மாரிட்ஜானின் உடல்- கடிதம்

மாரிட்ஜானின் உடல்

அன்புள்ள ஜெ

மாரிட்ஜானின் உடல் கதை வாசித்தேன். எரிமலை என்ற வார்த்தை தமிழில் இல்லை. பிறகு நாம் உருவாக்கிக்கொண்டது அது. ஏனென்றால் எரிமலைகள் நமக்கில்லை. இருந்திருந்தால் அவை தெய்வங்களாக ஆகியிருக்கும். எந்தவகையான தெய்வங்கள் ஆகியிருக்கும் என்பதை மாரிட்ஜானின் கதை காட்டுகிறது. தெய்வம் என்றால் அதற்கு உபாசகனும் இருப்பான். அவனுக்கு அந்த தெய்வம் தன்னுடைய உருவத்தைக் காட்டும்.

மாரிட்ஜானின் இசைக்கருவிகள் எரிமையால் மீட்டப்படுகின்றன. அதேபோல அவன் உடலும் மீட்டப்படுகிறது. எரிமலையை அஞ்சி விலகி ஓடுகிறார்கள். எரிமலையுடன் இணைந்திருப்பதன் வழியாக அவர் அதை அறிகிறார். அதற்கே தன்னை அளிக்கவும் செய்கிறார். ஒரு பெரிய தெய்வத்தை இந்தக் கதை காட்டிவிட்டது.

செந்தில்ராஜ்

அன்புள்ள ஜெ

மாரிட்ஜானின் உடல் கதையில் எரிமலை அழிவுச்சக்தியாக இருக்கிறது. ஆனால் அணைந்ததுமே அது வளமிக்க மண்ணாக ஆகி உணவாக மாற ஆரம்பிக்கிறது. எரிமலை வெடித்ததைக் கொண்டாடுகிறார்கள். அந்த முரண்பாடு அழகாக வெளிவந்துள்ளது

ராம்குமார்

முந்தைய கட்டுரைமரபை இனிமையென அறிதல்
அடுத்த கட்டுரைகவிதைகள் இதழ், செப்டெம்பர்