இளநாகன் என்னும் பாணன் வழியாக மதுரையில் தொடங்கி மண்ணகரம் வரையிலான இந்த பயணம் வாசகனுக்கு கொடுப்பது எண்ணிறந்தவை. நிலக்காட்சிகள், வாழ்வியல் முறைகள், கவித்துவ மற்றும் ஆன்மீகப் பாடல்கள், குலக்கதைகள், தத்துவ தரிசனங்கள், வரலாறுகள், காம குரோத மோகங்கள், சூழ்ச்சிகள், கொடையுள்ளம் கொண்ட மடமை, படைத்திறன், அரசு சூழ்தல் என பல இருந்தாலும். இன்று வாசித்து முடித்தபின் அதாவது முதல் வாசிப்பை முடித்துள்ள நிலையில் மேலேழுந்து நிற்பது அல்லது இந்த நாவலின் வேர் என நிற்பது முழுக்க விரவிக்கிடக்கும் குறு சிஷ்ய உறவுகளே.
பரத்வாஜர், அக்னிவேசர், சரத்வான், பரசுராமர், துரோணர், கிருபர், மந்தரர், சால மரம் என்ற ஆசிரிய நிரைக்கு நிகராக துரோணர், கிருபர், அர்ஜுனன், அஸ்வத்தாமன், கர்ணன், ஏகலவ்யன், யக்ஞசேனன், பீமன் என மாணவர்கள்.
பரத்வாஜருக்கு பிறந்து தனது பிறப்பே கல்விக்குத் தடையாக உள்ள நிலையில் சமையற்காரரால் வளர்க்கப்பட்டு அக்னிவேசரிடம் மாணவராய் சென்றடைகிறார் துரோணர், தர்ப்பையை மட்டும் துணையாகக் கொண்டு . பிறப்பை உரக்க சொல்ல முடியாத நிலையை பிறந்தநாள் முதல் கொண்டுள்ள துரோணர் குருகுலத்தில் எள்ளி நகையாடப்படுகிறார். அக்னிவேசரின் குரு மனம் அவரை இனம் கொண்டு வளர்த்தெடுக்கிறது. தான் பிராமணனா சத்ரியனா என்னும் குழப்பம் . இரண்டும்தான் ஆனால் இரண்டுமில்லை என்னும் நிலை என்றுமே துரோணருக்கு. நிராதரவற்ற நிலையில் இருந்த போது தனக்கும் ஒரு மறைமுகத் தேவையிருக்க யக்ஞசேனனை மாணவராய் தேர்ந்தெடுத்து தனது குருவையும் மீறி அவனை புத்துயிர் கொள்ளச்செய்கிறார் துரோணர்.
பரசுராமர், சரத்வான் போன்ற குருமார்களால் மாணவராக ஏற்கப்படாத அல்லது ஏற்கப்பட முடியாத துரோணர் சரத்வானின் மகள் கிருபியை மனம் கொண்டு தனது குருவாழ்க்கையை தொடங்குகிறார் பிரமதத்தில். அங்கும் அவரை தரமறியா மாக்கள் சூழ. யக்ஞசேனன் நாட்டை நோக்கி செல்கிறார்.நிஷாத குலத்தின் சுவர்ணை ‘எவரும் தன் குருதியில் இருந்து விடுதலைபெறமுடியாதென்று அறி‘ என நாவலின் பிற்பகுதியில் சொல்வதுபோல யக்ஞசேனன் குருவை மறந்த தீயனாய் அதை காட்டிவிடுகிறான். ஒரு காலத்தில் நாட்டையே பகிர்ந்தளிக்க ஒப்பியவன் ஒரு மாட்டிற்காக இறைஞ்சிய ஆசிரியரை பிறவிக்குணம் கொண்டு நகைக்கிறான்.
பின்பு கிருபரின் அழைப்பை ஏற்று அஸ்தினபுரி செல்கிறார் துரோணர். பீஷ்மரின் பெருந்தன்மை அஸ்தினபுரியில் துரோணருக்கு வேறொரு இடத்தை அளிக்கிறது. முதல்நாளிலேயே அர்ஜுனனை கண்டுகொள்கிறார் தனது முதல் மாணவன் இவனென. அவரின் ஒரு துளியும் வீணாகாவண்ணம் தன்னுள் நிறைக்கிறான் பார்த்தன். அதன் விளைவாக அஸ்வத்தாமனுடன் பகை கொள்ளும் நிலை அவனுக்கு. குருவே ஆனாலும் தான் பட்ட நிலை மகன் படக்கூடாதென அர்ஜுனனிடம் அவனால் அவர் மகனுக்கு தீங்கு நேரக்கூடாதென உறுதி பெறுகிறார். இந்த இடத்தில் பிராமணனா சத்ரியனா என்ற கேள்வியில் எரிந்து கொண்டிருந்த துரோணர் அதிலிருந்து நகர்ந்து தான் குருவா தந்தையா என்ற கேள்விக்கு முன் நிற்கிறார்.
மாணவன் என்பவன் எப்படி தனது ஆசிரியருக்கு இருக்க வேண்டும் பணிவிடைகள் செய்ய வேண்டும் என்பதற்கு தனது அன்றாட செயல்கள் மூலம் சொல்வது அர்ஜுனன் என்றால். எவ்வளவு இறங்கி இறைஞ்சி கல்வியைக் கோர வேண்டும் என்பதை சொல்கிறான் கர்ணன். கிருபரின் குருகுலத்தைவிட்டு பீமனால் விரட்டப்பட்டு, வாழ்நாளெல்லாம் எது துரோணரை மற்றவர்களில் இருந்து வேறு படுத்தியதோ எங்கும் நிற்கவிடாமல் கற்கவிடாமல் துரத்தியதோ அதைக்கொண்டே அவர் அவனை சற்றுத் தள்ளி நிற்கவைத்து மாணவனாய் ஏற்றாலும், அறிவிக்கப்படாத அல்லது அறிவிக்கமுடியாத மாணாக்கனாய் மிளிர்கிறான் கர்ணன்.
கர்ணன் சார்ந்த தருணங்களில் அரசுக்கு கீழ் தான் குரு என உணர்த்துகிறது துரோணரின் செயல்கள். அது பீஷ்மரின் பால் அவர் கொண்ட தீர்க்கமுடியாத நன்றிக்கடனோ அல்லது தன்னின் கடந்த கால அவமானங்களோ நினைவுக்கு வர அதன் மறு உருவாய் வந்து நிற்கும் அவனைக் கண்டதும் அதிகாரத்தின் மேல் காட்ட முடியாத சினத்தை அவன் மேல் காட்டி சினமுறுகிறார். உண்மையில் அவை அணையாத்தீயைத் தான் ஏற்றுகிறது சாலமரத்தை முதல் குருவாய்க் கொண்ட அதிரதனின் ராதையின் மகனாய் ஆன சூரிய புத்திரனிடம்.
அவனின் வேறொரு வடிவாய், துரோணரின் படிமாக வந்து அவரிடம் வசையும் விசையும் பெற்று செல்கிறான் ஆசுர நாட்டின் கருட குலத்து அரசன் ஹிரண்யதனுஸின் மகன் ஏகலவ்யன். கனவிலும் நினைவிலும் துரோணர் ஆசானாய் அமைய திரிகரத்தை அனாயசயமாய் ஆண்டு அஷ்டபுர, சப்தகரம் என நேரில் கூட அவ்வளவு நேர்த்தியை கற்க முடியாத வில்வித்தைகளை மானசீக குருவாக துரோணரை கொண்டு தனித்து வில்லே வாழ்வென வாழ்கிறான் அவன் . விளைவு பாண்டவர்களால் ஏவப்பட்டு அவனின் கட்டை விரல் துரோணரால் தூண்டாடப்படுகிறது குருவுக்கு காணிக்கையாக. இந்த இடத்திலும் துரோணரின் நியாயம் தனது கடந்த கால அவமானங்கள் , வறுமை மற்றும் மகனைப் பற்றிய எதிர்கால அச்சம் ஆகியவற்றை நோக்கியே செல்கிறது. ஆனால் மாணவனாக ஒரு துளியளவு கூட ஆசிரியரின் சொல்லை மீறாமல் தனது விரலைத் துண்டித்துக்கொள்கிறான் ஏகலவ்யன். தாய் சுவர்ணை துரோணரை தீச்சொல்லிட்டு மாண்டுபோனாலும் நான்கு விரல்களுடன் ‘இனி இந்த நாட்டுக்கு மன்னனும் குருவும் நானே‘, இனி நம் போர்முறை நான்கு விரல்கள் கொண்ட வில்வித்தை தான் என சூளுரைத்து வீரர்களை ஒன்று சேர்கிறான்.
குருவம்சத்து இளவரசர்கள் வில்வேதம் உள்ளிட்ட ஆயுதம் சார்ந்த பயிற்சியில் இருக்க பீமன் மட்டும் சமையற்கலையில் வல்லவரான மந்தரரை தனது குருவாகக் கொண்டு மடப்பள்ளியிலேயே வளர்கிறான்.
அவனின் கையறுநிலையினாலேயே நம்மை மனமறு நிலைக்குத் தள்ளும் கர்ணன் முதல் குருவாக எந்த இடத்திலும் சொல்வது ஒரு சால மரத்தை. இப்படி பல்வேறு குரு மரபுகளில் கடந்த 71 நாட்களாக வாழும் வாய்ப்பை நாம் பெற்றிருந்தாலும் எந்த அளவுக்கு அவர்களின் ஒளிமிக்க பகுதிகள் நமக்கு தரிசனங்களாய் அமைந்ததோ அதற்கு நிகராகவே அவர்களின் துயரங்களும், வன்மங்களும், குருமார்கள் கல்வியை அல்லது வித்தையை இரண்டில் வைத்து ஆசாரங்களை முதலில் வைக்கும் நிகழ்வுகளும் வேறொரு வகையான தரிசனத்துக்கு நம்மை இட்டு செல்கிறது.
இன்னொரு முக்கிய அம்சம் எனப்படுவது இந்த நாவலில் வரும் ஆசிரியர்கள் மூலம் தத்துவ, மெய்யியல் ஈடுபாடு கொண்ட ஒரு வாசகன் (மாணவன்) பல்வேறு விவாதங்களை, கொள்கைகளை, தினமும் மனனம் செய்யும் வகையிலான மந்திர சொற்களை எளிதில் கற்க முடியும்.
எடுத்துக்காட்டாக :
மண்ணிலுள்ள அனைத்து இன்பங்களும் பனித்துளிச் சூரியன்களே. எனவே மண்ணிலுள்ள துயர்நிறைந்த இரவுகளனைத்தும் கூழாங்கல்நிழல்களே. விண்ணிலிருந்து பார்க்கையில் அவையனைத்தும் விளக்கவொண்ணா வீண்செயல்கள்.
காலத்துடன் போரிட்டுக்கொண்டிருக்கிறது உணவு. உணவை காலம் வெல்லும் கணமே இறப்பு.
விழியை அம்பு முந்துவதை அடைந்துவிட்டாய். எண்ணத்தை அது முந்துவதை இனி இலக்காகக் கொள்
கண்ணீரை அகத்தில் தேக்கிக்கொள். அகத்துக்குள் நுழையும் கண்ணீரே ஒளிகொண்டு ஞானமாகிறது
தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது.
—
இதுபோன்ற பொன்னொளி வீசும் தருணங்கள் ஆயிரம் சொல்லலாம் இந்த நாவலில் வரும் ஆசிரியர்கள் பற்றி மாணவர்கள் பற்றி. ஆனால் ஆசிரியரோ மாணவனோ அவர் எவரோ அதுதான் அவர் என்பதை காட்டும் நிகழ்வு தான் கர்ணன் அங்க நாட்டின் மன்னனாய் துரியதனனால் முடிசூடப் பட்ட தருணம். அது துரோணர், தருமன், அர்ஜுனன், கர்ணன், திருதராஷ்டிரன், ‘பார்த்தா, நீ தேடுவது வெற்றிகொள்வதற்கான உலகை. வெற்றிகொள்ளப்பட்டதுமே சலித்துப்பொருளிழப்பது அது. நான் என்னை அர்ப்பணிக்கும் களங்களை நாடுகிறேன்‘ என முன்பொருநாள் மடப்பள்ளியில் சமையல் மணம் கமழ அர்ஜுனனிடம் சொன்ன பீமன் என அனைவருக்கும் பொருந்தும்.
ஒரு வாசகனோ மாணவனோ, ஒரு நவீன மனிதன் அல்லது அப்படித் தன்னை நினைத்துக்கொள்பவன் ஏன் இந்த நூலை இன்றைய நவ நாகரீக யுகத்தில் வாசிக்க வேண்டும் ?
கவித்துவ தருணங்களையும் கனவுத்தருணங்களையும் முதல் வாசிப்பில் தித்திக்க வைத்து அடுத்த அடுத்த வாசிப்பில் மந்திர உச்சாடனங்கள் போல மனதில் முழங்க வைக்கும்.
இயற்கையின் கொடைகளான ஐம்பூதங்கள்,சூரியன், மரங்கள், பறவைகள், மனிதர்கள்,பாம்புகள், புழுக்கள், தர்ப்பை மண்டிய புல்வெளிகள் என அனைத்தையும் பார்க்கும் பார்வை இனி மாறும்.
ஆசிரியர் என்பவர் யார் அவர் எப்படி இருக்க வேண்டும் . அவரிடம் கல்வி கற்க மாணவன் எந்த இடத்தில் இருக்க வேண்டும் என சொல்லிக்கொடுக்கும். பணம் கொடுத்து ஆள் எடுப்பது அல்ல ஒரு நல்ல ஆசிரியரை அமர்த்துவது என கல்வி நிறுவனங்களுக்கு சொல்லும். ஆசிரியரோ எழுத்தாளரோ அவர் விண்ணைப்பிளந்து மண்ணில் வந்துவிழுந்த அதிசயப் பிறவி அல்ல அவரும் நம் போன்ற மனிதப் பிறவிதான். அவருக்கும் பசி மற்றும் காம குரோத மோகங்கள் உண்டு என நம்மை உணரவைக்கும்.
‘இப்பிரபஞ்சவெளியில் உண்மையில் வினாக்களே இல்லை, ஒற்றைப்பெரும் விடை மட்டுமே உள்ளது. வினாக்கள் என்பவை அதன் பல்லாயிரம் கரங்கள் மட்டுமே. அவை ஒவ்வொரு கணமும் துழாவிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் தளிர்முனைகள் உரியவர்களை கண்டுகொண்டு மெல்லச் சுற்றிவளைத்துக்கொள்கின்றன. அவர்களுக்கு பின் மீட்பில்லை‘ . ‘ஒவ்வொருவரும் அவரவருக்குரிய அஸ்தினபுரியையே சென்றடைகின்றனர்‘ போன்ற பொன் வரிகள் .. இருந்தோமா வாழ்ந்தோமா? என்ற கேள்விக்கு நிச்சயமாக ‘வாழ்ந்தோம்‘ என்று பதில் கொண்டு பிறவிப் பெருங்கடலைக் கடக்க வைக்கும்.
பாணரும் , துரோணரும் , பார்த்தனும் , கர்ணனும் நடுகற்களாய் நெஞ்சிலும் புகைப்பட உருவாய் கணினி மற்றும் கைப்பேசி முகப்புத் திரைகளிலும் இருந்து வழிகாட்டுகின்றனர்.. அசோகமித்திரனால் வெளியிடப்பட்ட தமிழ் மகாபாரதத்தின் ஒரு பகுதியான வண்ணக்கடலை வாசித்த இந்த வாசகனுக்கு.
பேராசன் ஜெயமோகனுக்கும் ‘வாசிப்பை நேசிப்போம்‘ நண்பர்களுக்கும் வணக்கமும் அன்பும் நன்றியும்.
அன்புடன்
K.M.R.விக்னேஸ்