விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
அன்புள்ள ஜெ
இரா.முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டிருப்பதற்கு மகிழ்ச்சி. எல்லா வகையிலும் தகுதியான விருது அது. அவருடைய நாவல்கள் ஓரளவுக்குப் பேசப்பட்டிருக்கின்றன. அவருடைய சிறுகதைகள் பரவலாக வாசிக்கப்பட்டதே இல்லை. அதற்குக் காரணம் அவை பெரும்பாலும் உயர்நிலை கார்ப்பரேட் உலகிலே நடக்கும் நிகழ்ச்சிகள் என்பதுதான். கதையை ஒரு கதைசொல்லி வேகமாக, அங்கே இங்கே தொட்டுத்தொட்டுச் சொல்லிப்போகும் விதமாக அவர் எழுதியிருப்பார். உயர்நிலை கார்ப்பரேட் வியாபாரத்தில் இருக்கும் ஏமாற்றுத்தனங்களும், சிறுமைகளும் வந்துகொண்டே இருக்கும். அந்த உலகை முழுமையான அனுபவத்துடன் சரியாக எழுதியவர் என்றால் முதலில் இரா முருகன் அவர்கள்தான்.
அவர் எழுதிய நன்றிவாடை ஒரு உதாரணமான கதை. கதையில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. ஒரு சின்ன உலகம் அதற்குள் செக்ஸ்,பொறாமை, போட்டி என்று ததும்புகிறது. ஒன்றுமே நிகழாமல் முடிகிறது- அல்லது என்னவேண்டுமென்றாலும் நிகழ்ந்திருக்கலாம் என்னும் நிலையில் முடிகிறது. ஒரு கதைக்குள் எத்தனை ஊடுவெட்டுக்கள் என்று பார்த்தால்தான் இரா.முருகனின் கலை என்பது என்ன என்று புரியும்.
எமிக்ரேஷனில் சங்கரனையும் சாருவையும், சிங்கப்பூரில் பெருச்சாளி போல் ஒளிந்து திரிந்து ஒன்றாக ஜீவிக்க வந்தவர்கள் என்ற சந்தேகத்தோடு பாஸ்போர்ட்டை, விசாவை எல்லாம் திருப்பித் திருப்பிப் பார்த்து, பெருமூச்சோடு சாப்பா அடித்து ஊருக்குள் புக அனுமதித்தார்கள். சாரு பாஸ்போர்ட்டைத் திரும்ப எடுத்துக்கொள்ளாமல் நடக்க, ‘உங்க கூட்டாளிக்கு பாஸ்போர்ட் வேணமா?” என்று சங்கரனிடம் கொடுத்து, அவள் புகார்ப் பட்டியலில் புது ஐட்டமானார்கள் அவர்கள்.
‘லட்சணமான புருஷன் வீட்டிலே இருக்க’ என்று அங்கலாய்ப்பை சரியான இடத்தில் நிறுத்தி, சங்கரனின் சுபதினம் சந்தோஷமாக சிங்கப்பூரில் தொடங்கியதை பாழாக்கினாள் கோழிக் கழிச்சல் நெடியடிக்கும் பதிவிரதை. இது கையிடுக்கில் பெர்ப்யூம் பொழிந்து ஏற்படுத்தும் செயற்கை வாடையன்று. காது மடலில், பின் கழுத்தில், முதுகில் பொசியும் உடல் வாடை.
இந்த இரண்டு பத்திக்குள் எத்தனை விளையாட்டுக்கள் என்பதில்தான் இரா.முருகனை நாம் அடையாளம் காணமுடியும். இந்தவகை எழுத்தில் தமிழில் புதுமைப்பித்தனுக்குப் பிறகு முருகன்தான்
ஸ்ரீதர் ராஜ்
அன்புள்ள ஜெ
இரா முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அறிந்து மகிழ்ந்தேன். நான் அவருடைய அரசூர் வம்சம் நாவலை தற்செயலாக வாசிக்க ஆரம்பித்து இப்போதுதான் நூறு பக்கம் அளவுக்கு வாசித்துக் கொண்டிருக்கிறேன். தகவல்களும் ஆப்சர்வேஷன்களும் கலந்து கொட்டிக்கொண்டே இருக்கும் நடை. என்னென்ன தெரிந்துவைத்திருக்கிறார், எதையெல்லாம் எங்கெல்லாம் கலந்துவிடுகிறார் என்ற ஆச்சரியத்துடனேயே வாசிக்கவேண்டியிருக்கிறது. தமிழில் மிகமிகக்கூர்ந்து வாசிக்கவேண்டிய எழுத்தாளர். தமிழ்ப்பண்பாடு, சரித்திரம், சமையல் என எல்லாவற்றையுமே தெரிந்துகொண்டு வாசிக்கவேண்டியவர். அவரை இந்தவகையான விருதுகள் வழியாகத்தான் நாம் முன்வைக்கமுடியும்.
நன்றி
லட்சுமணப்பெருமாள் ராமசாமி