இரா.முருகன், ப.சிங்காரம் – கடிதம்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

அன்புள்ள ஜெ

இரா.முருகனைப் பற்றிய வெவ்வேறு குறிப்புகளில் பலர் சுஜாதாவுடன் ஒப்பிட்டிருந்தார்கள். அது அபத்தமான ஒரு ஒப்பீடு. சுஜாதாவுக்கு visual narration உண்டு. அதுதான் அவரொட ஸ்டைல். இரா.முருகனிடம் அந்த visual அம்சமே இல்லை. அவர் கதையை உரையாடலாகவே நடத்துகிறார். கதாபாத்திரங்கள் உரையாடுகிறார்கள். அல்லது ஆசிரியரே நம்மோடு உரையாடுகிறார். எந்த இடத்திலும் visual narration கிடையாது.

சுஜாதாவின் கதாபாத்திரங்கள் ஒரே மாதிரித்தான் உரையாடமுடியும். எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் சுருக்கமாகவும், புத்திசாலித்தனமாகவும், நையாண்டியாகவும் பேசுவார்கள். Variety dialects சுஜாதாவில் வர முடியாது. ஒரு சமையற்காரர் பேசுவதையோ ஒரு சவண்டி ஐயர் பேசுவதையோ வேறுபடுத்தி எழுதமுடியாது. முக்கியமாக சுஜாதாவால் எப்போதுமே மடையர்கள் பேசுவதிலுள்ள fun ஐ எழுதிவிட முடியாது. அதை முருகன் அபாரமாக எழுதியிருக்கிறார்.

“அதுக்கு ஒண்ணுமில்லே. அந்த கர்ப்பத்துக்கு ஆறு மாதம் முந்தி ஒருதடவை நீ ப்ரக்ணண்ட் ஆனே ஞாபகம் இருக்கா? பிள்ளைதான், வயத்துலே உதைக்கறான்னு சொன்னே. திடீர்னு ஒரு நாள் காலம்பற, அன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை.. உங்கப்பா, தம்பி, சித்தப்பா கரோல்பாக்கிலே வீட்டு செப்டிக் டாங்க் ரிபேர் பண்ணிண்டு இருக்கான்னு வந்து டாய்லெட்டை நாறடிச்சாளே, நம்பூதிரி தந்தசூரணம் பல்பொடி நெடி எங்கேயும் அடிச்சுண்டிருக்க நீ என்னை பாத்ரூமுக்கு கூப்பிட்டே. அந்தக் கர்ப்பம் கலைஞ்சு போச்சுன்னு அழுதுண்டே சொன்னே. ஞாபகம் இருக்கா. அது ஆம்பளைக் குழந்தைதானே. அந்த கரு இன்னும் உசிரோட இருக்கு. நான் பார்க்கலே. அப்பா அப்பான்னு கண்ட்ஹர்லே ப்ளேன்குள்ளே வந்து என்னைத் திட்டறதோ, நல்லதா நாலு வார்த்தை சொல்லறதோ தெரியலே. நல்ல வார்த்தை சொல்ல நான் ஒண்ணுமே செய்யலியே. திட்டுதான். என்னமோ அந்தக் குழந்தை கனவுலே வரும்போதெல்லாம் வீடு முழுக்க மிளகு வாடை. அது கூப்பிட்டுண்டு இருக்கும்போதே ஐஞ்சு கட்டாலேபோவான்கள் என் சிரசுக்கு துப்பாக்கி வைச்சிண்டு நிற்கறான். குடம் குடமா மூத்திரம் எப்படி வருதுன்னு தெரியலே. இவ்வளவுக்கும் ராத்திரி படுத்துக்கப் போறபோது போய்ட்டுத்தான் படுக்கறது. சரி சரி விஷயம் என்னன்னா அந்தக் குழந்தைக்கு நல்லதா ப்ரீதி பண்ணனும். அதுவரை வந்துண்டு தான் இருக்கும். ஞாபகம் இருக்கோ?”

இந்த நீண்ட உரையாடலில் பேசுபவரின் பிரச்சினை, பெர்சனாலிட்டி, அவருடைய பின்னணி எல்லாமே வந்துவிடுகிறது. உரையாடல் வழியாகவே எல்லாவற்றையும் சொல்லும் இந்தப் பாணிக்கு தமிழில் ஒரு முன்னுதாரணம்தான். ப.சிங்காரம் அவருடைய புயலிலே ஒரு தோணி நாவலில் இந்தவகை எழுத்தை அற்புதமாக உருவாக்கியிருக்கிறார். அதிலுள்ள பல கதாபாத்திரங்களின் குரல்களை இன்றைக்கும் நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்

நான் ப.சிங்காரத்தையும் இரா.முருகனையும்தான் ஒப்பிட்டு வாசிப்பேன். இருவருமே நையாண்டிக்காரர்கள். இருவருமே பாலியல் சார்ந்து ஒரு இடக்குப்பார்வை கொண்டவர்கள். இரண்டுபேருக்குமே வரலாறு என்ற nonsense பற்றி ஒரு பார்வை உண்டு. புயலிலே ஒரு தோணி நாவலில் கதிரேசன் பேசும்  Is it cricket? என்ற இடத்திலுள்ள அதே நையாண்டியான உரையாடலின் தொடர்ச்சியை இரா முருகன் நாவல்களில் பார்க்கலாம். ப.சிங்காரம் உருவாக்கிய எல்லா விஷயங்களும் இரா.முருகன் நாவல்களில் வளர்ச்சி அடைந்துள்ளன

ரகுபதி

முந்தைய கட்டுரைமேலைத்தத்துவம், ஜெர்மன் மரபு: கடிதம்
அடுத்த கட்டுரைஒடுக்குமுறை, பஞ்சம், அறம்- கடிதம்