நிர்மால்யாவுக்கான ஒருநாள் கருத்தரங்கு பற்றி பேசப்பட்டபோது இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு நண்பர் கேட்டார், ‘இந்த ஒருநாள் கருத்தரங்குகளால் என்ன பயன்? முழுநாளும் ஒருவரைப்பற்றி பேசினால் எவர் வருவார்கள்? ஒரு நூறுபேர் வருவார்களா?”
நான் “ஆம் நூறு பேருக்குள்” என்றேன். “செலவை அந்த நூறு பேருக்காகப் பகிர்ந்தால் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் என ஆகும். அதற்கு அவர்களுக்கு ஏதேனும் நூல்களைப் பரிசளிக்கலாமே? நிர்மால்யா நூல்களையே அளிக்கலாமே?” என்றார். அந்தக் கணக்கு சரிதான். ஆனால் அது வணிகக்கணக்கு, இலக்கியக் கணக்கு அல்ல.
முதல்விஷயம் இந்த உரைகள் இங்கே இருக்கும் என்பது. நாம் நிர்மால்யாவை பற்றிப் பேசினோம் என்பதற்கான ஆவணமாக. இன்று இரா.முருகன் பற்றி தேடும்போது அவரைப்பற்றிய நற்றுணை அமைப்பின் கருத்தரங்க உரைகளும், பதிவுமே காணக்கிடைக்கின்றன.
நூறுபேர் ஒருவரை ஒருநாள் முழுக்க பேசுகிறார்கள், கேட்கிறார்கள் என்றால் அதுவே ஒரு பெருமை. பெரும்பாலான படைப்பாளிகள் தமிழ்ச்சூழலில் எதிர்பார்க்கவே முடியாத ஒன்று அது. சென்ற தலைமுறையில் பலர் அத்தகைய ஒரு மதிப்பை பெறாமலேயே மறைந்தனர். எண்ணிப்பாருங்கள், க.நா.சு, சி.சு.செல்லப்பா போன்றவர்களுக்கு இப்படி ஒரு விழா கொண்டாடப்பட்டிருந்ததா? லா.ச.ரா? மௌனி?
ஒரிரு விதிவிலக்குகள் அரிதாக நிகழ்ந்தன. ஒன்று எம்.வி.வெங்கட்ராமுக்கு. அது முழுக்க முழுக்க தஞ்சை பிரகாஷ் என்னும் தனிநபரின் முயற்சியால் நிகழ்ந்த விழா. இன்னொன்று வெங்கட் சாமிநாதனுக்கு வெளியிடப்பட்ட மலர். அது சேதுபதி அருணாசலம் என்னும் தனிநபரின் ஊக்கம். அசோகமித்திரனுக்கு பெருந்தேவியின் முயற்சியால் ஒரு விழா சென்னையில் எடுக்கப்பட்டது.
இப்படி யோசித்துக் கொண்டே செல்கிறேன். அப்படி விடுபட்டவர்கள் எவர்? இன்று, உடனடியாக ஒரு கருத்தரங்கு தேவைப்படுவது நீல பத்மநாபனுக்கு. அவரைப் பற்றிய விரிவான வாசிப்புகள் அதனூடாக நிகழ்ந்து அவை ஆவணப்படுத்தப்படவேண்டும். தமிழ் இயல்புவாத எழுத்தின் முன்னோடியாகிய அவரை அடுத்த தலைமுறையினர் எப்படி அணுகுகிறார்கள் என்பது முக்கியமான ஒன்று. இலக்கியம் அவ்வாறு ஒவ்வொரு தலைமுறைக்கும் தொடுத்துக்கொண்டே செல்லும் ஒரு பெருக்கு.
எப்போதுமே தமிழில் தனிநபர்களின் முன்னெடுப்பால்தான் இப்படி மூத்த எழுத்தாளர்கள் கொண்டாடப்பட்டிருக்கின்றனர். பிரமிளுக்கு வாழ்நாள் முழுக்க துணையாக , வழித்தோன்றலாக கால. சுப்ரமணியம் நிலைகொண்டார். கே.டானியலுக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் தஞ்சை பிரகாஷ் முன்னின்றார். மௌனியை முன்வைப்பதில் கி.ஆ.சச்சிதானந்தம் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆத்மாநாம் தொடர்ச்சியாக பிரம்மராஜனால் நிலைநிறுத்தப்பட்ட ஆளுமை.
இலக்கியத்தில் செயல்பட முன்வருபவர்களில் மிகச்சிலருக்கே அந்த வகையான ‘பொறுப்பு’ உருவாகிறது. தங்கள் முன்னோடிகளை பாராட்டவேண்டும், அவர்களுக்கு பொதுச்சமூகம் செய்யத்தவறியதை தாங்கள் செய்யவேண்டும் என்னும் எண்ணம் உருவாகிறது. நிகழ்வுகளை ஒருங்கிணைக்கிறார்கள். இதழ்களை வெளியிடுகிறார்கள்.
உண்மையில் இலக்கியத்தை வெறுமே எழுதுவது மட்டுமே என எடுத்துக்கொள்ளாமல் இலக்கியம் சார்ந்த ஒட்டுமொத்தச் செயல்பாடாகவே எடுத்துக்கொள்பவர் சிலரே. சிலருக்கே அந்த திறனும் தகுதியும் உண்டு என்பது ஒருபக்கம். பலருக்கு அதன் முக்கியத்துவமும், அந்த உளநிலையும் புரிவதில்லை என்பதே மேலும் உண்மை. அதை பொதுச்சமூகம் புரிந்துகொள்வதில்லை என்பதில் வியப்பில்லை. அவர்களுக்கு இலக்கியம் என்னும் விழுமியம் தெரியாது. இலக்கியவாதிகளும் பலசமயம் புரிந்துகொள்வதில்லை.
இலக்கிய வம்பர்கள் அவர்கள் இத்தகைய செயல்பாடுகளை அமைப்பாளர்கள் தங்களை முன்வைக்கும் செயல் என்றோ, இலக்கிய அதிகாரம் என்றோ, தொடர்புகளை உருவாக்குதல் என்றோ முத்திரைகுத்துவதுண்டு. ஆனால் இச்செயல்பாடு இல்லையேல் இலக்கியம் ஓர் இயக்கமாக நீடிக்காமலாகிவிடும்.
ஒவ்வொரு தலைமுறையிலும் சிலர் இதைச் செய்துகொண்டே இருக்கின்றனர். சிலர், இலக்கியப்படைப்பாளிகளாகக் கூட இருப்பதில்லை. இலக்கிய வீதி என்னும் அமைப்பை நடத்திய இனியவன் ஓர் உதாரணம். காஞ்சிபுரம் இலக்கியவட்டம் என்னும் அமைப்பை நடத்திய வெ.நாராயணன் ஓர் உதாரணம். இன்று தர்மபுரியில் தகடூர் இலக்கியப் பேரவை என்னும் அமைப்பை நடத்திவரும் மொரப்பூர் தங்கமணி ஓர் உதாரணம். அவர்கள் வழியாகவே இலக்கியம் வாழ்கிறது.
நான் எழுதவந்த காலம் முதல் இலக்கிய அமைப்பாளனாகவும் செயல்பட்டிருக்கிறேன். பிற எழுத்தாளர்களுக்கான அரங்குகளை 1992 முதல் இன்றுவரை ஆண்டுதோறும் ஒருங்கிணைக்கிறேன். மலர்களும் விமர்சனநூல்களும் வெளியிட்டிருக்கிறேன். பெரும்பாலான படைப்பாளிகள் வெவ்வேறு விருதுகள் பெறும்போது விரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகிறேன். தமிழில் அனேகமாக அத்தனை முக்கியமான படைப்பாளிகள் பற்றியும் விரிவான பதிவுகளைச் செய்துள்ளேன். இன்று விருதுகள் வழங்குவது வரை அந்தப் பணி தொடர்கிறது. அதற்கிணையானதே அடுத்த தலைமுறையை அடையாளம் காட்டும் பணியும்.
தமிழின் முன்னோடிகள் எல்லாரும் அவர்களால் இயன்றவகையில் இதைச் செய்துள்ளனர். உதாரணமாக சி.சு.செல்லப்பா தன் ஆதர்சப் படைப்பாளியான பி.எஸ்.ராமையாவுக்காக எடுத்துக்கொண்ட தொடர்முயற்சி. அவருக்காக ஓர் இலக்கிய அரங்கை கூட்டி அதில் மிகக்குறைவானவர்களே பங்கெடுத்ததைப் பற்றி அவர் எழுதிய ஒரு குறிப்பை அன்றைய குங்குமம் இதழில் நான் வாசித்த நினைவு இருக்கிறது. அன்று அந்த முயற்சியை புரிந்துகொள்ள முடியாத ஒரு திகைப்பு எனக்கு உருவாவனதை இன்றும் நினைவுகூர்கிறேன்
க.நா.சுப்ரமணியம் வாழ்நாளெல்லாம் முன்னிறுத்திய ஆளுமையான ஆர்.ஷண்முகசுந்தரத்திற்காக விழா ஒன்றை எடுக்க தொடர்ச்சியாக பலருக்கு கடிதங்கள் எழுதி முயன்றதை காணலாம். புதுமைப்பித்தன் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டிருந்த சூழலில் அவருக்கு ஒரு மலர் வெளியிட்டபடித்தான் சுந்தர ராமசாமி இலக்கியத்துக்குள் நுழைந்தார்.
அண்மையில் யூமா வாசுகிக்கு அவருடைய முற்போக்கு முகாமைச் சேர்ந்த நண்பர்கள் இதைப்போன்ற ஒரு முழுநாள் கருத்தரங்கை ஒருங்கிணைத்தார்கள். சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு திருச்சியில் லாவண்யா சுந்தரராஜன் – சுனில் கிருஷ்ணன் முயற்சியால் ஒரு கருத்தரங்கு ஒருங்கிணைக்கப்பட்டது. எஸ்.ராமகிருஷ்ணன், என்.ஸ்ரீராம் உட்பட முக்கியமான எழுத்தாளர்களுக்கு நற்றுணை அமைப்பு சென்னையில் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தனர். ஆகுதி சார்பிலேயே இதற்கு முன் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு முழுநாள் கருத்தரங்கு நடைபெற்றது. என் அறிதலுக்கு வெளியேயும் அவ்வண்ணம் பல நிகழ்வுகள் ஒருங்கிணைக்கப் பட்டிருக்கலாம்.
அகரமுதல்வன் அதே உளநிலையில் இன்று இருந்துகொண்டிருக்கும் இளைய தலைமுறை படைப்பாளி. இலக்கியவிழாக்களை அவர் ஒருங்கிணைப்பது பெரும்பாலும் தமிழின் முன்னோடிகளுக்காகவும் புதியவர்களுக்காகவும். நிர்மால்யாவுக்கான அவருடைய விழா என்பது புறக்கணிப்புகள், எதிர்மறை மனநிலைகளை பொருட்படுத்தாமல் தமிழில் என்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளின் நீட்சி. என்றும் அத்தகையோர் இருப்பார்கள், எழுந்து வந்துகொண்டே இருப்பார்கள் என்னும் நம்பிக்கையையே இந்த விழா எனக்கு அளித்தது.
இந்த எல்லா அமர்வுகளிலும் பேசுபவர்களில் பெரும்பாலானவர்கள் என் அணுக்க நண்பர்கள் என்பது நிறைவளிக்கிறது. அவர்களில் பலர் தொடக்க வாசகர்களாக இருந்து மெல்ல மெல்ல உருவாகி வந்ததை நான் அறிந்திருக்கிறேன். அவர்களின் உரைகளையே நான் முதன்மையாகக் கவனித்தேன். அவர்கள் நூலை ஆழமாக வாசித்துவிட்டு வந்திருக்கிறார்களா, வெறும் மேடைச்சமாளிப்பாக இல்லாமல் இலக்கியமென்னும் இயக்கத்தைக் கருத்தில்கொண்டவையாக அவர்களின் உரைகள் அமைந்துள்ளனவா என்று பார்த்தேன். ஒவ்வொரு உரையும் நிறைவளிப்பதாக இருந்தது. அவர்கள்தான் இங்கே இன்றிருக்கும் மாபெரும் ஆக்கவிசைகள் என்னும் நிறைவை அடைந்தேன்.
குறிப்பாக இவ்வுரைகளில் விக்னேஷ் ஹரிஹரனின் உரையை பலர் சுட்டிக்காட்டி எனக்கு எழுதியிருந்தனர். பல எழுத்தாளர்களின் வாட்ஸப் நிலைத்தகவலாகவும் அந்த உரை சுட்டப்பட்டிருப்பதைக் கண்டேன். சட்டம் பயின்றவரான விக்னேஷ் இந்த அவையிலேயே இளம் வாசகர். அவர் குரலில் இருந்த திட்டவட்டத்தன்மையும், தெளிவும் அதேசமயம் துடுக்காக மாறாத தன்னம்பிக்கையும் எனக்கும் பெரும் நிறைவை அளித்தது. நம்மினும் மேலான அடுத்த தலைமுறை எழுகிறது என்னும் எண்ணம்போல் என் அகவையில் உளநிறைவை அளிக்கும் ஓர் எண்ணம் பிறிதில்லை.
இந்த உரைகளை ஒருவர் முழுமையாக கேட்டு முடிக்க பலநாட்களாகலாம். ஓர் இலக்கிய நிகழ்வை அப்படி முழுமையாக பின்தொடரவேண்டுமா என்னும் எண்ணம் சிலருக்கு உருவாகவும்கூடும். ஆனால் ஒரு விதியை கூறவிரும்புகிறேன். சரியாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரே ஒரு முழுநாள் இலக்கிய நிகழ்வை முழுக்கக் கவனித்தாலே போதும், தமிழ் நவீன இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தையும் ஒரு நல்லவாசகன் அடைந்துவிட முடியும்.
இந்த ஒரு நாள் நிகழ்வில் பேசுபவர்களிடம் இருக்கும் வேறுபாடுகளையே கவனிக்கலாம். இடதுசாரிகள், தலித்திய ஆய்வாளர்கள் என வெவ்வேறு கருத்துத்தரப்பினர். மூத்தபடைப்பாளிகள் முதல் முப்பது வயதுக்குள் இருப்பவர்கள் என பல்வேறு தலைமுறையினர் இதில் பங்கெடுத்திருக்கின்றனர். ஒவ்வொருவரின் பார்வையும் ஒவ்வொன்று.
அத்துடன் இவ்விழாவில் ஆர்.சிவக்குமார், கணேஷ்ராம், மருதன், கயல், கே.வி.ஜெயஸ்ரீ, கே.வி.ஷைலஜா, மண்குதிரை என மொழிபெயர்ப்பாளர்களின் ஒரு நீண்ட வரிசை உள்ளது. இத்தகைய ஒரு விரிவான அரங்கு இன்று பல்கலைக்கழக அரங்குகளிலேயே ஒருங்கிணைக்கப்பட இயல்வது.
விழாவின் மறுநாள்தான் என்னிடம் இந்த குறிப்பின் தொடக்கத்தில் நிகழ்ந்த உரையாடல் ஒரு நண்பருடன் நடைபெற்றது. நான் அந்நண்பரிடம் சொன்னேன். ’பெரும்பாலான அனுஷ்டான கலைகளுக்கு இன்று மிகக்குறைவான பார்வையாளர்களே இருக்கிறார்கள். அல்லது எவருமிருப்பதில்லை. அது அவர்களை எவ்வகையிலும் பாதிப்பதில்லை. அவர்கள் அக்கலைகளை இயற்றுவது மனிதர்களுக்காக அல்ல, தெய்வங்களுக்காக. பார்வையாளர்கள் வருவதும் அக்கலையை நுகர்வதற்காக அல்ல, அத்தெய்வங்களுக்காக. இலக்கியமெனும் தெய்வத்துக்காக மட்டுமே நிகழ்த்தப்படுவதாக இந்நிகழ்வுகளைக் கொள்ளுங்கள்’
அவரிடம் நான் சொன்னேன். ’ஒரு வணிகத்திரைப்படத்திற்கான கூட்டம் மிகப்பெரியதாக இருக்கலாம். அத்துடன் ஒப்பிட ஓர் அனுஷ்டான கலைக்கு வந்தமரும் ஒரு சிலர் ஒரு திரளென்றே கருதத்தக்கவர்கள் அல்ல எனலாம். ஆனால் ஒரு பண்பாட்டின் முகம் என்பவை அனுஷ்டான கலைகளே. வணிகக்கேளிக்கைக் கலைகள் அல்ல. அனுஷ்டான கலைகள் அச்சமூகத்தின் அக ஆற்றலை வெளிப்படுத்துபவை. வணிகப்பெருங்கலைகள் அச்சமூகத்தின் பலவீனங்களின் வெளிப்பாடுகள்
அனுஷ்டான கலைகளின் ஆற்றலென்பது அவற்றின் நீடித்த தன்மையே. அவை பல ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்து வருகின்றன. இனியும் நிகழவிருக்கின்றன. எந்நிலையிலும் அவை தங்கள் தொடர்ச்சியைத் தவறவிட்டுவிடுவதில்லை. இலக்கியத்தையும் அவ்வாறே சொல்வேன். இன்று வந்தமர்ந்திருப்பவர்களுக்காக நிகழும் விழாக்கள் அல்ல அவை. நேற்றும்நாளையும் வந்தமர்ந்த, வந்தமரும் பார்வையாளர்களுக்கானவை. இந்த உரைகள் இன்ன்றும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படும். அதுதான் இவற்றின் ஆற்றல்”
என் உரையில் தமிழ்- மலையாள மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களை பட்டியலிட்டிருக்கிறேன். இக்கட்டுரைகளிலேயே ஆளுமைகள் அனைவருக்கும் தமிழ்விக்கி இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது (கட்டுரையை எழுதுவதை விட அதிகமான நேரம் பிடிக்கும் செயல்பாடு அது) ஆனால் இதை நான் செய்தாகவேண்டும். இப்பெயர்களை நான் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு மாதமும் முற்றிலும் புதிய வாசகர்கள் இந்த தளம் வழியாக உள்ளே நுழைகிறார்கள். சுந்தர ராமசாமி அல்லது புதுமைப்பித்தனை தமிழ் விக்கிப்பீடியா வழியாக தெரிந்துகொள்பவர்கள். ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் அவர்கள் நவீன இலக்கியத்தின் ஒளிரும் முகங்களாக மேடையில் நிற்பதையும் காண்கிறேன். விதைகளை நாம் நம்பலாம். ஏனென்றால் அவற்றுக்குள் முளைத்தெழவேண்டும் என்னும் பெருங்கனவு உறைகிறது.