அன்பின் ஜெ.,
இந்திராவின் ஆட்சியை இந்தியாவின் இருண்ட காலம் என்று ஒட்டு மொத்தமாகச் சொல்லலாம். ஒரு ஒட்டு மொத்தப் பார்வையில் இது சரியே.
அவரின் பங்களிப்புகளும் சில நல்ல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பது என் எண்ணம்.
அவை பின்வருமாறு:
1. வங்கிகள் தேசமயமாக்கப் பட்டு, ஊரகக் கிளைகள் துவங்கப்பட்டது – பணப் பரிமாற்றத்துக்கு பாரதமெங்கும் ஒரு கட்டமைப்பு ஏற்பட்டது. இன்று அவை வங்கிகளின் தொழிலுக்கு மிகப் பெரும் உதவியாக இருக்கின்றன. ஓரளவு, ஊரக மத்திய தரப்பு மக்களுக்கேனும் பயன்படும் ஒரு கட்டமைப்பு – இது தொழிலதிபர்களின் கைகளில் இருந்திருந்தால், வருமானம் குறைவான, இல்லாத ஊர்களில், வ்ங்கிக் கிளைகள் திறந்திருக்கப் படாது.
2. தேசிய பால்வள நிறுவனத்தை ஒரு சட்டம் மூலம் உருவாக்கியது. அதன் தலைமைச் செயலகத்தை, குஜராத்திலேயே வைத்தது. இது, ஏற்கனவே படேலால் துவங்கப்பட்டு, சாஸ்திரியால் ஆதரிக்கப் பட்ட ஒரு இயக்கத்தை மேலும் வலுப்படுத்திய செயல். இன்றும் பாரதத்தின் மிகப் பெரும் புரட்சி பால் உற்பத்தியே.
3. மன்னர்களின் மானியங்கள் ஒழிக்கப் பட்டது. சரியோ தவறோ, இந்திய சமூகத்தில் இருந்து அவர்களின் இருப்பை குறைத்தது. மன்னர்களைக் கடவுளாகக் கருதிய சமூகத்தில், அவர்கள் இல்லாமல் இருப்பது, ஜனநாயகத்துக்கு மிக நல்லது.
ஆனால், 14 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஒரு ஆளுமை செய்யக் கூடிய சாத்தியக் கூறுகளில் இவை ஒரு சதம் கூட இல்லை.
காமாராஜர் செய்த மிகப் பெரும் தவறு இது.
பாலா
அன்பிற்குரிய பாலா
இன்னும்கூட முக்கியமான சிலவற்றைச் சொல்லலாம்.
1. 1972 ல் The United Nations Conference on the Human Environment ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெற்றது. சூழியல் பற்றிய முதல் விழிப்புணர்ச்சியை உருவாக்கியது அது. அந்த மாநாட்டில் பங்கேற்ற நாடுகளில் சூழியல்பிரச்சினைகளை உடனடியாகக் கருத்தில்கொண்டு தேசிய வனவிலங்கு சரணாலயங்களை அமைப்பது, வேட்டையைத் தடைசெய்வது,வணிகநோக்கில் காட்டை வெட்டுவதைத் தடைசெய்தது போன்ற நடவடிக்கைகளை எடுத்தது இந்திராவின் அரசே. அதை உடனடியாகப் புரிந்துகொண்டு திட்டவட்டமாக நடவடிக்கை எடுக்கச்செய்தார் இந்திரா. பிறநாடுகள் அது பொருளாதார ரீதியாகப் பாதுகாப்பானதல்ல என்று நினைத்து எண்பதுகளின் இறுதிவரைக்கும் கூடத் தயங்கிநின்றன. இந்தியாவின் சூழியல்காப்பில் இந்திராவின் அந்த உறுதி ஒரு முக்கியமான திருப்பம். ஏனென்றால் 1980களில் இந்தியா முழுக்க பெரும்சாலைகள் போடப்பட்டன. கனரகவாகனங்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாகியது. அதற்குள் காடழிவுத்தடுப்பு சட்டங்கள் நிறைவேற்றியிருக்காவிட்டால் இந்தியாவே அழிந்திருக்கும்.
2. பாகிஸ்தானை வெற்றிகரமான உளவு-ராணுவ நடவடிக்கைகள் மூலம் இந்திரா பிளந்தது ஒரு சாதனையே. இல்லையேல் இந்தியாவுக்கு அது ஒரு நிரந்தரத்தலைவலியாகவே இருந்திருக்கும். இந்தியாவை இந்திரா ராணுவமயமாக்கியதும் அணுகுண்டு தயாரித்ததும் முக்கியமான தீர்க்க தரிசனங்கள். இல்லாவிட்டால் ஐரோப்பிய நாடுகள் இயற்கை வளம் மிக்க இந்தியாவின் கையைப்பிடித்து முறுக்கியிருக்கும். ஈராக் போல நேரடியாக வந்து குந்தியிருந்தாலும் ஆச்சரியமில்லை
3. வங்கதேச அகதிகளையும், இலங்கை அகதிகளையும் வெற்றிகரமாக இந்தியாவெங்கும் குடியமர்த்தி அவர்களின் மறுவாழ்க்கையை அமைத்ததில் இந்திராவின் அரசு காட்டிய உறுதியும் கருணையும் நிதானமும் முக்கியமானவை என நான் நினைக்கிறேன். அந்த உறுதியைப் பிறகுவந்த அரசுகள் வெளியுறவுக்கொள்கையிலும் உள்நாட்டு விஷயங்களிலும் காட்டவில்லை.
ஜெ
ஜெ,
உண்மை ஜெ.இவற்றையெல்லாம் தாண்டி அவரில் இருந்த பாதுகாப்பின்மை உணர்வும், அதனால் விளைந்த சர்வாதிகாரமும், அவரின் பங்களிப்பையெல்லாம் மறக்கடித்துவிட்டன.
மிக அருமையான அறிமுகம் குகாவின் நூலுக்கு. நன்றி
பாலா
காந்தியின் கையிலிருந்து நழுவிய தேசம்