நீலம் தந்த வெறுப்பு

அன்புள்ள ஜெ,

கடந்த நான்கு நாட்களாக நீலம் நாவலை வாசித்து முடித்துவிட்டேன். காலை கண் விழிப்பதும் இரவு கண் முடுவதும் நீலத்தோடுதான். ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு பயத்தை தந்தது நீலம். நீலம் தவிர ஏதுமற்ற உலகில் சஞ்சரிப்பதுபோல் எல்லாம் நீலமாகின. போதாத குறைக்கும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எங்கள் ஊர் தெருக்களில்லாம் கிருஷ்ணரின் நீலக்  கோடிகளை வரிசையாக பறக்க விட்டுள்ளனர். நீலம் நீலம் நீலம். எங்கும் நீலம் எதிலும் நீலம். குழப்பதோடு என் தம்பியிடம் இது பற்றி விவாதித்தேன் நீலம் முடிந்த பின் வெண்முரசுக்கு சற்று விடை கொடுத்து வேறு வகையான எழுத்தை வாசிக்கச் சொன்னான். ராதையின் தனிமைத்  துயர் கண்டு கண்ணன் மேல் சினமும் வெறுப்பும்  கொண்டேன். எல்லாம் அறிந்த கண்ணன் ராதையின் காதலை அறியாமல் இருந்திருப்பானா?

 இந்த நான்கு நாட்களில் மற்றும் ஒரு சம்பவம். எனக்கு திருமணம் நடத்த வேண்டும் என்று கூறி என்னிடம் அம்மா கேட்க, இப்போது வேண்டாம் சில வருடங்கள் செல்லட்டும் என்று நான் சொன்னேன். அதற்கு அம்மாவின் பதில் இது தான்எல உனக்கு என்ன பேயி கீயி புடிச்சிருக்கா? உன்  வயசு பயலுவெல்லாம் கல்யாணம் பண்ணிட்டு எப்படி இருக்கானுவோ.. நீ மட்டும் ஏன் இப்டி இருக்க. நாளைக்கு போய் ஜோசியக் காரர பாக்கணும் இல்லன்னா அய்யா  கோயிலுக்கு போயி கணக்கு கேக்கணும்என்று புலம்பிக் கொண்டே சென்றார்இது நடக்கும் போதும் என் கையில் நீலம் தான் இருந்தது. பிறகு பொறுமையாக சிந்திக்கும் வேளையில் ராதைக்கும் அவள் தாய்க்கும் இடையில் நடந்த அதே சம்பவம் எனக்கும் என் அம்மாவிற்கும் நடந்திருப்பது என்னைத் திகைக்க வைத்தது.

ஊகிக்க முடியாத அகம் கொண்டவராக வளம் வரும் கிருஷ்ணர் எந்த இடத்திலும் தன்னை முழுமையாக வெளிப்படுத்தாது  பிறர் பார்வையிலே நாவல் முழுக்க வளம் வருவதுயார் இவர், இவரின் அக சித்திரம் தான் என்னஎன்பதை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டியது. நான் மிகவும் ரசித்த இடம் ஒன்று உண்டு கம்சனின் இறப்பை அவர் பார்வையிலேயே அணுகுவது. அந்த பகுதி  அத்தனை உசலாட்டத்தை என்னுள் நிகழ்த்தியது. அந்த ஒரு பகுதியில் கம்சனின் மனதிலும் உள்ள மற்றொரு பக்கத்தையும் உணர்ந்தேன். அகத்தில் கண்ணன் மேல் கொண்ட பாசத்தை புத்தி மறைப்பது அவனது ஊழன்றி வேறேது.

அற்புதமான அனுபவத்திற்கு நன்றிகள் பல ஜெ.

என்றும் அன்புடன் 

சரவணன் 

அன்புள்ள சரவணன்,

நீலம் மீது எனக்கும் அந்த விலக்கம் உண்டு. அந்த பித்துக்குள் மீண்டும் செல்ல விரும்பவில்லை. ஆகவே நான் அதை மீண்டும் ஒருமுறைகூட வாசிக்கவில்லை. மெய்ப்புநோக்குவதற்காகக்கூட

ஜெ

முந்தைய கட்டுரைஅயல்நாட்டில் இருந்து அறிவியக்கம்
அடுத்த கட்டுரைநவீன அடிமைசாசனம்