அறிவுரை சொல்லும் எழுத்தாளன்

தன்மீட்சி வாசிப்பனுபவப் போட்டி

அன்புள்ள ஜெ

சில மாதங்களுக்கு முன்பு நான் ஓர் இளம் நண்பரைப் பார்த்தேன். உங்களுடைய தன் மீட்சி என்னும் நூல்தான் அவர் வாசித்த முதல் படைப்பு. அதை அந்தப் பதிப்பகத்தில் இருந்து இலவசமாகவே பெற்றிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் திருப்புமுனை அந்தச் சிறிய நூல் என்று அவர் சொன்னார். அவர் ஆழ்ந்த உளச்சோர்வில் இருந்தவர். அதிலிருந்து வெளியேறி இன்று தீவிரமாக ஒரு துறையில் சேவை செய்கிறார். மனநிறைவையும் அடைந்துள்ளார். அவர் உங்களுடைய அதைப்போன்ற இரண்டு நூல்களை மட்டுமே வாசித்திருக்கிறார். நாவல்கள், சிறுகதைகள் என எதையுமே வாசித்ததில்லை.

இந்தவகையான நூல்களின் தேவை தெரிகிறது. ஆனால் இதையெல்லாம் எழுத்தாளர்கள் எழுதவேண்டுமா என்பதுதான் கேள்வி. ஏனென்றால் எழுத்தாளர்களிடமிருப்பது பதில்தெரியாத கேள்விகள். அதைத்தேடிச்செல்லவே எழுத்து தேவையாகிறது. உறுதியான விடைகளை ஒருவர் சொல்லிவிட்டால் எழுத்துக்கான தேவை என்ன? தெளிவு என்பது எழுத்துக்கு எதிரானது அல்லவா?

நான்  பழைய கணையாழி கோஷ்டி. நாலைந்து சிறுகதைகளை அந்தக்காலத்தில் எழுதியுள்ளேன். இப்போது ஓய்வு வாழ்க்கை.

ஜே.ராகவன்

அன்புள்ள ராகவன்,

நான் அண்மையில் ஓர் ஆங்கில எழுத்தாளருடன் பேசநேர்ந்தது. அவர் நான் இலக்கிய அமைப்பு நடத்துகிறேன் என அறிந்தபோது திடுக்கிட்டுவிட்டார். எழுத்தாளன் ஓர் அமைப்பை நடத்துவதெல்லாம் அவரால் யோசிக்கவே முடியவில்லை. அவர் வாழ்க்கை என்பது புத்தகத்தை எழுதுவது, ஊர் ஊராகச் சென்று இலக்கிய விழாக்களில் அந்தப்புத்தகத்தைப் பற்றி மட்டுமே பேசி, அதை விற்பது. பதிப்பாளரின் வசதிக்காக நான்கு ஆண்டுக்கு ஒரு புத்தகம்தான் எழுதுவார். இரண்டு ஆண்டு நூல் பிரச்சாரம். அடுத்த இரண்டு ஆண்டு அடுத்த நூலை எழுதுவது. இதுதான் வாழ்க்கை.

நான் சொன்னேன், ‘என்னை நீங்கள் இன்றைய எழுத்தாளராக எண்ண வேண்டாம். என்னை ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கால எழுத்தாளராக கருதுங்கள். நான் நவீனத்துவ, பின்நவீனத்துவ எழுத்தாளர்களில் ஒருவன் அல்ல. என் ஆதர்சங்கள் செவ்வியல் படைப்பாளிகள் மட்டுமே. அவர்கள் என்ன செய்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் எழுதிக்குவித்தனர். ஊர் ஊராகச் சென்று பேசினர். அமைப்புகளை நடத்தினர். போராட்டங்களைச் செய்தனர். சிறைசென்றனர். அந்த விசையே எனக்குரியதாக எண்ணுகிறேன்.”

அவரிடம் சொன்னேன் “தல்ஸ்தோய் அல்லது தாமஸ் மன் அல்லது டி.எச்.லாரன்ஸ் தன் வாசகர்களுக்கு ஆலோசனை சொல்லலாம் என்றால் ஏன் நான் சொல்லக்கூடாது?  சிவராமக் காரந்த் அமைப்புகளை  உருவாக்கலாம் என்றால், பஷீர் ஆலோசனைகள் சொல்லலாம் என்றால் நான் ஏன் செய்யக்கூடாது? அவர்கள் எழுதிய கடிதங்களை, கட்டுரைநூல்களை வாசித்திருக்கிறீர்கள் அல்லவா?”

அந்த எழுத்தாளர் ”நீங்கள் முற்றிலும் வேறொரு சூழலில் இருந்து எழுதுகிறீர்கள்” என்று முடித்துக்கொண்டார். “ஆம், இன்னொரு அதிசயத்தையும் நான் சொல்லவேண்டும். என்னுடைய பெரும்பாலான எழுத்துக்கள் இணையத்தில் இலவசமாக உள்ளன. மிகப்புகழ்பெற்ற படைப்புகளுக்கு ஆசிரியரின் பதிப்புரிமை கிடையாது”. அவரால் சற்றுநேரம் பேசவே முடியவில்லை. அப்படி ஒன்றுக்கு முன்னுதாரணமே அண்மைக்காலத்தில் இல்லை.

 

நான் எந்த ’மாடல்’ஐயும் பின்பற்ற விரும்பவில்லை. நவீன எழுத்தாளனாகக்கூட என்னை அடையாளப்படுத்த விரும்பவில்லை. மெய்மைத்தேடல்கொண்ட ஒருவன், கதைசொல்லி என்னும் இரண்டு அடையாளங்களை மட்டுமே கொண்டிருக்கிறேன். என் வழியில் நான் செல்கிறேன். நான் என்னவாக இருக்கிறேன் என்பதை நானே வரையறைச் செய்வதில்லை. ஓடைபோல நிலத்தின் வடிவே என் பாதை.

உண்மையிலேயே இலக்கியம் அல்லது எழுத்தாளனுக்கு அத்தகைய வரையறைகள் ஏதுமில்லை. ஒரு மரத்தின் கிளைகளின் வடிவம் அந்நிலம், அங்குள்ள பிற மரங்கள், அதன் வேரியல்பு ஆகியவற்றுக்கு ஏற்ப தன்னியல்பாக உருவாகி வருபவை. இலக்கியவாதி என்ன செய்கிறான், எப்படிச் செயல்படுகிறான் என்பதை அவன் செயல்படும் சூழலும் அவனுடைய ஆளுமையும் கொள்ளும் முரணியக்கமே தீர்மானிக்கிறது.

நான் இலக்கிய விமர்சனங்கள் எழுதுகிறேன். இலக்கிய அறிமுகம் செய்கிறேன். இலக்கியப் பயிற்சிமுகாம்கள் நடத்துகிறேன். இவற்றையெல்லாம் ஐரோப்பாவில் இன்று ஓர் இலக்கிவாதி செய்வதில்லை. ஆனால் சிவராம காரந்த் செய்திருக்கிறார். அவருக்கு அதற்கான தேவை இருந்தது. சுந்தர ராமசாமி செய்திருக்கிறார். அவர் சூழலுக்கு எதிர்வினையாக அதைச் செய்தார். அவருடைய கடமை என்று எண்ணினார்.

ஆலோசனைகளை உறுதிப்பாடு இன்றி சொல்ல முடியாது என்பது சரி. நான் உறுதியாக அறிந்தவற்றையே சொல்கிறேன். அவற்றுக்கான மதிப்பு என்பது நான்கொண்டுள்ள அனுபவப்பின்புலமும், நான் அதையொட்டி அளிக்கும் சான்றும்தான். உலகமெங்கும் பேரிலக்கியவாதிகள் அத்தகைய உறுதியான கொள்கைகளை எழுதியுள்ளனர்.

எழுத்தாளனுக்கு எதிலும் உறுதிப்பாடு இருக்காது, அவன் நிலையற்றவனாகவும் குழம்பியவனாகவுமே இருப்பான் என்பதெல்லாம் சென்றகாலத்தின் கற்பிதங்கள். ஓரிரு எழுத்தாளர்களின் வாழ்க்கையைக்கொண்டு அதை பெரும்பாலும் பதிப்பாளர்களும் விமர்சகர்களும் உருவாக்கினார்கள். அதை இலக்கியவாதிக்கான நிபந்தனையாக ஆக்குவது அபத்தம்.

இலக்கியவாதிக்கு குறைந்தபட்சம் இலக்கியம் எழுதப்படவேண்டும், வெளியிடப்பட வேண்டும் என்பதிலாவது உறுதிப்பாடு இருக்கும் அல்லவா? அப்படிச் சில உறுதிப்பாடுகளின் அடிப்படையில்தான் அவனால் உயிர்வாழவேகூட முடியும். அந்த உறுதிப்பாட்டையாவது அவன் சொல்லலாம் அல்லவா? உறுதிப்பாடுகளின் அளவு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று. தீவிர வாழ்வனுபவமும், தீவிர வாசிப்பும் இணைகையில் உறுதிப்பாடு பெருகுகிறது.

அத்தகைய உறுதிப்பாட்டால் இலக்கியப்படைப்பு வராமல்போகுமா? நான் பல முறை சொன்னதுதான் இது. தர்க்கம், தெளிவு, உறுதிப்பாடு ஆகியவை படைப்பூக்கத்திற்கு எதிரானவை அல்ல. நான் தர்க்கபூர்வமாக மட்டுமே யோசிப்பவன். தெளிவுகள் கொண்டவன். உறுதிப்பாடு அமைந்தவன். என்னைவிட படைப்பூக்கத்துடன் தமிழிலக்கியத்தில் சென்ற சில நூற்றாண்டுகளில் எவரும் செயல்பட்டதில்லை என்று வாசிப்புடையோர் அறிவர்.

ஒருவர் தன் தர்க்கபுத்தியை வேண்டுமென்றே குழப்பிக்கொள்வார் என்றால், வேண்டுமென்றே தெளிவுக்கும் உறுதிக்கும் எதிராகச் செல்வார் என்றால் அவர் அற்பமான எழுத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொருவரும் முடிந்தவரைத் தர்க்கபூர்வமாகச் சிந்திப்பதே இயல்பானது. முடிந்தவரை தெளிவையும் உறுதியையும் அடைவதே இன்றியமையாதது. அதற்கு அப்பாலுள்ளன தர்க்கம் கடந்த வினாக்கள். தெளிவுக்கும் உறுதிக்கும் அப்பால் செல்லும் தேடல்கள். அவையே உண்மையான சிக்கல்களும் கேள்விகளும். அங்கே செல்வதற்கான வழி என்பது தர்க்கமும், தெளிவும், உறுதியும்தான்.

என் படைப்புகளில் நான் தர்க்கம்கடந்த நுண்மைகளை தேடியே சென்றுள்ளேன். மேலும் மேலும் என் கனவுகளுக்குள் செல்வதே என் இலக்கியப்பயணமாக இதுகாறும் இருந்துவந்துள்ளது. அவை நானே உருவாக்கிக்கொள்ளும் தெளிவின்மைகள் அல்ல. இப்பிரபஞ்சத்தின் மெய்யான தெளிவின்மைகள். முடிவிலியில் நிலைகொள்ளும் விடையின்மைகள். இங்கே அறியக்கூடிய, விளக்கிவிடக்கூடிய அனைத்தையும் அறிந்து விளக்கியபின்னரும் எஞ்சுபவை. அவையே மெய்யான தத்துவத்திற்கும் ஆன்மிகத்திற்கும் உரியவை. அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் அற்ற எளியவர்கள் அன்றாடத்தில் கொள்ளும் சில்லறைக் குழப்பங்களுக்கு உயரிலக்கியத் தளத்தில் இடமில்லை.

நான் இந்த உலகியலில் அடைந்த தெளிவுகளையும் உறுதிப்பாடுகளையும் என் கடிதங்களில், கட்டுரைகளில் முன்வைக்கிறேன். அவற்றைக்கொண்டு தங்கள் உலகியலைச் சீரமைத்துக்கொண்ட பலநூறுபேரை எனக்குத் தெரியும். சில்லறை அலைக்கழிப்புகளில் இருந்து விடுபட்டு மெய்யான இன்பங்களை நோக்கிச் செல்ல அவர்களால் முடிந்துள்ளது. ஏனென்றால் நான் கடந்து வந்த பாதை அது. அதற்கும் பிறகு அவர்களிடம் விடையில்லா வினாக்கள் இருக்குமென்றால் அவர்கள் என் புனைவுலகுக்குள் வரலாம். என் தேடலைப் பகிர்ந்துகொள்ளலாம்

ஜெ

முந்தைய கட்டுரைபா.கண்மணி
அடுத்த கட்டுரைநிர்மால்யா , ஒருநாள் கருத்தரங்கு, சென்னை