2024 ஆம் ஆண்டுக்கான புக்பிரம்மாவின் முதல் விருது பெற்றுக்கொண்டு சுசித்ரா ராமச்சந்திரனுடன் நான் நிகழ்த்திய உரையாடலின் காணொளி வடிவம்.
இதில் இந்திய அழகியல் என்னவாக இருக்கக்கூடும் என்று பேசியுள்ளேன். என்னைவிட சுசித்ரா சிறப்பாகப் பேசியிருக்கிறார். இந்திய அழகியல் என்று சொல்லும்போது நான் இந்திய மரபு சார்ந்த பார்வையைக் குறிப்பிடவில்லை. இந்தியா உயர்ந்தது என்றும் வாதிடவில்லை. அப்படிப்பட்ட பார்வைகளேதும் எனக்கில்லை என்பதை என் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்.
நான் சொல்வது, நமக்கே உரியதென இன்றைய சூழலில் நாம் உலகுக்கு எந்த அழகியலை அளிக்கமுடியும் என்பதைப் பற்றித்தான். நம்முடைய நவீனச் சிந்தனை ஐரோப்பியத் தாக்கத்தால் உருவானது என்பதை மறுக்க முடியாது. நம் அழகியலில் உள்ள ஐரோப்பிய அம்சம் தவிர்க்கப்பட முடியாது – உலகமெங்கும் அப்படித்தான்.
ஆனால் நாம் நவீன இலக்கியம் – நவீனக் கலை என இங்கே செய்துகொண்டிருப்பது ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் என்னென்ன செய்யப்படுகிறதோ அதை அப்படியே இங்கே திரும்பச் செய்வது. நம் வாழ்க்கைச்சூழலை மட்டும் அதற்கு அளிப்பது. உண்மையில் நாம் இலக்கியத்தில் பேசும் பிரச்சினைகள்கூட ஐரோப்பாவில் இருந்து பெற்றவை.
ஐரோப்பாவில் தனிமனிதனுக்கு இருத்தலியல் அலைக்கழிப்பு வந்தால் உடனே நமக்கும் வருகிறது. அவன் இருத்தலியத்தைக் கைவிட்டு ‘அறம் கடந்த’ ‘உண்மை கடந்த’ கலகச்சூழலை ஏற்றுக்கொண்டால் உடனே இங்கும் அதுதான். ஏன் நமக்கான தத்துவச் சிக்கல்கள், பார்வைத்தேவைகள் இங்கே எழுவதில்லை?
நம் எழுத்தை இன்று வாசிக்கும் ஓர் ஐரோப்பியன் அவனுடைய மங்கலான ஆடிப்பாவையை மட்டும்தானே இங்கே பார்க்கமுடியும்? அங்குள்ள ஓர் அசலான இலக்கியவாசகனுக்கு அது ஒவ்வாமையை அல்லவா உருவாக்கும்? அவன் இந்தியாவில் தேடுவது இந்தியத்தன்மையை அல்லவா? அது எங்கே நம்மிடம்?
உண்மையில் இந்தக் கேள்வி எவருக்கு வருகிறதென்றால், சுசித்ரா போல ஆங்கிலத்திலேயே அதிகமாக வாசித்துவிட்டு, அதன்பின் தமிழில் வாசிக்க வரும் இளையதலைமுறை வாசகர்களுக்குத்தான். அவர்களுக்கு அவர்கள் வாசித்து சலித்துவிட்ட எழுத்தின் நிழலுருக்களாக இங்குள்ள நவீன இலக்கியம் தோற்றமளிக்கிறது.
அதையே இந்த உரையாடலில் இயல்பாகப் பேச முயன்றுள்ளேன். நம் பிரச்சினைகளை நம் அழகியலுடன் நாம் ஏன் பேசக்கூடாது? அதற்கான அளவுகோல்களை நாம் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதை எங்கிருந்தும் நாம் இறக்குமதி செய்யக்கூடாது.
இந்திய ஆங்கில இலக்கிய சூழலில் இதை ஆணித்தரமாகப் பேசவேண்டியுள்ளது. நான் இதை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவிலும் பேசினேன். நாம் கட்டுரைகளாக, விமர்சனங்களாக இதையெல்லாம் எழுதவேண்டியுள்ளது. இந்த்க் கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கவேண்டியுள்ளது
ஏனென்றால் இந்திய ஆங்கில வாசிப்புச் சூழலில் ஓங்கியிருப்பவை இரண்டு பார்வைகள். ஒன்று உள்ளடக்கம் சார்ந்து எளிமையாக படைப்புகளை வரையறை செய்யும் கல்வித்துறை சார்ந்த அணுகுமுறை. இரண்டு, அன்றன்று அரசியலிலும் சமூகவியலிலும் பேசப்படும் பொதுப்பிரச்சினைகளை மட்டுமே கொண்டு இலக்கியத்தை அணுகும் இதழியல் பார்வை. இவ்விரண்டையும் நாம் எதிர்த்து இலக்கிய அழகியலின் அணுகுமுறையை முன்வைத்தாகவேண்டும். அதில் இந்திய அழகியலின் தனித்தன்மையை வலியுறுத்தியாகவேண்டும்.
நாம் நமக்குரிய படைப்புகளை எழுதுவதற்கான ஒரு தொடக்கம் இது. அத்தகைய படைப்புகள் இங்கே ஏற்கனவே எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கில வாசிப்புத்தளம் அவற்றை அன்னியமாகப் பார்க்கிறது. வழக்கமான கல்வித்துறை சார்ந்த, இதழியல் சார்ந்த அளவுகோல்களை அவற்றின்மேல் போட்டுப்பார்க்கிறது. அதைக் கடந்து யோசிப்போம் என்று ஓர் அறைகூவலையே இந்த உரையாடலில் முன்வைக்கிறேன்.