கேரளத்தில் நெடுமங்காடு என்னும் ஊரில் இருந்து உதயன் என்னும் ஆசிரியர் அழைத்திருந்தார். அவர் அங்கே அரசுப்பள்ளி ஆசிரியர் (Govt.VHSS for Boys (BHS Mancha) Nedumangad) சென்ற கோவிட் தொற்றுக்காலகட்டத்தில் அவர் குழந்தைகளுக்காக ஒரு குற்றலைவானொலிச் சேவை தொடங்கினார். தனிப்பட்ட முயற்சியில், எளிய நன்கொடைகளுடன். பள்ளிப்பாடங்களைச் சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார்.
முக்கியமான விஷயம், அது ஆசிரியர் நடத்தும் வகுப்பு அல்ல. குழந்தைகள் நடத்தும் வானொலி, ஆனால் பாடம் சார்ந்தது. ஆசிரியர்கள் அதில் பங்கேற்பாளர்கள். கோவிட் காலம் கடந்த பின்னர் அவர் அதை இணையவானொலியாக நீட்டித்தார். அதில் பள்ளிப்பாடங்கள் பற்றிய கூடுதல்நிகழ்வுகள் இடம்பெறும். குழந்தைகளே உருவாக்கிய கலைநிகழ்வுகள், உரையாடல்கள், சொற்பொழிவுகள். இந்த வானொலி இன்று அப்பகுதி மாணவர்கள் நடுவே புகழ்பெற்றது.
எட்டாம் வகுப்புப் பாடத்தில் உள்ள ஒரு கவிதை புகழ்பெற்ற கவிஞர் அன்வர் அலி எழுதியது. ’காந்தி தொடல் மால’ என்ற அக்கவிதை வைக்கம் முகமது பஷீர் பற்றியது. வைக்கம் போராட்டத்திற்கு வந்த காந்தியை அன்று சிறுவனாக இருந்த பஷீர் முண்டியடித்துத் தொடுகிறார். அந்தக் கையுடன் அவர் தன் அம்மாவிடம் வந்து “உம்மா, நான் காந்தீனே தொட்டே” என்று கூவுகிறார். உம்மாவுக்கு காந்தி என்றால் என்ன என்று தெரியாது, தன்னுடைய குறும்புக்கார மகன் ஏதோ விந்தையான பொருளை தொட்டுவிட்டான் என நினைத்து பதறுகிறார். அன்வர் அலியின் கவிதை அந்த நிகழ்வை குழந்தைகளுக்காக வேடிக்கையாகச் சொல்கிறது.
அந்தக் கவிதையை ஒட்டி பஷீர்மேல் ஆர்வம்கொண்ட எழுத்தாளர்களின் வெவ்வேறு கருத்துக்களைக் கேட்டு உதயன் தன்னுடைய வானொலியில் ஒலிபரப்பி வந்தார். அதையொட்டி நான் ஒரு ஐந்து நிமிட உரையை ஆற்றும்படிச் சொன்னார். என் உரையின் ஒலிவடிவம் இது