இரா.முருகன்,விஷ்ணுபுரம் விருது, கடிதங்கள்

விஷ்ணுபுரம் 2024 விருது, இரா. முருகனுக்கு

அன்புள்ள ஜெ

இரா.முருகன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்ட செய்தியை அறிந்தேன். ஊடகங்களில் பெரிதாகச் செய்தி இல்லை. தினமலர் ஆன்லைன் இதழில் செய்தி இருந்தது. அந்திமழை செய்தியையும் பார்த்தேன். மற்றபடி, சமூகவலைத்தளங்களில் எழுத்தாளர்கள் பொதுவாக எவரும் வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஆனால் எவர் எப்படி கடந்துசென்றாலும் உங்கள் இணையப்பக்கமே ஒரு பெரிய ஊடகம். அது தமிழ் வாசகர்களுக்குச் செய்தியைக் கொண்டுசென்று சேர்த்துவிடும். நீங்களும் அப்படி விட்டுவிடுபவர் அல்ல.

இரா முருகன் போன்ற ஒருவருக்கு இந்த விருது அளிக்கப்படும்போதுதான் விருது அர்த்தமாகிறது. ஏனென்றால் இங்கே ஏராளமான விருதுகள் உள்ளன. அந்த விருதை அளிப்பவர்களுக்கு எவருக்கு என்ன தகுதி உள்ளது என்று பொதுவாகத் தெரியாது. தகுதி கொண்டவர்களாக அறியப்பட்டவர்களுக்கு அவர்கள் மேலும் விருதை அளிக்கிறார்கள். தகுதி கொண்டவர்கள் போதிய அளவுக்குப் பேசப்படாதவர்கள் என்றால் எந்த விருதும் வருவதில்லை. விருது ஏன் முக்கியம் என்றால் அது ஒருவரை முன்னிறுத்துகிறது. இன்றைக்கு ஏராளமானவர்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதில் எவருடைய எழுத்து முக்கியம் என்று தெரியாது. எல்லாரையும் நம்மால் படிக்க முடியாது. ஆகவே எவராவது பரிந்துரைக்கவேண்டியுள்ளது. தகுதியான ஒருவர் பரிந்துரைத்தால் அந்நூலுக்கு மதிப்பு உருவாகிறது. விஷ்ணுபுரம் விருது அவ்வாறு ஒரு நம்பகமான பரிந்துரையாகத் திகழ்கிறது.

 

ஜி.சண்முகசுந்தரம்

அன்புள்ள ஜெ

இரா, முருகனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படவுள்ளது அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். அவருக்கு இந்த விருது மிகமிக தகுதியான ஓர் அங்கீகாரம். அவருடைய சில சிறுகதைகளையும் மூன்று விரல் என்னும் நாவலையும் மட்டும்தான் நான் வாசித்திருக்கிறேன். நான் பணியாற்றும் தகவல் தொடர்புத்துறை பற்றிய நம்பகமான நாவல் அது. தகவல்தொடர்புத்துறையை எழுதுகிறேன் என்று சினிமாக்களில் பார்த்த பாலியல் சம்பவங்களை எல்லாம் எழுதி பரபரப்பை கிளப்ப முயலாமல் நேர்மையாக எழுதிய நாவல். இந்தத்துறையிலுள்ள சலிப்பு, நிச்சயமின்மை, உறவுச்சிக்கல்கள் எல்லாம் அதில் அற்புதமாக வெளிப்பட்டிருந்தன.

 

சிவசங்கர். எம்.ஆர்

முந்தைய கட்டுரைOn Philosophy.
அடுத்த கட்டுரைகற்பனையில் ஏறிக்கொள்ளுதல்…