டிசம்பர் 2015 -ல் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆதரவில் ஆற்றப்பட்ட கீதைப் பேருரையின் எழுத்துவடிவம். முதல்நாள் உரை, இறுதி
எழுதியவர் Sakthi Prakash
கீதையை அறிதல்-3
கிருஷ்ணன் எனும் தெய்வம்
மகாபாரதப்போரின் நாயகனாக, அந்தப்போரில் எந்த தரப்பு ஜெயிக்க வேண்டுமோ, அந்தத்தரப்பை வழிநடத்தியவனாக, ஒரு பெரிய மன்னன் உருவாகி வந்தான். அவன் அந்த எழுச்சிபெற்ற அடித்தள மக்களின் தலைவனாக திரண்டு வந்தான். அவன் ஒரு தலைவன், அவன் ஒரு தத்துவஞானி. இவையனைத்தையும் ஆற்றி, ஆற்றாமல் இருந்து போன மேதை. ஒரு கையால் செயலையும், இன்னொரு கையால் செயலின்மையும் நிகழ்த்தியவன். ’ஆற்றுவது ஆற்றி அமைந்த கைகள்’ என்று ஒரு கதையில் நான் எழுதினேன்.
அப்படிப்பட்ட மாமனிதர்களைத்தான் நமது மரபு தெய்வமாக்குகிறது. தெய்வாம்சம் ஆக்குகிறது. அவர்கள் பரம்பொருளின் வடிவம் என்று வழிபடுகிறது.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்’
என்று குறள் சொல்கிறது.
“தெய்வம் மனுஷ்ய ரூபேண”
என்று தொல்மொழி சொல்கிறது.
அவன் ஒரு தெய்வமா என்று கேட்டால், அவனைத் தெய்வமாக்குவதில் எந்த தவறும் இல்லை என்பதுதான் இந்து மரபின்படித் தர்க்கபூர்வமான பதிலாக இருக்க முடியும். விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு நின்று, ஒரு பெரிய வரலாற்றை நிகழ்த்தி வைத்தான். அவ்வளவு பெரிய போரை நடத்திவைப்பவனாகிய அவன் சொன்ன நூல் என கீதையை நீங்கள் பார்த்தீர்களென்றால் அதன் வரலாற்று அர்த்தமே வேறு. இது நடக்க வேண்டிய ஒன்று, மீற முடியாத ஒன்று. அன்று எவருக்கும் தெரிந்திருக்காது. இதில் இன்றைக்கு இத்தனை பேர் சாகலாம், ஆனால் முன்னூறு வருடம், ஐநூறு வருடத்திற்கு அப்பால் இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? அப்படியென்றால் இது தவறா சரியா? அவன் அதை புரிந்துகொள்கிறான். அவன் காலம் கடந்து அதைக் காண்கிறான். அர்ஜுனனிடம் இது இப்போது உனக்கு புரியாது ,இப்போது இத்தனை பேர் சாவதை மட்டும்தான் நீ பார்ப்பாய், நீண்டகால அளவில் வரலாற்றை உன்னால் பார்க்க முடியாது என்கிறான். யோசித்துப் பாருங்கள், அந்தக்காலகட்டத்தில் யாதவ மன்னனாகிய கிருஷ்ணனனால் ஐநூறு வருடங்களை பார்க்க முடிகிறது. அர்ஜுனனால் ஐந்து வருடத்தைத்தான் பார்க்க முடியுமென்றால், இவன் சொல்வதற்கும் அவன் சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம்! இவன் கண்டது உலகியல் உண்மையும் அவன் சொன்னது உலகியலுக்கு அப்பாற்பட்ட பரமார்த்திக உண்மையும் ஆகிறது. அதைச் சொன்னதனால்தான் அவன் ஆசிரியன். ஆசிரியன் தெய்வமேதான். அந்த மேன்மை, காலாதீதமான உயரம், அதுதான் அவனை தெய்வமாக்குகிறது.
இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் அன்று வாந்த ஓர் அறிஞனால் நூறு வருடம் முன்னால் பார்க்க முடிந்திருந்தால், அவன் அதை ஆதரித்திருப்பான். சண்டை போடுங்கள், அதற்குப்பின் உலகத்தில் காலனியாதிக்கம் போகும், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் ஆயிரக்கணக்கான சமூகங்கள் விடுதலை பெறும், நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு சுதந்திரம் கிடைக்கும், அந்த நாடுகள் முன்னேறும், அந்த நாடுகளில் பட்டினி இல்லாமல் ஆகும், அந்த நாடுகளில் அடுத்த தலைமுறை கல்வியையும் செல்வத்தையும் அடையும், பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்கு சோறு கிடைக்கும், ஆகவே இந்தபோர் நடக்கட்டும் என்று சொல்லியிருப்பான், இல்லையா? அதைத்தான் யாதவன் மகாபாரதக் காலகட்டத்தில் இருந்துகொண்டு, காலம் கடந்த ஒரு பெரும் பார்வையுடன் சொல்கிறான், ’கர்மம் செய்வதற்குத்தான் நீ இங்கே வந்திருக்கிறாய், செய். விளைவை எண்ணாதே. விளைவை உன்னால் அறியவே முடியாது. அதை ஊழை நடத்தும் பெருவிசைக்கு விட்டுவிடு!’
நண்பர்களே, ஆப்பிரிக்காவின் பல பகுதிகளில் சிதல் புற்றுகள் இருக்கின்றன. ஒரு பனைமரம் உயரம் இருக்கும், மண்ணுக்கடியில் இரண்டு பனைமரம் உயரம் இருக்கும். பல புற்றுகள் நாலாயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு புற்றில் கோடிக்கணக்கான சிதல்கள் (கரையான்கள்) இருக்கின்றன. ஒரு கரையானின் ஆயுள் என்பது மூன்று நாள் அல்லது ஒரு வாரம் தான். அதனுடைய அளவு மிகச்சிறியது. இவ்வளவு பெரிய புற்றை அதனால் கண்ணால் பார்க்கவே முடியாது, கற்பனையே பண்ண முடியாது. அந்த மண்டைக்குள் இந்த சிதல்கூடை உருவகம் செய்ய முடியாது. ஆனால் அதுதான் அதைக் கட்டியிருக்கிறது. ஒட்டுமொத்தமாக கரையான்கள் சேர்ந்து அவ்வளவு பெரிய புற்றை கட்ட முடிகிறது. ஒரு தனிக் கரையானுக்கு ஒன்றுமே தெரியாது. எண்ணிப்பாருங்கள், அங்கே நீல நிறமான ஓரு கரையான் இன்னொரு கரையானிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது, “டேய், அவசியமில்லாமல் நீ யோசிக்காதே. நீ ஒரு சிறு கரையான். போய் உனக்குரியதைச் செய். வெளியே போய் ஒரு நூறு மணல்மணிகளை எடுத்துக்கொண்டுவந்து உள்ளே வை. செத்துப்போ ! நீ கட்டிக்கொண்டிருப்பதென்ன என்று உனக்கே தெரியாது. நீ அமைத்து கொண்டிருக்கும் பிரம்மாண்டம் என்னவென்று உன்னால் கற்பனை செய்யக்கூட முடியாது. எனக்குத்தெரியும், ஆனால் நான் சொன்னால் மட்டும் உனக்கு புரிந்துவிடுமா? ஆகவே கடமையைச் செய், பலனை எதிர்பாராதே’.
மனிதகுல வரலாற்றுக்கு தோராயமாக ஒரு லட்சம் ஆண்டு ஆகிறது. இந்த ஒரு லட்சம் வருடத்தில் நாம் எதை கட்டி எழுப்பிக்கொண்டிருக்கிறோம், எதை அழிக்கிறோம், எதை ஆக்குகிறோம் என்று நமக்குத் தெரியுமா என்ன? ஐம்பது வருடத்தை நம்மால் தாண்டிப்பார்க்க முடியாதபோது, இந்த ஒட்டுமொத்தப் பிரம்மாண்டத்தை யாரால் கற்பனை பண்ணிக்கொள்ள முடியும்? நான் ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன், அந்த நாவல் மனிதகுலத்திற்கு என்ன அளிக்கப்போகிறது என்று என்னால் கற்பனையே செய்ய முடியாது. நாளைக்கே இது மறக்கப்படலாம், அல்லது இருநூறு வருடங்கள் பெரும் பாதிப்பை செலுத்தவும் செய்யலாம். மனிதஞானம் என்பது ஒட்டுமொத்தமான பேருருவம் கொண்டது. அதன் ஒரு பகுதியை நான் விரிவாக்கம் செய்கிறேன். இன்னொருவர் இன்னொரு இடத்தில் விரிவாக்கம் செய்கிறார். என்னுடைய படைப்பை நானே என் சிந்தனையில் முழுமையாகக உருவாக்கினேன், அதன் விளைவு இப்படி எல்லாம் இருக்கவேண்டும் என்று என்னால் சொல்ல முடியுமா என்ன? முடியாது! மானுடசிந்தனை அதில் இலக்கியம் என்பது ஒரு பிரம்மாண்டம், அதை நாம் முழுதும் புரிந்துகொள்ள முடியாது. எதை நாம் செய்கிறோமோ அதை நம்மால் பார்க்க முடியாது என்கிற மாயைதான் நாம் ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும், அத்தகைய நம்மிடம்தான் கீதை சொல்லப்படுகிறது.
கீதையும் வரலாற்றுணர்வும்
நான் மீண்டும் வரலாற்று பிரக்ஞைக்கு வருகிறேன். வரலாற்றுணர்வுடன் பார்த்தால், கீதை என்னும் இந்த நூல் எப்போது உருவானது? வரலாற்றின் மிகமுக்கியமான ஒரு திருப்புமுனைக் காலகட்டத்தில் இது உருவாகியிருக்கிறது. இந்திய வரலாற்றை பொறுத்த அளவில் கீதைக்குப்பின் பின் இந்திய வரலாறு முன்பிருந்தது மாதிரி இருக்கவில்லை. அதுவரைக்கும் இருந்த அத்தனை குட்டி அரசுகளும் இல்லாமலாகி, பேரரசுகள் உருவாகி, அடுத்த கட்டத்திற்கு வரலாறும் பண்பாடும் முன்னகர்ந்த ஒரு காலகட்டம் பிறந்தது. அந்த திருப்புமுனைக் கட்டத்தில் கீதை உருவாகியிருக்கிறது. அப்படியென்றால் அந்தத் தேர் எந்த முச்சந்தியில் நின்றது என்று பாருங்கள் நண்பர்களே !கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் நடுவிலா என்ன? இரண்டு யுகங்களுக்கு நடுவில் நிற்கிறார்கள் அவர்கள் இருவரும். இரண்டு வரலாற்று காலகட்டங்கள் நடுவில் நிற்கிறது அந்ததேர். பழங்குடிக் (Tribal) காலகட்டத்திற்கு முடிவில், நிலப்பிரபுத்துவ (Feudalist) காலகட்டத்தின் தொடக்கத்தில் நிற்கிறது அது.
அதன்பிறகு எப்போதெல்லாம் அந்த நூல் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்று பாருங்கள்! எப்போதெல்லாம் இந்திய வரலாற்றில் ,தத்துவ சிந்தனையில் ஒரு முச்சந்தி உருவாகிறதோ அப்போதெல்லாம் அனைவரும் பகவத்கீதையிடம் போயிருக்கிறார்கள். கீதை உருவாகி ஒரு நீண்ட காலத்திற்குப்பின் சங்கரர் எட்டாம் நூற்றாண்டில் (அல்லது ஒன்பதாம் நூற்றாண்டில்) மீண்டும் அதைக் கண்டுபிடித்தார். அது இருந்து கொண்டுதான் இருந்தது, ஆனால் சங்கரருக்கு பிறகு அதற்குப் புதுஉருவம் அமைந்தது. அதற்கு சங்கரர், மத்வர் எல்லோரும் உரை எழுதினார்கள். ஏனென்றால் பௌத்தயுகம் (Buddhist Era) முடிந்து நாம் இருக்கும் புதிய இந்து (Neo Hindu) அலை உருவாகிய காலம் அது. இந்திய வரலாற்றை சங்கரருக்கு முன்னால், சங்கரருக்குப் பின்னால் எனப் பிரிக்கலாம் என்று உங்களுக்கு தெரிந்திருக்கும். அவர் ஒரு தொடக்கப்புள்ளி, அவரில் இருந்தே சைவம்,வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரன் என்னும் ஆறுமதங்களும் இணைந்து இன்றைய இந்துமதம் உருவாகியது.
அதன்பிறகு இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தில் பகவத்கீதை யாருடைய கையில் இருந்தது? விவேகானந்தர் கையில் இருந்தது, திலகர் கையில் இருந்தது, காந்தி கையில் இருந்தது, வினோபாவே கையில் இருந்தது. மறுபடியும் ஒரு திருப்புமுனை காலம். புதிய ஒரு யுகத்தின் தொடக்கப்புள்ளி. எங்கெல்லாம் ரதம் இரு யுகங்களுக்கு நடுவே இருக்கும் இடைவெளியில் கொண்டுவந்து நிறுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த நூல் கையில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது வரலாறு.
இதன் தத்துவார்த்த உள்ளடக்கம் என்ன? ஆன்மீக உள்ளடக்கம் என்ன? யோக உள்ளடக்கம் என்ன? என்று பிறகு பார்க்கலாம். இது ஒரு சிறு முன்னுரை.
நான் புராணத்திற்கு வருகிறேன். மகாபாரதத்த்தின் காலம் என நாம் எதைச் சொல்கிறோம். துவாபர யுகத்தின் முடிவில், கலியுகத்தின் தொடக்கத்தில் கீதை சொல்லப்பட்டது. இப்போது அது அர்த்தமாகிறது இல்லையா? துவாபர யுகம் இந்த வருஷத்தில் முடிகிறது, இந்த வருஷத்தில் துவாபர யுகம் ஆரம்பிக்கிறது என்று குணரீயாக (Qualitative) பார்த்தால்; ஒரு குறிப்பிட்ட மனோபாவம், ஒரு குறிப்பிட்ட வரலாறு, ஒரு குறிப்பிட்ட சரித்திரக்காலகட்டம் முடிந்து இன்னொன்று ஆரம்பிக்கும் இடத்தில் அந்தத்தேர் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது என்று புரியும்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒரு எறும்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த எறும்புக்கு மேற்குத்தொடர்ச்சி மலையை சொல்லிப் புரியவைக்க முடியுமா என்ன? நீ இருந்து கொண்டிருப்பது மேற்குத்தொடர்ச்சி மலையில் என்று சொன்னால் அதற்குப்புரியுமா? அதற்கு பக்கத்தில் இருக்கும் கூழாங்கல்தான் அதற்கு மலையாகத் தெரியும். உங்களுடைய வரலாற்றுக் காலகட்டத்தை கூட உங்களால் பார்க்க முடியாது. பத்து வருடம் கழித்து இங்கே என்ன நடக்கும் என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது. இன்றைக்கு நான் செய்யும் செயலின் விளைவு 25 வருடங்கள் கழித்து எப்படியிருக்கும் என்று கேட்டால் என்னால் சொல்ல முடியாது. எந்த மேதையாலும் சொல்ல முடியாது. ஒட்டுமொத்தப்பார்வை நாம் எவருக்கும் சாத்தியம் அல்ல. இவ்வளவு பெரிய திரை உங்களுக்கு முன்னால் கட்டப்பட்டிருக்கிறது. திரைக்கு அப்பால் உங்களால் பார்க்க முடியாது என்னும்போது, உங்கள் கண் முன்னால் எது தெரிகிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும்.
கீதை உபதேசங்கள் வெவ்வேறு வகையில் சொல்லப்பட்டதுண்டு. M. S. கல்யாணசுந்தரம் என்ற தமிழ் எழுத்தாளர் ஓர் இடத்தில் சொல்கிறார். அவர் நண்பர் ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்பு உளச்சோர்வுகொள்கிறார். கல்யாண சுந்தரம் அவரிடம் “நீ டெல்லிக்கு கார் ஓட்டிக்கொண்டு போகிறாயென்றால், டெல்லியை பார்த்துக்கொண்டு ஓட்ட முடியாது. முகப்புவிளக்கின் வெளிச்சத்தில் தெரியும் சாலையை பார்த்துக்கொண்டு ஓட்டு, அதுதான் நமக்குச் சாத்தியம், டெல்லிக்கு போய்விடலாம். முகப்பு வெளிச்சத்திற்கு அப்பால் கற்பனை பண்ண வேண்டிய அவசியம் இல்லை”. என்றார். “அற்புதமாக இருக்கிறதே” என்று நண்பர் சொல்லும்போது கல்யாணசுந்தரம் “நான் சொன்னது பகவத்கீதை” என்று சொல்கிறார்.
இதுதான் கீதையின் விரிவான வரலாற்று பின்புலம். ஆகவே இதுவரை சொன்னதை திருப்பிச் சொல்லி இந்த உரையை முடிக்கலாம் என்று இருக்கிறேன். இரண்டு வகையான காலங்கள் நம் மரபில் இருக்கின்றன. ஒன்று அகவயமான காலம், இன்னொன்று புறவயமான காலம். நெடுங்காலமாக நாம் அகவயமான காலகட்டத்தை ஒட்டித்தான் புராணங்களை புரிந்து கொண்டிருந்தோம். இன்றைக்கு பதினெட்டாம் நூற்றாண்டிற்கு பிறகு, நவீன ஆய்வுகள் வந்த பிறகு, நவீனக்கல்விமுறை வந்தபிறகு, நாம் புறவயமான வரலாற்று பின்னணியில் ஒவ்வொன்றையும் ஆராய வேண்டிய கட்டாயத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தக்காலகட்டம் சார்ந்த புரிதல் இல்லையென்றால், நாம் வரலாற்றை அறியாமல், புராண நூல்களை உள்வாங்காமல், வெறுமே பின்னால் திரும்பி மட்டுமே பார்க்கக்கூடியவர்களாக இருப்போம்.
ஏன் வரலாற்று ரீதியாக அறிய வேண்டும்? அந்த நூலின் அமைப்பு, அதன் சொற்பொருள் கொள்ளல், அதன் தத்துவ கட்டுமானம் ஆகிய மூன்றையும் சரியாக அறிவதற்கு, அதை வரலாற்று ரீதியாக வகுத்துக்கொள்ள வேண்டிய ஒரு கட்டாயம் நமக்கு இருக்கிறது. சென்ற காலங்களில் இருந்த அறிஞர்கள் இந்த நவீன வரலாற்று பிரக்ஞையோடு அறிந்தார்களா இல்லையா என்று கேட்டால், அவர்கள் காலகட்டத்தில் இருந்த உச்சகட்ட அறிவின் மேல் இருந்துதான் மேலே சென்றார்கள். இன்றைக்கு இருக்கும் உச்சகட்ட அறிவின்மேல் இருந்துதான் நாம் மேலே செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஆகவே நாம் இந்த வரலாறு பிரக்ஞையை அடைந்தாக வேண்டும்.
அந்தக்கோணத்தில் மகாபாரதத்தை பாரக்கப்போனால், மகாபாரதம் என்பது இரும்பு காலகட்டத்தின் தொடக்கத்தில், ஏறத்தாழ 4000 வருடங்களுக்கு முன்னால், பேரரசுகள் உருவான காலகட்டத்தில், இந்தியா முழுக்க வணிகப்பாதைகளால் தொடர்பு கொள்ளப்பட்ட ஒரு காலகட்டத்தில் நடந்த ஒரு கதை. அந்த நூலில் கி.பி. இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டு வாக்கில் இணைக்கப்பட்ட ஒரு நூல் கீதை.
அதை ஏன் இணைத்தார்கள் என்றால், அப்படி ஏற்கெனவே பல உபநிஷதங்கள் அதில் இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதனால்தான். அப்படி இணைக்கப்படுவதன் வழியாக அதை நீண்ட காலத்திற்கு கொண்டு செலுத்த முடிகிறது. அதற்கு ஒரு நாடகீயத் தன்மையை கொடுக்க முடிகிறது. ஆனால் அந்தப்படைபின் பல பகுதிகள் ரொம்ப தொன்மையானதாக தெரிவதில் இருந்து , கீதை ஸ்வேதாஸ்வேதர உபநிஷத் உருவான காலகட்டத்தை சேர்ந்த ஒரு பழமையான நூலாக இருக்கலாம் என தோன்றுகிறது. அந்த நூலில் இப்போதுள்ள நாடகத்தருணம் இணைக்கப்பட்டு மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது பழமையான நூல் என்பதனாலேயே இதை கிருஷணனே எழுதியிருக்கவும், கிருஷ்ணனின் நூலாகவே நெடுங்காலம் நிலவியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
மகாபாரத காலகட்டத்திற்கு பிறகு யாதவர்களின் வெற்றி நிகழ்ந்தது. இந்தியா முழுக்க யாதவர்களுடைய ஆட்சி வந்தது. அவர்களுடைய குலத்தலைவாராகிய கிருஷ்ணன் ஒரு பெரிய கடவுளாக மாறினார். அதன்பிறகுதான் பாகவதம் மாதிரியான நூல்கள் எழுதப்படுகின்றன. மகாபாரதம் எழுதப்பட்டு ஆயிரம் வருடங்கள் கழித்துதான் பாகவதம் எழுதப்படுகிறது. பாகவதத்தில் கிருஷ்ணன் ஒரு பெருந்தெய்வமாக ஆகிவிட்டார். இன்றைக்கு கிருஷ்ணனைப்பற்றி உங்களிடம் இருக்கும் அத்தனை புராணக்கதைகளும் மகாபாரதத்தில் உள்ளது அல்ல. அவை பாகவதத்தில் உள்ள கதைகள். நிறைய பேருக்கு இந்த வித்தியாசமே தெரியாது, ஏனென்றால் தொலைத்தொடர்களில் இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்துவிடுவார்கள். கிருஷ்ணனின் இளமைக்கால லீலைகள் எதுவுமே மகாபாரதத்தில் கிடையாது. கிருஷ்ணன் மகாபாரதத்தில் உள்ளே வருவதே, இளைஞனாக குந்தியிடம் மதுராவைக் கைப்பற்றுவதற்கு தனக்கு படை உதவி கேட்டுவரும் இளைஞனாகத்தான்.
கிருஷ்ணனின் இளமைக்கால லீலைகள் போன்றவை பின்னால் சேர்க்கப்பட்டவை. கிருஷ்ணன் ஒரு பெரிய கடவுளாக மாறி, நிறைய தொன்மங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, கிருஷ்ணனால் எழுதப்பட்ட ஒரு நூல் மகாபாரதத்துக்குள் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு சேர்க்கப்பட்டது.கடவுளின் சொல்லாகவே அது முன்வைக்கப்பட்டது. அந்த நூல் எழுதப்பட்டதற்கான சந்தர்ப்பம் ஒரு வரலாற்றுத் தருணம். இந்திய வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்புமுனைக்காலம். வரலாறு தன்னுடைய களஞ்சியத்தில் என்ன வைத்திருக்கிறது என்று அன்றைக்குள்ள யாருக்குமே தெரிந்திருக்காது. ஒருத்தனுக்கு தெரியும், அவன் சொன்னது அந்நூல்.
(மேலும்)