அனல் காற்று (குறுநாவல்) : 12

காலையில் நான் எழுந்தபோது நன்றாகவே விடிந்திருந்தது. சன்னல் வழியாக வந்த ஒளி நான்கு சட்டங்களாக தரையில் சரிந்துக் கிடந்தது. தூக்கம் விழித்ததும் தூங்குவதற்கு முந்தைய கணம் ஏற்பட்டிருந்த அதே எண்ணம் காத்திருந்தது போல வந்து ஒட்டிக்கோண்டு நீட்சி பெறுவதை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சந்திராவும் அம்மாவும்….. ஆனால் நேற்றிரவு நான் கொந்தளிப்புடன் தூங்கினேன். அப்படியே கட்டிலில் விழுந்து குமுறும் மனதை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்படியே தூங்கிவிட்டேன். சிலகணங்களில்…

ஆச்சரியமாக இருந்தது, சுசி நீ வந்தபின்னர் நான் ஒருநாள்கூட நிம்மதியாக தூங்கியதில்லை. ஆனால் கொந்தளிப்பின் உச்சியில் கரிய நீரில் மூழ்கிப்போகும் கற்சிலைபோல தூக்கத்துக்குள் மூழ்கி அடித்தட்டுக்குப் போய் அசைவிலாது படிந்துவிட்டேன். காலையில் எழுந்தபோது நான் அறிந்த அந்த நிம்மதியும் தெளிவும் தூக்கத்தால் வந்தது. எல்லாமே துல்லியமாக, சாதாரணமாக இருந்தன அப்போது. நேற்றிரவின் எல்லாக் கொந்தளிப்புகளும் அபத்தமாக தெரிந்தன

சுசி, தூக்கத்தை மூதேவி என்பது நம் மரபு. அவளை மரணத்தின் தங்கை என்பார்கள். ஆனால் அவளைப்போல கையில் அமுதத்துடன் வரும் பிறிதொரு தேவதை உண்டா? அவளை வழிபடாத அவளை இறைஞ்சாத ஆத்மாக்கள் உண்டா? சுசி, எல்லா மானுடரும் ஒரு தருணத்தில் மரணத்துக்காக யாசிப்பவர்கள் தானே?

தலையணையை மடியில் வைத்துக்கொண்டு யோசித்துக்கொண்டே இருந்தேன். அப்படியானால் நான் அடைந்த அத்தனை உணர்ச்சியலைகளும் என்ன? பாவனைகள்தானா? நானே விரும்பி அவற்றை எனக்குள் உருவாக்கிக் கொண்டிருக்கிறேனா? துன்பத்தை ரசிக்கும் ஆழத்தின் ஆழம் போடும் நாடகம்…

எழுந்து கண்ணாடியில் என்முகத்தைப் பார்த்தபடி முகம் கழுவினேன். முகத்தில் தேங்கிக் கனத்திருந்தவை சொட்டி வடிந்து முகம் அத்தனை துல்லியமாக இருந்தது. இந்த நிம்மதிக்காகவே அத்தனை நெருக்கடிகளையும் அடையலாம் என்று எண்ணி புன்னகை செய்தேன்

அம்மா வந்து அறை வாசலருகே நின்றாள். நான் திரும்பவில்லை. ஆனால் அவளை என் உடலெங்கும் உணர்ந்தேன்.

”டேய் இன்னிக்கு நீ அங்க போறதானா நானும் கூடவே வரேன்”

நான் திரும்புவதற்குள் அம்மா சென்று விட்டிருந்தாள். ஒன்றும் புரியாமல் நான் விழித்து நின்றேன். அவள் குரலைக் கேட்டேனா, இல்லை அந்த எண்ணங்கள் மட்டும் என்னை வந்தடைந்தனவா?

குளித்து உடைமாற்றிக் கிளம்பி கார் அருகே சென்றபோது அம்மா வேகமாக வந்து காரில் ஏறிக்கொண்டாள். நான் காரை எடுத்தேன். ஸ்டீரிங்கை மெல்ல வளைத்தபடி அம்மாவையே உடலால் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்போது நான் அம்மாவிடம் எப்படிப் பேசுவது? அம்மா மிக மிகத்தொலைவில், நான் இதுவரை அறிமுகம் செய்துகொள்ளாத ஒரு பெண்மணியாக, என்னருகே அமர்ந்திருந்தாள்

காரை மெதுவாக ஓட்டினேன். பின் இருக்கையில் இருந்து வெளியே பார்த்துக் கொண்டு வந்தவள் நெடுநேரம் மெல்லச் செருமினாள். பேசமுற்பட்டு குரல் எழாத செருமல். என் உடல் அதிர்ந்து கன்னத்தில் புல்லரித்தது. சற்று நேரம் கழித்து ”அருண்” என்றாள்

என் கண்ணில் கண்ணீர் முட்டிவிட்டது. ஆனால் நான் காரை ஓட்டுவதிலேயே கவனத்தைக் குவித்திருந்தேன். அப்போது என்னை தொகுத்துக்கொள்ள அந்தச்செயல் எனக்குத் தேவைப்பட்டது.

”சரிடா…. புரியுது…” என்றாள் அம்மா. ”ஆனா நீ பொம்பிளைங்களையும் புரிஞ்சுகிடணும்… தன் புருஷன் தனக்கு மட்டும்தான் வேணும்னு பொண்ணு நெனைக்கிறதில தப்பே கெடையாது…”

நான் ஒன்றும் சொல்லவில்லை, ஆனால் என் உடலே காதாகி அவளைக் கேட்டேன். அம்மாவின் குரல் எத்தனை இனியது என அப்போதுதான் தோன்றியது. ஆழ்ந்த, கனத்த, அதேசமயம் மென்மையான பெண்குரல். அவளுடைய மாணவர்கள் அவளைக் கொண்டாடியது அதனால்தான் போலும்.

”சுசி ஒரு தேவதைடா… அவளை விட்டுராதே… உனக்கு அம்மா தோழி எல்லாமே அவதான்… அவகிட்ட அப்டியே ஒப்படைச்சிரு… அவகிட்ட அவ பெத்த குழந்தைமாதிரி இருந்திரு… உனக்கு ஒரு கொறையும் வராது. அம்பாள் மாதிரி உன்னை அவ பாத்துக்கிடுவா”

நான் என் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைக்காமல் வண்டியை ஓட்டினேன். அம்மா மந்திரம் சொல்பவள் போல ”உன்னைப்பத்தி எனக்கு என்னைக்குமே பயம்டா… நீ ரொம்ப இமோஷனலானவன்… இப்ப இவ வந்ததுக்குப்பிறகுதான் என் மனசு தெளிஞ்சிருக்கு… இவ உன்னை பாத்துக்குவா…”

நான் மூக்கு உறிஞ்சும் ஒலி கேட்டு அம்மா என் தோளை தொட்டாள் ”என் ராஜால்ல? என் செல்லம்ல? அழக்கூடாது..நீ ஒரு தப்பும் பண்ணல்லை… நீ நல்லவண்டா… அம்மாக்கு நீ எப்பவுமே நல்லவன்…. ஆம்பிளையா இரு…”

நான் ஸ்டீரிங்கைப் பிடித்த கையை விட்டுவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டேன்.

”’நடந்தது நடந்தாச்சு. விட்டிரு… விதீன்னு நெனைச்சுக்கோ… எல்லாத்தையும் நாமளே செய்றதில்லை. பலவிஷயங்கள் எப்டியோ நடந்திடுது… சரி அதையெல்லாம் இனிமே நெனைச்சிட்டே இருக்காதே…”

நான் மூச்சை இழுத்து இழுத்து விட்டேன். பவர்ஸ்டீரிங் இத்தனை இறுக்கமாக எப்படி ஆனது என்று எண்ணிக் கொண்டேன். சட்டென்று ஓர் எண்ணம் . கேட்கலாமா என்று எண்ணினேன். சந்திராவுடன் என் உறவைப்பற்றி அம்மாவுக்கு ஊகம் இருந்ததா?

ஆனால் அம்மாவிடம் மீண்டும் அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே என்னால் முடியாது என அப்போது உணர்ந்தேன். இனி ஒருபோதும் என்னால் அம்மாவை நெருங்க முடியாமல் போகலாம். இனி என்னுடன் அவள் உறவுகள் சரியாகிவிடும். ஆனால் அவள் எனக்கொரு அன்னியப் பெண்ணாக ஆகிவிட்டிருப்பாள். அன்னியத்தன்மையின் உபச்சாரம் மூலம் எல்லாம் சுமுகமாக ஆகும்….

நான் நேற்று அம்மாவிடம் சொல்லியவற்றுக்காக அப்போது என்னையே சபித்தேன். பற்களைக் கடித்துக் கொண்டு ஸ்டீரிங்கை அழுத்திப் பற்றினேன். நேராக காரைக்கொண்டு சென்று எதிலாவது மோதிவிடவேண்டும் என்ற வெறி எழுந்தது. எனக்கு எது மிக மிக முக்கியமோ அதை எப்போதைக்குமாக இழந்துவிட்டேன். நான் அம்மா மடிவிட்டு மானசீகமாக நீங்காத பிள்ளை…. ஆனால்…

கார் தெருவுக்கு வந்ததும் நான் நிறுத்தி திரும்பி வந்து கதவைத் திறந்தேன். அம்மா மிக இலகுவாக இருந்தாள். முகம் பிரகாசமாக இருந்தது. நான்தான் மிக அப்பால் எங்கோ நின்று எரிந்து கொண்டிருந்தேன். இரண்டு மணிநேரம் முன்னால் எல்லாவற்றையும் உதிர்த்துவிட்டு புதிதாக நின்றவன் நான் என்பது நம்ப முடியாத ஒன்றாக இருந்தது.

அம்மா இறங்கி தெருவைப் பார்த்தாள். ”என்னடா இப்டி இருக்கு இந்த எடம்? ஸ்லம் மாதிரி?”

”அப்பாவுக்கு கடைசி காலத்திலே வேலை இல்லல்ல?”

அம்மா பேசாமல் நடந்தாள். தெருவே குண்டும் குழியுமாக சாக்கடை வழிந்து கிடந்தது. அம்மா அவளுடைய குதி உயர்ந்த செருப்புடன் கால் ஊன்ற முடியாமல் தடுமாறினாள். கால்தடுக்கியபோது நான் அவள் தோளைப் பிடித்துக் கொண்டேன். பின் கையை எடுத்தபோது அம்மா அவள் கையை என் கைமீது வைத்து என் கையை பற்றிக்கொண்டாள்.

நான் அதிர்ச்சியும் கூச்சமுமாக கையை பின்னுக்கு இழுப்பதைப் பற்றிய எண்ணத்துடன் ஆனால் கையை அவள் பிடிக்குவிட்டுக் கொடுத்து நடந்தேன். அம்மாவுக்கு பிறர்தொடுவது பிடிக்காது. நான்கூட அவளை தொடுவதில்லை. அந்த தடையை முதற்கணத்திலேயே உடைத்தது நீதான் சுசி.

அம்மா என் கையை அவள் கையிலேயே வைத்திருந்தாள். ஈரமான உருண்ட மெத்தென்ற விரல்கள். படி ஏறும்போது நான் அந்தக் கையை இறுகப்பிடித்து ”இந்த வழி” என்றேன். அதன்பின் என் பிடி திடமானதாக ஆகியது. வராந்தாவில் யாருமில்லை. ஒரு குழந்தை சிறுநீர் கழித்த ஈரத்தடம் மட்டும் தெரிந்தது.

கதவு ஒருக்களித்து திறந்து கிடந்தது. நீயும் சுபாவும் ராணியும் அமர்ந்து எதையோ கத்தரித்து தாளில் ஒட்டிக் கொண்டிருந்தீர்கள். பாயில் சித்தி சுவருக்கு திரும்பிப் படுத்திருந்தாள். உங்கள் பேச்சுக்குரல் ஒலித்தது. என் நிழல் கண்டு நீ எழுந்து சுடிதார் துப்பட்டாவை எடுத்துப் போட்டுக்கொண்டு ”ஏன் லேட்?” என்றாய். ராணி பார்த்து ”வாண்ணா” என்றாள்

அப்போதுதான் நீ பின்பக்கம் நின்ற அம்மாவைக் கண்டாய். அரைக்கணம் பிரமித்து, உடனே மலர்ந்து, ஆச்சரியத்துடன் எழுந்து ”அத்தை!” என்றாய்

அம்மா ஒரு கணம் திகைத்தபின் விடுவிடென்று நேராகச்சென்று சித்தி அருகே அமர்ந்து கொண்டாள். சத்தம் கேட்டு எழுந்து அமர்ந்த சித்தி ஒன்றும் புரியாமல் ஏதோ சொல்ல வந்ததுமே எல்லாவற்றையும் புரிந்துகொண்டு கைகளால் வாயைப் பொத்திக் கொண்டாள். கண்கள் பெருமி வழிந்தன.

அம்மா சித்தியின் முழங்கால்மேல் கையை வைத்தாள். சித்தி கன்ணீருடன் ”வந்திட்டீங்களா? ஒரு தடவ பாக்கணும்னு ஆசைப்பட்டார். உங்க காலில விழுந்து மன்னிப்பு கேக்கணும்னு சொல்லிட்டிருந்தார்… ” என்றாள். சுபாவும் ராணியும் அழ ஆரம்பித்தார்கள்.

அம்மா மெல்ல தலைகுனிந்து உதடுகளை உள்ளே மடித்து அழுகையை அடக்கினாள். சித்தி ”மகாராணி மாதிரி இருக்கீங்கம்மா…. அந்த மனுஷனுக்கு ஏதோ புத்திகெட்டுபோய் என்னமோ செஞ்சிட்டார்… அதெல்லாம் பூர்வஜென்மத்துக்கொறைன்னு நெனைச்சுங்குங்கம்மா…. இப்ப போய் சேந்துட்டார்… செத்துப்போனவங்களை சபிக்கப்படாது… பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருங்கம்மா தாயீ” என்று அம்மாவின் கையைப் பிடித்தாள். அம்மா அதற்குமேல் தாளாமல் உடைந்து அழுதபடி சித்தியின் மடியில் விழுந்தாள்.

ராணியும் சுபாவும் அழுதபடி சுவரை நோக்கி திரும்பிக் கொண்டார்கள். என் கண்களிலும் கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை உணர்ந்தேன்.

நீ கண்ணீருடன் என்னைப் பார்த்து வெளியே வா என்று உதடு அசையாமல் சொல்லி வெளியே சென்றாய். நானும் வெளியே வந்தேன். நீ என்னிடம் ”என்ன ஆச்சு?” என்றாய்.

”அம்மாகிட்டே நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன்” என்றேன்.

”எதை?” என்றாய், உன் புருவமத்தியில் சுருக்கம்.

”சந்திரா பத்தி”

நீ ஆச்சரியம் அடையவில்லை என்பது எனக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. நகங்களையே பார்த்தாய். ஏதோ யோசித்து உள்ளே எட்டிப்பார்த்தாய். மௌனம் சில கணங்கள் கனத்து நீண்டது

பின்பு நீ சட்டென்று, ”அது அத்தைக்கே கொஞ்சம் தெரிஞ்சிருக்கும்போல” என்றாய்.

”எப்டிச்சொல்றே?” என்றேன்

”பொம்பிளைங்களுக்கு தெரியாம இருக்காது… ஆனா அதை வேணும்னே நம்பாம இருந்திருப்பாங்க.. அதைத்தெரிஞ்சுதான் என்னை வரச்சொல்லி எழுதிட்டே இருந்திருக்காங்க.”

நான் பெருமூச்சுவிட்டேன். ஆம், அதுதான்.

”இவங்களை வேற எங்கியாவது கொண்டு குடிவைக்கணும்னு நெனைச்சேன். பரவாயில்ல இப்ப அத்தையே வந்திட்டாங்க. நம்ம வீட்டுக்கே கூட்டிட்டுபோயிருவோம்” என்றாய்.

”ஏன்?”

”ஏன்னா? இவங்களை மாமா கல்யாணம் பண்ணிக்கலை இல்ல? இருந்தவரை அவரு கூடவே இருந்தார். இப்ப தனியா இருந்தா ஊரு வாய் சும்மா விடுமா? அந்தப் பொண்ணுகளுக்கு இங்க இருந்தா கல்யாணமே ஆகாது…”

நான் என் மன உருக்கத்தை அபத்தமான ஒரு நகைச்சுவையாக ஆக்கினேன் ”…பரவால்ல தமிழ் சீரியல் பாக்கிறதனால பிரயோஜனம் இருக்கு…”

நீ அதை ஓர் உதட்டுச் சுழிப்பால் விலக்கி ”நீயே அத்தைட்ட சொல்லிடு… இனிமே நீ சொல்ற எதையுமே தட்டமாடாங்க” என்றாய்.

நான் ”ஏன்?” என்றேன்

நீ வேறெங்கோ பார்த்து இழுத்தகுரலில் ”…இப்பதான் நீ ஆம்பிளை ஆயிட்டியே” என்றாய்

சுசி அந்தக்கணத்தில் நீ சொல்லாத – நான் புரிந்துகொண்ட – எத்தனை உரையாடல்கள். நான் அந்த நிமிடத்தின் உக்கிரமான அழுத்தத்தை வெல்ல நெகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டேன். அதை வளர்த்தெடுத்தேன்.

”சுசி எனக்கு இப்ப என்ன தோணுது தெரியுமா?”

”ம்?”

”அப்டியே உன் காலிலே விழுந்து கும்பிடணும்னு…. நான் உன்னைப்பத்தி நெனைச்சதெல்லாமே தப்பு… நீ ஆயிரம் கொழந்தைகளுக்கு அம்மா மாதிரி இருக்கே”

நீ சிரித்தாய். பின் முகம் மாறி ”அத்தை என்ன சொன்னாங்க?” என்றாய்

”எதைப்பத்தி?”

”சந்திராவைப்பத்தி”

”விட்டுடுன்னாங்க…”

”ம்?” என் கண்களை நீ பார்க்கவில்லை.

”நான் சரின்னேன்”

நீ சுற்றுமுற்றும் பார்த்தாய் பின்பு சட்டென்று சிறுமிபோல எம்பி உன் சிறிய மார்புகள் என் மார்பில் தோய்ந்து ஏற என்னை ஆரத்தழுவி ”மை காட்! மை காட்!” என்றாய். உன் கண்ணீரை அத்தனை அருகே கண்டேன். உன்னுடைய சிறிய வாயின் வெம்மையான நறுமணத்தை உணர்ந்தேன். உன் இடையை சுற்றிப்பிடித்து உன் பின்பக்கத்தை கைகளால் கவ்வி என் உடலுடன் உன்னை இறுக்கிக் கொண்டு உன் உதடுகளை அழுத்தமாக முத்தமிட்டேன்.

உனக்குள் புகுந்துவிடுவது போன்ற முத்தம். உதடுகளை இணைத்து இரு உடல்களையும் ஒன்றாக ஆக்கிவிடுவது போன்ற முத்தம். பின்பு நீ மூச்சுத்திணறி மெல்ல திமிறினாய். அந்த திமிறல் என்னை வேகம் கொள்ளச்செய்தது. உன் உதடுகளை கவ்விக்கொண்டேன்.

சுசி, அப்போது ஓர் எண்ணம் மின்வேகத்தில் தோன்றிச்சென்றது. சந்திராவின் உதடுகளைவிட மிகச்சிறியவை உன் உதடுகள் என. என் பிடியும் இதழ்களின் கவ்வலும் தளர்ந்தன. அந்த தளர்வை உணர்ந்து நீ உன் கண்களை மேலேற்றினாய். அந்தப்பார்வையைக் கண்டதும் நான் பிடிநழுவிப் பாதாளத்தில் விழுபவனைப்போல உணர்ந்து மீண்டும் உன்னைப் பற்றினேன். உன் இதழ்களை உயிர்ர் காக்கும் மருந்தை உண்பவன்போல கவ்விக்கொண்டேன். .

சட்டென்று நீ வலுவாக உதறி என்னை விடுவித்துப் பின்னால் நகர்ந்தாய். நல்லவேளையாக முச்சந்திக்கு நிகரான அந்த வராந்தாவில் யாருமில்லை. ஆனால் அப்போது நான் முச்சந்தியில் வைத்து உன்னை முத்தமிட விரும்பினேன்.

நீ கண்களை கீழே தழைத்திருந்தாய். என் உயரத்திலிருந்து பார்க்கையில் நீ அரைவிழி மூடியிருப்பதுபோல இருந்தது. நான் உன் கையைப் பிடித்தேன். ”நோ” என்று பின்னால் நகர்ந்து ”திஸ் பிளேஸ்….” என்றாய்.

நான் உன்னையே பார்த்தேன். மெல்லிய கழுத்தை, சிறிய செப்புத் தோள்களை, பறந்த சிறுகுழல் பிசிறுகளை, கன்னத்தில் எழுந்த சின்னஞ்சிறிய பருவை… உன் சிறிய உதடுகள் ஈரமும் செம்மையுமாக தளதளத்தன…

நான் பெருமூச்சுடன் உள்ளே போகத் திரும்பினேன். அப்போது நீ மெல்ல அசைந்தாய். அந்த அசைவில் நான் என் கட்டுப்பாட்டை இழந்து உன்னை அப்படியே அள்ளிக்கொண்டு சுவரோடு சேர்த்து வெறியுடன் முத்தமிட ஆரம்பித்தேன். குரல்வளை அழுந்தித் தட்டுப்பட்ட கழுத்தில் கன்னங்களில் உதடுகளில்…. நீ திமிறிக்கொண்டே இருந்தாய். மூச்சுமுட்டுபவளைப்போல, நிலைகொள்ளாதவளைப்போல… உன் திமிறல்கள் கைக்குள் திமிறும் புறாபோல என்பிடிக்குள் மென்மையாக முரண்டன. அந்த அசைவே என்னை என்னை மறக்கச்செய்தது…. சுசி என் முதல் காம அனுபவம் அது என்று சொல்வேன். நான் அப்போதுதான் என்னை சில கணங்கள் என்னை முற்றிலும் மறந்திருந்தேன்….

பின்பு நீ என்மீது ஒரு மெல்லிய சல்லாத்துணி போல படர்ந்துகொண்டாய். உன் சுயநினைவே இல்லாமலாகியது. சூழலும் சந்தர்ப்பமும் எதுவுமே தெரியவில்லை. ஆனால் நான் சுய உணர்வை அடைந்தேன். உன்னை விலக்கி உன் துப்பட்டாவை எடுத்து உன் தோளில் போட்டேன்.

ஆனால் உன் முகம் கொதித்துக் கொண்டிருந்தது. நீ ”ம்ம்” என்ற முனகலுடன் என்னை எம்பிப் பற்றிக்கொண்டாய். ”க்ம் திஸ் ஸைட்…”’ என்றாய் கிட்டத்தட்ட என்னை இழுத்துசென்றாய். அங்கே ஏராளமான மின்சார மீட்டர் பெட்டிகளுக்குக் கீழே பழைய பக்கெட்டுகளும் துடைப்பங்களும் ஒட்டடைபடிந்து கிடந்த ஒரு இடுக்குக்குள் என்னைக் கொண்டு சென்று இருகைகளாலும் அள்ளிப்பிடித்துக் கொண்டாய். முகத்தை தூக்கி சிறிய குமிழ் மூக்கு உணர்ச்சியால் சிவந்து அசைய ”கிஸ் மீ” என்றாய்.

நான் உன்னை முத்தமிடும்போது பல கண்கள் என்னைப் பார்ப்பதாக உணர்ந்தேன். சுபா, ராணி… என்ன இது என்று என் அகம் பதைத்தது. ஆனால் நீ பிளாஸ்டிக் பொம்மை போல என் உடலுடன் உருகி ஒட்டிக்கொண்டாய். உன் கனமற்ற தொடைகளாலும் என்னைக்கவ்விக் கொண்டபடி ”ஐ வில் கில் யூ… ஐ வில் கில் யூ”என்று முனகி மேலும் மேலும் வெறிகொண்டாய். சட்டென்று மின்னதிர்ச்சி பட்டவள் போல என் இரு கன்னங்களையும் உன் கைகளால் பிடித்து நகங்களால் அழுந்தக்கிள்ளி உலுக்கி உலுக்கி பின் மெல்ல தளர்ந்து என் மார்பில் தொய்ந்து சரிந்து மூச்சுவாங்கினாய்

உன் கழுத்துக்குழி பதைப்பதை அதன் மீது வியர்வையுடன் உன் தங்கச்சங்கிலி சேர்ந்து மின்னுவதை குனிந்து பார்த்தேன். என் கன்னங்களில் உன் நகக்காயம் எரிந்தது. உன்னை விலக்கி உன் இதழ்களில் முத்தமிட்டு ”யாராவது பாத்திருவாங்க” என்றேன்

உன் கண்களில் பிறந்த குழந்தையின் கண்கள்போல மெல்லிய படலம் ஒன்று இருப்பது போல தோன்றியது. உன் உதடுகள் அப்போது சற்றே கனத்து சிவந்திருப்பவையாக, உன் கன்னங்கள் காய்ச்சலில் தகிக்கும் சருமத்தின் சிவப்புத்திட்டுகளுன் இருப்பவையாக தெரிந்தன.

”போலாமா?” என்றேன்

நீ மெல்ல ”ம்ம்” என்றாய்.

நான் ”ட்ரெஸ்லாம் கசங்கியிருக்கு” என்றேன்

நீ சுடிதாரின் டாப்ஸை கையால் நீவி இழுத்து விட்டாய். அப்போது உன் முலைக்கண்களின் கூர்மை தெரிந்து மறைந்ததைக் கண்டேன் என் கண்களைச் சந்தித்துப் புன்னகை செய்தாய். சுசி, அந்தப் புன்னகைக்கு இணையாக ஒரு புன்னகையை நீ ஒருபோதும் பூத்ததில்லை.

”கமான்” என்று நீ முன்னால் சென்றாய். நான் உன் பின்னால் வந்தேன். என் உடைகளில் ஒட்டடை ஒட்டியிருந்தது. வந்தபடியே அவற்றை துடைத்தேன். என் கன்னம் எரிந்தபடியே இருந்தது

நீ உள்ளே போனாய். நான் அரைக்கணம் கழித்து உள்ளே வந்தேன்.

அம்மாவையும் உன்னையும் அங்கேயே விட்டுவிட்டு நான் கிளம்பினேன். எரியும் கன்னங்களுடன் என் காரை சாலையில் ஓட்டிச்சென்றபோது சட்டென்று எனக்கு உற்சாகம் வந்தது. நெடுநாட்களுக்குப் பின் ஒரு பாடை சீட்டியடித்தேன். எனக்கு மிகப்பிடித்த பாடல் அது என்பதை சீட்டியடித்த பின்னர்தான் அறிந்தேன் .

”உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்

உன்னை உள்ளம் எங்கும் அள்ளித்தெளித்தேன்

உணர்வினில் விளையாடி வரும் உறவுகள் பலகோடி…

எஸ்.ஜானகியின் குரல் அந்தப்பாடல் அளவுக்கு இனிதாக எப்போதுமே அமைந்ததில்லை சுசி. அந்த வெட்கத்தையும் தாபத்தையும் கனிவையும் குழைவையும் ஜானகியன்றி வேறு யாரும் பாடிவிடமுடியாதென அப்போது தோன்றியது. அந்த பாடலே மனமெங்கும் ரீங்காரம் செய்து கொண்டிருந்தது. குறிப்பாக உணர்வினில் விளையாடீ என்ற நீட்டலில் சுழன்றிறங்கும் அந்த மெல்லிய கீச்சிடல். பலகோடீ என்ற முனகலில் உள்ள இரு மெல்லிய வளைவுகள்…

நெடுநாளைக்குப் பின் என் அலுவலகம் சென்றேன். அலுவலகமே புதிய இடம்போல் இருந்தது. செல்லப்பன் என்னைப் பார்த்ததும் சற்று ஆச்சரியப்பட்டபின் வணக்கம் சொன்னான். நான் என் கேபினுக்குள் சென்று அமர்ந்துகொண்டேன். கண்ணாடிமேஜை மீது டேபிள் வெயிட்டை கையால் சுழற்றிக்கொண்டே இருந்தேன்.

செல்லப்பன் கடிதங்கள் அடங்கிய கோப்பை என் முன் வைத்தான். நான் அவற்றைப் பார்க்க ஆரம்பித்தேன். மெல்ல மெல்ல வேலையில் அமிழ்ந்தேன். தீவிரமாக, வேறு நினைப்பே இல்லாமல் வேலைசெய்து கடிதங்களுக்கு பதில்களை நானே கணிப்பொறியில் டைப் அடித்தேன். அவற்றை உறைகளில் போட்டு விலாசம் ஒட்டினேன். செல்லப்பனைக் கூப்பிட்டு அவற்றை அனுப்பச் சொல்லிவிட்டு ஒரு காபிக்கும் சொன்னேன்

அப்போது செல் அடித்தது. சந்திராதான். நான் ஒரு கணம் தயங்கினேன். வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் அடுத்தக்கணம் பார்ப்போமே என்றும் தோன்றியது.

”எஸ்…” என்றேன்

”அருண்… நான் உங்கிட்ட பேசணும்” சந்திராவின் குரல் தீவிரமாக கறாராக இருந்தது.

”ம்ம்” என்றேன்

”எங்க இருக்கே?”

”ஆ·பீஸ்லே”

”ஐ ஸீ… குடும்பஸ்தனா லட்சணமா இருக்கப்போறே… இல்ல?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

”ஸோ… என்ன புரோக்ராம்?”

”என்ன?”

”அம்மா என்ன சொல்றாங்க?”

”ஷி இஸ் தேர் நவ்”

சந்திரா ஆச்சரியத்துடன் ”எங்கே?” என்றாள்

”அந்த வீட்டிலே. அவங்களை எங்க வீட்டுக்கே கூட்டிட்டு வர்ரதா இருக்கோம்…”

”ஜிஎஸ் ஒத்துக்கிட்டாங்களா?”

”நான் சொன்னா கேப்பாங்க” அந்தச் சொல் அவளுக்குப் புரிகிறதா என காது கூர்ந்தேன்

ஆம் சுசி, அவளுக்குப் புரிந்தது என்பதை செல்போனில் ஒலித்த மெல்லிய மூச்சே சொல்லிவிட்டது

”ஐ ஸீ….” என்றாள்

நான் பேசாமல் இருந்தேன்

”யூ …ஸில்லி பாஸ்டர்ட்” பாம்பு சீறுவது போன்ற ஒலி

சுசி என் மனம் அப்போது ஓர் உவகையை அடைந்தது. சந்திராவை நான் வெல்லும் இடங்கள் அவை.

”அப்ப நீ யோக்கியன் ஆயிட்டே… ம்ம்?” சந்திராவின் பற்கள் கெட்டித்துப்போயிருந்தன ”….ஸோ நீ பாவமன்னிப்பு எடுத்தாச்சு… டர்ட்டி பாஸ்டர்ட்… எஸ், யூ ஆர் எ பாஸ்டர்ட்…”

”எஸ்.. ஐ யம்” என்றேன்

”வெளையாடுறியா? நீ என்னைத் தெரிஞ்சுக்கல்லை… பிளடி சன் ஆ·ப் எ பிச், உன்னைத் தேடிவந்து கொரல்வளையைக் கடிச்சு துப்பிடுவேன்…. என்னை என்னன்னு நெனைச்சே? உங்கம்மாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ணிடுவா? ஐ வில் கம் மைசெல்ப் ஆண்ட் பிக் யூ அப்…. பருந்து தூக்குற மாதிரி தூக்கிட்டு வந்திருவேன்…” சந்திராவால் மூச்சிரைப்பு தாளாமல் பேசமுடியவில்லை.

நான் மெல்ல தளர்ந்து என் கால்களை நீட்டிக் கொண்டேன். சந்திரா தன் வேகத்தை மெல்ல மெல்ல அவளே அடக்கிக் கொண்டாள்.

”அந்தக் குட்டி எங்க இருக்கா?”

”சுசி..? சுசி அங்கதான் இருக்கா” நான் தடுமாறினேன்

சட்டென்று சந்திரா மூச்சை இழுப்பது கேட்டது. பின் மெல்லிய குரல் ”ஸோ, யூ ·பக்ட் ஹெர்?”

நான் ஒரு எண்ணமும் இல்லாமல் அமர்ந்திருந்தேன்

”சொல்லுடா ….பாஸ்டர்ட், அவளையும் பண்ணிட்டியா?”

”இல்லை சந்திரா…அம்மா மேல சத்தியமா இல்லை…”

”சீ !எதுக்குப்போய் அம்மாவை இழுக்கிறே? வெக்கமில்லை உனக்கு?”

”சத்தியமா சந்திரா அப்டி இல்லை”

”ஐ நோ… ஐ யம் அ டெவில்…. டெவில் நோஸ் எவ்ரி திங்… ஐ நோ” சந்திரா கிட்டித்த குரலில் சொன்னாள் ”உன் குரலே போதும் எனக்கு, எல்லாம் தெரிஞ்சிரும் தெரியுமா?”

நான் மெல்ல கோபமானேன். அவள் என் மிக அந்தரங்கமான ஓர் இடத்துக்குள் நுழைகிறாள். சுசி, அவளை நான் அப்போது வெறுத்தேன். அவளை அக்கணம் கொல்லக்கூட செய்திருப்பேன். அவள் இல்லாமலிருந்திருந்தால் இன்று என் அனுபவம் எத்தனை தூயதாக இருந்திருக்கும்…. என் மனம் அந்த தருணத்தில் அப்படி திமிறி ஊசலாடியிருக்குமா என்ன? சுசி நான் எதை இழந்தேன் என்று அப்போது உணர்ந்தேன். ஒருபோதும் இழக்கக்கூடாத ஒன்று அது சுசி. நான் இழந்தது காதலை…. எனக்கு இனி உறவுகள்தான் சாத்தியம், ஒருபோதும் ஓருபோதும் ஒருபோதும் காதல் சாத்தியமல்ல..

என் தொண்டை ஏறி இறங்கியது. என் கண்கள் நிறைந்து கனத்திருந்தன. தன்னிரக்கத்தின் படிகளில் இறங்கி உலகிலேயே கடைக்கோடியனாக, ஜென்ம ஜென்மாந்தரங்களில் சாபம் பெற்றவனாக உணர்ந்து அங்கே இருந்தேன். மீண்டும் நான் தூய்மைக்குத் திரும்ப முடியுமா சுசி? உன் முதல் முத்தம் என் முதல் முத்தமாகவும் இருக்கும் ஒரு கணம் இனி வாய்க்குமா… சுசீ, அதற்காக நான் இனி ஒரு பிறவி காத்திருக்கத்தான் வேண்டுமா?

சந்திரா என் மௌனத்தைக் கவனித்து மெல்ல மெல்ல அடங்கினாள். பின்னர் ” நீ உடனே கெளம்பி வா” என்றாள்.

”அப்றமா வாரேன்…”

”நோ இப்பவே வரணும்…”

”நான் ஆபீசிலே இருக்கேன்”

”எந்த நரகத்திலே இருந்தாலும் நீ இப்ப வந்தாகணும்.. நான் உங்கிட்ட பேசணும்”

”லுக் சந்திரா…”

”டாமிட் நீ வரப்போறியா இல்லியா? அப்ப நான் அங்க வரேன்… இப்பவே கெளம்பி வரேன்”

நான் பேசாமல் செல்லை என் மண்டையில அடித்தேன்

”லுக், என்னால தூங்க முடியல்லை.. நான் உன்னை இழந்திட்டே இருக்கிறதா எனக்குப்படுது… தட் மீன்ஸ் ஐ யம் டையிங்…. நேத்து ராத்திரி நான் தூங்கலை. உன்னை கூப்பிட்டுட்டே இருந்தேன்…”

”நான் தூங்கிட்டேன்….”

”மிஸ்டுகால் பாத்து எடுத்திருக்கலாம்லியா?”

”பாக்கலை…காலையிலேயே அங்க போய்ட்டேன்”

”அருண்…டூ யூ நோ? நேத்து ராத்திரி முதல் இப்பவரை நான் ரூம்ல அடைஞ்சு கிடந்து மாஸ்டர்பேட் பண்ணிட்டே இருக்கேன்…. உன் படத்தைப் பாத்து… ஸீ பாய், ஐ யம் கெட்டிங் மேட்.. கடவுள் படத்தை வச்சு உபாசனை செய்ற மாதிரி… திரும்பத் திரும்ப….. ஐ யம் பர்னிங்… அருண் மை டியர்…நான் உன்னை மிஸ் பண்ணிட்டே இருக்கேன்… நீ அலையில ஏறி போய்ட்டே இருக்கே…. ப்ளீஸ் கம்… டோண்ட் லெட் மி டை…ப்ளீஸ் அருண் ப்ளீஸ் கம்… டோண்ட் லெட் மி டை , மை டியர்…”

சந்திரா கேவிக்கேவி அழுதாள். நான் அவளால் ஒருபோதும் அப்படி அழ முடியும் என்று எண்ணவில்லை. அழ அழ அவளுடைய தேம்பல்களும் விம்மல்களும் அதிகரித்தபடியே சென்றன ”ப்ளீஸ் கம்… ப்ளீஸ் கம்” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள்.

நான் மறுமுனையில் அந்த அழுகையை கேட்டபடி என் கண்ணெதிரே ஓடிய தெருவை, கண்ணாடிக் கதவை திறந்து செல்லப்பன் கொண்டு வைத்த டீயை நிழல் வடிவங்களாகப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன்.

பின் முச்சுவாங்கும் ஒலி. பின்னர் ஆழ்ந்த மௌனம். நெடுநேரம். செல்லை வைத்துவிட்டாளா? ”சந்திரா?”

”ம்ம்”

”நான் வரேன்”

”ம்ம்”

நான் செல்போனை அப்படியே வைத்திருந்தேன். ஒலியே இல்லை. ஆனால் அவள் மறுமுனையில் இருப்பதை உணர்ந்தேன். சட்டென்று முத்த ஒலிகள். அணில்களின் கிச் கிச் போல. இலைநீர்த்துளிகள் மணலில் சொட்டுவதுபோல. முத்தம் முத்தம் முத்தம்…. மூச்சிளைப்பு ஒலியும் தொண்டை அடைக்கும் ஒலியும் முத்த ஒலிகளும்…

நான் அந்த ஒலியால் தூக்கி எங்கோ கொண்டு செல்லப்பட்டதாக உணர்ந்தேன். பின் அவள் பெருமூச்சு விட்டபோதுதான் நான் என் உடல் மொத்தமாக விரைத்து இறுகியிருப்பதைக் கண்டேன். மெல்ல தளர்ந்து நானும் பெருமூச்சுவிட்டேன்

”அருண்”

”ம்ம்”

”ப்ளீஸ்”

”ம்ம்”

”நான் லைனை கட் பண்ண மாட்டேன்… நீ அப்டியே செல்லை உன் கிட்ட வச்சுக்கோ…. ஐ வில் கீப் த மொபைல் இன் மை செஸ்ட்”

”ம்ம்” என்றேன்

செல்லை அப்படியே என் சட்டைப்பைக்குள் வைத்துக் கொண்டேன். உயிருடன் துடிக்கும் ஓர் இதயத்தை சட்டைக்குள் வைத்துக் கொண்டிருப்பது போல இருந்தது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகாதலர் தினம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅனல்காற்று:கடிதங்கள்