்கள். பெண்களைப் பற்றிய நம் பார்வை பொதுவாகவே நாகரீக சமூகங்களுக்கு உரியது அல்ல. பொது இடங்களில் இதை திரும்பத்திரும்ப இன்று காணலாம்
அத்துடன் குடித்துவிட்டு பொதுவெளியில் கீழ்த்தரமாக நடந்துகொள்வது, அத்துமீறிவது, பெண்களிடம் வன்முறை ஆகியவற்றை மஞ்ஞும்மல்பாய்ஸ் போன்ற படங்கள் வழியாக நாம் அன்றாடப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். சாமானிய இளைஞர்களிடம் அதுவே நாகரீகம் என நம் சினிமா கற்பிக்கிறது.
இந்தியாவுக்கு வர விரும்பும் எந்த ஒரு ஐரோப்பிய– அமெரிக்கப் பெண்ணிடமும் நான் முறையான நம்பகமான அமைப்புகள் அல்லது தனிப்பட்ட நண்பர்கள் வழியாக வாருங்கள். இந்தியாவின் அரசு, காவல்துறை, நீதிமன்றம், தனிநபர் அறம் ஆகியவற்றை நம்பி வரவேண்டாம் என்றே சொல்வேன். அண்மையில்கூட ஓர் இலக்கியவிழாவில் ஓர் பிரிட்டிஷ் எழுத்தாளரிடம் அதைச் சொன்னேன்
இந்தியாவில் ஏன் அதிகமாக பாலியல் வல்லுறவு நிகழ்கிறது? முதன்மைக்காரணம், இங்கே அவை அதிகமாகத் தண்டிக்கப்படுவதில்லை என்பதே. மிக அண்மைக்காலமாகத்தான் அவை செய்தியாவதும், வழக்குகளாவதும் நிகழ்கிறது. அவ்வழக்குகளில் அறுதியாக எத்தனைபேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எவராவது விசாரித்து அறிக்கை ஒன்றை உருவாக்கினால் உண்மை தெரியும்.
ஆனால் அடுத்தபக்கம் நீங்கள் சொன்னது. இந்தியப்பெண்கள் ஐரோப்பியப் பெண்களை விட மகிழ்ச்சியானவர்களா? ஆம், உண்மை. அதை இங்கே பயணம் செய்பவர்களும் பதிவுசெய்துள்ளனர்.
வாழ்க்கையின் மகிழ்ச்சி என்பது எப்படி அமைகிறது?
அ. பெரும் சவால்களும் எதிர்பார்ப்புகளும் இல்லாத சிறுவட்டத்திற்குள் வாழ்க்கை நிகழவேண்டும்
ஆ. பொறுப்புகளின் சுமை குறைவாக இருக்கவேண்டும். பொருளியல் பொறுப்பு, முடிவெடுக்கும் பொறுப்பு இரண்டுமே குறைவாக இருக்கவேண்டும்.
இ. உலகிய வாழ்க்கையின் மகிழ்வு என்பது உறவுகளில் உள்ளது. வலுவான குடும்ப உறவுகள் வாழ்க்கைக்குப் பொருள் அளித்து, மகிழ்வளிக்கும் தருணங்களை உருவாக்குகின்றன.
மூன்றுமே இந்தியப்பெண்களுக்கு உண்டு, குறிப்பாக நடுத்தர மற்றும் கீழ்நடுத்தரப் பெண்களின் வாழ்க்கையே இத்தகையதுதான். அவர்களுக்கு ஓர் எளிய குடும்பம், பொருளியல் அல்லல்கள் அற்ற அன்றாடம் இரண்டும்தான் கனவுகள். அவர்களின் பொறுப்புகள் முழுக்க பெற்றோர் மற்றும் கணவனால் சுமக்கப்படுகின்றன.
கணிசமான பெண்களுக்கு வாழ்க்கையின் நடைமுறை உண்மைகளே தெரியாது. அரசியல், சமூகவியல் , பொருளியல் சார்ந்த எந்தப்புரிதலும் இருப்பதில்லை. தன் குடும்பத்தின் மாதவருவாய் என்ன என்பதையே கூட நிறையப்பெண்கள் அறிந்திருப்பதில்லை.
இந்தியப்பெண்கள் குடும்பம் என்னும் சிறு வட்டத்திற்குள் வாழ்பவர்கள். அவர்கள் இளமையில் குழந்தைகளுக்காக வாழ்கிறார்கள். குழந்தைகள் அவர்களுக்கு இன்பம் அளிக்கின்றன. அப்படியே முதிர்ந்து குழந்தைகளின் பொறுப்பில் வாழ்கிறார்கள்.
மாறாக மேலைநாட்டுப் பெண்களுக்கு இளமையிலேயே பெரும் எதிர்பார்ப்புகள், செயல்திட்டங்கள் உருவாகின்றன. வாழ்க்கையே அதைநோக்கிய ஓட்டமாக ஆகிவிடுகிறது. அதன் வெற்றிதோல்விகள் அலைக்கழிக்கின்றன. அதன் பொருட்டு அவர்கள் இளமையை, உறவுகளை இழக்கவும் வேண்டியுள்ளது. கணிசமான பெண்கள் அங்கே தனியாக வாழ்பவர்கள். மண உறவுகள் கூட நீடிப்பதில்லை. ஆகவே முழுப்பொறுப்பும் அவர்களுக்கே.
அங்கே குடும்ப உறவுகள் வலுவாக இல்லை. குழந்தைகள் என்னும் உறவே உள்ளது. அது அக்குழந்தைகள் பதின்பருவத்தை எட்டும்வரைத்தான். அப்பெண்கள் இங்கே ஆண்கள் சந்திக்கும் எல்லா புறவுலக அறைகூவல்களையும், சிக்கல்களையும் தனியாக நின்று சந்தித்தாகவேண்டும். ஆகவே மகிழ்ச்சிக்கான தருணங்கள் குறைவு, சோர்வுக்கான தருணங்களே மிகுதி.
இதை இங்கும் போட்டுப்பார்க்கலாம். படித்த, உயர்பணிகளிலுள்ள பெண்களை விட படிக்காத எளிய குடும்பப்பெண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆண்களிலேயே கூட நகர்ப்புறத்து படித்த ஆண்களை விட கிராமப்புற படிக்காத ஆண்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நான் மலைப்பகுதி மக்களை கவனிக்கிறேன். கிராமத்து மக்களை விட அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
கனவுகள் கொண்டிருப்பது, பொறுப்பேற்பது, சிறுவட்டத்தை விட்டு வெளியே விரிந்து உலகை எதிர்கொள்வது இரண்டும்தான் துயரை உருவாக்குகின்றன. அவை இல்லாத வாழ்க்கை எளிய மகிழ்ச்சியாலானது. அப்படியென்றால் அந்த மகிழ்ச்சியை நான் ஆதரிக்கிறேனா? பரிந்துரைக்கிறேனா?
காந்தி துயரம்கொண்டிருந்தார். கனவு கண்டவர், பொறுப்பேற்றவர், உலகமென விரிந்தவர். உள்ளூரில் அவரளவுக்கே வயதான ஒரு கிழவர் எந்தக் கனவும் இன்றி , எப்பொறுப்பும் இன்றி, எளிய நியமநிஷ்டைகளுடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். காந்தியைவிட இந்த கிழவரின் வாழ்க்கை மேலானது என்று சொல்லலாமா?
கனவுகள் இல்லையேல் செயல்கள் இல்லை. செயல்களில் இருந்தே ஆளுமைநிறைவும் சாதனையுணர்வும் உருவாகிறது. துயரம் இன்றி அந்த இரு உன்னத உணர்வுகளையும் அடைய முடியாது. எளியோருக்கு எட்டவே முடியாதவை அவை. ஓர் ஐரோப்பியப்பெண்ணின் வெற்றிகளை இந்திய குடும்ப்பப்பெண் கற்பனைசெய்யக்கூட முடியுமா என்ன?
பொறுப்பேற்றுக்கொள்ளாமலிருப்பது மேலோட்டமான விடுதலை. ஆனால் ஆழத்தில் அடிமைத்தனம். அதிலுள்ள மகிழ்ச்சி உலகியல் சார்ந்தது– ஆன்மிகமாகக் குறைபாடு கொண்டது. பொறுப்பேற்றுக்கொள்ளுதல் என்பது வாழ்க்கையையே போராட்டமாக ஆக்குகிறது. அதன் விளைவான துயரங்களை கொண்டுவருகிறது.
ஆனால் அப்போராட்டமே வாழ்வின் இரண்டு முக்கியமான இன்பங்களை அளிக்கிறது. ஒன்று, தனக்குத் தானே பொறுப்பேற்றுக்கொண்டு இப்பிரபஞ்சத்தின் முன் நிற்பதன் இன்பம். இரண்டு, தன் ஆளுமை படிப்படியாக வளர்ந்து முன்னேறுவதன் வழியாக அடையும் இன்பம். தன்னம்பிக்கை, தன்னிறைவு. அதுவே மெய்யான விடுதலை.
உறவுகள் இன்பங்களே. ஆனால் உறவுகளுக்கு அப்பால் கனவுகள் கொண்டவர்களே மேலும் பெரிய, மேலும் ஆழமான இன்பங்களை அடைகிறார்கள். அறிவார்ந்த இன்பம், ஆன்மிகமான இன்பம். உறவுகளில் முழுமையாக மூழ்கியவர்கள் அதை ஒருபோதும் அறிவதே இல்லை.
இந்தியப்பெண்கள் மகிழ்ச்சியானவர்களா? ஆம், உலகியலில். அவர்கள் இங்கே சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அறிவார்ந்ததும் ஆன்மிகமானதுமான விடுதலையின் இன்பம், எய்துதலின் நிறைவு அவர்கள் அறியாதது. அதை அறியவேண்டும் என்றால் அந்த உலகியல்பாதுகாப்பின் மகிழ்ச்சிகளைக் கடந்தே ஆகவேண்டும்.
அறிவுடைய ஒருவருக்கு விடுதலையிலேயே மெய்யான இன்பம் உள்ளது. விடுதலை என்பது பொறுப்பு. எல்லா பொறுப்பும் அதற்கான எடையும் கொண்டதுதான். அதைச் சுமந்தே ஆகவேண்டும்.
ஜெ