நம் அறிவியல்- கடிதம்

அன்புள்ள ஜெ,

நேரு குறித்த தங்கள் மதிப்பீடு துல்லியமானது. 1990கள் வரை இந்தியக் கல்விப் புலங்களை முற்றாக நேருவியர்களும் இடதுசாரிகளுமே ஆக்கிரமித்திருந்தனர். ஆனால் தாராளமயமாக்கலுக்குப் பிறகு சில ஒளிக்கீற்றுகள் தெரிந்தன. இந்தப் பாரம்பரிய அறிவியலுக்கு, குறிப்பாக மருத்துவம் சார்ந்த அறிவுக்கு உலகச் சந்தையில் இருக்கும் பொருளியல் மதிப்பு நமக்குப் புரிந்து உறைக்க ஆரம்பித்தது.

வேம்பு பற்றிய மருத்துவ அறிவு திருடப்பட்டு  உலக அளவில் காப்புரிமை பெறப்பட்ட போது,  ஏழெட்டு ஆண்டுகள் கழித்தே நமக்குத்  தெரிய வந்தது. சூடுபட்டு விழித்துக் கொண்டோம்.  2000-ம் ஆண்டில் வேம்பு வழக்கில் பழைய ஆயுர்வேத நூல்களின்  பல சம்ஸ்கிருத சுலோகங்களை மேற்கோள் காட்டி இந்தியா வென்றது. இந்த அனுபவத்தின் அடிப்படையில்   பாரம்பரிய  அறிவியலைப் பாதுகாக்க அப்போதைய பா.ஜ.க அரசு  நீண்ட காலத் தொலை நோக்குத் திட்டத்துடன் TKDL (Tranditional knowledge Digital library) என்னும் அற்புதமான தகவல் களஞ்சியத்தைப் பல்துறை அறிஞர்களின் உதவி கொண்டு உருவாக்கியது.  வெறும் 10 கோடி ரூபாய் செலவில் உருவான இந்தத் தகவல் களஞ்சியம்  அதன் பிறகு  வந்த பல வழக்குகளில்  சீன, மேற்கத்திய நிறுவனங்கள் இந்திய மருத்துவ அறிவைத் திருடுவதைத் தடுத்தி நிறுத்திப் பாதுகாப்பளித்தது.

இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்திய டாக்டர் முரளி மனோகர் ஜோஷி கல்வியைக் காவிமயமாக்குவதாக  நமது ஊடகங்களாலும்,  காங்கிரஸ், இடது கட்சிகளாலும் கடுமையாக வசைபாடப்பட்டார். பொட்டு வைத்த அவரது தோற்றத்தை ஜோசியர் என்று கேலி செய்தார்கள். டாக்டர் ஜோஷி  நிறப்பிரிகை தொடர்பான இயற்பியல் ஆய்வுகளில் டாக்டர் பட்டம்  பெற்றவர் என்பதைக் கூட வசதியாக மறந்தும், மறைத்தும் விட்டார்கள்.

TKDL பற்றி  அ.நீ  எழுதிய கட்டுரை  இங்கே –  http://www.tamilpaper.net/?p=525

இதே போல யோகாசனங்களுக்குக் காப்புரிமை பெற முயன்ற பல மேற்கத்திய கம்பெனிகளின் சமீபத்திய முயற்சிகளும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டன. யோகாசனம் ஏதோ  பூச்சாண்டி  வேலை அல்ல,   முறையாக ஆவணப்படுத்தப் பட்ட பாரம்பரிய  இந்து அறிவியல்  என்ற விஷயம் உலக அளவில்  ஓரளவு இப்போது புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளாக இந்தியாவில் யோகாசனங்கள் குறித்து ஏற்பட்டிருக்கும்  பரந்துபட்ட விழிப்புணர்வும் இதற்கு ஒரு காரணம்.  யோகத்தை மக்கள் இயக்கமாக வெகுஜன அளவில் பிரலபப் படுத்திய  பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீ,  ஜக்கி மற்றும் பல இந்துத்துவ அமைப்புகளுக்கும் இதற்காக நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

அன்புடன்,
ஜடாயு

***

அன்புள்ள ஜடாயு,

யோகக்கலையை அப்படி சர்வதேச கவனத்துக்குக் கொண்டுசென்றவர் பி.கெ.எஸ்.ஐயங்கார். ராஜயோகத்தைப்பற்றிய முதல் விழிப்பை உருவாக்கியவர் சுவாமி விவேகானந்தர். அந்த முன்னோடிகளிடம் இருந்து அந்த அலை ஆரம்பிக்கிறது. மகேஷ் யோகிக்குப் பின் அதில் வணிகரீதியான பேக்கேஜ் சிஸ்டம் அறிமுகமாகியது. அதில் பல இழப்புகள். ஆனாலும் யோகா பிரபலமாக அதுவே காரணம்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

இந்திய அறிவியல் எங்கே ? என்ற தங்கள் பதிவு கண்டேன்.
நல்ல விளக்கம். பழமை என்ற ஒற்றைச் சொல்லால் ஒட்டு மொத்த சிந்தனை மரபையும் ஒதுக்கிவிடும் போக்கு இன்று இருப்பது வேதனையளிக்கிறது.நீங்கள் குறிப்பிடும் இரண்டு நேர் எதிரான மனப்பாங்கும் எங்கள் மருத்துவத்துறையில் காணலாம்.ஒரு புறம் இந்திய மருத்துவம் என்றாலே அறிவியலுக்குப் புரம்பானது,ஆதாரமற்றது, காட்டு மிராண்டித்தனமானது என்று நினைத்து ஒதுக்கும் நவீன மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள்.இன்னொரு துருவமாக இந்திய மருத்துவத்தில் கான்சரில் இருந்து எயிட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் மருந்து இருக்கிறது என்று கிளப்பிவிடுபவர்கள் இருக்கின்றனர். இடைநிலையில் இரண்டுக்குமான ஒரு உரையாடல் நடப்பது பகற்கனவாகவே இருக்கிறது.
தற்செயலாகக் கிடைத்த வீடியோ . பிள்ளையார் சதுர்த்தி அன்று அனுப்புவது பொருத்தமாக இருக்கிறது. நமது தொன்மையை எளிதில் புறந்தள்ளுவது அறிவான செயலாக இராது .
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.
அன்புடன்
Dr.ராமானுஜம்
முந்தைய கட்டுரையோகமும் கிறித்தவமும்
அடுத்த கட்டுரைதூக்கு-கடிதம்