அன்புள்ள ஜெ
அண்மையில் புக் பிரம்மாவுக்கு விஷ்ணுபுரம் அமைப்புடன் தொடர்புடைய ஓரிருவர் எழுத்தாளர்களாகவும், வாசகர்களாகவும் அழைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை ஒட்டி சமூக வலைத்தளங்களில் சிலர் குமுறிக் கொந்தளித்திருந்தார்கள். இலக்கிய அநீதி, இருட்டடிப்பு என்றெல்லாம் கூச்சலிட்டிருந்தனர். எங்களை ஏன் கூப்பிடவில்லை என்பதுதான் உள்ளடக்கம்.
அந்நிகழ்வைப் பற்றி சகாதேவன் என்பவர் காலச்சுவடு இதழில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். பலருடைய பெயர்கள் அதில் இருந்தன. உங்கள் பெயரே இல்லை. அந்நிகழ்வை தொடங்கிவைத்தவர்களில் ஒருவர் நீங்கள். அவ்விழாவில் வாழ்நாள் சாதனை விருதும் உங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வரி குறிப்பிடவில்லை. இந்த இருட்டடிப்பைப் பற்றி எவராவது பொங்கியிருக்கிறார்களா என்று பார்த்தேன். ஆழமான அமைதிதான்.
உண்மையிலேயே வருத்தமான விஷயம் இது. வெறும் வம்பு ஆக இதை நான் பார்க்கவில்லை. தமிழின் முக்கியமான ஒரு படைப்பாளிக்கு ஒரு வாழ்நாள் சாதனை விருது இன்னொரு மொழியில் வழங்கப்படுகிறது. ஆனால் ஓர் எளிய வாழ்த்துக்கூட எங்கும் காணப்படவில்லை. நேர் மாறாக அதில் உங்களுடன் தொடர்புடைய ஓரிருருவர் பங்கெடுத்ததை எடுத்துக்கொண்டு அந்தச் சந்தர்ப்பத்தையும் உங்களை வசைபாடவும் அவமதிக்கவுமே பயன்படுத்திக்கொண்டார்கள். இந்தச் சிறுமை நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும் எழுகிறது. உங்கள் ஒவ்வொரு சாதனையைக் கண்டபின்னரும் உருவாகிறது. ஆனால் இதற்கு என்னென்ன பாவனைகள். நீங்கள் அதைக் கடந்து ஒரு முறைகூட ஒருவருக்கு வாழ்த்துரைப்பதை தவறவிட்டதில்லை.
இவர்களை எல்லாம் இலக்கியவாதிகள் என எண்ணுவோரும் உள்ளனர் என்பதே ஆயாசம் அளிப்பது.
கி.சங்கரநாராயணன்.
அன்புள்ள சங்கர்,
அதை எழுதியவர் என் நண்பர்தான், ப.கிருஷ்ணசாமி, விழாவில் என்னைச் சந்தித்து அவர் எழுதிய இரு நூல்களை அளித்தார். என் பெயர் எங்கு தவிர்க்கப்பட்டிருக்கும் என எனக்குத் தெரியும். அன்று எனக்கு விருது என்பது மதியமே வெளியாகிவிட்டது. உடனடியாக தங்கள் நிகழ்வுகளையும் தவிர்த்துவிட்டு அந்த அணியினர் கிளம்பிச் சென்றுவிட்டனர். நீங்கள் சொன்ன காழ்ப்புகள் எல்லாமே இந்த குழு மனப்பான்மையின் வெளிப்பாடுகள்தான். அச்சிறுமைகளுக்கு அப்பால்தான் எப்போதும் எங்கள் செயல்பாடுகள்.
எங்கள் செயல்பாடுகளில் இச்சிறுமைகளை அணுகவிடுவதில்லை என்பதை ஒரு நெறியாகவே கொண்டிருக்கிறோம். இலக்கியம் என்பதை மட்டுமே எங்கள் அளவுகோலாகக் கொள்கிறோம். ஒவ்வொரு செயலைத் திட்டமிடுகையிலும், ஒவ்வொரு செயலை முன்னெடுக்கையிலும் வந்து சூழும் அவதூறுகள், ஏளனங்கள், வசைகள் ஆகியவற்றைக் கடந்து இந்த நேர்நிலை மனப்பான்மையை தக்கவைப்பது என்பது பெரும் சவால். நாங்கள் செய்யும் பணி காலத்தின் முன், அடுத்த தலைமுறைக்கு முன் நிலைகொள்வது என்னும் உணர்வே செலுத்தும் விசை.
ஜெ