அன்புள்ள ஜெயமோகன்,
“V.S.Naipaul” எழுத்து வாசித்து இருக்கிறீர்களா?
நான் புத்தகம் வாங்கும் முன், உங்களைக் கேட்கலாம் என்று இருக்கிறேன்.
ஸ்ரீதர்
அன்புள்ள ஸ்ரீதர்
உங்கள் தேவை நல்ல நடை, நுட்பமான தகவல்கள் கொண்ட எழுத்து மட்டுமே என்றால் நைபால் வாசிக்கப்படவேண்டியவர்.ஆனால், இலக்கியத்தில் நீங்கள் விவேகத்தை, கவித்துவத்தை, தரிசனத்தை எதிர்பார்த்தால் அவர் வீண். நல்ல எழுத்து உருவாக்கும் மனவிரிவை அவரால் அளிக்கமுடியாது. வெறுப்பும் பாவனைகளும் நிறைந்த சின்ன மனிதர். இலக்கிய எழுத்து எழுத்தாளனைக் கொண்டுசென்று சேர்க்கும் உச்சங்களில் கால் வைக்கும் அதிருஷ்டமே இல்லாதவர்ஜெ
அன்புள்ள ஜெயமோகன்,
அழகான பதில். இப்போதைக்குத் தேவை இல்லாத புத்தகம்.
நடை பயில வேண்டிய பொழுதில் படித்து விடுகிறேன்.
ஒரு புத்தகம் படிப்பதென்பது சிறிது பிரயத்தனம். நான் அதில் இருந்து மீண்டு வர நாட்கள் ஆகும். அதனால் சரியான தருணத்தில், அழகாக review செய்துள்ளீர்கள்.
நன்றி. மேலும் ஒரு நன்றி, அண்ணாவைக் குறித்து நீங்கள் எழுதிய எல்லாமே எனக்கு ஒரு பாடம்.
நான் “My experiments with truth”, “Day to day with Gandhi” (letters to and from gandhi) இரண்டும் வாசித்துள்ளேன். அதில் கற்காத காந்தியம் உங்கள் ஒரு கதை (காந்தியவாதி குறித்த கதை. பெயர் மறந்து விட்டேன்), மற்றும் உங்கள் பதிவுகள் எனக்குக் கற்றுக் கொடுத்தது. நன்றி.
தற்போது என் மனம் Free will இல் இல்லை என்பதான நிலையில் / சிந்தனையில் உள்ளது. அது குறித்த வலைத்தளம் உங்களுக்கு முன்னரே அனுப்பியுள்ளேன். ஒரு சுய தரிசனம், அதைக்குறித்து எழுத ஆசை இருக்கிறது.
தர்க்க ரீதியான செயல் மட்டும் அல்ல. தர்க்கமும் உண்டு. அதற்கு மேல் ஏதோ ஒன்றும் இருப்பதாகப் படுகிறது.
சும்மா சொல்லத் தோன்றியது, சொல்லிவிட்டேன். நான் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கத்தில், முன்பே இருந்து iskcon என்ற விஷயம் பிடிக்காமல் வெளி வந்தேன்.
நல்ல எழுத்து, நல்ல சிந்தனை, என் அறிவுக்கு, மனதிற்கு நல்ல கல்யாண சாப்பாடு போடுகிறீர்கள்…
என் நன்றி,
ஸ்ரீதர்