விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு
இரா,முருகன் அவர்களுக்கு இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. சுஜாதா மூலமாகவே எனக்கு இரா,முருகன் எழுத்து அறிமுகமானது , குறிப்பாக அவரின் சிறுகதைகள் . அவற்றின் விவரணைகள் .சுஜாதாவின் சுவாரசியம் முருகனின் நடையிலும் பிரதிபலித்திருக்கிறது.
திண்ணை இணைய இதழில் இவரின் ‘அரசூர் வம்சம்’ நாவல் தொடராக வந்தபோது வாசித்திருக்கிறேன் . வரலாற்றை அவர் நாவலில் கையாலும் விதம் சுவாரசியமாக இருந்தது . அரசூர் நாவலின் பழுக்காத்தட்டு இசை நினைவில் நிற்கிறது. (அரசூர் என் அம்மச்சியின் ஊர் பெயரும் கூட ! ) . அந்த காலகட்டத்தில் அவரது கட்டுரைகளையும் தொடர்ந்து வாசித்திருக்கிறேன் .
இங்கிலாந்து பயணம் குறித்தும் ,தான் பணிபுரிந்த வங்கி பணி குறித்தும் எழுதியிருந்தார் . குடமிழா குறித்து அவர் எழுதிய கட்டுரை நினைவில் நிற்கிறது , குஞ்ஞன் நம்பியார் குறித்த கட்டுரை அது . சமீபத்தில் கபிலா வேணுவின் கூடியாட்டம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது , அப்போது இந்த இந்தக் கட்டுரை குறித்து நினைத்துக்கொண்டேன் . அவரின் சமீபத்திய படைப்புகளை வாசிக்க வாய்ப்பு அமையவில்லை . வாசிக்க வேண்டும் .
இரா.முருகன் அவர்களுக்கு வாழ்த்துகள் .
கார்த்திக் வேலு
அன்புள்ள ஜெ
இரா முருகன் விஷ்ணுபுரம் விருது பெற்றுள்ள செய்தி அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர் படைப்புகள் பற்றிய விரிவான அறிமுகம் என்றால் அவருக்குச் சென்னையில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கைச் சொல்லவேண்டும். (விஷ்ணுபுரம் இலக்கியவட்ட நண்பர்கள் நடத்திய நிகழ்ச்சி என நினைக்கிறேன்) அதில் உள்ள உரைகள் எல்லாமே இணையத்தில் கிடைக்கின்றன. அவரைப்பற்றிய விரிவான அறிமுகம். கிட்டத்தட்ட எல்லா நூல்களைப் பற்றியும் ஆழமாகப் பேசப்பட்டுள்ளது. அப்போதே அவருக்கு விஷ்ணுபுரம் விருது வரும் என்னும் எண்ணம் இருந்தது. இப்போது அந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி.
செல்வ. சிவசங்கரன்