கீதையை அறிதல்-5

டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவையில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். இரண்டாம் நாள் உரை தொடக்கம்

எழுதியவர் Sakthi Prakash

கீதையை அறிதல்-4

அரங்கில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள். நேற்று என்னுடைய உரைக்கு பின்னரும் இத்தனை பேர் வந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. உண்மையில் இதிலும் பாதியாகத்தான் நான் எதிர்பார்த்தேன். ஆகவே வந்திருக்கிற அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்று பகவத்கீதை எப்படி ஒரு நவீன வரலாற்றுநோக்கில் அணுகப்படவேண்டும் என்பதைப்பற்றி சில பார்வைகளை இங்கே முன்வைத்தேன். மரபான புராணகாலம் ஒன்றுள்ளது, அது அகவயமான காலம். நவீன வரலாற்றுக்காலம் என்பது புறவயமான ஒரு காலம். பெளராணிகமான காலக்கணிப்பும், யுகக்கணக்குகளும், ஜைனர்களின் அங்கம் பிரத்யங்கம் போன்ற கணக்குகளும் பிழைகளல்ல, ஆனால் வேறொரு வகையான பார்வை கொண்டவை. இன்று கீதையை அணுகும் ஒருவருக்கு அது போதுமானதாக இல்லை. கீதையை இன்றைய காலகட்டத்துடைய, நவீன வரலாற்று பின்னணியில் பொருத்தி புரிந்துகொண்ட பிறகுதான் இன்றைய வாசகன் மேலே செல்லமுடியும் என்பதுதான் நேற்று நான் பேசியதன் சாராம்சம். அவ்வகையில் மகாபாரதத்தின் காலம், அதில் கீதை இணைக்கப்பட்ட காலம், கீதையினுடைய ஆசிரியர், அவனுடைய பங்களிப்பு என்று நேற்றைய உரை அமைந்திருந்தது.

கீதையின் இடம்

நண்பர்களே ! ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு குருவாயூர் ஆலயத்திலே நான் ஒருவரை பார்த்தேன். அவர் கழுத்தில் ஒரு பெரிய டாலர் போட்டிருந்தார். அங்கே சட்டையைக் கழட்ட வேண்டுமென்பதால், எல்லோரும் போட்டிருக்கும் தங்க நகைகளும் வெளியே தெரியும். இவர் போட்டிருந்த அந்த டாலர் வித்தியாசமாக இருந்தது. வழக்கமாக குருவாயூரப்பன் டாலர்தான் போடுவார்கள். இவருடைய அந்த டாலர் சல்லடை வடிவில் இருந்தது. கொஞ்சம் பார்த்தபிறகு தெரிந்தது, அது ஒரு புத்தக வடிவில் இருந்தது. பொன்னால் ஆனது.

நான் மீண்டும் மீண்டும் பார்ப்பதை பார்த்துவிட்டு அவர் அதை தூக்கிக்காட்டினார். “பகவத்கீதைங்க” என்று சொன்னார். நான் “கீதையா?” என்றேன். ஒரு பித்தானை அழுத்தியபோது அது திறந்தது. உள்ளே மெல்லிய தாளினாலான, கீதை முழுமையாகவே எழுதப்பட்டிருந்தது. அதை அவர் நகையாகப் போட்டிருந்தார்.  “வீட்ல நிறைய மரணங்க, தொழில்ல நஷ்டம், ஆகவே இதை ஒரு ஜோசியர் சொன்னார்னு போட ஆரம்பிச்சேன், எல்லாம் சரி ஆயிடுச்சுங்க, சந்தோஷமா இருக்கேன், கீதை துணையிருக்குங்க” என்றார். எனக்கு இதுவரைக்கும் ஒரு கேள்வி வாயில் வந்தது, அந்த கேள்வியை நான் கேட்கவில்லை. கீதையை நீங்கள் எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா என்று நான் கேட்க நினைத்தேன்.

சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஒரு கீதைப்புத்தகம் பிரசுரமாகியிருக்கிறது. அதனுடைய விலை முப்பத்தைந்தாயிரம் ரூபாய். ஏறத்தாழ எட்டு கிலோ எடையுள்ளது. அதைவைத்து படிப்பதற்காக ஒரு தாங்கி கொடுப்பார்கள். முன்னரே பதிவு பண்ணிய 1500 பேருக்கு மட்டும்தான் அந்தப்புத்தகம் கிடைக்கும். நீங்கள் கடையில் வாங்க முடியாது. அந்த புத்தகத்தை வீட்டுக்கு கொண்டு போவதற்கான போக்குவரத்து வசதி கொடுப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவ்வளவு பெரிய புத்தகம்.

இந்த விஷயங்கள் எல்லாம் எதைக்காட்டுகிறது என்றால், கீதை ஒரு புனித அடையாளம் (Icon) ஆக, ஒரு விக்ரஹமாக, ஒரு தெய்வச்சிலையாக மாறி வருவதைத்தான். கீதை ஒரு முதல்நூலாக ,ஒரு Canon – ஆக, ஒரு வழிபடுநூலாக இன்றைக்கு மாறியிருக்கிறது. நீதிமன்றத்தில் நீங்கள் என்ன மதமோ, அதனடிப்படையில் தொட்டு சத்தியம் செய்வவதற்கு மூன்று புத்தகங்கள் இருக்கின்றன; குர்ரான், பைபிள், கீதை. உங்கள் முன்னால் வைக்கப்படும் அந்த மூன்று புத்தகங்களில் ஏதாவது ஒன்றைத்  தொட்டு சத்தியம் செய்யலாம். இப்படி இந்த நூல் கடந்த நூற்றைம்பது வருடங்களாக மெல்ல மெல்ல ஒரு மூலநூலாக மாற்றப்பட்டு, ஒரு விக்ரஹமாக வழிபட்டு நம் முன்னால் வந்து நிற்கிறது.

சாலையில் நடந்து போனால் ஹரேகிருஷ்ணா இயக்கத்தவர், ISKCON-காரர்கள், ஒரு பகவத்கீதையை கையில் கொடுக்கிறார்கள், முப்பது ரூபாய். முப்பத்தைந்து ரூபாயில் மிகப்பெரிய கோரக்பூர் கீதை இருக்கிறது. அதை எல்லோரும் வாங்கி வீட்டில் வைத்திருப்பார்கள். எதற்கு என்று கேட்டால் பல காரணங்களை சொல்வார்கள். “வீட்டில் ஒரு கீதை இருக்கணும்ங்க”. பல தங்கும் விடுதிகளில், இப்போது நான் தங்கியிருக்கும் விடுதியில்கூட இழுப்பறையைத் கீதை உள்ளது. கீதையின் முகம் இப்படி மாறி வந்திருக்கிறது நண்பர்களே ! இந்த முகம் கீதைக்கு எப்போதும் இருந்ததா? கீதை இப்படித்தான் எப்போதும் கருத்தில் கொள்ளப்பட்டதா?

ரிச்சர்ட் டேவிஸ் (Richard Davis) என்ற ஆசிரிய எழுதிய “கீதையின் வாழ்க்கை வரலாறு” நூலை என்னுடைய அமெரிக்க நண்பர் அரவிந்தன் கண்ணையன் அவர்கள் பரிந்துரைத்து நான் படித்தேன். அதில் ஒரு விஷயம் சொல்கிறார். கி. பி. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி. பி. பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான எண்ணூறு புடைப்புச் சிற்பங்களை அவர் ஆராய்ச்சி செய்தார். இந்த எண்ணூறு புடைப்புச் சிற்பங்களில் மூன்று சிற்பங்ள் மட்டும்தான் கீதா உபதேசம் இருக்கிறது என்று. சமீபத்தில் நானும் நண்பர்களும் ஹொய்சால சிற்பங்களை பார்ப்பதற்கு ஒரு பயணம் செய்தோம். கிருஷ்ணன் தொடர்ந்து நம் கோயில் சிலைகளில் வந்துகொண்டே இருக்கும் ஒரு வடிவம். அடிக்கடி கண்ணில்படுவது  கோவர்த்தன கிரியை தூக்கி வைத்திருக்கும் கிரிதாரி. காளியன் மேல் ஆடும் காளியமர்தனம் இருக்கும். கோபிகா வஸ்த்ராபகரணம் இருக்கும். ஆனால் ஒருபோதும் கீதை உரைக்கும் சிலை இருக்காது. அன்று கூட நண்பர் யாரோ கேட்டார்கள், “எங்கேயும் கீதை உரைக்கும் சிலை இல்லையே”

பரவலாக மக்களுக்குத் தெரிந்த ஒரு புராணமாகவோ ஒரு தொன்மச்செய்தியாகவோகூட கீதை இருக்கவில்லை என்பதுதான் உண்மை. நம் தாத்தாக்களில் நிறைய பேருக்கு கீதையைப்பற்றி பெரிதாக எதுவும் தெரியாது. இந்திய மொழிகளில் 13-ம் நூற்றாண்டில்தான் மராத்தி மொழியில் ஞானேஸ்வர் கீதையை மொழிபெயர்தார். தியானேஸ்வரர் என்று அவரை சொல்வார்கள். மற்ற எந்த மொழிகளிலும் அது மொழிபெயர்க்கப்பட்டது கிடையாது. மலையாளத்தில் 1905-ல் மகாராஜா பணம் கொடுத்து சேஷாத்திரி ஐயர் என்பவர் மொழிபெயர்தார். தமிழில் நமக்குத்தெரிந்த பிரபலமான பகவத்கீதை மொழிபெயர்ப்பு என்பது பாரதியாருடைய மொழிபெயர்ப்பு. அதற்கு முன்னால், குருகுலங்களுக்குள் சிலர் மொழிபெயர்ப்புகளை செய்து வைத்திருக்கலாம். அவை பிரபலமான எல்லோருக்கும் தெரிந்த மொழிபெயர்ப்புகள் கிடையாது. அப்படியென்றால் கீதையின் இடம் என்னவாக இருந்தது?

நாம் இன்றைக்கு பார்க்கும் இந்த விக்ரஹத்தன்மை, இந்த Icon, கீதைக்கு இருந்ததில்லை. கீதைக்கு ஒரு மதநூல் என்னும் அடையாளமே இருந்ததில்லை. 1785 -ல் சார்ல்ஸ் விக்கின்ஸ் என்ற அறிஞர் அதை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்தார். இந்திய வைஸ்ராய் வாரன் ஹேஸ்டிங்க்ஸ் அவர்களின் தூண்டுதலின் பேரில் அந்த மொழிபெயர்ப்பு நடந்தது. அதன்பிறகு வாரன் ஹேஸ்டிங்ஸின் முன்னுரை வழியாக அது பிரிட்டனில் பிரபலமாகியது. அந்த பிரபல மேற்கோள் உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். அதாவது “மொத்த இந்தியாவையும் எடுத்துக்கொள்ளுங்கள், பதிலுக்கு எங்களுக்கு எது வேண்டும் என்று கேட்டால், கீதை போதும் என்று நான் சொல்வேன்” என்று வாரன் ஹேஸ்டிங்ஸ் சொன்னார். ஒரு மேடையில் சொல்லப்பட்ட அலங்காரமான சொற்றொடராக இருந்தாலும், கீதையின் தத்துவார்த்தமான முக்கியத்துவத்தை அந்த வரி நிறுவியது.

ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும் அப்போதே கீதை சென்று சேர்ந்தது. 1885 -ல் கீதை “விண்ணோர் பாடல்” (The Song of the Celestial) என்ற பெயரில் சர் எட்வின் ஆர்னால்ட் (Edwin Arnold) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த இரண்டாவது மொழிபெயர்ப்புதான் கவித்துவமான மொழிபெயர்ப்பு. முதல் மொழிபெயர்ப்பை வரிக்குவரி மொழியாக்கம் (Textual Translation) என்று சொல்வார்கள். அதன்பிறகு அது ஐரோப்பாவில் இருந்த பெரும்பாலான கவிஞர்களிடம் மிகப்பெரிய செல்வாக்கை செலுத்தியது. உங்களுக்கு தெரிந்திருக்கும்,  வால்ட்விட்மான் (Walt Whitman) அவர்கள் இறந்து போகும்போது தன் தலையணைக்கு கீழே வைத்திருந்த நூல் கீதை என்று சொல்வார்கள்.

இப்படி ஐரோப்பாவில் கீதை ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கிய பிறகுதான் இந்தியாவில் அதன் செல்வாக்கு தொடங்கியது. இங்கே அன்றைக்கு இருந்த இளைஞர்கள் தங்களுடைய மரபு பற்றி ஒரு பெரிய ஒவ்வாமை கொண்டிருந்தார்கள். நம்முடைய மரபு என்பது உருவ வழிபாடு, சாப்பாட்டை கொண்டுபோய் சாமியிடம் படைப்பது, என்ற எண்ணம்தான் அன்றைக்குள்ள இளைஞர்களிடம் கல்வி வழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ஆங்கிலம் கற்கும்போது ஆங்கிலேயர் மேல் ஒரு மிதமிஞ்சிய பக்தியும், அவர்கள் பெரிய அறிஞர்கள், அவர்கள் தங்கள் உலகத்தையே பழித்தாலும் அவர்கள் சொல்வதுதான் சரி, என்ற எண்ணம் அன்றைக்கு இருந்தவர்கள் மனதில் இருந்தது. இன்றைக்கும் பெரும்பாலும் அப்படித்தான் என்று உங்களுக்குத் தெரியும். அந்த ஆங்கிலேயனே நம் புத்தகத்தில் ஒன்றை போற்றிச் சொல்கிறான் என்பது குறித்த ஒரு பரவசம், அதுதான் கீதையை இந்தியாவில் மீண்டெழச்செய்தது.

அந்த நூறு வருடங்களில் இந்தியாவில் கீதை புத்துருவம் பெற்றது. 1856-ல் இங்கே பிரம்ம சமாஜம் என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. ராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய அந்த அமைப்பின் நோக்கம், கிறிஸ்தவ மதத்தைப் போன்று, கவனியுங்கள் சீர்திருத்தக் கிறிஸ்தவ மதத்தைப் போன்று, ஓர் ‘அறிவார்ந்த’ மதமாக இந்துமதத்தை மாற்றுவது. ஆகவே உருவ வழிபாட்டை அவர்கள் தவிர்த்தார்கள். பூஜைகள், வழிபாடுகளை  இல்லாமல் செய்தார்கள். சர்ச் போலவே கூடுகை (Congregation)களை நடத்த ஆரம்பித்தார்கள். போதகர் (Pastor) மாதிரியே ஓர் ஊழியரை நியமித்தார்கள். வாரம் ஒருநாள் ஒரு பிரசங்கம், கொஞ்சம் பஜனை, வேண்டுதல்ஜெபம் அவ்வளவுதான், முடிந்தது.

ஒரு சீர்திருத்தக் கிறிஸ்தவ சர்ச் மாதிரியே பிரம்ம சமாஜத்தின் வழிபாட்டு முறைகளை அமைப்பதற்கு, அதற்கான ஒரு நூலாக அவர்கள் பகவத்கீதையை கொண்டுவந்து வைத்தார்கள். அதேகாலகட்டத்தில் ஆரிய சமாஜம் உருவானது. 1876-ல் ஆரிய சமாஜம் இன்னும் விரிவான வகையில் கீதையை கொண்டு சென்று சேர்த்தது. இந்த இரண்டு இயக்கங்களும் கீதையை ஒரு மூலநூலாக தங்கள் ஆதரவாளர்கள் நடுவே கொண்டுபோய் சேர்த்தன.

அதற்கான காரணங்கள் என்னவென்றால்; ஒன்று, அதில் வழிபாடுகளைப் பற்றி சொல்லப்படவில்லை. அது ஒரு வழிபாட்டு நூல் கிடையாது. சம்பிரதாயமான பக்தி, தோத்திரநூல் அல்ல. இரண்டு, அது ஒரு அறிவார்ந்த நூல், தத்துவநூல். வேதாந்தத்தின் உச்ச தத்துவத்தை அது சொல்கிறது. மூன்றாவதாக, உச்ச தத்துவத்தை சொல்லும்போதுகூட கிருஷ்ணன் என்ற தெய்வத்தை முன்னிறுத்துகிறது. ஏற்கெனவே வடஇந்தியா முழுக்க பிரபலமாக இருக்ககும் கிருஷ்ணன் என்னும் தெய்வத்தை அது நிராகரிக்கவில்லை. அவனை தத்துவார்த்தமாக திருப்பி முன்னிறுத்துகிறது. கடைசியாக அது பாடுவதற்கு எளிதாகவும், நாடகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. அதன் இலக்கிய மேன்மை அவர்களைக் கவர்ந்தது. ஆகவே இவர்கள் கீதையை ஒரு பெரிய அலை மாதிரி கொண்டுவந்தார்கள்.

மலையாள முதல் நாவல் எழுதிய C. V. ராமன் பிள்ளை அவர்கள், அவருடைய வரலாற்றுக்குறிப்பு ஒன்றில் சொல்கிறார். அவருடைய வகுப்பில் ஸ்காட் (Scott) என்ற ஆங்கிலேயர் பைபிளை பற்றி பேசும்போது கீதையைப்பற்றி ஒரு பத்தி சொன்னார். எட்வின் ஆர்னால்ட் (Edwin Arnold) எழுதிய கீதை மொழிபெயர்ப்பை பற்றி விவரித்தார். ராமன்பிள்ளையை அது கிட்டத்தட்ட பரவசத்தின் உச்சத்திற்கு கொண்டு போகிறது. வெள்ளைக்காரர் அவருடைய வாயால் இந்தியாவை சேர்ந்த ஒரு நூலின் மேன்மையை சொன்ன பத்து வார்த்தைகள் இவர்களை கிட்டத்தட்ட அழுகை நிலைக்கு கொண்டுபோயிற்று. இரண்டுவாரம் கழித்து ஒரு இளைஞன் அந்த மொழிபெயர்ப்பை வகுப்புக்கு கொண்டு வந்தான். மொத்த மாணவர்களும் அந்த புத்தகத்தை சுற்றி உட்கார்ந்தனர். அதை தொட்டுத் தொட்டு பார்த்தார்கள். படிப்பபதற்கு கேட்டால் கொடுக்கமாட்டேன் என்றான். ஒரு நாளைக்கு பத்து பாடல் வீதம் அந்த வகுப்பில் அமர்ந்து படித்தனர். எவருக்கும் அது என்னவென்றே தெரியவில்லை. அதன் பொருள் புரியவில்லை ஆனால் ஒரு பெரிய பெருமிதத்தை அவர்கள் அடைந்தனர். இது எங்களுடையது. எங்களுக்கும் தத்துவ நூல் உண்டு! அந்த பெருமிதம்தான் அடுத்த நூற்றைம்பது வருடத்திற்கு நீடித்தது, இன்றைக்கு இருக்கும் இடத்தில் கீதையை கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது.

ஆனால் கீதைக்கு ஒரு பொதுவாசிப்பு நூல் (Popular Text) ஆகக்கூடிய தன்மை உண்டா என்று பார்த்தால், இல்லை என்றே சொல்லவேண்டும். யார் வேண்டுமானாலும்  எடுத்து படித்துப்பார்து புரிந்துகொள்ளும் தன்மை கீதைக்கு கிடையாது. அது ஒரு தத்துவநூல், மறைஞானநூல், உள்ளடுக்குகள் கொண்ட நூல், மறைஞானம் பேசும் ரகசிய (Esoteric) நூலும்கூட. அடுத்த நூற்றைம்பது வருடத்தில் கீதையின் மீது வந்த அனைத்து விமர்சனங்களும், அந்த நூலின் கடைசியில் அதன் ஆசிரியனாகிய கிருஷ்ணன் சொல்லியிருக்கும் சில ஆணைகளை மீறியதானால் வந்தது. “இதை கேட்பதற்கு அக்கறை இல்லாதவரிடம், இதை கேட்பதற்கு தகுதி அற்றவரிடம், சரியான ஆசிரியன் இல்லாதவரிடம், என்மேல் காழ்ப்பு கொண்டவரிடம் இதை ஒருபோதும் சொல்லாதே” என்று அவன் சொல்லிவிட்டுப் போயிருக்கிறான். ஆனால் அத்தனை பேரிடமும் நாம் அதை அச்சிட்டு கொண்டுபோய் கொடுத்தோம். அவர்களிடமிருந்து அனைத்து வகையான சந்தேகங்களையும் வசைகளையும் வாங்கிக்கொண்டு இருக்கிறோம். கீதை சம்பந்தமான பிரபலமான எதிர்க் கருத்துகள் அனைத்துமே இப்படித்தான் உருவாகியின. அதாவது ஒரு ஞானமரபின் நூல், ஒரு மறைஞானநூல், ஒரு பொதுவாசிப்பு நூலாக படிக்கப்பட்டதன் பிழைகளை எல்லாம் நாம் திரும்ப திரும்ப சந்தித்து கொண்டிருக்கிறோம். நமக்கு அந்த பிழையான புரிதல்களுக்குப் பதில் சொல்லுமளவுக்கு கீதையில் ஞானமும் இல்லை. ஏனென்றால் முறையான தத்துவக்கல்வி இல்லாமல், ஆசிரியர் இல்லாமல் கீதையைப் சரியாகப் புரிந்துகொள்ள முடியாது.

என்னென்ன பிழைகள் வரும் என்று பார்ப்போம். முதல் பிழை; சாதாரணமானவர்கள் படிக்கும்போது கீதையை ஓர் உபதேச மஞ்சரியாக எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கிறார்கள். கடவுளே வந்து சொல்லியிருக்கிறார், ஆகவே இதைச் செய், அதைச் செய்யாதே என்றுதானே அவர் சொல்வார் என்று இவர்கள் நினைப்பார்கள். ஆனால் அதற்குள் பார்த்தால் அப்படி உபதேசங்கள் எதுவும் பெரிதாக கிடையாது. இவர்கள் அதற்குள் உள்ள தத்துவ விவாதங்களை தனித்தனி நல்வழி உபதேசங்களாக எடுத்துக்கொண்டு  ’கீதா உபதேசம்’ என்று மாற்றுவார்கள்.  நான்கு வரி, ஐந்து வரி கீதா உபதேசங்கள்க உங்களுக்கு வந்துகொண்டே இருக்கிறது அல்லவா? ஆனால் கீதை ஒரு நல்லுபதேச நூல் அல்ல. நெறிநூல் அல்ல. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாக அது நெறிநூலாக கற்றுக்கொள்ளப்படவில்லை. ஆனால் திடீரென்று அது நெறிநூலாக ஆகிவிட்டது.

இரண்டாவதாக; பரவலான மக்களுக்கு உள்ள மதநம்பிக்கை என்பது பக்திதான். அது இயல்பும்கூட. பக்திமார்க்கம் தான் ராஜபாட்டை. ஆனால் கீதை ஒரு ஞானநூல். ஒரு ஞானநூல் பக்திநூலாக வாசிக்கப்படும் அனைத்து சாத்தியங்களும் இங்கே திறந்துகொள்கின்றன. பக்திநூலாக மாற்றிக்கொண்டு ஒரு ஞானநூலை படிக்கும்போது வரக்கூடிய எல்லாவிதமான இடர்வுகளும் உருவாகின்றன. நல்லவேளையாக பெரும்பாலான ஆட்கள் சாங்கிய யோகத்திற்கு அப்பால் படிப்பதில்லை. படித்தார்கள் என்றால்; ’ஸாங்கிய யோகத்தில் சொன்னதை ஞான யோகத்தில் மறுக்கிறாரே? என்ன ,விளையாடுகிறாரா?’ என்னும் எண்ணத்தை அவர்கள் அடைவார்கள். அல்லது ‘என்ன இது, இத்தனை முரண்பாடு இருக்கிறதே?’ என்று ஒரு குருவிடம் கேட்பார்கள். ‘பகவானையே எதிர்த்து பேசுகிறாயா? வாயை மூடிக்கொண்டு இரு’ என்று அவர் சொல்வார். ’சரிங்க’ என்று இவர் திரும்பிவிடுவார். இந்த அடிப்படையில் கீதை இன்று பரவலாகவே வாசிக்கப்படுகிறது.

மூன்றாவதாக கீதைமேல் சொல்லப்படும் மிகமுக்கியமான குற்றச்சாட்டு, அதன் முரண்பாடுகள். தொடர்ச்சியான முரண்பாடுகளால் முன்னால் செல்லும் ஒரு படைப்பு கீதை. அது ஏன் என்பதை பின்னால் சொல்கிறேன்.

நான்காவதாக; மிகப்பரவலாக முன்வைக்கப்படுவது, அதில் இருக்ககும் சில வரிகளை எடுத்துக்கொண்டு சமூகவியல் அர்த்தத்தை கொடுப்பது. “சதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம்” என்று அது சொல்கிறது, ஆகவே அது வருணாசிரம தர்மத்தை முன்வைக்கிறது, குலக்கலப்பைக் கண்டிக்கிறது. இப்படி அதிலுள்ள சில வரிகளை எடுத்துக்கொண்டு இதற்காகத்தான் அந்நூலே எழுதப்பட்டிருக்கிறது என்ற நம்பிக்கை இங்கே உண்டு. தமிழ்நாட்டில் ஒரு ஐம்பது பேரை உட்காரவைத்து கீதையை பற்றி உன் கருத்தை சொல் என்றால் இதுதான் உடனே சொல்லப்படும். இங்கே கீதையை பற்றிய இந்த வகையான எளிய சமூகவியல் புரிதல்கள் சில இருக்கின்றன. ஒரு சிற்பத்தை நக்கிப்பார்த்த பிறகு கருத்து சொல்வது போலத்தான் அது, ஆனால் அந்த அபிப்ராயம்தான் தமிழ்நாட்டில் அதிகமாக எழுந்து வரும். அந்த அபிப்ராயத்திக்கு நீங்கள் பதில்சொல்ல வேண்டும். அந்த விமர்சனத்தைச் சொல்பவன் ஒன்றும் அறியா பாமரன். ஆனால் தன்னை ஒரு கல்விமான், ஒருவகை ஞானி என்று நினைத்துக்கொண்டு சொல்வான். அவனுடைய அகங்காரத்தை முதலில் வெல்ல வேண்டியிருக்கிறது. அதன்பின்னரே விளக்கம் அளிக்கமுடியும்.

இந்த பிழைகள் எல்லாம் இந்த நவீனக் காலகட்டத்தில் கீதை இப்படி  பொதுவாசிப்பு நூலாக மாறியதானால் வந்தவை.

(மேலும்)

முந்தைய கட்டுரைமுகநூலில் வாழ்தல், தமிழ்ப்பணிகள்…
அடுத்த கட்டுரைதுடுப்புவால் கரிச்சானின் நாட்கள்