கீதையை அறிதல்-8

டிசம்பர் 2015 -ல் ஶ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை

எழுதியவர் Sakthi Prakash

கீதையை அறிதல்-7

nikhil-mishra

பிரம்மம் எனும் தரிசனம்

ஒரு ஞானம், வாழ்க்கையின் அனைத்துத் தளங்களையும் இணைக்கக்கூடியதாக தொகுக்கப்பட்டு நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கப்பட்டிருக்கிறது. ஒரு கால்பந்து விளையாட்டில் ஒரு பந்து ’கோல்’ நோக்கி போவதுபோல என்று சொல்லலாம். ஆயிரக்கணக்கான கால்கள் வழியாக அது போகிறது. தலை வழியாக, உடம்பு வழியாக போகிறது. கால்பந்து விளையாட்டை கொஞ்ச நேரம் பார்த்தீர்களென்றால், மனிதர்கள் எல்லாம் ஒன்றுமில்லை, பந்து தானாகவே விளையாடிக்கொண்டிருக்கிறது என்று தோன்றுமில்லையா? அதே போல் வரலாறு முழுக்க இந்த பிரம்மம் என்னும் கருதுகோள் மனிதர்களைப் பயன்படுத்திக்கொண்டு சிந்தனையின் வழியாக ஊடுருவி இங்கே வந்து சேர்ந்திருக்கிறது.ஏற்கெனவே பிரம்மம் என்ற கருதுகோளைப் பற்றி நான் பேசிய ஓர் உரையில், அதை ஒரு பொற்பட்டுநூல் என்று இதை சொன்னேன். பொன்னாலான ஒரு பட்டுநூல். பல்லாயிரம் மணிகளைக் கோத்து அது மாலையென ஆக்கியது.

யோசித்துப் பாருங்கள்! ஆறாயிரம் வருடங்களுக்கு முன்னால் இந்த நிலப்பகுதி எப்படி இருந்திருக்கும்? இங்கே பழங்குடி மக்கள் வாழ்ந்திருப்பார்கள், பல்லாயிரம் இனக்குழுக்கள் இருந்திருக்கும்., ஒவ்வொரு தரப்புக்கும் ஒரு சாமி இருந்திருக்கும், ஒவ்வொருவருக்கும் ஒரு வழிபாட்டுமுறை இருந்திருக்கும், ஓர் ஆசாரம் இருந்திருக்கும், ஒரு நடைமுறை இருந்திருக்கும். ஏன், இன்றைக்குமே அப்படித்தான் இருக்கிறது. மானுடமே பேதங்களின் பெருக்குதான். கார் எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து டெல்லி வரைக்கும் போவதற்குள் குறைந்தது முந்நூறு வகையான வழிபாட்டு முறைகளை நீங்கள் பார்க்கலாம். அப்படியென்றால் அப்போது எப்படி இருந்திருக்கும்? அவையெல்லாம் இன்று ஏதோ ஒருவகையில் ஒன்றாக உள்ளன இல்லையா? இந்த அத்தனை மணிகளையும் கோர்க்கும் ஒரு மெய்ஞானம் இங்கே உருவானது. ஒரு பொற்பட்டுநூல், அது ஒரு மாலையாக இவைகளை கோர்த்தது. இது வரலாற்றில் எவ்வளவு பெரிய நல்லூழ்! எவ்வளவு பெரிய வாய்ப்பு!

இதற்கு மாறாக நீங்கள் சொல்லக்கூடிய ஞானம் என்ன? இன்றைக்கு சிலர் சொல்கிறார்கள், இப்படி எல்லாவற்றையும் தொகுத்தது வழியாக ஒரு பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்று. இது ஒவ்வொன்றையும் உள்ளிழுக்கும் தந்திரம் என்று. ஆனால் வரலாற்றில் ஒரு மையத்தரிசனம் இப்படி பல மரபுகளை  உள்ளிழுத்துத் தொகுக்காத மற்ற இடங்களில் மிகப்பெரிய மோதலும் அழிவும்தான் நிகழ்ந்துள்ளன, இன்றும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. உள்ளிழுத்து தொகுத்துக்கொள்ளாத மையத்தரிசனம் என்றால் அங்கே முழு அழித்தொழிப்பு மட்டும்தான் நடந்திருக்கிறது. இது சரி, மற்றதெல்லாம் தவறு என்று சொல்லக்கூடிய மதங்கள் உள்ளன. அவை தாங்கள் தவறு என்று எண்ணும் அனைத்தையும் வரலாறு முழுக்க அழித்து ஒழித்துவிட்டன. அப்படித்தான் உலகம் இங்கே வந்து சேர்ந்திருக்கிறது. கிட்டத்தட்ட மூவாயிரம் வருடங்கள் ஐரோப்பாவில் நிறைந்திருந்த வந்த பாகன் மதத்தின் ஒரு கூறுகளும் அங்கு கிடையாது. ஒரு சிற்பம், ஓர் ஆலயம் கூட கிடையாது. வரலாற்றில் பதிவு பண்ணப்பட்ட அண்மைக் காலத்திலேயே தென் அமெரிக்காவின் மொத்த வரலாறும் அழிக்கப்பட்டிருக்கிறது. கோடிக்கணககன மக்கள் கொன்று அழிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவில் சிட்னியின் நடுத்தெருவில் சிலர் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். வெள்ளைப் பட்டைகளை உடலில் அணித்துக்கொண்டு தெரிந்தார்கள். விபூதிபோட்டுக்கொண்டு நம்மூர் கிராமவாசிகள் அமர்ந்திருப்பதுபோலவே தோன்றினார்கள். ஆனால் ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அவர்கள். இன்று அங்கே அபார்ஜீன்ஸ் என்று மொத்தமாகவே சில ஆயிரம்பர் இருக்கிறார்கள். இங்கும் அதுபோன்று அழித்தொழிக்கக்கூடிய ஒரு மையத்தரிசனம் வந்திருந்ததென்றால் இந்த விபூதி பூசிய சைவர்கள் எல்லோரும் இதே மாதிரிதான் சென்னையில் ஒரு பதினைந்து பேர் உட்கார்ந்து பாடிக்கொண்டிருப்பார்கள். எகிப்து நாகரிகத்தை கட்டியவர்கள் கறுப்பர்களான காப்டிக் மக்கள். இன்று அவர்களில் சில ஆயிரம் பேர் எங்கேயோ காடுகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். அந்த நாகரிகமே எங்கேயோ புதைந்து போய்விட்டது. பிரமிடுகள் மட்டுமே உள்ளன. அது இங்கே நிகழவில்லை. ஏனென்றால் இங்கே எந்த வழிபாடும், எந்த தெய்வமும், எந்த தரிசனமும் அழிக்கப்படவில்லை. அவை தொகுக்கப்பட்டன.  நீ சொல்வது தவறு, நான் சொல்வது மட்டுமே சரி என்று சொல்லப்படும் ஒரு களத்தில், நீ சொல்லும் அனைத்தையும் சரி என எண்ணுகிறேன் என்று சொல்லி தன்னுடன் இணைத்துக்கொள்ளும் புரட்சியும் கருணையும் இருக்கிறதே அது சாமானியமானது அல்ல. அதுதான் இந்த தேசத்தை உருவாக்கியது. மகாபாரதக் காலகட்டத்தில் இங்கு பேசப்பட்ட ஒரு நம்பிக்கைகூட இன்றைக்கு அழியாமல் இருக்கிறது. எல்லாவற்றையும் நம் மரபு தொடரச்செய்கிறது. எல்லாமே வளர்கின்றன. ஒரு தெய்வம்கூட மறையவில்லை. அத்தனை தெய்வங்களையும் ஒரு சரடு இணைத்துக்கொண்டு வருகிறது.

நீங்கள் வீட்டுக்கு போங்கள், அதி காலையில் L. R. ஈஸ்வரி குரலில் உள்ளூர்  மாரியம்மனை பற்றி ஒரு பாடல் காதில் விழும். அதில் மூன்றாவது வரியில் பிரம்ம சொரூபிணி என்று இருக்கும். ஏய், கல்லே, மண்ணே, நாகத்தில் அமர்ந்தவளே என்பது அல்ல அந்த துதி. நீ பிரம்மம். ஆனால் நீ நாகத்தில் உட்கார்ந்திருக்கிறாய் என்பதுதான் துதிகளின் அமைப்பு. அத்தனை தெய்வங்களையும் பிரம்மம் என்ற மையக்கருதுகோளில் கொண்டுவந்து சேர்க்கும் ஒரு தரிசனம் அது. என்னுடைய ஒரு மூதாதைக்கு அத்தனை ஆயிரம் வருடங்களுக்கு முன்பு அந்த தரிசனம் தோன்றியதில் இருக்கும் பெரும் கருணையால்தான் இத்தனை பெரிய சமூகமாக நாம் நின்று கொண்டிருக்கிறோம். நாம் அத்தனைபேரும் அந்த தருணத்திற்கு கடன்பட்டிருக்கிறோம். அந்த தருணத்தை வழிபட கடமைப்பட்டிருக்கிறோம்.  அந்த பொற்பட்டுநூலை இந்தியா முழுக்க கொண்டு சென்று சேர்த்த ஒரு மாபெரும் படைப்பு என்று கீதையை சொல்லலாம்.

பிரம்ம தரிசனம் வேதத்தில் இருக்கிறது. உபநிஷத்தில் இருக்கிறது. கீதையின் இடம் என்ன என்ற கேள்வி அடுத்தது. மரபார்ந்த முறையில் மூன்று தத்துவ இயக்கங்கள் எனப்படும் பிரஸ்தானத்திரயத்தில் மூன்றாவதாக கீதை உள்ளது. பிரஸ்தானத்திரயம் என்று சொல்லும்போது மூன்று தத்துவநூல்கள் என்ற அர்த்தத்தில் மொத்த உபநிஷத்துகளையும் ஒரு நூலாகவும், பிரம்ம சூத்திரத்தை இரண்டாம் நூலாகவும், கீதையை மூன்றாம் நூலாகவும் சொல்லும் வழக்கம் நமக்கு உண்டு.  நூல்களுக்குள் போய்ப் பார்க்கும்போது, பிரம்மம், மாயை, மோட்சம் என்ற மூன்றுதான் அந்த மூன்று தத்துவங்கள் என்று தெரியும். அப்படிச் சொல்லும் ஆசிரியர்களும் உண்டு. இந்த மூன்று தத்துவங்களை பேசும் நூல்களாக இருக்கின்றன இவை. அதனால்தான் இந்த நூல்கள் மூன்று தத்துவம் எனப்பட்டன. அத்துடன் இந்நூல்கள் எவையும் தனியாக நிற்பதில்லை. ஒவ்வொன்றுக்கும் நூற்றுக்கணக்கான உரைகளும் விளக்கங்களும் உள்ளன. அவையெல்லாம் சேர்ந்ததுதான் அந்நூல். கீதையே கூட ஒரு நூல் அல்ல, ஒரு நூல்வரிசை. ஒரு நூலகம் அளவுக்கு நூல்களின் தொகுப்புதான் கீதை ஆகவே இந்நூல்கள் தத்துவ அமைப்புகளாக கருதப்பட்டன. மூன்று தத்துவ நூல்களும் வேதாந்தத்துக்கு மூலநூல்கள் அல்ல என்பதுதான் நான் இந்த உரையில் சொல்ல வந்தது. அவை பாடநூல்கள். கற்றுத் தெளிய வேண்டிய நூல்கள். கற்று கடந்து செல்ல வேண்டிய நூல்கள். கற்று ஒழுகவேண்டியவை அல்ல, அவை நம்பிக்கையை முன்வைப்பவை அல்ல.

நம் நீண்ட மரபில் கீதை மெய்ஞானத்தை ஓர் அழகிய நடனமாக ஆக்கி கொடுத்திருக்கிறது. நடராஜகுரு எழுதிய “Can a Science Be Sung?” என்ற அழகிய கட்டுரையை இங்கே நான் நினைவுகூர்கிறேன். ’அறிவியலை பாட்டாகப் பாட முடியுமா?’ என்பதுதான் கேள்வி. நான் அக்கட்டுரையை சொல்புதிது இதழில் மொழிபெயர்த்திருக்கிறேன். கீதை தன்னளவில் ஓர் அறிவியல். அறிவியலுக்குரிய கறார் தன்மையோடு அது சொல்லிப்போகிறது. ஆனால் அந்த அறிவியலை ஒரு பாடலாக, ஒரு நடனமாக அது மாற்றியுள்ளது. இந்த மாயம் வழியாகத்தான் இத்தனை வருடங்கள், இத்தனை விவாதங்களையும் இத்தனை அலைகளையும் கிளப்பிக்கொண்டு அது உயிரோடு இருந்துகொண்டிருக்கிறது. பல பகுதிகளை இலக்கிய நுட்பங்களை பயன்படுத்தித்தான் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். இலக்கியம் சுத்தமாகத் தெரியாத ஒருவருக்கு,  ‘வெள்ளம் பெருகி உங்கள் நகரங்களை நிறைக்கும்போது, உங்கள் கிணறுகளுக்கு என்ன பொருள்?‘ என்று கேட்கும் வரியை புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் அது ஒரு கருத்து அல்ல, ஒரு கவிதை.

என்னுடைய ஆசிரியரும், நித்யாவின் மாணவருமாகிய வினய சைதன்யா இதே வரியைச் சொன்னார்.  ’மரக்கிளைகளின் நுனிகளைத் தொட்டு பெருவெள்ளம் போகக்கூடிய காலத்தில், உங்கள் கிணறுகளுக்கு என்ன பொருள்?’. ஒரு சிறிய இடைவெளி விட்டு, ‘நண்பர்களே,அந்தப் பெருவெள்ளம் மண்ணுக்கு அடியிலும் ஓடிக்கொண்டுதானே இருக்கிறது?’ என்றார். இந்த பூமியிலுள்ளது ஒட்டுமொத்தமாகவே ஒரே தண்ணீர்தானே! அந்த ஒரு வரியில் அவ்வளவு தூரம்  போவதற்கு இடம் இருக்கிறது. அடுத்தபடியாக, கீதையின் பல வார்த்தைகளை தியானம் மூலம் மேம்படுத்த வேண்டியிருக்கிறது. பல வார்த்தைகள். நீங்கள் உங்கள் உள்ளுணர்வை தீட்டி வரும்போது ஒரு மின்னல் மொத்த காட்டையும் காட்டித்தருவது போல அனைத்தையும் காட்டிக் கொடுக்கும் தருணத்தை கீதை வரிகள் அளிக்கக்கூடும்.

இவ்வளவு விஷயத்தையும் ஒரு பாடலாக, இசைத்து பாடலாக மாற்றும் அழகியல் இருக்கிறதல்லவா? அதுதான் நடராஜ குரு சொன்னது. அறிவியலைப் பாடமுடியும். கீதை பாடல்வடிவ அறிவியல். முன்பொருமுறை நான் எழுதினேன்; வண்டு பறக்கும், ஏனென்றால் அதற்கு எடையில்லை. யானை பறக்க முடியாது, ஆனால் ஆற்றல் உடையது. பறக்கும் யானை என்று ஒன்று இருக்குமென்றால் அது எப்படி இருக்கும். அதுவே கீதை! களியாட்டம், அழகு, நடனம் அனைத்தும் கவிதைக்கு சாத்தியம். வகுத்துரைப்பது, தொகுத்துரைப்பது, சுட்டிச்செல்வது என்பது அறிவியலுக்கு சாத்தியம். இரண்டு வகைகளையும் இணைக்கும் ஒரு மகத்தான நூல் நமது நிலத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆகவேதான் நம் அனைவருக்கும் அது முதன்மை நூலாக இருக்கிறது.

கடந்த இருநூறு வருடங்களை திரும்பிப் பார்த்தால்கூட, இதை கையில் வைத்திருந்த ஞானிகளின் பட்டியல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. நமக்கெல்லாம் முதல் ஆசிரியராகிய பாரதி, ஏன் ஜெயகாந்தன்… இந்திய தேசத்தின் தலைவராகிய காந்தி, அதற்கு முன்னால் விவேகானந்தர் என எத்தனை பேர். இவர்கள் அத்தனை பேரையும் வணங்குவதற்கு இந்த ஒரு நூலை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பகவத்கீதையை கையில் எடுக்கும்போது, ஒரு நல்லாசிரியனை அல்ல, பல்லாயிரம் நல்லாசிரியர்களை உருவாக்கிய ஒரு நல்லாசிரியனை நாம் சென்றடைகிறோம். “எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமு’ என்று சொல்லி இந்த  நூலை நாம் கையில் எடுக்கிறோம்.

நாளை தொடர்வோம், நன்றி !

(தொடரும்)

(இரண்டாம் நாள் உரை முடிவு. )

 

முந்தைய கட்டுரைதாருல் இஸ்லாம்
அடுத்த கட்டுரைஅமெரிக்கா, நிலம், முகங்கள், கனவுகள்