ஒருமரம்,மூன்று உயிர்கள்

index

என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார். சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.

அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?

நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

கே.ஆர்.மணி, மும்பை

*

அன்புள்ள மணி,

பக்கத்திலேயே ஒரு சங்கீத வித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக் கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போறுமா?’ என்பார்.

சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்து வீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.

மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக் கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப் பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே. ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக் கொண்டுமிருக்கும்.

ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.

முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக் கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.

அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றி கொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.

ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள், நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில் நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல் ராஜாக்கள் பெரும்பாலும் முதல் தலைமுறையில் தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு. இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்ற பாவனை.

இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல் நிலையை அறிய முயல்வார்கள். சமூகத் தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத் தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’

நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப் பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள். ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப் பழக்கம் மூலம் கற்றுத் தேர்ந்தவர்கள்.

இந்த இரு சாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர் பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.

அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்ம விரோதியைப் பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒரு கணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக் கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப் பிடுங்கிக் கொண்டிருப்பார்.

ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும். உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.

இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.

லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?

மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 14, 2011

முந்தைய கட்டுரைஈரோடு சந்திப்பு 2017 – கடிதம் 3
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–25