நிர்மால்யா (மணி) மொழிபெயர்ப்பாளர் மட்டும் அல்ல எனக்கு. முப்பதாண்டுக்கால குடும்ப நண்பர். வாழ்க்கையின் பல கட்டங்களில் இணைந்திருந்தவர். அவருக்கு ஒரு முழுநாள் கருத்தரங்கு ஒன்றை நடத்துவது பற்றி அகரமுதல்வன சொல்லிக்கொண்டே இருந்தார். நாள்கூட என்னைக் கேட்டுத்தான் முடிவுசெய்தார்.
ஆனால் அதேநாளில் ஜெயகாந்தன் – கல்பனா இணையரின் மூத்த மகள் திருமணம், ஶ்ரீரங்கத்தில் முடிவாகியது. அவரும் மிக அணுக்கமானவர். அருண்மொழியுடன் நான் சென்றே ஆகவேண்டிய நிகழ்வு. நிர்மால்யா கருத்தரங்கை ஒத்திவைக்க முடியாதபடி ஏராளமானவர்களை அழைத்துவிட்டோம்.
ஆகவே திருச்சியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று மாலை நிறைவுவிழாவில் மட்டும் கலந்துகொள்ள முடிவுசெய்தேன். நானும் அருண்மொழியும் சைதன்யாவும் எட்டாம் தேதி பின்னிரவு ஒரு மணிக்கு ரயிலில் திருச்சி வந்தோம். ஶ்ரீரங்கத்தில் ஜெயகாந்த்ராஜு ஏற்பாடு செய்த விடுதியில் தங்கினோம். அதிகாலையில் எழுந்து திருமண நிகழ்வுக்குச் சென்றோம்.
சுனீல்கிருஷ்ணன் தன் மகள் சபர்மதியுடன் வந்திருந்தார். திருச்சியைச் சேர்ந்த டெய்ஸி பிரிஸ்பேன் குடும்பத்துடன் வந்திருந்தார். செல்வராணிதான் எங்களை உபசரித்தவர். திருமணம் முடிந்து சாப்பிட்டு ஜெயகாந்த் –கல்பனா மகளை வாழ்த்தி டாக்ஸியில் நேராக விமான நிலையம். விமானத்தில் சென்னை.
சென்னையில் யோகேஸ்வரன் ராமநாதன் விமானநிலையத்துக்கு வந்திருந்தார். சென்னை விமானநிலையத்தில் மேலும் ஏதோ கட்டுமானப்பணி. ‘டாக்ஸி பிக்கப்’ நிகழும் இடத்துக்கு மின்கல வண்டியில் மட்டும்தான் செல்லமுடியும். அந்த அளவுக்குச் சிக்கல். ஒருவழியாக நீண்ட வரிசையில் நின்று அங்கே சென்று அவரைப் பார்த்து வண்டியில் விடுதியை அடைந்தபோது மாலை ஆகிவிட்டிருந்தது. யோகா அங்கே விழாவில் மதியம் அளிக்கப்பட்ட உணவுத்தட்டுகளில் ஒன்றை எனக்காகக் கொண்டுவந்திருந்தார். அதை விடுதியில் சாப்பிட்டேன்.
நான் அரங்குக்குச் சென்றபோது ஸ்டாலின் ராஜாங்கம் நிர்மால்யா மொழியாக்கம் செய்திருந்த ஐயன்காளி நூல் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அதன்பின் கணேஷ்ராம் பேசினார். காலைமுதலே நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் அரங்கில் அத்தனைபேர் இருந்தது வியப்பாக இருந்தது. நண்பர்களை அறிமுகம் செய்துகொண்டேன். சிறப்பு விருந்தினராகப் பி.ராமன் வந்திருந்தார்.
நிகழ்வில் ஆ.அமிர்தராஜ் ஆங்கிலக் கவிதைநூலை நான் வெளியிட்டேன். க.மோகனரங்கன் பெற்றுக்கொண்டார். கத்தோலிக்க மதகுருவான ஆ.அமிர்தராஜ் 1980களில் அவர் பயிற்சிமாணவராக இருந்த காலகட்டத்தில் அப்போது ஒரு கிறிஸ்தவ இதழாக வெளிவந்துகொண்டிருந்த அரும்பு இதழை ஓர் இலக்கிய இதழாக மாற்றி நடத்தினார். அன்று இலக்கியப்படைப்புகளை வெளியிட இதழ்களே இல்லாத சூழலில் ஓர் அழகிய இதழ் என்பது இலக்கியவாதிகளால் கொண்டாடப்பட்ட ஒன்றாக இருந்தது.
அரும்பு இதழில் வண்ணதாசனின் முக்கியமான கதைகள் வெளிவந்தன. என்னுடைய தொடக்ககாலக் கவிதைகளும் கதையும் அதில் வெளியாகியுள்ளன. பொற்கணம் என்னும் கவிதைத்தொகுதியையும் அமிர்தராஜ் முன்னர் வெளியிட்டிருக்கிறார். இலக்கிய ஆர்வம் கொண்டிருந்த அமிர்தராஜ் மதம் சார்ந்த அமைப்புப்பணிகளுக்குச் சென்றது இலக்கியத்திற்கு இழப்புதான். அவர் தொடர்ந்து எழுதுவார் என நினைக்கிறேன்.
பி.ராமனின் உரையை நான் சுருக்கமாக மொழியாக்கம் செய்தேன். என்னுடைய உரை அரைமணிநேரம் என வகுத்திருந்தேன். (அவ்வளவு தூரம் வந்து விட்டு அதற்குக் குறைவாக பேசினால் எனக்கு நிறைவிருக்காது) முதல் பாதி மொழியாக்கம் பற்றி எஞ்சிய பாதி நிர்மால்யா பற்றி. அந்த எஞ்சிய பாதியில் ஒரு பகுதி அவரைப்பற்றி இன்னொரு பகுதி அவருடைய மொழியாக்கம் பற்றி. சரிவிகித உரை.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்தவர்களின் பட்டியல் ஒன்றை போட்டிருந்தேன். அந்த மேடையில் அப்போது நினைவுக்கு வந்தவர்கள். இத்தகைய பட்டியல்களை மேடைகளில் சொல்வது எப்போதும் சிக்கல், சிலரை மறந்துவிடுவோம். பலசமயம் முக்கியமானவர்களை. எவரையாவது விட்டுவிட்டோமா என்ற சந்தேகத்தில் கொஞ்சம் உரை தடுமாறவும் செய்யும். நான் குறிஞ்சிவேலன், இரா.முருகன் ஆகியோரை விட்டுவிட்டேன் என நினைக்கிறேன். ஆனால் இத்தகைய உரைகளிலாவது மொழிபெயர்ப்பாளர்களை நாம் தவறாமல் நினைவுகூரவேண்டும்.
விழாவிற்குப்பின் ஒரு ‘மெகா’ கூட்டுப்படம் எடுத்துக்கொண்டோம். நண்பர்களைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தது வழக்கம்போல உற்சாகமான அனுபவமாக இருந்தது. இந்தவகையான நிகழ்வுகளின் கொண்டாட்டம் என நான் நினைப்பதே இதுதான். நவீன இலக்கிய உலகம் என நாம் சொல்லும் இந்த சிறு இயக்கத்தை கண்கூடாக அங்கே பார்க்கமுடிகிறது. அது ஒரு கற்பனை அல்ல, உண்மையான இருப்பு என நம் அகம் மீண்டும் நிறுவிக்கொள்கிறது
இரவு பத்துமணி வாக்கில் நான் அறைக்குத் திரும்பினேன். திரும்பும் வழியில் அடுத்து சென்னையில் என்ன நிகழ்வு ஒருங்கிணைக்கலாம் என்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு வந்தேன். மறுநாள் அதிகாலையிலேயே தேஜஸ் எக்ஸ்பிரஸில் மதுரை புத்தகக் கண்காட்சிக்கு.
காலையில் கிளம்பி தேஜஸ் எக்ஸ்பிரஸில் தூங்கி வழிந்தபடி மதுரை நோக்கிச் சென்றேன். மதுரையில் மூன்றுநாட்கள். அங்கிருந்து நள்ளிரவில் பேருந்தில் கிளம்பி புதுச்சேரி. அங்கே வெண்முரசு 75 விழா. அங்கிருந்து அப்படியே கிளம்பி தத்துவ முகாமுக்கு. ஊர் திரும்பி நாலைந்து நாட்களில் அமெரிக்கப்பயணம்.
“சும்மா பறேந்து பறேந்து அடீப்பேன்” என்று ரஜினிகாந்த் ஒரு படத்தில் சொன்ன வசனம் ஒரு காலகட்டத்தில் வீட்டில் ஆட்டங்களின் நடுவே பிரபலம். நான் அதை விதவிதமான பாணியில் சொல்வேன், அஜிதனும் சொல்வான். உண்மையில் அக்காலகட்டத்தில் தபால்நிலையம் வீடு என பறந்து பறந்து அடித்துக்கொண்டிருந்தது அருண்மொழிதான். இப்போது இலக்கியத்திற்காக அப்படி பறந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அடிவாங்குவதுதான் நிகழ்கிறது என்பது அருண்மொழியின் அபிப்பிராயம்.
இத்தகைய விரிவான இலக்கிய நிகழ்வுகளை ‘வெறும் இலக்கிய வாசகர்கள்’ பொதுவாக கொஞ்சம் ஐயத்துடன் அணுகுவதுண்டு. அவர்கள் இதை இலக்கியவாசகர்களின் உலகம் அல்ல, இலக்கியவாதிகளின் உலகம் என எண்ணுகிறார்கள். இலக்கியக் கூட்டங்களிலேயே வாசகர்களை விட இலக்கியவாதிகளே அதிகம் இடம்பெறுவதும் வழக்கம். பலர் நண்பர்களைப் பார்த்துச்செல்லவே வருகிறார்கள்.
ஆனால் இலக்கியநிகழ்வுகள் உயிரூக்கத்துடன் நிகழ்ந்துகொண்டிருக்கும் இடங்களிலேயே இலக்கியம் வாழ்கிறது. ஒரு நகரில் இலக்கிய நிகழ்வுகள் இல்லை என்றால் எவ்வகையிலோ அங்கே இலக்கிய வாசிப்பும் சோர்வுற்றிருப்பதை காண்கிறேன்.
(மிகச்சிறந்த உதாரணம் அண்மையில் நான் மதுரையின் வாசிப்புச் சூழலைப் பற்றி உணர்ந்தது. அங்கே குறிப்பிடத்தக்க இலக்கிய நிகழ்வுகள் இல்லை. புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியே இருந்து வந்து நடத்தப்படும் நிகழ்வுகளே உள்ளன. அது வாசிப்பில்,நூல்விற்பனையில் தெரிந்தது)
ஏன் நிகழ்வுகள் தேவையாகின்றன? முதன்மையாக இவை இலக்கியம் என்னும் இயக்கத்தின் கண்கூடான வெளிப்பாடுகள். இவை இல்லையேல் இலக்கியம் நிகழ்வதே நமக்குத்தெரியாது. ஒரு சூழலில் ஆயிரம்பேர் படிக்கிறார்கள், ஆனால் எந்த நிகழ்வும் இல்லை என்றால் அந்த ஆயிரம்பேரும் இருப்பதே எவருக்கும் தெரியாது. ஏனென்றால் வாசிப்பு என்பது ஓர் அகநிகழ்வு. ஒரு சூழலில் நூறுபேர் படிக்கிறார்கள், ஆனால் அவர்கள் கூடிவிவாதிக்கிறார்கள், நிகழ்வுகளை நடத்துகிறார்கள் என்றால் அங்கே இலக்கியம் நிகழ்வது அனைவருக்கும் தெரிந்துகொண்டே இருக்கும்.
அவ்வாறு தெரிவதன் விளைவு என்னவென்றால் இலக்கியத்திற்கான மாபெரும் விளம்பரமாக அந்நிகழ்வு அமையும் என்பதே. எந்த இலக்கிய நிகழ்வும் இலக்கியத்துக்கான விளம்பரமே. இலக்கிய நிகழ்வுகள் வழியாகவே பெரும்பாலும் தொடக்க வாசகர்கள் இலக்கியம் பற்றிய அறிதலை அடைகிறார்கள். இத்தனைபேர் செய்யும் இச்செயலுக்கு என்ன அர்த்தம், என்ன தேவை என்று அவர்கள் கொள்ளும் திகைப்பே ஒரு தொடக்கம் ஆகும்.
ஆகவே எந்த இலக்கிய நிகழ்வும் ஓர் இலக்கிய அறிவிப்புதான். ஓர் இலக்கியப் பிரச்சாரம்தான். இலக்கியம் என்ற அகப்பெருக்கின் புறவடிவம்தான். நான் தமிழிலக்கியச் சூழலில் நுழைகையில் இலக்கிய நிகழ்வுகள் மிக அரிதானவை. ஏனென்றால் இங்கே சிற்றிதழ்ச்சூழலே இருந்தது. அவற்றுக்கு நிதி இல்லை. இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும் தொடர்புவலையும் அன்றில்லை.
ஆனாலும் பிடிவாதமாக இலக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. நாகர்கோயிலில் சுந்தர ராமசாமி வீட்டில் நடைபெற்ற காகங்கள், மதுரையில் சுரேஷ்குமார் இந்திரஜித் ஒருங்கிணைத்த சந்திப்பு, கோவையில் ஞானி ஒருங்கிணைத்த நிகழ் என பல சிறு அமைப்புகள். கலாப்ரியா ஒருங்கிணைத்த குற்றாலம் பதிவுகள் நிகழ்வு போல கொஞ்சம் பெரிய வருடாந்தரக் கூடுகைகள். அவை இலக்கியத்தை நிலைநிறுத்தின.
நான் அவற்றினூடாகவே தமிழிலக்கியத்தை அறிந்தேன், இலக்கியவாதிகளை அறிமுகம் செய்துகொண்டேன், இலக்கியத்தினுள் இருக்கும் உணர்வை அடைந்தேன். இலக்கியத்தை கண்கூடாகக் கண்டேன். ஆகவே நான் இலக்கியத்துக்குள் நுழைந்த நாள் முதல் நிகழ்வுகளை ஒருங்கிணைப்பவனாகவும் செயல்பட்டு வருகிறேன். எனக்கு நவீனத் தொழில்நுட்பம் அளித்த வாய்ப்புகள் மிக அதிகம்
நிர்மால்யாவே சரியான உதாரணம். சென்ற முப்பதாண்டுகளாக ஒவ்வொருநாளும் அவர் மொழியாக்கம் செய்துகொண்டே இருக்கிறார். ஊட்டியின் கடுங்குளிரில், பெரும்பாலும் மின்சாரம் இல்லாத சூழலில், சிறு விளக்கை ஏற்றிவைத்துக்கொண்டு ஓரிரு மணிநேரம் தன் பணியை செய்தபின் தூங்குகிறார். அவருக்கு புகழ், பணம் எதுவுமே இல்லை. பெயர்கூட நாம் இப்படி சொல்லிக்காட்டும்போதுதான் வெளியே தெரிகிறது. இலக்கியம் என்னும் அகவிசையே அவரைச் செயலாற்றத் தூண்டுகிறது.
நிர்மால்யாவுக்கான இந்த விழா என்பது தமிழில் ஒரு காலகட்டத்தில் மூத்த படைப்பாளிகளுக்கே அரிதாக இருந்த ஒன்று. இன்று மொழிபெயர்ப்பாளருக்கு அது நிகழ்வதென்பது நாம் அந்த மூத்த படைப்பாளிகளுக்குச் சொல்லிக்கொள்ளும் ஒரு பதில். ‘நாங்கள் முதிர்ந்துவிட்டோம். நாங்கள் பிழைகளை திருத்திக் கொண்டிருக்கிறோம். இவை உங்களுக்காகவும் நாங்கள் செய்வதே”
அவ்வகையில் அகரமுதல்வனின் ஆகுதி அமைப்பு செய்துகொண்டிருக்கும் பணி என்பது மிகமிக முக்கியமான ஒன்று. அதை ஒருங்கிணைக்கையில் அதன் மதிப்பு பலசமயம் தெரிவதில்லை. மிகுந்த உழைப்புக்கும் செலவுக்கும்பின் மிகச்சிலரே அரங்கில் வந்து அமர்ந்திருக்கக் காண்கையில் ஏற்படும் சோர்வும் தவிர்க்கமுடியாததே. எனக்கே அச்சோர்வு ஒருகாலத்தில் அவ்வப்போது உருவாகும்.
ஆனால் அறிவு எதிர்ப்பு இயல்புகொண்ட ,ஒருவகை அரைப் பழங்குடி மனநிலை கொண்ட நம் சமூகத்தின் முன் நாம் நின்று பேசிக்கொண்டிருக்கிறோம். அறிவியக்கத்தை இச்சமூகம் இரண்டுவகையில் எதிர்கொள்ளும். ஒன்று, புறக்கணிப்பு. இரண்டு அரட்டையாக, வம்பாக, கேலியாக ஆக்கிக்கொள்ளுதல். இரண்டுமே அறிவுமீதான அச்சத்தின் விளைவுகள். அதைக்கடந்தே இங்கே எந்தச் செயலையும் செய்யமுடியும்.
அதற்கு நம் செயல்மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் நம்மைப் பற்றிய ஒரு நிமிர்வும் நமக்குத்தேவை. நாம் இலக்கியத்தின் ஒரு தீவிரமான வட்டத்தைச் சேர்ந்தவர்கள். இலக்கியத்தின் உயிர்விசை குவிந்த முளைப்புள்ளி (Stem) இது. இங்கே அளவல்ல, தீவிரமே முக்கியமானது. அத்தீவிரம் நம் ஒவ்வொரு செயலிலும் வெளிப்படுவதொன்றே நாம் செய்யக்கூடுவது.
நிர்மால்யா தமிழ் இலக்கியச்சூழலின் இரண்டு முகங்களையும் சார்ந்தவர். மனஓசை என்னும் இடதுசாரி இதழில் எழுதத்தொடங்கியவர் அவர். அவ்வமைப்பு மரபான இடதுசாரி அமைப்புகளுக்கு எதிரான ஒரு தீவிர இயக்கம். அங்கிருந்து சிற்றிதழ்சார்ந்த எழுத்தின் உலகுக்குள் வந்தவர். அந்த இயக்கத்தின் தீவிர முனையிலேயே தன்னை தொடர்ச்சியாக நிலைநிறுத்திக்கொண்டவர்.
நிர்மால்யாவின் தனிவாழ்க்கை எளிதானது அல்ல. அவர் மிகச்சிறிய அளவிலான வணிகங்களையே செய்து வந்தார். மிட்டாய், பென்சில் போன்றவற்றை கடைகளுக்குப் போடும் வினியோகம். சிறிய தொகை வட்டிக்குக் கொடுத்து வாங்குதல். அரை ஏக்கரில் விவசாயம். ஒருநாளில் பல கிலோமீட்டர் தொலைவுக்கு தன் பழைய ஈருருளை வண்டியில் பயணம் செய்தபின் அதை எழுதுகிறார். அந்த ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் அவ்வளவு வாழ்க்கையின் அழுத்தம் இருக்கிறது.
பெரும்பாலும் மிக வசதியான வேலையில், தொழிலில் அமைந்தபின் பொழுதுபோக்குக்காகவோ அரசியல்வெறியாலோ இலக்கியவம்புகளில் திளைப்பவர்களே இங்கே மிகுதி. அவர்களால் நிர்மால்யா போன்ற ஒருவரின் அர்ப்பணிப்பை புரிந்துகொள்ள முடியாது. நிர்மால்யாவையே அவர்கள் கவனிக்கவும் மாட்டார்கள். ஆனால் இலக்கியவாசகர்களுக்கு நிர்மால்யா போன்ற ஒருவரை தெரிந்திருக்கவேண்டும். அவர் வழியாக வெளிப்படும் இலக்கியம் என்னும் விழுமியத்தை அவர்கள் அறிந்திருக்கவேண்டும்.
முப்பதாண்டுகளாக எனக்கு நிர்மால்யாவைத் தெரியும்.பல்வேறு சுகதுக்கங்கள் வழியாக இந்த நீண்ட காலத்தை கடந்து வந்துள்ளோம். இலக்கியம் என்பது வாழ்க்கையின் இடர்களில் தெளிவை, நிலைக்கோளை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட ஒன்று என அவர் வாழ்க்கை வழியாக நான் உறுதிசெய்துகொள்கிறேன். இலக்கியம் என்பது மெய்யாகவே வாழ்க்கையை நிறைக்கக்கூடிய ஒன்று என, ஒருவரின் வாழ்வின் எல்லா இடைவெளிகளையும் நிரப்ப அதனால் இயலும் என அவர் ஓர் உதாரணமாக நின்று காட்டுகிறார்.
நிர்மால்யாவை நான் நித்ய சைதன்ய யதியில் இருந்து வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. அவர்தான் எனக்கு நித்யாவை அறிமுகம் செய்தவர். நித்யாவின் மானுடமைந்தன் ஏசு என்னும் நூலைமொழியாக்கம் செய்தபடித்தான் அவர் தொடங்குகிறார். (நித்யாவின் ‘அவை’யில் இருந்து உருவான இன்னொரு மொழிபெயர்ப்பாளர் என யூமா வாஸுகியைச் சொல்லலாம். இருவருமே இடதுசாரிகள் என்பதும் ஆச்சரியமான ஒற்றுமைதான்)
நிர்மால்யாவை முன்னிறுத்துவதன் வழியாக நாம் நம் சூழலுக்கு, இளைய தலைமுறைக்குக் காட்டுவது இதைத்தான். எத்தனை எதிர்மனநிலைகளால் தாக்கப்பட்டாலும் இலக்கியம் அடிப்படையில் ஆக்கபூர்வமானது. அது எளிய மனிதர்களை நிறைவுகொண்ட பெரிய மனிதர்களாக ஆக்க முடியும். இலக்கியத்தின் அழியா உயிர்விசை என்பது அதுதான்.